Saturday 24 October 2020

திராவிட வாசிப்பு அறிவியல் சிறப்பிதழ்


திராவிட வாசிப்பு அறிவியல் சிறப்பிதழை வாசிக்க: 

திராவிட வாசிப்பு அறிவியல் சிறப்பிதழ்திராவிட வாசிப்பு மின்னிதழின் 14 வது இதழ் இது. இம்மாத இதழை அறிவியல் சிறப்பிதழாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இதழில் அறிவியல் சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள்,கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அறிவியல் என்பது மிகப்பரந்த தளம். அதில், சிறுதுளியையே இந்த இதழ் வெளிக்கொணர்ந்து இருக்கிறது. ஆனால், அறிவியலின் தேவையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்தே இருக்கிறோம். இந்த இதழோடு நின்றுவிடாமல், இனி தொடர்ந்து அறிவியல் சார்ந்த விசயங்களை வெளியிட ஆர்வமாக உள்ளோம். 


இந்த இதழில் இன்னும் சில, அரசியல் - சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இருக்கிறது. அதையும் வாசித்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.


ஒரு அறிவுசார் சமூகத்தை நோக்கி நம் பயணம் தொடரட்டும்!

Saturday 17 October 2020

பகுத்தறிவு பண்பாளர் சின்னக்குத்தூசி 50

 பகுத்தறிவு பண்பாளர் சின்னக்குத்தூசி 50

 
1) புதையுண்டு போகவிருந்த சிறுமைகளையெல்லாம் புட்டுப்புட்டு வைத்தவர் தந்தை பெரியார். புதையுண்டு போகவிருந்த பெருமைகளுக்குக்கெல்லாம் புத்துயிர் தந்தவர் பேரறிஞர் அண்ணா. வதையுண்டு வகைகெட்டு வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்பவர்களுக்கு வழிகாட்டி வருபவர் முத்தமிழறிஞர் கலைஞர். இவர்களுடைய பகுத்தறிவுப் போதனைகளுக்குப் பட்டை தீட்டிய சுயமரியாதைச்  சுடரொளிதான் சின்ன குத்தூசி...!


எனவே தான் பெரியார் + அண்ணா+ கலைஞர் = சின்னக்குத்தூசி 


2) பெரியாரின் சித்தாந்தங்கள் முதலில் முளையிட்ட தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் (திருவாரூரில்) எளிய பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த இராமநாதன் - கமலம் தம்பதியிருக்குப் புதல்வனாக தியாகராசன் என்ற பகுத்தறிவு பண்பாளர் சின்ன குத்தூசி பிறந்தார். 


3) 15.06.1934 ல் பிறந்த சின்னக்குத்தூசி அவர்களின் தந்தை ராமநாதன் ஒரு சமையல்காரர். தாயாரும் வீடுகளில் சமையல் வேலை செய்துவந்துள்ளார். பெற்றோர்கள் உழைத்து சம்பாதித்த போதிலும், ஏழ்மையும் வறுமையுமே குடும்பப் பின்னணியாக இருந்துள்ளன.  


4) படித்த காலத்தில் கடைசி பெஞ்ச் மாணவனாகவே இருந்தேன் என்பதை எந்தச் சலனமும் இன்றி சின்னக்குத்தூசியார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்படியே "பிச்சைபுகினும் கற்றல் நன்றே" என்ற முதுமொழியைத் தாங்கி, பள்ளி இறுதி வகுப்பு வரை தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வியை முடித்தார் தியாகராசன் என்கிற சின்னக்குத்தூசி. 


5) தாயின் அரவணைப்பை தவிர வேறெந்த உறவும் இல்லாமல் வாழ்ந்தவர் சின்னக்குத்தூசி. இதைப்பற்றி கேட்ட போது, ரத்த பந்தம் தான் உறவா? தினமும் இத்தனை பேர் என்னை வந்து பார்க்கிறார்களே, இதைவிடவா உறவு முக்கியம் என்று கேட்டாராம்.  


6) அந்தக்காலத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவர்களை அடிக்க ஆசிரியர்கள் மேசை மேல் ஒரு பிரம்பு இருக்கும். அது தவறு செய்யும் அல்லது சரியாக படிக்காத மாணவர்களை அடித்து திருத்துவதற்காக என்று தான் வெகு காலம் நினைத்துக்கொண்டிருந்தார் குத்தூசியார். பிற்காலத்தில், ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியர் வேலை பார்க்க போனபோது தான், ஆசிரியர் கைபிரம்பின் மகிமை அவருக்கு புரிந்தது. மாணவர்களை கையால் தொட்டு அடித்தால் தீட்டு ஒட்டிக்கொள்ளுமாம். அதற்காகத்தான், அந்தக்காலத்து ஆசிரியர்கள் இந்தப் பிரம்பால் அடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்களாம். இந்த அவலநிலை மாநிலம் முழுவதும் இருந்துள்ளது, இன்னும் அது தொடரப்படுகிறது. 


7) ஓட்டல்களில் அந்த காலத்தில் பிராமணர்கள் சாப்பிடுவதற்கு தனியாக ஒரு பகுதி இருக்கும் அல்லது தட்டிகளால் மறைத்தபடி ஒரு பகுதி இருக்கும் அதன் முகப்பில் 'பிராமணர்கள் சாப்பிடும் இடம்' என்று போர்ட்டு வைக்கப்பட்டிருக்கும். பிராமணர் அல்லாத மற்ற ஜாதிக்காரர்கள் சாப்பிட என்றே தனியாக ஒரு பகுதி. அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க ஓட்டல் முதலாளி அமர்ந்திருக்கும் மேசையருகே சென்றால் அந்த மேசை மீது ஒரு சொம்புத் தண்ணீர் இருக்கும்.


பிராமணர் அல்லாதவர்களின் காசுகளை அந்தச் சொம்பிலுள்ள தண்ணீரை எடுத்து அதன்மேலே தெளித்து தீட்டைப் போக்கிவிட்டே கல்லாவில் சேர்த்துக்கொள்வார்கள்.இந்தத்தகவல்கள் சின்னக்குத்தூசி அவர்கள் சொன்னது.


8) சரஸ்வதின்னு ஒரு பிராமண அம்மையார், அவர் குறித்து ஆராய்ச்சி செய்து ஒரு குறிப்பு வெளியிட்டிருக்காங்க.'ஆஷ் துரை' துரைச்சாணி அம்மாவோடு சாரட்டில் ஊருக்குள் வந்து ஒரு தாழ்த்தப்பட்ட பொண்ணு ஒரு புல்லுக்கட்டை தூக்கிக் கொண்டு தாங்காம மயக்கமடைந்து கீழே விழுந்துர்றா. ஆஷ்துரை அந்த அம்மாவை வண்டியில் ஏற்றி உயர் ஜாதிக்காரர்கள் இருக்கிற தெரு கோபமடைந்த உயர்ஜாதிக்காரர்கள் கூடி, ஆஷ்துரை எப்படி ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை நம் தெரு வழியா அழைத்துக்கொண்டு போகலாம், ஆஷ்துரை மேலே கோபம் வந்ததற்கு இதுதான் காரணம் என்றார் சின்னக்குத்தூசி.   


