Saturday 30 January 2021

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி -9 - பொங்கல் விழாவில் உள்ள ஜாதியம் -பெண்ணடிமை! - கனிமொழி ம.வீ

 அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி -9 - பொங்கல் விழாவில் உள்ள ஜாதியம் -பெண்ணடிமை! - கனிமொழி ம.வீ


தை முதல் நாள்  தமிழ்ப்புத்தாண்டு மக்கள் வாழ்வில் இன்பம் பொங்கட்டும் என்று கொண்டாடும் பொங்கல்  விழா மட்டுமே , தமிழர்களின் வாழ்வியலில் அறிவிற்குப் பொருந்திப் போகும் விழாவாக மட்டுமல்லாமல், அனைத்து தமிழர்களும் மதம் கடந்து கொண்டாடும் விழாவாகவும் இருக்கின்றது. ஆனால் ஜாதி கடந்து கொண்டாடும் விழாவாக இருக்கின்றதா? என்பதே இப்போது விவாதப்பொருள் ;

இது ஒரு புறம் இருக்க, தந்தை பெரியார் ஏன் பொங்கலைத் தமிழர் திருவிழாவாகக் கொண்டாட வலியுறுத்தினார் என்று என்ன வேண்டி உள்ளது.

அவர் மரணிக்கும் ஒரு ஆண்டிற்கு முன்னர் கூட,

"தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக்கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா என்ற கருத்தில் தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாடவேண்டும்”.

- தோழர் பெரியார், விடுதலை14.01.1972

ஆக , தமிழர்களுக்கு அறிவிற்குப் பொருந்தும் விழாவோ  , மத அடையாளத்தைத் துறக்கும் விழாவோ  எதுவும் இல்லை என்ற காரணத்தினாலேயே தந்தை பெரியார் பொங்கலை அறுவடைத் திருவிழா என்ற நோக்கில் கொண்டாட வலியுறுத்துகின்றார்.

ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நாம் பொங்கல் விழாவைக் கொண்டாடினாலும் , அதில் இருக்கும் ஜாதியச் சிக்கல்களை நாம் கண்டுகொள்ளாமல் செல்வது, சரியா? என்றே கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.  “இரட்டைப்பொங்கல்” என்ற நிலை இன்றும் தொடர்கிறது எனும்போது, இரண்டு செய்திகளை உணரமுடிகின்றது .

ஒன்று தமிழர்கள் கொண்டாடும் எந்த விழாவிலும் ஜாதியம் தலை காட்டியே தீருகிறது, அதை ஒழிக்க வாய்ப்பே இல்லை , இரண்டு பெரியாரியத் தோழர்கள் இதைப்  பற்றிய விவாதங்களைத் தொடங்காமல் , ஏதோ அது தமிழர்களை ஒற்றுமையாக மாற்றிவிட்ட மாயையைக் கொண்டு கடந்து விடுவது.

இதை ஒரு விவாதமாக மாற்றி இரட்டைப் பொங்கல் - ஊர்ப் பொங்கல், சேரி பொங்கல் என்ற நிலையை மாற்ற எந்த முயற்சியும் செய்யாமல் பொங்கலைக் கொண்டாடுவது என்பது எந்த பயனையும் தரப்போவதில்லை.

அடுத்து,  பொங்கல் விழாவில் பொங்கல் வைப்பது போன்ற அடுப்படி வேலையைப் பெண்கள் மட்டுமே செய்வது, இது மீண்டும் எந்த விழாவாக இருந்தாலும் பெண்களுக்கு மட்டும் அடுப்படியிலிருந்து விடுதலையே இல்லை என்ற நிலையை வலியுறுத்துவதாகவே இருக்கின்றது. 


அதுமட்டுமல்லாமல் பெண்ணடிமை வலியுறுத்தும் பொங்கல் சீர் போன்றவை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவைத்  தமிழர் மரபு என்ற பெயரில் பெரியாரியத்  தோழர்கள் அதனை விமர்சிக்காமல் போவது சரியான அணுகுமுறை ஆகாது. 

