Tuesday 29 December 2020

திராவிட நாடு கோரிக்கையும் பிரிவினைவாத தடுப்பு மசோதாவும் - அருண்குமார் வீரப்பன்

 திராவிட நாடு கோரிக்கையும் பிரிவினைவாத தடுப்பு மசோதாவும் - அருண்குமார் வீரப்பன்

 

த்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்தாட்டியது என்று கம்யூனிசத்தைக் குறித்துக் கூறுவார்கள். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாக ஆண்டாண்டு காலமாகச் சுரண்டப்பட்டு அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் தனக்கும் உரிமை இருக்கிறது என்றுணர்ந்து தனிமனிதனாகத் தனக்குள்ள உரிமைக்காகப் போராடத் தூண்டியது கம்யூனிசம் என்னும் சித்தாந்தம்.

 

அதே போன்ற நிலையில் இந்தியாவில் பார்ப்பனியத்திற்கு எதிராகத் திராவிடம் என்னும் சித்தாந்தம் எளிய மக்களுக்காகப் போராடிக்கொண்டிருந்தது. அன்றுவரை அதுதான் சரி அதுதான் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று இருந்தவற்றை எல்லாம் அடித்து நொறுக்கி எல்லா மக்களும் சமமே என்ற ஒற்றைக் கருத்தை ஏந்தி எல்லா மக்களுக்குமான உரிமைகளுக்கும் போராடும் இயக்கமாகத் திராவிடர் கழகம் இருந்தது. திராவிடர் படையின் போர்த் தளபதியாக முன்னின்று தன் நாவன்மையால் பார்ப்பனர்களையும் அவர்களின் புரட்டுகளையும் அடித்து ஓடவிட்டு நிதர்சனத்தைத் தேன் தமிழில் பேசி எளிய மக்களைத் தங்களின் இழி நிலையை உணர வைத்து அதற்கு எதிராகப் போராடும் வலிமையையும் துணிவையும் தன் பேச்சு எழுத்து மூலம் சாதித்தார்.

 

அதுநாள்வரை தாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதைக் கூட உணராது கடவுளின் சித்தம் அதுவே என்று வேதாந்தத்தில் மூழ்கி தன்னை ஏய்ப்பவர்களை எதிர்க்காமல் அதற்குப் பழகாமல் குனிந்து குனிந்தே கூன் விழுந்த மக்களை நிமிர்ந்து நடக்க வைத்தார். பக்தி தமிழைப் பேசி ஏய்த்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து தனது பகுத்தறிவு தமிழின் மூலம் மீட்சி அளித்தார். இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் ஒப்பிலா அறிவுச்சுடரான அண்ணா. திராவிடம் என்னும் கொள்கையை ஏந்தி எளிய மக்களின் விடுதலையையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு இறுதிவரை உறுதியாகக் கொண்ட கொள்கையில் நின்று நவீன தமிழகத்திற்கான வலிமையான அஸ்திவாரத்தை அமைத்துச் சென்றார்.

 

அவர் சென்ற போது அவரின் பங்கு அவர் போட்ட அடித்தளம் எந்த அளவு என்பதை அவர் உணர்ந்திருந்தாரா என்பது சந்தேகமே. ஏனெனில் அவர் இறந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் அவர் ஆரம்பித்த கட்சியும் அவரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியும் மட்டுமே இன்றுவரை ஆட்சியில் இருந்து வருகிறது. இதன்மூலம் அவர் விதைத்த வித்து எத்துணை வலிமையானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

 

அவர் திராவிடர் கழகத்தில் இருந்த போதும் சரி திமு கழகம் ஆரம்பித்த பின்னரும் சரி இந்திய ஒன்றியத்தில் இருந்து திராவிட நாடு என்று பிரிந்து வந்தால் மட்டுமே நாம் நமக்கான உரிமைகளை முழு முற்றாகப் பெற முடியும் என்பதில் அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அது தான் உண்மையும் கூட. தமிழ்நாட்டின் இன்றைய நிலையை இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு நம் வளர்ச்சியைக் குறித்து நாமே பெருமை கொண்டு இருந்தாலும் இந்த வளர்ச்சி என்பது நம் ஆட்சியாளர்களையும் நம் வளங்களையும் உற்று நோக்கும் போது இது குறைவானதே. உண்மையில் திராவிட நாடு என்று தனியே நாம் பிரிந்து வந்திருப்போமேயானால் இன்றைய வட இந்தியா தென் இந்தியாவுக்குமான வேறுபாடு வடகொரியா தென்கொரியாவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போல அமைந்திருக்கும். 