9) சின்னக்குத்தூசிக்கு பயிற்சி பெறாத ஆசிரியராக ஒரு ஆரம்பப்பள்ளியில் வேலை கிடைத்தது. பின்னர் சில காலம் வேலை இல்லாத நிலையில், திருவாரூர் மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களின் கடிதம் பெற்று, திருச்சியில் தந்தை பெரியாரைச் சந்தித்தார். அங்கே பெரியார் ஆசிரியப் பள்ளியில், சிறப்பு அனுமதியின்பேரில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். 


10) திருவாரூரிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில்,, ஆசிரியப்பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளான கொட்டாரக்குடி, அத்திபுலியூர், ஆந்தக்குடி ஆகிய ஊர்களில் பணியாற்றியுள்ளார். 


11) குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது குன்றக்குடி அடிகளாரின் அன்பைப்பெற்று அவரிடம் நெருக்கமாகச் செயலாற்றினார்.


12) குன்றக்குடியில் பணியாற்றிய காலத்தில் தமிழ் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கே. சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு, சென்னைக்குப் பயணமானார்.  


13) பாசம் பொழிந்த தந்தை பெரியார்:  வேலை எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.  ஒருநாள் திராவிடர் கழகத் தலைவர் சிங்காராயருடன் நகரசபைத் தலைவர் வி.சாம்பசிவம் அவர்களது வீட்டுக்குப் போயிருந்தேன்.  பேச்சுக்கிடையே நான் வேலை இல்லாமல் இருப்பது குறித்து அவர்களிருவரும் கவலை தெரிவித்தார்கள்.  அப்போது சிங்கராயர், திருச்சியில் அய்யா ஒரு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி இருக்கிறார்.  நீங்கள் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால் இடம் கிடைக்கும் என்று சொன்னார்.  உடனடியாக தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார் சாம்பசிவம்.


மறுநாளே நான் திருச்சி சென்றேன்.  அப்போதெல்லாம் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு பஸ் வசதி கிடையாது.  ரயிலில் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து திருச்சி செல்லவேண்டும்.  நான் போன ரயில் மிகவும் காலதாமதமாகத்தான் தஞ்சையைச் சென்றடைந்தது.  அதனால் திருச்சி செல்லும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை.  காத்திருந்து அடுத்த ரயிலில் திருச்சி போனபோது இரவு 9 மணி ஆகிவிட்டது.


திருச்சியில் பெரியார் மாளிகை புத்தூரில் இருக்கிறது.  இரவு ஒன்பதரை மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தேன்.  அய்யா அந்த நேரத்திலும் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார்.  என்னைக்கண்டதும், வாங்க, எங்கே இவ்வளவு தூரம்! என்று கேட்டார்.  என்னை சிங்கராயர், யாகூப்புடன் அடிக்கடிப் பார்த்திருந்ததால், அய்யாவுக்கு என்னைத் தெரிந்திருந்தது.

சாம்பசிவம் தந்த கடிதத்தைக் கொடுத்தேன்.  அய்யா படித்துப் பார்த்துவிட்டு, உங்களை எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்திருந்தேனே.  ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே அட்மிஷன் எல்லாம் முடிந்து போய்விட்டதே; ஜூன் மாதக் கடைசியில் வந்து கேட்டால் எப்படி? என்று அன்போடு கடிந்து கொண்டார்!  தொடர்ந்து, சாப்பிட்டுவிட்டீங்களா? என்று கேட்டார்.  இல்லை என்றேன்.  உடனே மணியம்மையை அழைத்து எனக்குச் சாப்பாடு போடுமாறு சொன்னார்.


அய்யாவின் எதிரிலேயே அம்மா வழங்கிய உணவைச் சாப்பிட்டேன்.  சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, அய்யா தனது உதவியாளர் கொரடாச்சேரி கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார்.  கிருஷ்ணமூர்த்தி எனக்கு நெருங்கிய நண்பர்.  திருவாரூரில் நண்பர் விசுவநாதன் நடத்தும் தட்டச்சுப் பயிலகத்தில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றியவர்.  அவரிடம், அட்மிஷன் எல்லாம் முடிந்த பிறகு வந்து நிற்கிறார் இவர்.  ஒவ்வொரு வகுப்பிலும் மேலும் அய்ந்து அய்ந்து இடங்கள் அனுமதிக்க முடியுமா என்று கேட்டு சுந்தரவடிவேலுக்கு எழுதுங்க; அனுமதி கிடைத்தால் முதலில் இவருக்குக் கடிதம் அனுப்பச் சொல்லுங்க என்றார் அய்யா.  என் எதிரிலேயே நண்பர் கிருஷ்ணமூர்த்தி, அன்று பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்த நெ.து. சுந்தரவடிவேல் அவர்களுக்கு ஒரு விண்ணப்பத்தைத் தட்டச்சு செய்து அய்யாவிடம் காட்டினார்.


நான் சொன்னேன் என்று வக்கீலய்யாவிடம் இதைக் கொடுத்து, அனுப்பச் சொல்லுங்கள் என்றார்.  வக்கீல் அய்யா என்று குறிப்பிட்டது தி.பொ.வேதாசலம் அவர்களை.  அவர்தான் அப்போது பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் தாளாளராக இருந்தார்.  அப்ப நான் வர்ரேங்க அய்யா என்று நான் எழுந்தபோது, இந்த நேரத்தில்  ரயில் இருக்கிறதா? என்று கேட்டார்.  இருக்கிறது என்றேன் நான்.  உடனடியாக வேன் டிரைவரை அழைத்து என்னை ரயில் நிலையத்தில் விட்டுவரச் சொன்னார்.  பத்து தினங்களுக்குப் பிறகு, எனக்கு பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர அனுமதி கிடைத்தது.  பயிற்சிப் பள்ளியில் சேர்ந்துவிட்டேன்.  மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே அதுபோல அங்கும் வகுப்பறையில் நுழைய முடியாதபடி எனக்குக் கஷ்டம் வந்து சேர்ந்தது.


அப்போது அந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வராக பிரபுதத்த பிரம்மச்சாரி என்பவர் பணிபுரிந்து வந்தார்.  அவரே எனது வகுப்பின் ஆசிரியர்.  அவர் மிகவும் கண்டிப்பானவர்.  புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள் வாங்க என்னிடம் பணம் இல்லை.  அறை வாடகை, சாப்பாட்டுச் செலவுக்காக எனது பெற்றோர் ஒரு சிறு தொகையைத்தான் எனக்குக் கொடுத்திருந்தார்கள்; ஊரிலிருந்து அவர்கள் மறுபடியும் பணம் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவும் இடமில்லை.  இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் வருகைப்பட்டியல் எடுத்து முடிந்ததும், என்னிடம் புத்தகம் வாங்கிவிட்டாயா என்று முதல்வர் கேட்பார்.  நான் இல்லை என்பேன்.  அப்படியானால் வெளியே போ என்பார்.  வகுப்பு ஆரம்பம் ஆவதற்கு முன்னாலேயே நான் வெளியே வந்துவிடுவேன்.


