Saturday 30 January 2021

திராவிட வாசிப்பு சிறப்பிதழ் - மு.கருணாநிதி எனும் நான்

ணக்கம்.


2021 தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாக கொண்டுவருகிறோம். கடந்த மாதம் டிசம்பர் 2020 இதழ், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து "சி.என்.அண்ணாதுரை எனும் நான்" என்கிற தலைப்பில் வெளியானது. இந்த இதழில், கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து "மு. கருணாநிதி எனும் நான்" என்கிற தலைப்பில், பல்வேறு கட்டுரைகளை கொண்டு வந்து இருக்கிறோம். கலைஞரின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை, அரசாணைகளை, சமூக மாற்றங்களை படம்பிடித்து காட்டும் வகையில் கட்டுரைகள் இடம்பெற்று இருக்கின்றன. கலைஞரின் ஆட்சியை குறித்த அறிஞர்களின் ஆய்வுகளும் இடம்பெற்று இருக்கிறது. கலைஞரின் சாதனைகள் என்பது அள்ள அள்ள குறையாதது, கடல் போன்று பெரியது. அதை 1000 பக்க புத்தகத்திலும் நிரப்ப முடியாது. இருப்பினும், இந்த இதழில் இடம்பெற்ற கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவைகளாக இருக்கும் என்று நம்புகிறோம். ஏற்கனவே, ஆகஸ்ட் 2020 இதழை கலைஞர் சிறப்பிதழாக கொண்டு வந்தோம். இந்த இதழும் கலைஞரின் ஆட்சி திறனை பறைசாற்றும் வகையில் இருக்கும் என நம்புகிறோம்.  


இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த உடன்பிறப்புகளுக்கும், கலைஞர் குறித்த ஆய்வு கட்டுரைகளை எழுதிய அறிஞர்களுக்கும் எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 


இந்த இதழில் வேறு கட்டுரைகளை எழுதிய தோழர்களுக்கும் நன்றிகள். 


இந்த சிறப்பிதழ் உங்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்களையும், வரலாற்று அறிவையும் தரும் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  

திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!  


உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com


கட்டுரைகளை திராவிட வாசிப்பு ஆன்லைன் பக்கத்திலும் வாசிக்கலாம்: https://blog.dravidiansearch.com/

 


இப்படிக்கு,

திராவிட வாசிப்பு Editorial Team:

(அருண் ஆஷ்லி, அசோக் குமார் ஜெ, அஷ்வினி செல்வராஜ், தினேஷ் குமார், ஜெகன் தங்கதுரை, கதிர் ஆர்.எஸ்., மதுமலர்,மனிதி தெரசா, இராஜராஜன் ஆர். ஜெ, டிமோத்தி, யூசுப் பாசித், விக்னேஷ் ஆனந்த், விஜய் கோபால்சாமி)


இதழை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்! 


திராவிட காணொளிகள் #ThankYouMK

  திராவிட காணொளிகள் 


வாழ்வின் திருப்புமுனை கலைஞர் - உதய குமார்


https://youtu.be/EhH8HC4FMcQ


அம்மாவின் சுயமரியாதை - உதய குமார் #ThankYouMK


https://youtu.be/e5yCYkN8B3E


கலைஞரின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ப்ரியா தாஹிர் #ThankYouMK


https://youtu.be/PYbfqt55qp0


கலைஞருக்கு புகழ் வணக்கம் - 108 சிறந்த பேச்சுகள்

https://youtube.com/playlist?list=PLPtYds6_0S7HzmDdZEkQbZiMdW7XP-1oC


திராவிட நாட்காட்டி - ஜனவரி

திராவிட நாட்காட்டி

திராவிட நாட்காட்டி - ஜனவரி


ஜனவரி 1 

1893 - தமிழ்நாட்டில் முதல் சட்டமன்றக் கூட்டம் நடந்தது

1979 - பன்னாட்டு குழந்தைகள் ஆண்டு தொடக்கம்

1996 - விஜயவாடாவில் ‘உலக நாத்திகர் மாநாடு’.


ஜனவரி 2

1959 - உலகின் முதல் செயற்கைகோள் (இரஷ்யாவின் லூனா1) விண்ணில் ஏவப்பட்டது


ஜனவரி 3

1968 - இரண்டாவது ‘உலகத் தமிழ் மாநாடு’ சென்னையில் தொடக்கம்


ஜனவரி 4

1643 அய்சக் நியூட்டன் பிறந்தநாள்

1931 - மார்க்ஸ், ஏங்கல்ஸ் அறிக்கை ‘தமிழில்’ முதன் முதலில் வெளியிடப்பட்டது 

1974 - ஜி.டி. நாயுடு நினைவு நாள்


ஜனவரி 5

1932 - தந்தை பெரியார் கெய்ரோ செல்லல்

1940 - தந்தை பெரியார் வடநாட்டுப் பயணம் தொடக்கம்


ஜனவரி 6

1911 - தாமரைக்கண்ணி அம்மையார் பிறந்தநாள்

1935 - 'பகுத்தறிவு’ ஏட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகம்

1940 - மும்பையில் தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் சந்திப்பு 

