Tuesday 29 December 2020

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 8 (மனசாட்சிக்குச் சரி எனப்பட்டதைச் செய்) – கனிமொழி.ம. வீ


அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 8 (மனசாட்சிக்குச் சரி எனப்பட்டதைச் செய்) – கனிமொழி.ம. வீ


பெரியாரின் இயற்கை குணம் என்று பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள், “இவர்தாம் பெரியார்” எனும் நூலில் குறிப்பிடும்போது , அவர் ஒரு கருத்தைக் கொண்டுவிட்டால் அது தான் சரி, மற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை, அதுதான் அவருடைய கொள்கைக்குப் பாதுகாப்பு என்று நினைத்தார், என்று குறிப்பிடுவார். மேலும் பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் நம்பிக்கை எதிர்ப்பு, மத எதிர்ப்பு ,இவ்வளவையும் பேசிக்கொண்டிருக்கிற ஒரு தலைவருக்கு அவர் மனதில் ஓர் ஆழமான கருத்து  ஊன்றி இருக்குமானால், அந்தக் கருத்துக்குத்தான் அவர் முக்கியத்துவம் தருவார். அந்தக் கருத்துதான் அவரை ஆளும் ; என்றும் குறிப்பிட்டிருப்பார்.

இந்த பற்றுதல் தான் ஒருவருக்கு மிகத் தேவை. கொள்கை மட்டுமல்ல வாழ்க்கையில் வெற்றி பெற நம் மனதில் தோன்றும் கருத்தை, நம் அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் சரி எனப்படும் கருத்தை எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்காக மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. அதனுடைய நிறை குறைகள் நம்மை மட்டுமே சார்ந்தது என்ற தெளிவும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தேவை. குறிப்பாக பகுத்தறிவு- கடவுள் மறுப்பு பேசுகின்றபோது,எத்தனை தோழர்கள் பின் வருகின்றார்கள் என்றெல்லாம் பார்க்க முடியாது. நம் குடும்பம் நம்மை ஏற்றுக்கொள்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்க முடியாது, உறவுகள் நம்மைவிட்டு விலகுவர் என்று எண்ணிக்கொண்டிருக்க முடியாது. ஒரே நேர்க் கோட்டில் நம் மனதிற்குப்பட்டதைப் பேச வேண்டும். அதற்கு மனசாட்சியின்படி நடக்கும் தன்மை வேண்டும்.

கடவுளை மறுத்து எப்படி வாழ்க்கையை நடத்துவது ? யாரிடம் நம் குறைகளைக் கொட்டித் தீர்ப்பது என்ற எண்ணம் வரும்; அதற்குத் தான் மனசாட்சியின் படி என்ற நிலையைப் பயன்படுத்திட வேண்டும். அது தான் வெற்றியைத் தேடிக் கொடுக்கும். பல நேரங்களில் கடவுளிடம் சொன்னோம் இந்தக் காரியம் அப்போதும் நடைபெறவில்லை என்றால் கடவுள் இதை விரும்பவில்லை என்று நினைக்கக்கூடியது மனித மனம். ஆனால் ஒரு செயலை ஆராய்ந்து முன்னெடுக்கும்போது, அதில் எத்தனை முறை பிரச்சனை வந்தாலும் பகுத்தறிவு மனம் அந்தச் செயலை முன்னெடுத்துக் கொண்டேயிருக்கும், வெற்றி கிட்டும் வரை. இந்த தன்மை தான் பெரியாருடைய மனம் என்கிறார் பேராசிரியர் அவர்கள். பெரியாருடைய மனம் , அவர் conscious , அவர் மனசாட்சி, அந்த மனசாட்சியின்படி அவர் பேசிய காரணத்தால் அவருக்கு ஒரு பெரிய மனநிறைவு ஏற்பட்டது. இரண்டாவது அவர் அதில் அதனால்தான் மெல்ல, மெல்ல வெற்றி பெற்றார். அந்த வெற்றி கண்ணுக்கு தெரியாவிட்டாலும்கூட, வர வர அவருடைய கருத்துக்கள் வலுப்பெற்றுக்கொண்டே வந்தது; வளர்ச்சி அடைந்தது, இன்னும் ஒரு படி மேலே சொன்னால் ஓர் இயக்கம் என்ற முறையில் சுயமரியாதை இயக்கம் கண்டு அதனைக் கட்டிக்காத்தார் என்கிறார்.

இந்த இயற்கை குணம் தான் பெரியாரை இந்த இன விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கச் செய்தது. தேசிய கொடி எரிப்பு போராட்டமாக இருந்தாலும், ராமன் பட எரிப்பு போராட்டமாக இருந்தாலும், ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை அரசமைப்புச் சட்டத்தில் கொளுத்தும் போராட்டமாக இருந்தாலும், அவர் ஆதரித்து ஆட்சியில் அமர்த்திய காமராசர் முதலமைச்சராக இருந்தபோதும் அதற்காகப் பின்வாங்காமல் , தன் மனச்சான்றின்படி அந்தப் போராட்டங்களை முன்னெடுத்தார். அந்தப் போராட்டங்களுக்காகக் கடுமையான சிறைத் தண்டனைகளைத் தானும் தன் தொண்டர்களும் பெற்றபோதும், அதனால் அச்சுறாமல் தொடர்ந்து போராடினார்கள். தான் மட்டுமல்லாது தன் தொண்டர்களையும் அவ்வாறே பழக்கினார் என்பது தான் தந்தை பெரியார் எனும் தலைவரின் தனிச்சிறப்பு.

குறிப்பாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் எல்லோரும் சேர்ந்து தீர்மானிப்பதற்கு அய்யா அனுமதிப்பதில்லை என்றும் பேராசிரியர் குறிப்பிடுகின்றார். அவர் சொன்னதைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் டபிள்யூ. பி.ஏ. சுந்தரபாண்டியன் கூட கொஞ்சம் மாறுபாடு கொண்டிருந்ததாகப் பேராசிரியர் குறிப்பிடுகின்றார். ஏன் பெரியார் அவ்வாறு கருதினார் என்றால் அது தான் அவர் கொள்கைக்குப் பாதுகாப்பு எனக் கருதினார். குறிப்பாக ஒரு இயக்கத்தை நடத்திட, அதுவும் பார்ப்பனர்களை எதிர்த்து ஒரு இயக்கம் எனும்போது, சர்வாதிகாரம் ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படும். அதைப் பெரியார் உணர்ந்தே இயக்கத்திற்குள் வரும் வரை , எவ்வளவு வேண்டுமானாலும் ஆலோசித்துக்கொள்ளுங்கள் ஆனால் இயக்கத்திற்குள் வந்துவிட்டபின் தலைமை சொல்வதற்குத் தான் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்கின்றார்.

தனிப்பட்ட  வாழ்க்கையிலும் நமக்கு எது சரி எனப்படுகிறதோ அதில் பின்வாங்காமல் பயணிக்க வேண்டும். மற்றவர் சொல்லும் கருத்துக்களைக் கேட்கவேண்டும் என்று தொடங்கினால் அதற்கு முடிவே இல்லை, விரும்பிய செயலை முன்னெடுக்கவும் முடியாது. எனவே தந்தை பெரியாரின் இயற்கைக் குணத்தை நம் வாழ்வில் பின்பற்றுவது சாலச் சிறந்தது.

No comments:

Post a Comment