நான் வகுப்பறையிலிருந்து வெளியே வந்ததும், ஒரு மூலையில் அமர்ந்து கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.  இப்படி தினசரி வகுப்புக்குச் செல்லாமல், மரத்தடியில் அமர்ந்து புத்தகம் படிக்கும் என்னை அய்யா கவனித்துவிட்டார்.


மணியம்மையாரை அழைத்து, அட்மிஷன் எல்லாம் முடிந்த பிறகு, இவருக்காக மறுபடியும் அனுமதி வாங்கி இவரையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டோம்; இவர் வகுப்பறைக்கே போவதில்லை போலிருக்கிறதே; என்னவென்று விசாரித்தால் நல்லது என்று கூற, மணியம்மையார் என்னை அழைத்து விசாரித்தார்.  நான் எனது ஏழ்மை நிலையை விளக்கி, புத்தகம் வாங்க முடியாததால், வகுப்புக்குச் செல்ல முடியாதிருப்பது பற்றிச் சொன்னேன்.  அய்யாவிடம் வந்து சொல்லுங்கள் என்றார் அவர்.


அய்யாவிடம் சென்று சொன்னேன்.  உடனடியாக அவர் அங்கு நிருவாகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சோமு என்பவரை அழைத்து எனக்கு புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கித்தரச் சொன்னார்.  பெரியார் அவர்களோடு எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை.  ஆனால் இந்த வாழ்க்கையின் சகல பகுதிகளிலும் அவரது அன்பும், உதவியும், வழிகாட்டுதலும் இருப்பதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.


- சின்னக்குத்தூசி 


14) பத்திரிக்கையாளர் ஏ. எஸ். பன்னீர்செல்வம் ஒரு நூலின் முன்னுரையில், ஏதேனும் ஒரு வழியில், இன்றைய என்னுடைய அரசியல், கலை, கலாச்சார, பொருளாதார பார்வையைச் சீர்படுத்தி, கூர்மைப்படுத்திக்கொள்ள உதவிய அந்த ஐந்து பிராமணர்கள், சமூகவியல் அறிஞர் ஷிவ் விஸ்வநாதன், பொருளாதார அறிஞர் எஸ்.குகன், பத்திரிகையாளர் என்.ராம், இலக்கியவாதி க.நா.சுப்பிரமணியம், அரசியல் விமர்சகர் சின்னக்குத்தூசி ஆகியோர்" என்று எழுதி இருந்தார். 


இதைப் படித்துவிட்டு சின்னக்குத்தூசி மகிழ்ச்சியடையவில்லை. 'கடந்த 50 ஆண்டு காலம் தந்தை பெரியார் வழியில் நான் நடந்து வந்த பிறகும், என்னுள் ஏதோ பார்ப்பனத்தன்மை இருப்பதாகத்தான் நீங்கள் சுட்டி காட்டியிருக்கிறீர்கள். உங்களுடைய சூத்திரர்களின் வரிசைப்பட்டியலில் நான் இடம்பெறும் நாள்தான், என்னுடைய சுயமரியாதைப்பாதையில் வெற்றிபெற்றதாக பொருள்' என்றார் சின்னக்குத்தூசி.  


15) நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும், நக்கீரன், ஜுனியர் விகடன், முன்னதாக மாதவி, தமிழ்ச்செய்தி, நவசக்தி, உண்மை உள்ளிட்ட இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக்கட்டுரைகளை சின்னக்குத்தூசி எழுதிக்குவித்துள்ளார். வலுவான வாதங்கள், அசைக்கமுடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள், இவற்றை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள், தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்று வருகின்றன. 


16) பத்திரிக்கைத் துறையில் வருகின்ற ஒருவருக்கு அவருடைய படைப்புகள் வழிகாட்டியாக இருக்கும். அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அவர் எப்படிப்பார்த்தார், அதனை எவ்வாறு மக்களுக்கு எடுத்துச்சென்றார், இதில் அவரது கண்ணோட்டம் என்ன என்பதை மூன்று அம்சங்களில் தெரிந்துக்கொள்ளலாம்.அவரது படைப்புகள் நிரந்தரமானவை. காலத்தை வேண்டிற்று நிற்கப்போகின்றன" என மூத்த பத்திரிகையாளர் சோலை குறிப்பிட்டுள்ளார். 


17) ஒரு கட்டத்துக்குள் (பாக்ஸ்) அடங்கக்கூடிய செய்திகள், அரசியல் விளக்கங்கள், ரசித்துச் சுவைக்கும் நையாண்டிகளை எழுதுவதில் வல்லவர்களாக இருந்தவர்கள் முரசொலி மாறன், கலைஞர் மற்றும் சின்னக்குத்தூசி ஆகியோர். 


18) சிற்றிதழ் அனைத்திலும் பெரிதும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. கணையாழி, தீபம், சரஸ்வதி,எழுத்து, ஞானரதம், கசடதபற, அஸ்வினி, கல்குதிரை, பிறை, பிரக்ஞை  என்று எல்லா சிற்றிதழ்களை ஆவலோடு படிப்பவர்.


19) தமிழ் தேசிய கட்சி காங்கிரசில் இணைந்த போது, குத்தூசியாரும் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து பெருந்தலைவர் காமராசருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டு, நவசக்தி நாளேட்டில் தலையங்கம் உள்ளிட்ட கட்டுரைகளை எழுதிவந்தார். பெருந்தலைவரின் மனதில் உள்ளதை அறிந்து கட்டுரை வடிப்பது ஆசிரியரின் தனித்தன்மையாகும்.  


20) 'அலைஓசை' நிறுவனர் வேலூர் நாராயணன் குத்தூசியார் பெயருக்கு மாதம் ரூ. 500/- அவரது வங்கிக்கணக்கில் போடுவதாகச் சொன்னபோது, தனக்கு கணக்கு ஏதும் இல்லை, தவிர அவ்வளவு பணம் தனியொருவனுக்குத் தேவையில்லையென மறுத்துவிட்டார். நாராயணனும் விடுவதாக இல்லை.'உங்களுக்கு தேவையில்லை என்றால், அப்படியே என் பெண்ணின் திருமணத்திற்கு கொடுத்துவிடுங்கள்' எனச் சொல்லி சம்மதம் பெற முயற்சித்தார். எந்த சமாதானத்தையும் அவர் ஏற்கவில்லை, இது நடந்த சில நாட்களிலே அவருக்கு தொடர் வேலை ஏதும் அமையவில்லை. அதற்காக, தனது சுயமரியாதையைத் தொலைத்துவிட்டு, எவரிடத்தும் தனது எழுத்தை விற்றதில்லை. தன்மானச் சிங்கமாகத்தான் நடைபோட்டவர் அவர். 