1974 - அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத் தலைவராக தேர்வு 


ஜனவரி 7 

1902 - மாயவரம் சி. நடராஜன் பிறந்தநாள் 

2011 - உலக நாத்திகர் மாநாடு - திருச்சி (7,8,9)


ஜனவரி 8

1642 - கலிலியோ மறைவு 

1940 - தந்தை பெரியார் - ஜின்னா சந்திப்பு 

1954 - மூன்றாம் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி அறிவிப்பு 


ஜனவரி 9

1940 - தந்தை பெரியார் - டி.வி. ஜாதேவ் - எம். ஆர். ஜெயகர் சந்திப்பு 


ஜனவரி 10

1974 - யாழ்ப்பாணத்தில் 4 - ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 9 தமிழர்கள் படுகொலை 


ஜனவரி 12

1921 - இரட்டையாட்சி முறையில் முதல் சட்டமன்றம் கூடிய நாள் 

1934 - கோவை கலெக்டர் ஜி. டபிள்யூ வெல்ஸ் முன் தந்தை பெரியார் வரலாற்றுப் புகழ்மிக்க வாக்குமூலம் தாக்கல் 

2000 - நாவலர் இரா. நெடுஞ்செழியன் மறைவு 


ஜனவரி 13

1936 - பச்சையப்பன் கல்லூரியில் தமிழர் திருநாள் விழா 


ஜனவரி 14 

1969 - சென்னை மாநிலம் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் 

1970 - 'உண்மை' இதழ் துவக்கம் 


ஜனவரி 15

தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் (தமிழர் திருநாள்) 

1868 - டாக்டர் டி. எம். நாயர் பிறப்பு 

1939 - இந்தி எதிர்ப்பு வீரர் ல. நடராசன் சிறையில் மறைவு 

1949 - திருக்குறள் (தமிழர் - நெறிவிளக்க) மாநாடு 

1981 - தேவநேயப் பாவாணர் மறைவு  


ஜனவரி 16 

திருவள்ளுவர் தினம் 

1930 - மலேயா சுற்றுப் பயணம் முடித்து தந்தை பெரியார் தமிழகம் திரும்பிய நாள் 


ஜனவரி 17

உழவர் திருநாள் 

1917 - எம்.ஜி. இராமச்சந்திரன் பிறப்பு 

1961 - சாமி. சிதம்பரனார் மறைவு 

1968 - சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள்


ஜனவரி 18 

1924 - பாவலர் பாலசுந்தரம் பிறப்பு 

1963 - ப. ஜீவானந்தம் மறைவு 


ஜனவரி 19

1736 - நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட் பிறப்பு 


ஜனவரி 20

1933 - பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் தொடக்கம் 

1962 - 'விடுதலை' முதல் ஆசிரியர் டி. ஏ. வி. நாதன் மறைவு 

1968 - சுயமரியாதைத் திருமனச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் 


ஜனவரி 21

1924 - புரட்சியாளர் லெனின் மறைவு 

1997 - தஞ்சையில் பெரியார் நகர்வு புத்தகச் சந்தை துவக்கம். கரம்பக்குடியில் கிராமப் பிரச்சாரம் துவக்கம் 

போலியோ ஒழிப்பு நாள் 


ஜனவரி 23

1897 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறப்பு 

1968 - இருமொழித் திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றம் 


ஜனவரி 24

1954 - ஈரோட்டில் 'குலக் கல்வித் திட்டம்' எதிர்ப்பு மாநாடு 

1961 - சி.கே. சுப்பிரமணியனார் இறப்பு 


ஜனவரி 25

1954 - டாக்டர் எம். என். ராய் மறைவு 


ஜனவரி 26

1951 - வடநாட்டுச் சுரண்டல் எதிர்ப்பு - மறியல் - பெரியார் கைது 


ஜனவரி 27 

1925 - நீதிக்கட்சி ஆட்சியில் அறநிலையத்துறை மசோதா நிறைவேற்றம் 


ஜனவரி 28 

1980 - பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது

2001 - சென்னையில் பெரியார் மய்யம். நடிகவேள் எம். ஆர். ராதா மன்றம் (புதிது) திறப்பு 


ஜனவரி 30 

தொழுநோய் எதிர்ப்பு தினம் 

1874 -   வடலூர் வள்ளலார் நினைவு நாள் 

1891 - சார்லஸ் பிராட்லா நினைவு நாள் 

1948 - ஆர். எஸ். எஸ். பார்ப்பான் நாதுராம் கோட்சே  

2011 - உரத்தநாடு - மேலவன்னிப்பட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டது. 


ஜனவரி 31

1942 - கடலூர் ஞானியார் அடிகள் மறைவு 


தொகுப்பு : இராஜராஜன் ஆர்.ஜெ

ஆண்டவனுக்கு நன்றி! - ராஜராஜன் RJ

ஆண்டவனுக்கு நன்றி! - ராஜராஜன் RJ


று கோடி தமிழர் நெஞ்சை 

ஆண்டவனுக்கு நன்றி!


தன்வசனங்களால் தமிழ் ரசிகர்கள் நெஞ்சை 

ஆண்டவனுக்கு நன்றி! 