அறுவடைத் திருவிழாவாக இருந்தாலும் பெண்ணடிமைத்தனமும், ஜாதியமும் இதில் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே காலத்தின் தேவை. அதைச் செய்ய மறுத்தால் , நாளடைவில் பொங்கல் விழாவின் தனித்துவம் என்று நாம் நினைத்திருப்பது முற்றிலும் வீழ்த்தப்பட்டு, அந்த இடத்தில் அறிவிற்குப் பொருந்தாத தைப்பூசம் போன்ற பண்டிகையைத் , தமிழர்களின் தேசிய விழா என்று திணிக்கும் ஆபத்தும் நடக்கும்.

ஒரு வகையில் அறுவடைத்  திருவிழாவாக விழாவாக இருப்பதால், நிலம் இருப்பவர்களின் ஆதிக்கம் இதில் உள்ளது என்பதையும் நாம் உணர முடிகிறது .  இந்து மதம் இதற்கும் புராணக் கதைகளைக் கற்பித்து, மூடத்தனத்தை வளர்த்து வருவதை நாம் எதிர்க்க வேண்டி இருக்கிறது - எதிர்க்கிறோம் ; அதேபோல இதில் இருக்கும் ஜாதிய - பெண்ணடிமை கூறுகளை நாம் அடித்து நொறுக்க வேண்டும்.

எனவே பொங்கல் விழா என்பதை வருடா வருடம் வரும் நாட்காட்டி போலக் கருதாமல் அதில் பெரியார் எதிர்பார்த்த சமத்துவம் மலர பெரியாரியத் தோழர்கள் பாடுபட வேண்டும் .


- கனிமொழி ம.வீ



இரண்டில் ஒன்று பார்க்கும் பிடிவாதக் குணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?


அம்மா, அப்பா.. அப்புறம் அன்றைக்குத் தொடங்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும் சாதிய பாகுபாடுகள். ஆமாம், சாதிய பாகுபாடுகள் என் மீது போடப்பட்டிருந்த விலங்குகளை உடைக்க வேண்டும் என்றால், அயராத போராட்டம் தான் அதற்கு ஒரே வழி என்பதைத்தான் என்னுடைய வாழ்க்கை எனக்குச் சொல்லிக்கொடுத்தது.


இன்றைக்கும் சாதியப் பாகுபாடுகள் உங்களை விரட்டுகின்றனவா? எப்படிச்சொல்கிறீர்கள்? 45 வயதிலேயே நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள். கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள்.நீங்கள் உங்களுக்கு மேல் அணுகிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் தேசிய அளவிலான தலைவர்கள். அவர்களிடமெல்லாமும் கூட சாத்தியபார்வையை எதிர்கொள்வதாகச் சொல்கிறீர்களா?


ஆமாம். அவர்களில் பலரிடமும்கூட சாதியப்பாகுபாட்டை உணர்ந்திருக்கிறேன். திமுக மீதான பலரின் காழ்ப்புணர்வுக்குப் பின்னணியிலும்கூட என்னைப்போன்ற ஒரு எளியவன் தலைமையில் அது இயங்குவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆற்றாமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எவ்வளவு உயரம் போனாலும் இங்கு சாதியம் பின்னின்று நடத்தும் அரசியலை உணர்ந்திருப்பதால்தான் சமூக நீதிக்காக எவ்வ்ளவு தூரம் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எவ்வளவோ காரியங்களைச் செய்திருந்தாலும், இந்தியாவில் வகுப்புவாரிப் பிரதிநித்துவத்தை வலியுறுத்தி வெற்றி கண்டதைப் பெரிய சாதனையாக நாங்கள் நினைப்பதும் அதனால் தான்.


- கலைஞர் கருணாநிதி

No comments:

Post a Comment