21) இதயம் பேசுகிறது மணியன், அலைஓசையில் வாங்குவதை விட இரண்டுமடங்கு அதிகமாக சம்பளம் தருகிறேன். அல்லது நீங்கள் விரும்பும் ஊதியத்தை தருகிறேன். இதயம் பேசுகிறது இதழில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டும் என்றார். சம்பளமெல்லாம் வேண்டாம், எனக்கென்று சுபாவம் உண்டு. எம். ஜி. ஆரை எதிர்த்தும், கலைஞரை ஆதரித்தும் நான் எழுதுவேன்! போடமுடியுமா? எனக்கேட்டார் சுயமரியாதைச் சிங்கம். அவ்வளவுதான், மணியன் மௌனம் காத்து வெளியேறிச் சென்றுவிட்டார்.


22) தன் தந்தை இராமநாதன் இறந்த போது, ஆற்காட்டார் தந்த இரண்டாயிரம் ரூபாயோடு திருவாரூர் செல்கிறார். அங்கிருந்து இறுதி மரியாதையை செலுத்திவிட்டு, பதினாறாம் நாள் காரியத்திற்கு பதிலாக, சில ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று சொல்லி அதற்கான காசையும் கொடுத்துவிட்டு சென்னை திரும்புகிறார். ஆற்காட்டாரிடன் சென்று, என் நண்பர்கள் செலவுகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லி அவர் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை திருப்பித்தருகிறார். இந்த சம்பவத்தை ஆற்காட்டார் வியந்து சொல்லிக்கொண்டிருந்தார்.   


23) எதிரொலி நின்று போன சமயத்தில், குங்குமம் பொறுப்பாசிரியர் கௌதம நீலாம்பரன் சின்னக்குத்தூசியை சந்திக்கிறார். அவர் வேலை எதுவும் இல்லாமல் இருப்பதை கண்டு, ஆதங்கப்பட்டு கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். உங்களுக்காகவே எழுதும் ஒருவரின் நிலை இப்படி இருக்கிறது என்பது போல அந்த கடிதம் இருக்கிறது. கலைஞர் உடனே, முரசொலியில் சேருமாறு அழைக்கிறார். கடிதம் எழுதியதை சொல்லவில்லை என்று கௌதம நீலாம்பரனை சின்னக்குத்தூசி கடிந்துகொள்கிறார். கலைஞரை ஆதரித்து முரசொலியில் எழுவதை விட மற்ற பத்திரிக்கைகளில் எழுதுவது முக்கியமானது என்பது சின்னக்குத்தூசியாரின் எண்ணம். இருப்பினும், முரசொலி மாறனின் வற்புறுத்தலினால் 1985ம் ஆண்டில் சின்னக்குத்தூசி முரசொலியில் இணைந்தார். 


24) கவிஞர் கண்ணதாசனுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையே இருந்த ஆழமான நட்பையும், குறிப்பாக 1969 க்கு பிறகு கண்ணதாசன் கலைஞரைப்பற்றி பேசியது எழுதியதை படிக்கும் போது, இவரைவிடக் கலைஞரை இவ்வளவு அற்புதமாக விமர்சனம் செய்தவர் எவரும் உண்டோ என்ற வியப்பே எல்லோருக்கும் ஏற்படும். கலைஞர் கருணாநிதியும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும், தமிழருக்கோர் திருவிழா, கருணாநிதி இல்லையேல் திமுக அழிந்துவிடும் என்பன போன்ற கட்டுரைகளால் கலைஞருக்கு வேறொருவரும் சூட்ட முடியாத புகழாரங்களைச் சூட்டியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். இந்த தகவல்கள் சங்கரன் எழுதிய “இரு இமயங்கள்” என்ற நூலின் முன்னுரையில் அய்யா தெரிவித்தது. 


25) காங்கிரஸ் ஆதரவு பத்திரிக்கைகளில் வேலைசெய்த போதும் "சுயராஜ்ய நிதியை ஏப்பம்விட்டு காங்கிரஸ்காரர்கள்" என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டதற்காக, கடிந்துக்கொண்டு, காங்கிரஸ்காரர்களிடம் மடிப்பிச்சை ஏந்தி தான் இந்த பத்திரிக்கையே நடத்துகிறோம், நாளை, இதற்கு மறுப்புத்தெரிவித்து மன்னிப்பு செய்தி வெளியிடவேண்டும் என்று சொன்னபோது, சற்றும் தயக்கமின்றி, "என்னால் அப்படி எழுத முடியாது" என்று மறுத்துவிட்டார் அய்யா. ஏன் முடியாது? என்று கேட்டபோது, "காங்கிரஸ்காரர் சுயராஜ்ய நிதியை ஏப்பம் விட்டார்கள்" என்று பெரியார் பேசிய பேச்சைத்தான் வெளியிட்டேன். பெரியார் பேச்சில் இருந்து தான் தலைப்பாகப் போட்டேன். பெரியார் பேச்சுக்காக அதனை வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன், என்னால் முடியாது" என்று திட்டவட்டமாக பதில் அளித்தார் சின்னக்குத்தூசி.  


26) ஐக்கிய முன்னணி அரசில் தி.மு. கழகமும் அங்கம் வகித்தது. எட்டு மாநிலங்களில் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகளின் ஆட்சி நடந்தது. அப்பொழுது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நரசிம்மராவ், காங்கிரசை தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஒரு சர்ச்சை வந்தது. அன்று ஐக்கிய முன்னணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திரஜித் குப்தாவும் அந்த சர்ச்சையில் குதித்து 'நரசிம்மராவ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதுதான் சரி' என்றார். அது குறித்து, முரசொலியில் குத்தூசியார் ஒரு தலையங்கம் எழுதினார். "ஹவாலா ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பதற்காக நமது மத்திய சபையிலிருந்து ஆறு அமைச்சர்களை பதவி விலக சொன்னவர் நரசிம்மராவ்.  அதே அளவுகோல் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள நரசிம்மராவும்  காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவது தான் சரி என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இரண்டுநாள் கழித்து, கலைஞரிடமிருந்து ஒரு குறிப்பு வந்தது. அதில் காங்கிரஸ் பற்றியோ, அல்லது அதன் தலைவர் நரசிம்மராவ் பற்றியோ, ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பற்றியோ குறைகூறி 'முரசொலியில்' தலையங்கங்கள், கட்டுரைகள், செய்திகள், வெளிவருவது நல்லதல்ல. அது ஜெயலலிதாவுக்கே உதவி செய்வதாக இருக்குமென்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தலையங்கம் என்பது தினசரி எழுதப்பட வேண்டியது. எட்டு மாகாணங்களில் நடைபெறும் விஷயங்கள், காங்கிரஸ் நடவடிக்கைகள் போன்றவற்றையெல்லாம் விமர்சிக்கக்கூடாது என்றால், தினசரி தலையங்கம் எழுதுவது சிரமான ஒன்றாகிவிடும். ஆகவே, தலையங்கம் எழுதும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துவிடுங்கள் என்று கலைஞருக்குக் கடிதம் எழுதினார் குத்தூசி. கலைஞர் மறுபடியும் தொலைபேசி மூலம் அதையே வலியுறுத்தி, சற்றே குரலையும் உயர்த்திப்பேசினார். "நானே தலையங்கம் எழுதுவேன் தெரியுமா" என்றார். "நீங்கள் எழுதினால் இன்னும் பல மடங்கு சிறப்பாக இருக்கும், இன்னும் ஏராளமானவர்கள் படிப்பார்கள்" என்று பதிலளித்துவிட்டு ராஜினாமா எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறினார். 