என் உயிரினும் மேலான என்ற சொல்லில் 

லட்சக்கணக்கான உள்ளங்களை 

ஆண்டவனுக்கு நன்றி!


தன் ஒற்றை கையெழுத்தால் 

பல தமிழர்களின் தலையெழுத்தை மாற்றி

ஆண்டவனுக்கு நன்றி!


தமிழால் தமிழரை 

ஆண்டவனுக்கு நன்றி!


மாநிலத்தில் சுயாட்சிக்காகவும், 

மத்தியில் கூட்டாட்சிக்காகவும் 

ஆண்டவனுக்கு நன்றி!


பாசிசத்தை என்றும் எதிர்த்து 

தலைசிறந்த ஜனநாயகம் தழைத்தோங்க 

ஆண்டவனுக்கு நன்றி!


வஞ்சத்தை உழைப்பால் வென்ற

ஆண்டவனுக்கு நன்றி!


எதிரிகளை மன்னிக்கும் 

புத்தரின் புன்னகையுடன் 

ஆண்டவனுக்கு நன்றி!


அண்ணாதுரை தான் இன்னும் ஆள்கிறான் 

என்று சொல்லுமளவுக்கு 

ஆண்டவனுக்கு நன்றி!


இது பெரியார் மண் தான் என மார்தட்டிக்கொள்ள 

ஆண்டவனுக்கு நன்றி!


இயக்கத்தை கட்டிக்காக்க,

யாருக்கும் கிடைக்காத 

தங்கத்தளபதியை தந்துசென்ற 

ஆண்டவனுக்கு நன்றி!


ஓயாமல் உழைத்து உறங்கும் 

எங்கள் அரக்கர் குல 

ஆண்டவனுக்கு நன்றி!


- ராஜராஜன் RJ

கலைஞரின் உணவு சுயமரியாதை அரசியல் - ஜெ. ஜெயரஞ்சன்

 கலைஞரின் உணவு சுயமரியாதை அரசியல் - ஜெ. ஜெயரஞ்சன்  


திமுக 1967க்குப் பின் பல திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தியது. அண்ணாவின் மறைவிற்குப் பின் முதல்வரான கலைஞர் இதனைப் பல தளங்களிலும் மிக நுட்பமாகச் செயல்படுத்தினார். போக்குவரத்து, மின் வசதி, கல்வி, இட ஒதுக்கீடு, மகளிர் நலன், ஒடுக்கப்பட்டோர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோர்நலன், நிலச் சீர்திருத்தம் என பல துறைகளில் இந்த சுயமரியாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.


இதனை நுட்பமாக உற்றுநோக்க நாம் ஒரு துறையை எடுத்துக் கொள்வோம்.


உணவும் சமூக அநீதியும்


தமிழகத்தில் 50-60 ஆண்டுகள் முன்பு வரை மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் ஊரகப் பகுதிகளில் வாழ்ந்தனர். பெரும்பான்மையானோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். பெரும்பாலானவர்களிடம் நிலமில்லை.


நிலம் வைத்திருந்தோரை அண்டித்தான் இந்த நிலமற்றவர்கள் பிழைத்தனர். நிலம் மேல் சாதிக்காரர்களிடம் குவிந்திருந்தது. பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் இவர்களிடம் வேலை செய்துதான் வயிற்றைக் கழுவினர். சாதிய அடுக்குமுறையும், நில உடைமையும் இணைந்து செயல்பட்டதால் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் உணவுத் தேவைக்காக அன்றாட அவமானங்களைச் சுமந்து வாழ்ந்தனர். வேறு வேலை கிடைப்பதும் அரிது.


வறுமையும் வாட்ட, இழிநிலைக்கிடையேதான் அவர்கள் வாழ்க்கை நடந்தது. வேளாண் உற்பத்திக்குத் தேவையான மனித உழைப்பைப் பெற தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் நில உடைமையாளர்கள் அவர்களை வைத்திருந்தனர். அவர்கள் மனது வைத்தால்தான் நிலமற்றவர்களின் வீடுகளில் அடுப்பெரியும் என்பதுதான் நெடுங்காலம் நிலவிய நிலை. அதுமட்டுமல்ல, உழைப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட கூலி (அது தானியமாக இருந்தாலும் பணமாக இருந்தாலும்) அவர்களின் உணவுக்கு எவ்வளவு தேவையோ அதே அளவில்தான் நெடுங்காலம் தொடர்ந்ததை ஆய்வுகள் துல்லியமாக படம்பிடித்துள்ளன. இத்தகைய சூழலில் நிலமற்றோர் நில உடைமையாளர்களை எந்த அளவிற்கு சார்ந்து இருந்திருப்பார்கள்? அன்றாட உணவே நில உடைமையாளர்களை நம்பித்தான் என்றால் சாதிய படிநிலையும், நில உடைமையும், நில உடைமையாளர்களின் அதிகாரமும் எவ்வளவு வலுவுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும்? இந்த அமைப்பில் உழைக்கும் மக்களின் சுயமரியாதை என்னவாக இருந்திருக்கும்?