 

இந்திய ஒன்றியத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு மாநிலமாக இருந்து கொண்டு பெரும்பாலான உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கும் சிறிதளவு உரிமைகளை வைத்துக் கொண்டு இந்த அளவு வந்திருப்பது பெரிய விசயமாகத் தான் இருக்கிறது. அதனால் தான் தமிழகத்தைப் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுவது என்பது சரியான ஒன்றாக இருக்காது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுவதே சரியான ஒன்றாக இருக்கும். ஆனாலும் இன்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளைக் குறை சொல்ல முனைபவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டே தமிழகத்தைக் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிங்கப்பூரில் இருக்கும் மக்கள் தொகை மற்றும் அங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் சுதந்திரமான அணுகுமுறை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாமலேயே குறை சொல்வதற்காக மட்டும் அப்படிப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஐந்து குழந்தை இருக்கும் வீட்டில் ஒருவருக்கு ஒரு ரொட்டி கிடைக்கிறதென்றால் ஒரு குழந்தை மட்டும் இருக்கிற வீட்டில் அந்தக் குழந்தைக்கு ஐந்து ரொட்டி கிடைக்கும். இதை அந்த வீட்டை நிர்வகிப்பவர்களின் குறைபாடு என்று கூறுவது அவர்களின் அறிவு குறைபாடே ஆகும். இந்த இரண்டையும் எப்படி ஒப்பீடு செய்கிறார்கள் என்பது அந்த முட்டாள்களுக்கே வெளிச்சம்.

 

திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பல்வேறு வகையான காரணங்கள் இருக்கின்றன. முரசொலி மாறன் அவர்களின் 'ஏன் வேண்டும் இன்ப திராவிடம்புத்தகத்தில் அதற்கான தேவை என்ன எங்கெங்கு நாம் ஏமாற்றப்படுகிறோம் என்றெல்லாம் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருப்பார்.திராவிடர் கழகம் திராவிட நாடு கேட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

 

இனவெறி என்பது அதில் இல்லவே இல்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. பல இனங்கள் ஒன்றாகக் கலந்து தான் இங்கே வாழ்கின்றனர். ஆனால் ஆரியர்களை மட்டும் குறிப்பிட்டு எதிர்த்து தனிநாடு கேட்பதற்கான காரணம் அவர்கள் நம் மீது அவர்களின் மொழி கலாச்சாரத்தைத் திணித்து நம்மை அடிமையாக வைத்திருந்ததே ஆகும். நாம் அடிமையாய் இருக்கவே பிறந்தவர்கள் அவர்கள் மேலானவர்கள் என்பதை அவர்கள் தீவிரமாக நம்பியதோடு மட்டுமல்லாமல் புராண வேதப் புரட்டுகளின் மூலம் கடவுளின் பெயரைச் சொல்லி அதுதான் சரியானது என்று மக்களையும் நம்ப வைத்திருந்தது தான்.

 

தொடர்ச்சியாகக் கல்வி வேலைவாய்ப்பு என்பதில் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலைகள் தாண்டி சாதிய கொடுமைகளால் தனிமனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கான நிலைக்குத் தள்ளப்பட்டனர். மூன்று சதவீத மக்கள் தொடர்ச்சியாகத் தொண்ணூற்று ஏழு சதவீத மக்களைச் சுரண்டி உண்டு கொழுத்து வந்தனர். அதையும் தாண்டி இந்தியா என்பது என்றுமே ஒற்றை நாடாக இருந்ததில்லை. பல தனித்தனி ராஜ்ஜியங்களாகவே இருந்தன.

 

காங்கிரஸ் என்பது ஒட்டுமொத்த மக்களுக்குமான பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்டாலும் அதில் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். சனாதன தர்மமே சரி என்ற மனப்போக்குடையவர்களாகவே இருந்தார்கள். எனவே அவர்கள் மூலம் பெறப்படும் விடுதலை தமக்கான விடுதலையாக இருக்காது. மீண்டும் பார்ப்பனர்களுக்கு அடிமை படும் நிலையே உருவாகும் என்பதை உணர்ந்திருந்தனர். எனவே தான் திராவிட இயக்கத்தினர் திராவிட நாடு என்ற கோரிக்கையை வலுவாக முன்னிறுத்தினர்.