27) வீரவாஞ்சி சுதந்திர போராட்டத் தியாகி தான், ஆனால் தற்கொலை செய்துக்கொண்டுவிட்டார். எனவே, அவருக்குத் தியாகிகள் பென்ஷன் தரமுடியாதுன்னு சொல்லி பக்தவச்சலம் ஆட்சியில் எழுதிவெச்சிட்டாங்க. அண்ணா ஆட்சிக்கு வந்த முதல் சட்டசபைக் கூட்டத்தில், கருத்திருமன் என்ற காங்கிரஸ் உறுப்பினர் எழுந்து, வீரவாஞ்சி குடும்பத்தில் இருந்து தியாகிகள் பென்ஷன் கேட்டு மனு வந்திருக்கு, அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதுன்னு கேட்டார். அதற்கு அண்ணா, பக்தவச்சலம் இந்த மாதிரி செய்திருக்கிறார், சட்டப்படி அவர் செய்தது சரியாக இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் நான் இந்த மாதத்தில் இருந்து தியாகிகள் பென்ஷன் அவர் குடும்பத்திற்கு கொடுக்கணும்னு கையெழுத்துப் போட்டு விட்டுத்தான் இப்போது சபைக்கு வருகிறேன்" என்று சொன்னார்.


திராவிட இயக்கத்திற்கு பிராமண எதிர்ப்பு என்பது தனிப்பட்ட  மனிதர்கள் பெயரில் இருந்து வருகிற கோபமோ ஆத்திரமோ கிடையாது. இப்படி ஒவ்வொரு இடத்திலும், பெரியார் அவர் வழிவந்த திராவிட இயக்கத்தாரில் இந்த பெருந்தன்மையைப் பார்க்கலாம். வேலூர் முனிசிபாலிட்டியில் பெரியாருக்கு ஒரு வரவேற்பு குடுத்தாங்க, நகரசபை தலைவரும், கமிஷனரும் "அய்யா, நிகழ்ச்சி நிரலில் முதலில் கடவுள் வாழ்த்து இருக்கு, அது உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும், எனவே அது முடிந்த பின்னாடி உங்களை கூட்டிக்கொண்டு போகிறோம்ன்னு சொல்றாங்க. ஆனால் பெரியார் மேடைக்குபோனவுடன், கடவுள் வாழ்த்துப்பாடப்படும்ன்னு சொன்னவுடனே யாரையும் விட முன்னதாகவே எழுந்து நின்றார்.


28) அண்ணா அடுக்குமொழியில் பேசுகிறார், அதில் பகட்டுதான் இருக்கிறது என்று அப்போது, யார் கேலியை ஆரம்பித்து வைத்தது என்றால், அழகு தமிழில் நல்ல தமிழில் எழுத முடியாதவர்கள், அது தங்களுக்கு கைவராத காரணத்தாலேயே இப்படிப்பட்ட கிண்டல் கேலிகளை ஆரம்பித்து வைத்தார்கள்! அண்ணாவின் அழகு தமிழைக் கேலிசெய்த அவர்களே அந்தக்காலத்தில் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் தூயதமிழ்ப்பேச்சை, எழுத்தைச் சிலாகித்தவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 


29) காலச்சுவடு இதழுக்கு சின்னக்குத்தூசியார் அளித்த பேட்டியிலிருந்து 

கேள்வி: இந்தியச்சுதந்திரம் பற்றி அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் தி.மு.க பிரிவதற்கு காரணம் என்று எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பெரியார் அவர்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை துக்கத்தினம் என்று கூறியபோது, அண்ணா திராவிடநாடு இதழில் "அது துக்க நாள் இல்லை; எல்லோரும் கொண்டாட வேண்டிய இன்ப தினம் தான்" என்று பகிரங்கமாக எழுதினார். அது மட்டுமே திமுகழகம் பிரிவதற்கான காரணம் என்றால், அப்போதே அண்ணா திராவிடர் கழகம் விலகி, புதுக்கட்சி கண்டிருக்க வேண்டும். அல்லது அப்போதே அய்யா அவர்கள், அண்ணாவை திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். இரண்டுமே நடைபெறவில்லை. துக்க நாளா? அல்லவா? என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு பின்னரே, 1949ல் அய்யா மணியம்மையாரைத் திருமணம் செய்துக்கொண்ட போதுதான், அண்ணா, தி.க விலிருந்து விலகுகிறார். தி.மு. கழகத்தை தொடங்குகிறார். ஆகவே, ஆகஸ்ட் 15 பற்றிய கருத்து வேறுபாடுகள் தி.மு.க தோற்றத்திக்கே காரணம் என்பது முழுமையான உண்மையல்ல. அய்யாவுக்கு அண்ணாவுக்குமிடையே 1947 ஆகஸ்டுக்கு முன்பிருந்தே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும், 1947 ஆண்டுக்குப்பிறகு ஏற்பட்ட கசப்புகளும் சேர்ந்துதான் அந்த பிரிவு. 1947 ஆகஸ்ட் 15 பற்றிய கருத்து வேறுபாடும் ஒரு காரணம் என்று சொல்லலாம். 


  • சின்னக்குத்தூசியார்   


30) 100க்கு 97 சதவிகித மக்களுக்கு பயன்தரும் வகையில் சமூக மறுமலர்ச்சி சீர்திருத்தங்களை அமலுக்கு கொண்டு வந்தது நீதிக்கட்சி. அதிலே ஒன்றுதான் இடஒதுக்கீடு. அப்போது அதற்குப்பெயர் வகுப்புவாரி பிரதிநித்துவம். அன்று அமுல் நடத்தப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இன்று பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடாக மலர்ந்துள்ளது. திராவிடர் இயக்கத்தின் இடைவிடாத போராட்டம் காரணமாக, 69 சதவிகித இட ஒதுக்கீடாக வளர்ச்சி அடைந்து அமுல் நடத்தப்பட்டு வருகின்றது.