உழைக்கும் மக்கள் இந்த அவமானங்களிலிருந்தும், ஒடுக்குமுறைகளிலிருந்தும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தப்பிக்க பெருமுயற்சி செய்துள்ளனர். அப்படி நிகழ்ந்ததுதான் பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் வெளிநாடுகளுக்கான இடப் பெயர்ச்சி. இலங்கைக்கும், மலேசியாவுக்கும், மொரீசியசுக்கும் தோட்டங்களில் வேலை செய்ய ஓடினார்கள். ஓடியதால் என்ன விடிவு கிடைத்திருக்கும்? ஒடுக்கப்பட்டவர்களில் பலர் மதம் மாறியும் பார்த்தனர். பெரும் அளவிலான விடுதலை ஒன்றும் கிடைக்கவில்லை. உணவின் மீதான நில உடைமையாளர்களின் பிடி தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்தப் பிடி தளர்ந்தால் மட்டுமே அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு ஆட்டம் காணும். உழைக்கும் மக்களுக்கு சமூகநீதி கிடைத்து அவர்கள் சுய மரியாதை பெறுவர்.


தமிழக அளவில் இதனைச் சாத்தியமாக்கியவர் கலைஞர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட்டபோது நகர்ப்புறங்களில் ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நகர்ப்புறங்களில் மட்டும் சிறிய அளவில் பொது விநியோகம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலை 1970களின் தொடக்கம் வரை தொடர்ந்தது. 1967 தேர்தலை சந்தித்த திமுக, ரூபாய்க்கு மூன்று படி என்ற திட்டத்தை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்தபின் அதற்கான நிதி, தானியம், கட்டமைப்பு போன்ற எதுவும் இல்லை என்பதை உணர்ந்தது. சிறிய அளவில் செயல்பட்ட அரிசி திட்டமும் சென்னை, கோவை நகரங்களில் மட்டுமே நிகழ்ந்தது. ஊரகப் பகுதிகளில் பொதுவிநியோகம் என்ற ஒன்றே இல்லை. பஞ்சமோ, வறட்சியோ கிராமப் புறங்கள் கண்டுகொள்ளப்பட்டதில்லை. உணவுப் பற்றாக்குறை நகரங்களுக்கானது என்றே அதுவரை கருதப்பட்டது. பசுமைப் புரட்சி தோன்றிய தருவாயில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட கோதுமையையும், அரிசியையும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்க இந்திய உணவுக் கழகம் 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சேமித்து வைக்கப்பட்ட உணவு தானியத்தை மாநிலங்களுக்கு விநியோகிக்க எந்த கொள்கையையும் ஒன்றிய அரசு கொண்டிருக்கவில்லை. மாறாக தன் விருப்பம்போல் அதனை மாநிலங்களுக்கு அளித்து வந்தது. இதன் விளைவாக தானிய விநியோகம் ஒரு அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசிடம் வந்து சேர்ந்தது. பிற நாடுகளின் கையை எதிர்பார்த்தால் உணவு ஒரு அரசியல் ஆயுதமாகிவிடும் என்பதை உணர்ந்த ஒன்றிய அரசு பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது. ஆனால் அதே ஒன்றிய அரசு உணவு தானிய விநியோகத்தை ஒரு ஆயுதமாக வெகுகாலம் பயன்படுத்தியது.


நுகர்பொருள் வாணிபக் கழகம்

1969ஆம் ஆண்டில் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட, முதல்வராகக் கலைஞர்

முதன்முறையாக டெல்லி சென்றபோது அவரது முக்கிய வேண்டுகோள் அரிசி வேண்டும் என்பதே. அப்போதைய உணவு அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் கலைஞர் மீது இருந்த அன்பினால் முதல் தவணையாக 20,000 டன்னும், இரண்டாம் தவணையாக 10,000 டன்னும் அளித்தார். அதன்பின்னர் எப்போது உணவு தேவைப்பட்டாலும் ஒன்றிய அரசிடம் பிச்சை எடுப்பது போன்ற சூழல் நிகழ்ந்துகொண்டே வந்தது. குறிப்பாக, 1971 தேர்தலில் திமுக பெருவெற்றி பெற்று கலைஞர் மீண்டும் முதல்வரானதும் ஒன்றிய அரசு கையிலெடுத்த ஆயுதம் உணவுதான். எப்போது தமிழகம் உணவு வேண்டும் என கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய அரசு செவிகளை மூடிக்கொள்ளும். இந்த அரசியலை சமாளிக்கும் வண்ணம் கலைஞர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினை 1972ஆம் ஆண்டில் உருவாக்கினார்.


அதே சமயத்தில் இத்தகைய அமைப்புகள் கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும் தோன்றின. ஆனால், தமிழகத்தில் வாணிபக் கழகத்துக்கு வேறு உருவம் கொடுத்தார் கலைஞர். இந்திய உணவுக் கழகம் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருந்ததோ அதே வகையில் நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி கொள்முதல் நிலையங்கள், அதனை சேமித்து வைக்கக் கிடங்குகள், நெல்லை அரிசியாக்க நவீன ஆலைகள் என அனைத்துக் கண்ணிகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. ஓரிரு ஆண்டுகளிலேயே இந்திய உணவுக் கழகம் செயல்பட்ட அளவுக்கு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகமும் துவங்கியது. வாணிபக் கழகம் துவங்கப்பட்டபோது துவங்கப்பட்ட கர்நாடக, ஆந்திர அமைப்புகளின் வளர்ச்சியைவிட தமிழக அமைப்பின் உருவானது. நெல்லை கொள்முதல் செய்வதற்கு வளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் 10 மடங்கு கூடுதலாக இருந்தது. ஆனால் இதோடு மட்டும் அரசின் முயற்சி நின்றுவிடவில்லை.