 

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப் பிறகு இதே கொள்கையை முன்னிறுத்தி 1949 ஆம் ஆண்டுச் செப்டம்பர் 17அன்று அண்ணா அவர்கள் திமுக எனும் இயக்கத்தைத் தோற்றுவித்தார். முதல் தேர்தலான 1952 ஆம் வருடத் தேர்தலில் அவர்கள் போட்டியிடவில்லை. பின்னர்க் கட்சியினரின் ஜனநாயக முறையான கணக்கெடுப்புக்குப் பிறகு அடுத்தத் தேர்தலில் நிற்க முடிவெடுத்தது. அதன் பின் இரு தேர்தல்களுக்குள் திமுக எதிர்க்கட்சியாக வந்தது. திமுகவின் இந்த அசுர வளர்ச்சி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸிற்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

 

அப்படி இருந்த நிலையில் 1962 ஆம் ஆண்டுச் சீனா இந்தியாவின் மீது படையெடுக்கிறது. அதைத் தொடர்ந்து பிரிவினைவாத தடுப்பு மசோதாவும் கொண்டு வரப்படுகிறது. இது பிரிவினைவாதம் வைப்பது சட்டப்படி தவறு என்றும் அந்தக் கொள்கையைக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கிறது.

 

'ீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம் நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம் நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்துவிடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால் வருங்காலத்துத் தலைமுறை நம்மைச் சபிக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள், 1962 அக்டோபரில் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்தபோது தெரிவித்தார்.

 

அண்ணாவின் இந்த முடிவிற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர் அவருக்கும் அவர் பெயருக்கும் மட்டும் யோசித்திருந்தால் வெற்று வீராப்புக்காகத் தொடர்ந்து பிரிவினைவாதம் பேசி பல தொண்டர்களின் வாழ்க்கையைப் பறிகொடுத்து இன்றைய வரலாற்றில் வீரமானவர் என்ற பெயருடன் (அதுவும் சந்தேகமே) நின்றிருப்பார். ஆனால் அவர் அவரைப் பற்றி மட்டும் யோசிக்காமல் தன்னைச் சார்ந்தவர்களையும் தம் மக்களையும் யோசித்தார். அதனாலேயே கட்சி நீடிக்க வேண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் அதன் மூலம் மட்டுமே மக்களுக்கானவற்றை நம்மால் செய்ய முடியும் என்பதை உணர்ந்திருந்ததால் அவர் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார்.

 

திராவிட நாடு என்ற கோரிக்கை அன்றைய நிலையில் அனைத்து மக்களுக்கும் சென்று சேரவில்லை. பெரும்பாலான ஊடகமும் அதிகாரமும் பார்ப்பனர்களிடத்திலேயும் காங்கிரசார் இடத்திலேயும் மட்டுமே இருந்ததால் அண்ணாவும் அவர்தம் தொண்டர்களும் தொடர்ந்து கொள்கையில் நிலைத்திருந்தால் அதன்மூலம் ஏற்படும் கைது நடவடிக்கைகள் மற்றும் இன்னபிற அடக்குமுறைகளில் மக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்களா என்பதெல்லாம் சந்தேகமே. பெரும்பாலும் அவை வெளியில் வராமலேயே அரசின் அடக்குமுறைகளால் மறைக்கப்படலாம்கொள்கைகளில் தீவிரமான தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் பொருளாதார நிலையில் தன்னிறைவு பெற்றவர்கள் எனப் பெரும்பாலும் யாரையும் சொல்லி விட முடியாது. பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தில் கைதானால் பல ஆண்டுகள் சிறை செல்ல நேரிடும். அந்த நிலை ஏற்பட்டால் அவர்களின் உதவி இன்றி அவர்களின் குடும்பம் சமாளித்துக் கொள்ளுமா என்றால் முடியவே முடியாது என்ற நிலையில் தான் பல தொண்டர்கள் இருந்தார்கள். கட்சியாவது பார்த்துக் கொள்ளலாம் அல்லவா என்று கேட்டால் திமுககாங்கிரசைப் போலப் பணக்கார கட்சியும் அல்ல. இதே நிலை தொடர்ந்தால் சிறைக்குச் சென்று வெளியே வரும் கொள்கையில் ஊறிய தொண்டர்கள் பின்னர்த் தங்களின் குடும்பங்களின் நிலையை உணர்ந்து கழகத்தை விட்டே பிரிந்து செல்லும் நிலை தான் உருவாகும். இதைத் தவறென்றும் கூறவியலாது. அதுதான் எதார்த்தம்.