மக்கள் சமுதாயத்தில் சாதி இழிவு, சாதி ஆதிக்கம், உத்தியோகங்கள்  மற்றும் கல்வியில் புறக்கணிப்பு போன்றவைகள் இருந்தபோது, நீதிக்கட்சியும் அதன்பின் வந்த சுயமரியாதை இயக்கமும், அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் அந்த தீமைகளை எதிர்த்தபோது இருந்த ஆதரவும், உயர்வும் இன்று மங்கிவிடவில்லை என்றாலும், திராவிட இயக்கத்தின் இடைவிடாத முயற்சி, போராட்டங்களால் களையப்பட்டு விட்டநிலையிலும் அன்றிலிருந்து அதே உணர்வும் எதிர்ப்பும் இன்னும் இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியுமா? திராவிட இயக்கத்தின் குறிக்கோள்களில் 60 - 70 சதவிகிதத்திற்கு மேற்பட்டவை படிப்படியாக அமுலுக்கு வந்துவிட்டது என்றாலும், அடியோடு திராவிடர் இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் இலட்சியங்கள் நனவாகிவிட்டதாகக் கூறுவதற்கில்லை. ஆனாலும் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளும் சாதனைகளும் வெற்றிலும் அன்றைக்கு இருந்ததைவிட, இன்று அதிக அளவிலேயே இருக்கின்றன என்று ஓங்கி அடித்துக்கூற  வேண்டும். 


(கருப்பு வெள்ளை இதழுக்கு சின்னக்குத்தூசியார் அளித்த பேட்டி (ஜூன் 2010)


31) ஒருமுறை சென்னைக்கு வருகைதந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இவரை நேரடியாக அழைத்துப்பேசும் சூழல் உண்டானது. அதன் மூலம் குத்தூசியின் மூலையைக்கொஞ்சம் மழுங்கச்செய்யலாம் என்ற உத்திதான் அது. ஆனால் நடந்ததோ வேறுவிதமானது. சங்கராச்சாரியாரிடம் தந்தை பெரியார் எழுதிய புத்தகங்களை அளித்து,மதம் என்பது எது? மதம் உருவானதெப்படி? மதங்களிடையே ஒற்றுமை கருத்து ஏன் இல்லை? மதத்தினால் ஏற்பட்ட பயன் என்ன? மதம் மக்களைத் திருத்தியதா? ஜீவகாருண்யம் செயலில் உண்டா? மதத்தால் பொது அறிவு வளர்ந்துள்ளதா? மந்திரத்தின் மகிமை மனிதனிடம் செல்லாதது ஏன்? சாதியின் அவசியம் என்ன? மதம் எதற்காக வேண்டும்?  என்று பல கேள்விகளைக் கேட்ட குத்தூசியார், 'மதம் இயற்கைக்கு மாறுபட்டதே, அது மடமை நிறைந்த கற்பனைகளின் தொகுப்பே' நம்பிக்கையின் மீது கட்டப்பட்டதே மதம், மனிதனை மடமையில் ஆழ்த்தவே மதம் ஏற்பட்டது. மற்றவர்களை ஏய்த்து பிழைக்கவே மதம், அறிவைக் கெடுப்பதற்கே உருவானது தான் மதம். மதவாதிகள் பேசுவதெல்லாம் ஏமாற்றும் தந்திரப்பேச்சுகள் எனவும் பலவாறாக விவாதித்து விளக்கம் அளித்துள்ளார். 


மேலும் சங்கரமடத்தின் வருணாசிரமக் கொள்கைகளை ஆணித்தரமாக மறுத்துப்பேசினார். அவரது வாதங்களை கேட்ட சங்கராச்சாரியார் பதில் அளிக்க (தெரியாமல்) முடியாமல் இறுதிவரை மவுனத்தையே பதிலாக அளித்தார்.


சங்கராச்சாரியுடனான சந்திப்பை எதிரொலியில் கட்டுரைகளாக எழுதியுள்ளார். அது "சங்கராச்சாரியின் முகத்திரை கிழிகிறது" என்னும் நூலாகவே வெளி வந்துள்ளது. 


32) நக்கீரன் அலுவலகத்தில் அதன் ஆசிரியர் கோபால் அவர்களை தேடி போலீஸ் வந்த போது, சின்னக்குத்தூசி அவர்களிடம் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது, "நீங்க கடவுள் பக்தி இல்லாதவராம்? சாமி கும்பிடமாட்டிங்களாமே, தெருவில் உள்ளவங்க சொல்றாங்க." என கேட்டிருக்கிறார்கள். 


அதற்கு சின்னக்குத்தூசி அவர்களின் பதில், "எனக்கும் சாமி உண்டுங்க. காலையில் எழுந்திருக்கும் போது, அந்த சாமியைத் தான் பார்க்குறேன். ராத்திரி படுக்கும்போதும் அந்த சாமியைத்தான் பாக்குறேன். இப்போ எனக்கு பின்னாடி இருக்கு பாருங்க அதாங்க அந்த சாமி" அய்யா தனக்கு பின்னே உள்ள சுவரை நோக்கி கைகாட்ட, அங்கே பெரியார் படம் மாட்டப்பட்டிருப்பதை போலீசார் பார்க்கிறார்கள்."


"இவர் தான் சாமி, ராமசாமி, பெரியார் ஈ.வெ. ராமசாமி தெரியுமா? தந்தை பெரியார்ன்னு சொல்லுவோம்". போலீசாரால் தலையாட்ட மட்டுமே முடிந்தது.      


33) குஜராத் கலவரங்கள் மோடியால் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, 'காந்தி மண்ணில் பறக்கும் கோட்சே  கொடி'  என நக்கீரனில் எழுதியது இன்றும் இஸ்லாமியர்களின் நெஞ்சில் நிழலாடுகிறது. 


34) நினைவு தெரிந்த நாளில் இருந்தே பெரியாரிஸ்டாக வாழ்ந்தவர். பார்பனராய் பிறந்து உபநயனம் செய்துகொள்ளவில்லை, பூணூல் அணியவில்லை. நெற்றியில் நாமம் இடவில்லை. ஒருமுறை பத்திரிக்கை அதிபர் ஒருவர் திருப்பதி செல்லும் போது இவரை அழைத்தார். அவரது வேண்டுகோளை மறுக்காத சின்னக்குத்தூசி, பேச்சுத்துணைக்கு வருகிறேன் எனச்சொல்லி காரில் ஏறினார். திருப்பதி அடைந்தவுடன், வேங்கடவனை தரிசனம் செய்யாமல், அறைக்குள் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். 


35) உடல்நலம் மிகவும் மோசமாகிவிட்டிருந்த காலத்திலும், 'திராவிட இயக்கத்துக்காரனாகத்தான் இன்றளவும் இருக்கின்றேன். உடல்வலியால், ஆண்டவனை அழைப்பதை கேட்டிருக்கிறேன். என் வலியிலிருந்து அப்படியொரு வார்த்தை வந்ததில்லை. இதனை விரும்பாமல் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாகவே கருதி நிம்மதி கொள்வேன்" என்று சின்னக்குத்தூசி அவர்கள் சொன்னதாக தெரிவிக்கிறார் இன்னொரு பெரியாரிஸ்ட்டான நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் அவர்கள்.


36) திருவல்லிக்கேணி பகுதியில் அவர் வாழ்ந்த இடங்களெல்லாம் ஊடகத்துறை வேலைவாய்ப்பு அலுவலகம் என்றுதான் பலராலும் பேசப்படுவதுண்டு. 