கொள்முதல் செய்து சேமித்து வைக்கப்பட்ட தானியங்கள் தேவைப்படுவோரின் தட்டுகளுக்கு சென்றடைந்தால்தான் நோக்கம் நிறைவேறும். இதற்காக வாணிபக் கழகம் விற்பனை நிலையங்களை திறக்குமாறு பணிக்கப்பட்டது.


1974ஆம் ஆண்டு கலைஞர் பொது விநியோக முறையில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கினார். அதுவரையில் நகர்ப்புறங்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்ட நிலையை மாற்றி மாநிலத்தின் ஊரகப் பகுதிகளுக்கும் பொது விநியோகத்தை விரிவுபடுத்தினார். இதனைச் செயல்படுத்த சில்லறை விநியோகக் கடைகளைத் திறந்தது மட்டுமின்றி ஊரகம், நகர்ப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் இருந்த குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. இந்தக் கொள்கை முடிவுதான் அரிசியின் அரசியலை சமூக நீதி செயல்பாடாக மாற்றியமைத்தது.


அரிசிக்கு நில உடைமையாளர்களை நம்பியிருந்த நிலையைத் தகர்க்க வைக்கப்பட்ட முதல் புள்ளி இதுதான். ஊரகத்திலிருப்போருக்கும் பொது விநியோகம் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் சுயமரியாதையை சிந்திக்காதவர்களிடம் ஏற்பட வாய்ப்பே இல்லை.


சமூக அநீதியும்‌, அதன்‌ வழித்‌ தோன்றலான இழி நிலையும்‌ மாறின. உணவு கிட்டாமை என்னும்‌ தளை அறுந்ததால்‌ மக்கள்‌ புதிய பாதையில்‌ பயணிக்கத்‌ தொடங்கினர்‌. இன்று தமிழகத்தின்‌ ஊரகம்‌ ஒரு வேளாண்‌ சமூகமாக இல்லாமல்‌ அதிவிரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. வேளாண்மையை மட்டுமே தொழிலாகக்‌ கொண்டவர்களின்‌ எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்‌ குறைவு. ஒற்றை இலக்க விழுக்காடாக அது சுருங்கிப்போனது. இந்த மாற்றத்தின்‌ காரணகர்த்தா கலைஞர்‌. பொருளாதார தளத்தில்‌ ஏற்பட்ட மாற்றங்கள்‌ ஒருபுறம்‌ இருக்கட்டும்‌.


நில உடைமையாளர்களின்‌ கைகளில்‌ இருந்துவந்த உணவு என்ற பேராயுதத்தைப்‌ பறித்து அதிகார மாற்றத்தை விளைவித்ததும்‌ சாமானியர்களின்‌ சுயமரியாதையை மீட்டதும்‌ சமூக நீதி எனும்‌ நெடும்பயணத்தில்‌ ஒரு குறிப்பிடத்தக்க படிநிலை அல்லவா? 


- ஜெ. ஜெயரஞ்சன் (நன்றி: ஒரு மனிதன் ஒரு இயக்கம்)

சமூகநீதி நாயகர் கலைஞர் - கி. வீரமணி

 சமூகநீதி நாயகர் கலைஞர் - கி. வீரமணி


1969 ஆம் ஆண்டில் ஏ. என். சட்டநாதன் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென ஆணையம் அறிக்கை அளித்தது. பாலாஜி Vs மைசூர் மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வெளிப்படுத்திய (Obiter dictum) மொத்த இட ஒதுக்கீடு வரம்பு 50 விழுக்காடு அளவிலேயே இருக்க வேண்டும் என்பதற்கு இணங்க 1971 ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டின் அளவினை - தாழ்த்தப்பட்டோர் - பழங்குடி மரபினருக்கு 18 விழுக்காடாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடாகவும் உயர்த்தி முதலமைச்சர் கலைஞர் உயர்த்தி ஆணை பிறப்பித்தார். கலைஞர் தலைமையில் இரண்டாம் முறையாக (1971-1976) அமைந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நாட்டிலேயே முதன்முறையாக பிற்படுத்தப்பட்டோருக்கான, அமைச்சகம்' என ஒரு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது.


1979 ஆம் ஆண்டில் முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இட ஒதுக்கீட்டு உரிமையினைப் பெறுவதற்கு வருமான உச்சவரம்பினைக் கொண்டுவந்தார். பிற்படுத்தப்பட்டவர்களில் ஆண்டு வருமானம் ரூ.9000/-க்கு மிகாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு எனப் 'பொருளாதார அளவுகோலை' கூடுதலாக திணித்து ஆணை பிறப்பித்தார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ஒத்த கருத்துடைய இதர கட்சிகள் சேர்ந்து இந்தப் 'பொருளாதார வரம்பு' ஆணையினை எதிர்த்தனர்.