 

ஜனநாயக நாட்டின் அதிகபட்ச அதிகாரம் ஆளும் அரசிடம் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் மக்களுக்காக ஏதாவது மாற்ற வேண்டும் செய்ய வேண்டும் என நினைத்தால் அதில் ஜெயித்து வந்து சட்டம் இயற்றுவதன் மூலம் மட்டுமே மாற்ற இயலும். வெறும் பத்து ஆண்டுகள் மட்டுமே ஆன கட்சி அதுவும் வெகுஜன மக்களின் பொதுப் பிரச்சினையாக இல்லாத ஒன்றிற்காகப் போராடி உயிரையும் தங்களின் வாழ்க்கையையும் தியாகம் செய்து கொண்டிருந்தால் அது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. அதனால் அங்கே சமரசம் என்பது இன்றியமையாததாகி விடுகிறது.

 

அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டு 'திராவிட நாடு கோரிக்கையை மட்டுமே கை விடுகிறோம். ஆனால் அதற்கான தேவைகள் அனைத்தும் அப்படியே இருக்கின்றனஎன்று கூறி ஒன்றிய ஆட்சியில் அதிகாரத்திற்கு உட்பட்டு உச்சமாகப் பெறக்கூடிய அதிகாரமாக அவர் கேட்டது தான் மாநில சுயாட்சி என்ற முழக்கம். அதுதான் எதார்த்தம் அண்ணாவின் சமயோசித புத்தி. அண்ணாவின் தீர்க்கதரிசனம்.

 

அவர் செய்து கொண்ட சமரசத்தால் தான் அடுத்தத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் திராவிடக் கட்சியின் ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சிகள் இங்கு அனைவரும் அறிந்ததே. அண்ணா அந்த முடிவை எடுக்காமலிருந்திருந்தால் இன்றுவரை தேசிய கட்சிகளே தொடர்ந்து இங்கே ஆட்சியிலிருந்திருக்கும். அவர்களிடம் இருந்து தமிழகம் பெரும்பாலும் எந்தவித நன்மையும் அடைந்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்காது. ஆரம்பகால ஐந்தாண்டு திட்டங்களில் முழுக்க முழுக்க வட நாடு பயனடைந்து கொண்டிருக்கத் தனது சொந்த கட்சியிடம் கேட்டுத் தமிழகத்திற்கு எதுவும் கொண்டுவர இயலாமல் இருந்த காங்கிரசைப் போலவே இன்றுவரை தமிழக ஆட்சி இருந்திருக்கும். இன்று பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நாம் அடைந்திருக்கும் அனைத்து வளர்ச்சிக்கும் நவீன தமிழகத்தின் தந்தையான அறிஞர் அண்ணாவின் அன்றைய முடிவே முழுமுதற் காரணம். அன்று அவர் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு உணர்ச்சியின்பால் முடிவெடுக்காமல் அறிவின்பால் முடிவெடுத்ததே இன்றைய தமிழகத்தின் நிலைக்கும் காரணமாகும்.

 

இன்று திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சுலபமாக அண்ணாவை அதற்காகக் குற்றம் சாட்டி விட்டுச் சென்று விடலாம். ஆனால் அன்றைய நிலை என்ன அந்த முடிவால் நாம் அடைந்த நன்மைகள் என்னென்ன அந்த முடிவை எடுக்காமல் போயிருந்தால் நாம் அடைந்திருக்கும் இடம் என்ன என்பது போன்ற அடிப்படை புரிதல்கள் இருந்தால் கூட அண்ணாவின் இந்த முடிவில் குற்றமோ குறையோ கூற முடியாது. 

அப்போதும் அண்ணா முடிவை மாற்றி எடுத்து அரசின் ஒடுக்குமுறைகளுக்குத் தன் தொண்டர்களையும் கட்சியினரையும் காவு கொடுத்து அன்றே தொலைந்திருந்தால் அதை வீரம் என்று கொண்டாடி இருப்பார்களா என்றால் அதுவும் சந்தேகம் தான். அதற்கும் வாய்ப்புக் குறைவு தான்.

 

அருண்குமார் வீரப்பன்.

 

No comments:

Post a Comment