37) காலச்சூழ்நிலையில் அவர் ஒரு சில கட்சிகளில் அங்கம் வகுத்திருந்தாலும், எந்தப்பத்திரிக்கைகளில் பணிபுரிந்தாலும், திராவிட இயக்கக் கொள்கைகளைத் தாங்கியவராகவே நடைபோட்டுள்ளார். பெரியார் கொள்கைகளுக்கு மாறாக அவரது பேனா சுழன்றதில்லை.


38) தந்தை பெரியார் பிறந்தநாளான , செப்டம்பர் 17 அன்று காலை ஏழு மணிக்கும், அவர் மறைந்த நாளான டிசம்பர் 24 காலை ஏழு மணிக்கும், பெரியார் திடல் வந்து அய்யாவுக்கு மரியாதை செலுத்த அவர் தவறியதில்லை. அடிப்படையில்  சின்னக்குத்தூசி ஒரு பெரியாரிஸ்ட்டாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் என தி.க. பொதுச்செயலாளர் பூங்குன்றன் தெரிவிக்கிறார்.  


39) 2005 ம் ஆண்டுக்கான முரசொலி அறக்கட்டளையின் சார்பாக "கலைஞர் விருது" வழங்கப்படுவதாக கலைஞர் அறிவித்தார். பட்டங்களையும், பதவிகளையும், விருதுகளையும், விழாக்களையும் முற்றிலும் தவிர்த்த பண்பாளர் சின்னக்குத்தூசி, கலைஞரின் அறிவிப்பு என்பதால் இசைவளித்தார்.


"இதைவிடப் பாக்கியம் எனக்கு வேறென்ன வேண்டும். இதுவே முதலும் கடைசியுமான விருது" என மனநெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார். 


40) முரசொலி கலைஞர் விருது விழாவில் கலைஞர் பேசியது, சின்னக்குத்தூசி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்கள். அதை அவர் விரும்பவும் மாட்டார், ஏற்கவும் மாட்டார். அவர் மனித சமுதாயத்தைச் சார்ந்தவர்" என்று தலைவர் கூற, அரங்கம் ஆர்ப்பரித்தது. 


41) 2011மே திங்கள் சின்னக்குத்தூசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அன்றைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனை சென்று பார்க்கிறார்.அவரிடம் அரசியல் விஷயங்களை மனம் உருகிப்பேசிய அய்யா, தளபதி கரங்களில் முத்தமிட்டவாறு, "நான் சொன்னதைக் கவனத்தில் வையுங்கள்" என அன்பொழுக்கச் சொல்லி வழியனுப்பி வைத்தார்.


42) மே 12, அய்யாவின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் வருகை தந்த நாள். தேர்தல் முடிவுக்கு முன்பாக நடந்த சந்திப்பு, குத்தூசியாரின் கண்கள் ஆறாகப்பெருகியது. கலைஞர் முத்தமிட்டார். எந்தபதட்டமும் இல்லாமல் அதனைப்பெற்றுக்கொண்டார் இப்போது அவரது சட்டையும் ஈரமானது.


அப்போது தலைவரிடம் இவர் தேர்தல் நிதியாக ரூபாய் 1000/- கொடுக்க, ஏற்கனவே தன்னிடம் தயாராக வைத்திருந்த ஒரு உரையை (ரூ 50000 அடங்கியது) தலைவர் அவரிடம் தந்தார். ஒப்பற்ற இரு இமயங்களின் மன ஓட்டத்தை விவரிக்க இயலாது என்றே சொல்லவேண்டும். அதுவே இறுதி சந்திப்பாக இருக்கும் என்று எவருமே நினைக்கவில்லை.  


43) சின்னக்குத்தூசி இருந்தது பாரடைஸ் விடுதி (Paradise Guest House).  பத்திரிக்கையாளர்கள் தேடிவந்த அந்த சரணாலயத்தில் பின்னிரவிலும் நீளும் உரையாடல்களால், ஒரு தாய்ப்பறவை போல இதர பறவைகளுக்கு இரையூட்டி தன் பசியை தீர்த்துக்கொள்வார் அய்யா. திராவிட இயக்க வரலாறு, தேசிய அரசியல், பொருளாதாரம், சமூகத்தேடல்கள், அணுசக்தி, கர்நாடக சங்கீதம், கிரிக்கெட், நல்ல சாப்பாடு, பின் நட்சத்திர ஹோட்டல்களின் பஃபேவைப்போல அங்கே மெனு விரித்திருக்கும். வந்தவர்கள் வஞ்சனையில்லாமல் தாகம் தணிப்பார்கள், பசியாறுவார்கள். இப்படித்தான் மற்றவர்களுக்கு தகவல் களஞ்சியம் என வர்ணிக்கிறார் நக்கீரன் துணை ஆசிரியர் கோவி. லெனின்.  


44) அய்யா அவர்களின் மறைவுக்குப் பிறகு அவரது அறையில் ரூ. 36000 ருபாய் இருந்தது. அத்துடன் கலைஞர் கடைசியாக கொடுத்த ரூ.50,000/- இருந்தது. அதை ஒரு லட்சமாக்கி, அவரது நண்பர்கள், அன்பர்களின் பங்களிப்பையையும் சேர்த்து தொடங்கப்பட்டது சின்னக்குத்தூசி அறக்கட்டளை. ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதுடன், ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் சிறந்த முற்போக்கு கட்டுரையாளர் ஒருவருக்கு 25 ஆயிரமும் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது. அறியமுடியாத தனது கொள்கைச் சுவடுகளால் சின்னக்குத்தூசியார் மரணத்தை வென்றிருக்கிறார். 


45) கலைஞரையும் தலைவர் வீரமணியையும் எந்தப்பாசறையில் இருந்தாலும், சின்னக்குத்தூசி விமர்சனம் செய்ததேயில்லை. அவரிடத்தில் இவர்களைப்பற்றி நேரிடை விமர்சனங்கள் செய்த எவரையும் அவர் விட்டுவைத்ததில்லை. அய்யா வீரமணியை வாழும் பெரியாராகவே, சின்னக்குத்தூசியார் தனது இறுதி மூச்சுவரைப் போற்றி பாராட்டி வந்துள்ளார்.


அதைப்போலவே சின்னக்குத்தூசியைத் தனது கெழுகை நண்பராகவே பாவித்து வந்துள்ள தலைவர் வீரமணி அவர்களும், இவரும் அக்கிரகாரத்து அதிசய மனிதரே என்று குறிப்பிட்டுள்ளார். பழைய ஆதாரங்களைக் கொடுப்பதிலும், எந்தப் பிரச்னையானாலும், அதன் முழுப் பரிணாமத்தினை அப்படியே படிப்பவர்களின் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் வீரமணி.


46) இனி இப்படியொரு எளிய மனிதரை நாம் எப்போது பார்க்கப்போகிறோம் என்கிற ஏக்கத்தை நம் நெஞ்சத்தில் நிரந்தரமாக விட்டு சென்றிருகிறார் மூத்த பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி.அவர் திராவிட இயக்கத்தின் கருவூலம், கழகத்தின் எழுத்தாயுதம், தலைவர் கலைஞரை எதிரிகளின் விஷ அம்புகளிலிருந்து காத்து நின்ற கவசம்.