இந்திய அரசியலமைப்புச் சட்டமும், இட ஒதுக்கீடு பெறுவதற்கு சமூக, கல்வி நிலை அடிப்படையில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட நிலைமை அடையாளம் காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.


பொருளாதார அளவுகோல் என்பது அரசமைப்புச்சட்ட விதிகளுக்குப் புறம்பானது. இட ஒதுக்கீட்டிற்குப் 'பொருளாதார அளவுகோலை’ அடிப்படையாக்குவது எப்படி நியாயமற்றது, நிலையில்லாதது என்பதை திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், இதர கட்சிகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தன; போராட்டங்களை நடத்தின. திராவிடர் கழகம் தனியே அரசாணை யினை எரித்து தமிழ்நாடு முழுவதும் ஊர்வலங்களையும் எதிர்ப்புக் கூட்டங் களையும் நடத்தியது. தமிழக அரசின் பொருளாதார வரம்பு ஆணையினை எரித்து அந்தச் சாம்பல் மூட்டைகளை மாநில அரசினருக்கு அனுப்பியது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு, சமூக நீதியின் அடிப்படைக்குப் புறம்பாக நடந்து கொள்கிறது என்பதனை தி.க., தி.மு.க மற்றும் இதர கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறின.


இத்தகைய கடும் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் பலன் 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. மக்கள் செல்வாக்கு மிக்கவரான எம்.ஜி. ஆர் தலைமையில் அ.தி.மு.க., தமிழ்நாட்டு நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டைத் தவிர மற்ற இடங்களில் தோல்வியினைச் சந்திக்க நேர்ந்தது. தோல்விக்குக் காரணம், சமூக நீதியின் ஆணிவேருக்கு மாறாக பொருளாதார அளவுகோலைப் புகுத்திய அரசாணை தான் என்பதை எம்.ஜி. ஆர் உணர்ந்தார்.


நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் சரிவைச் சந்தித்த முதலமைச்சர் எம். ஜி. ஆர் உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டினார்.


திராவிடர் கழகத்தின் சார்பாக நாம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றோம். 'பொருளாதார அளவுகோல்' என்பது ‘இரப்பர் அளவுகோல்’ போன்றது. அதைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டோரின் பின்தங்கிய நிலையினை அளவிட முடியாது என்பதை விரிவாக எடுத்துக் கூறி விளக்கம் அளித்தோம். அதற்குப் பின் பொருளாதார அளவுகோல் அரசாணையினை எம்.ஜி.ஆர். ரத்து செய்தார். மேலும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த இட ஒதுக்கீட்டினை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினருக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீடு மக்கள் தொகைக்கேற்ப தொடர்ந்தது.


இட ஒதுக்கீட்டிற்குள் இட ஒதுக்கீடு


இந்தச் சமுதாயத்தில் மனிதரை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தி அவர்களுக்கிடையே படிநிலை சமத்துவமில்லாத நிலை உள்ளது. இதனை நீக்குவதற்கான வழிமுறைதான் இட ஒதுக்கீடு.


சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் சமத்துவமற்ற நிலை திடீரென மாறிவிடாது. இட ஒதுக்கீடு உரிமைக்கு உரியவர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு உடனே கிடைத்துவிடாது. ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடும், அதன்பலன் உரிய அளவில் உரியவர்களுக்குச் சென்று சேராது. காரணம் படிநிலை சமத்துவமின்மையால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிக்கப்பட்டு இருப்பதுதான். எனவே வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிலும் அந்தந்தப் பிரிவினருக்குள்ளும் தனியாக ஒதுக்கீடு செய்யப்படுவது அவசியமாகிறது.

இட ஒதுக்கீட்டிற்குள் புது ஒதுக்கீடு தேவைப்படுகிறது.


மூன்றாம் முறையாகக் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது (1989-1991) பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த இட ஒதுக்கீடு அளவான 50 விழுக்காட்டை, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு எனவும் பிரித்து அளிக்க ஆணை பிறப்பித்தார்.


2006-2011 இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தபொழுது இதர பிற்படுத்தப்பட்டோரிலும் 3.5 விழுக்காட்டினை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வழங்கிட வழிவகுத்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளவான 18 விழுக்காட்டில் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் அருந்ததியினருக்கு 3 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்கிடவும் அரசாணை பிறப்பித்தார். இதனால் துப்புரவுத் தொழில் மேற்கொள்ளும் அருந்ததியின சமுதாயத்தினர் முதன்முறையாக டாக்டர்கள், என்ஜினியர்கள், உயர் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் என பல்வேறு உயர்நிலைகளுக்கு வர முடிந்தது.