'காற்றில் மிதக்கும் தூசு ஒன்று 

என்மீது பட்டாலே 

ஆற்றொண்ணா துயர் கொண்டு 

அதனை விரட்டுவதில் அன்னையாய் வாய்த்தவர்' என்று தலைவர் எழுதியுள்ள இரங்கல் வரிகள், கற்பனை கலவாத உண்மையான சொற்கள் என்று தளபதி மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டி இருக்கிறார். 


47) அவர் ஆண்டுக்கொரு முறைதான் புதுச்சட்டை போடுவார். அந்த நாள் செப்டம்பர் 17-ம் நாளில் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் மட்டுமே புத்தாடையணிந்து காலையிலே பெரியாரின் நினைவகத்தை நாடி வந்து தனது மரியாதையைக் காணிக்கையாக்குவதை கடமையெனப்போற்றி நடந்தவர்.


ஒரு உயர்சாதியில் பிறந்து கடைசிவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்து வாழ்ந்தவர் அவர். ஒருவர் எதைவேண்டுமானாலும் மறுக்கலாம். ஆனால் தான் பிறந்த சாதியை மறுப்பதென்பதும், உதறுவதென்பதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அவர் தன்னலம் மறந்து வாழ்ந்தவர், சுயத்தை மறந்து  கடமையாற்றியவர் என்று புகழ்மாலை சூட்டியுள்ளார் திராவிடர் தமிழ் இயக்கப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் அவர்கள்.  


48) பொது வாழ்க்கை பயணத்திற்காக திருமணமே செசித்துக்கொள்ளாமல் வாழ்ந்த அய்யாவுக்கு தனிப்பட்ட குடும்பம் இல்லை. ஆனால், நக்கீரன் குடும்பத்துத் தம்பிகள் அனைவரையும், அவர் தன் மகன்களாகக் கருதியவர். நக்கீரன் குடும்பத்து தம்பிகள் அனைவரின் நலனிலும் அவர் அக்கறை செலுத்தியவர். கடைசிவரை நேர்மையான பத்திரிக்கையாளராக எதையும் எதிர்பார்க்காமல், 77 வயது வரை வாழ்ந்தவர். அய்யா சின்னக்குத்தூசி, சென்னை திருவல்லிக்கேணியில் எட்டுக்கு ஆறு (8 x 6) அளவேயுள்ள சின்ன அறையில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு, அதில் தனக்கென ஒரு சிறு பாக்தியை ஒத்துக்கொக்கொண்டு வாழ்ந்த அய்யா, நடமாடும் அரசியல் களஞ்சியமாகத் திகழ்ந்தார். நேர்மையும், எளிமையும் மட்டுமே தனது சொத்துக்கள் என்ற இலட்சியத்துடன், ஏற்றுக்கொண்ட கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லாமல் வாழ்ந்த அய்யா அவர்கள், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர், கவியரசர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட மேதைகளிடம் நெருங்கிப்பழகிய மாமனிதர், காமராசர், கலைஞர் போன்ற பெரியார் தலைவர்களும் அவர்களின் இயக்கத்தை சேர்ந்த அடுத்தகட்ட தலைவர்களும், ஐயா சின்னக்குத்தூசியிடம் ஆலோசனைகள் கேட்பது வழக்கம். அத்தகைய பெருமைக்குரிய அந்த மனிதர் நக்கீரன் குடும்பத்திற்குத் தந்தைபோல இருந்து வழிகாட்டியதும், அவருக்குத் தொண்டாற்றக்கூடிய வாய்ப்பு  கிடைத்ததும், அவரது இறுதிப்பயணத்தை முன்னின்று நடத்தக்கூடிய சூழல் அமைந்ததும் நக்கீரனுக்கு வாய்ந்த கௌரவம் என்றே கருதுகிறோம். நிறைவான வாழ்வு வாஸ்த்த அய்யாவுக்கு அவர் விரும்பியவாறே சுயமரியாதைக்கு கொள்கைகளின் அடிப்படையில் இறுதி நிகழ்வுகளை மேற்கொண்டு எல்லோரது இதயமார்ந்த அஞ்சலியுடன் அவரது உடலை எரியூட்டியிருக்கிறோம்" - நக்கீரன் கோபால்


49) 1996 ல் நான்காவது முறையாக தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த தருணத்தில், முரசொலியில் எழுதிய ஒரு தலையங்கத்தின் நிமித்தமாக தலைவரோடு பிணக்கு கொண்டு சில காலம் தலைவரோடு பேசாமல் இருந்துள்ளார். பின், ஜெ. ஆட்சியில் கலைஞர் நள்ளிரவில் கைது என்ற கொடுமைக்கு ஆளானபோது, அது கண்டு வெகுண்டு எழுந்து, யுத்தப் பிரகடனம் மேற்கொண்டவராய், 'இனியும் பொறுப்பதில்லை, இந்தக்கணம் முதல் என் பேனா எனும் அறிவாயுதம் ஏந்தி தலைவருக்காகப் போராடுவேன்  என யாரும் அழைக்காமல் முரசொலிக்குச் சென்று மீண்டும் பத்திரிக்கைப் போராளியாக மாறி, மரணந் தழுவும் காலம் வரை, கலைஞர் தாசனாகவே செயல்பட்டு வந்துள்ளார் அவர். 


50) கலைஞரின் கவிதை - ‘கன்னல் தமிழ் கடும்புயல்' தமிழ் 

'அவாள்களை அய்யர் என்ற காலமும் போச்சே 

என்று பாடிய பாரதி வழியில் - 

எம்மொழி செம்மொழி என 

நல்மொழியாம் தமிழ் மொழியில் தலை உயர்ச்சிய 

பரிதிமாற் கலைஞனின் பாதையில் 

எழுபத்தேழு ஆண்டுக்கு மேலாக வாஸ்த்து 

எழுச்சிமிகு தமிழால் 

இன உணர்வு முரசம் ஒலித்தவர்!

என்பால் என்றைக்கும் 

உலராத அன்பின் ஈரம் காத்தவர்!

காற்றில் மிதக்கும் தூசு ஒன்று 

என் மீது பட்டாலே 

ஆற்றொண்ணா துயர் கொண்டு 

அதனை விரட்டுவதில் அன்னையாய் வாய்ந்தவர்!

குத்தூசி குருசாமிக்குப் பிறகு 

கன்னல்  தமிழில் 

 கடும்புயல் தமிழில் 

எண்ண எண்ண இனிக்கின்ற 

வண்ணத் தமிழில் இந்த 

சின்னக்குத்தூசி படைத்திட்ட 

எழுத்துச் செல்வமெல்லாம் 

எடுக்கக் குறையாத 

அடுக்கி மாளாத 

அத்தனை பெரும் செல்வேமென்பேன்.”

நூல் உதவி: கவிஞர் தெய்வசிலை எழுதிய :பகுத்தறிவு பண்பாளர் - சின்னக்குத்தூசி 100" 


சுருக்க வடிவம்: ராஜராஜன் ஆர்.ஜெ