தமிழக இட ஒதுக்கீடு முன்னுதாரணம்


மூன்றாம் முறையாகத் தமிழகத்தின் முதலமைச்சராகக் கலைஞர் ஆட்சி செய்த பொழுது (1989-1991) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மரபினருக்கான 18 விழுக்காடு மொத்த இட ஒதுக்கீடு 19 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீடான 1 விழுக்காடு பழங்குடி மரபின மக்களுக்கு மட்டும் என ஆணை வெளியிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டோருக்கான மொத்த இட ஒதுக்கீடு 69 விழுக்காடு எனும் நிலையினை அடைந்தது.


இந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு மேலும் பாதுகாப்பு அளித்திட அடுத்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் 69 விழுக்காட்டிற்கான ஒரு தனிச் சட்டம், (ஆணையாக இருந்து மாற்றப்பட்டு) அரசியலமைப்புச் சட்ட விதி 31(C)ன் படி உருவாக்கப்பட்டது.


உருவாக்கப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசியலமைப்புச்சட்ட 76 ஆம் திருத்தத்தின்படி அதன் 9-ஆம் அட்டவணையில் இடம் பெற்றது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான தனிச்சட்டமும், 9-ஆம் அட்டவணைப் பாதுகாப்பும் பெற்றிட திராவிடர் கழகம் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியது.


9-ஆம் அட்டவணையில் இட ஒதுக்கீடு சட்டம் இடம் பெறுவது ஒரு தனிச் சிறப்பாகும். இப்படி இடம் பெறும் சட்டத்தின் செல்லுபடித் தன்மையினை நீதிமன்றங்கள் முடிவு செய்திட முடியாது. சமூக நீதி வரலாற்றில் இட ஒதுக்கீட்டிற்கான ஒரு தனிச்சட்டம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது; நாட்டிலேயே இட ஒதுக்கட்டிற்கான சட்டம் உருவாக்கப்பட்டது அதுதான் முதல்முறையாகும்.


மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கேட்டுப் பல சமுதாயத்தினர் போராட்டம் நடத்தி வரும் இன்றைய சூழலில் அந்தந்த மாநிலங்களில் மொத்த இட ஒதுக்கீடு அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் உயரும் பொழுது அந்தந்த மாநில அரசுகள் 'தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு மாதிரியைத்தான் முன்னுதாரணமாகக் கடைபிடிக்கின்றன.


தமிழக ஆட்சிச் சக்கரத்தின் அச்சாணி சமூக நீதியாகும். சமூக நீதியின் சரியான பயணத்திலிருந்து விலகிச் செல்லவோ, வழி தவறியோ நடந்திட முற்பட்டால் ஆட்சியாளர்கள் தோல்வியைத்தான் சந்தித்துள்ளனர் என்பதே வரலாறு.


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்


ஆட்சியில் அமர்ந்த நிலையிலும், எதிர்க்கட்சி நிலையிலும் எப்பொழுதும் தந்தை பெரியாரின்

கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதிலேயே கலைஞர் அக்கறை காட்டினார். பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகத்தில் அனைவருக்கும் சமத்துவமும் சமவாய்ப்பும் கிடைக்கச்செய்வதே பெரியார் தத்துவத்தின் உள்ளார்ந்த நிலையாகும். பிறப்பின் அடிப்படையிலான சமூக அந்த பினைப் போக்கிட இட ஒதுக்கீடு வழிமுறை விடை தந்தை பெரியார் வலியுறுத்தி வந்தார். அந்த வகையில் இட ஒதுக்கீடு என்பது பாகுபாட்டைக் களைத்திடக் கடைப் பிடிக்கப்படும் வழிமுறையாகியது.


கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டீன் வழியில் ஓரளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்கள்

பிரதிநிதித்துவம் பெற்று வருகின்றனர். முழுமையாகப் பிரதிநிதித்துவம் பெறுவதற்குச் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகமாகத்தான் உள்ளது. பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராக முடியாது எனும் 'சமூகநீதி' மறுத்த நிலைமை நீடித்தது. இந்து சமயத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்துக் கோயில்களிலும் பார்ப்பனர்களே அர்ச்சகர்களாகத் தொடர்ந்திடும் நிலையும் இருந்தது.


பரம்பரை பரம்பரையாகப் பார்ப்பன அர்ச்சகர்களே நியமனம் பெற்று வந்தனர். கோயில் கர்ப்பக்கிருகத்திலும் சமத்துவம், சமவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையாக 1969-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்திற்கு அறிவுப்புக் கொடுத்தார்.


தந்தை பெரியாரின் போராட்ட அறிவிப்பினை அறிந்து அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர், பெரியார் அவர்களைச் சந்தித்தார். பெரியாரிடம் கலைஞர் முறையிட்டார். "அய்யா, உங்களது கொள்கைச் சீடர்கள் ஆட்சி செய்யும் பொழுது நீங்கள் ஏன் போராட வேண்டும்?" பெரியார் தனது பதிலாக, "உங்களது (அரசின்) கடமையினை நீங்கள் செய்யுங்கள். சமூகநீதிக்கான போராட்டத்தினை நாங்கள் நடத்துகிறோம். இதில், நீங்கள் துயரப் பட வேண்டாம்'' கூறினார்.


கலைஞர் உடனே, "எங்களது கொள்கை ஆசானை எப்படி கைது செய்திட முடியும்" எனக் கூறி ஒரு வேண்டுகோளைத் தந்தை பெரியாரிடம் வைத்தார்.


“அய்யா, எங்களுக்குச் சற்றுக் கால அவகாசம் அளியுங்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்

ஆகிட வழிகோலும் சட்டத்தினை உருவாக்குகிறோம். அதுவரை கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தினை அருள் கூர்ந்து கைவிடுங்கள்'' எனகலைஞர் கேட்டார். கலைஞரின் வேண்டுகோளுக்குப் பெரியாரும் சம்மதம் தெரிவித்தார். தந்தை பெரியாரிடம் உறுதி அளித்தபடி, முதலமைச்சர் கலைஞர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். சட்ட மன்றத்தில் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்து 1970-இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் உருவானது.


2006 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைத்த போது கலைஞர், வேத ஆகமங்களில் முறையாக பயிற்சி பெற்றவரை நியமிக்க வழிகோலும் சட்டத்தினை கொண்டுவந்தார். 


இவை அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் கலைஞர் தன்னை எப்படி ஒற்றைவரியில் அடையாளப் படுத்துவார் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, "நான் ஒரு மானமிகு சுயமரியாதைக் காரன்'' எனக் கொள்கை பூர்வமாகப் பதிலளித்தார்.


முதலமைச்சராக இருந்த பொழுது, சமூக அடுக்கில் அடியிலும் அடியாக இருக்கும் மக்களுக்காக நடத்தப்படும் 'நாலாந்தர மக்களின் அரசு' என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்தார்.


அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள மாநில உரிமைகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் போராடி பெற்றுத் தந்தார்.


சமுதாயத்தின் மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து தான் வந்ததை கலைஞர் வெளிப்படையாகக் குறிப்பிடுவார். தான் பிறந்தது பொருளாதார வளமிக்க குடும்பம் அல்ல என்பதையும் கூறுவார். இவை அனைத்தையும் நெஞ்சில் நிறுத்தி அதனையே பொது வாழ்க்கையில் முனைப்பு ஆற்றலாகக் கொண்டு தமது அரசியல் வாழ்க்கையில், கலை இலக்கிய பயணத்தில், சமூகநீதிப் பாதையில் பயணித்து ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பட பாடுபட்ட ஒரு நாயகர் கலைஞர் என்பதை வரலாறு என்றைக்கும் கூறிடும்.


- கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

நன்றி: ஒரு மனிதன் ஒரு இயக்கம் புத்தகம் அப்பா உங்களுக்கு அதிகம் சொன்ன அறிவுரை என்ன?


எல்லோரையும் அனுசரிச்சுப்போ. இதைத்தான் அடிக்கடி சொல்வார். எனக்கு அவர் வாயால் அதிகம் சொன்னது கட்சியோட வரலாற்றையும், கட்சிக்காரங்க செஞ்சிருக்குற தியாகத்தையும்தான். கட்சிக்குள்ள இருக்குற பிரச்சனைகளைப் பத்தியெல்லாமும் சொல்வார். 'ஆனா, இதையெல்லாம் தெரிஞ்சுக்கோ, வெளியில விவாதிக்காதே! ன்னு சொல்வார். கட்சிங்கிறது அவரைப் பொறுத்த அளவுல குடும்பம் மாதிரி தான். சின்ன வயசுல அண்ணா பிறந்தநாள் கூட்டம் நடத்துறப்போ ஒருமுறை கொஞ்சம் பெரிசா பந்தலைப் போட்டுட்டோம். தெருவுல இருக்குற கிருஷ்ணன் கோயிலை இந்தப்பந்தல் மறைச்சுடுச்சு. அப்போல்லாம் எங்க தெரு பிராமணர்கள் அதிகம் வசிச்ச தெரு. எங்க குடும்ப டாக்டர் கிருஷ்ணன் - அவரும் பிராமணர் தான். - 'மூணு நாளைக்கு வீட்டிலிருந்தபடி சுவாமியைச் சேவிக்க முடியாம செஞ்சிட்டான் உங்க பிள்ளை! ன்னு தலைவர்கிட்ட சொல்லிட்டார். அன்னிக்கு சாயங்காலம் கூட்டத்துல பேசினப்போ, "நேற்று ஸ்டாலின் கனவில் வந்த கிருஷ்ணன், 'எல்லோரும் வீட்டிலிருந்தே என்னைக் கும்பிடுகிறார்கள், ஒரு மூன்று நாட்களுக்காகவாது கோவிலுக்கு வந்து கும்பிடச் செய்' என்று சொல்லித்தான் ஸ்டாலின் இந்த வேலையைச் செய்துவிட்டார்போலும்" என்று நகைச்சுவையாக சொல்லிச் சமாளித்த தலைவர், இரவு என்னை அழைத்தார். "நமக்குக் கடவுள் மேல் நம்பிக்கை இருக்குதா, இல்லையாங்குறது வேறு; கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோட நம்பிக்கையை மதிக்கிறது வேறு. அறியாமைகூட சில சமயங்கள்ல அலட்சிகம் ஆகிடும்ன்னு உணரணும்பா" ன்னார். இது ஒரு பெரிய பாடமா அமைஞ்சுச்சு!

- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்