Saturday 30 January 2021

ஏன் வேண்டும் திமு கழக அரசு? - கனிமொழி ம.வீ

ஏன் வேண்டும் திமு கழக அரசு? - கனிமொழி ம.வீ


ன்னை முழுதும் அறிந்தவர்கள் தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத்தக்கவர்களிலே  கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடமுண்டு. அவர் மூலமாக நானும் நாடும் இன்னும் நிரம்ப எதிர்பார்க்கிறோம். இப்பொழுது செய்த காரியங்களைப் போலப் பல மடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்கு இன்னும் கிடைக்க வேண்டி இருக்கிறது என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் 3.6.1968 - இல் கூறினார்.

அந்தக் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்பதைக் கலைஞர் தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்துக் காட்டினார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக  இருந்தபொழுது அவர் மக்களுக்காகச்  செய்த ஒவ்வொரு திட்டமும் இன்றுவரை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் தான் இருக்கின்றது என்பதை அவருடைய சித்தாந்த எதிரிகள் கூட மறுக்க  முடியாது. கலைஞர் அவர்களுடைய நிர்வாகத்  திறமை தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை பல்வேறு பெருமைகளைத் தந்திருக்கின்றது; பக்கத்து மாநில முதலமைச்சர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி நடுவண் அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி நமக்கான திட்டங்களைக் கொண்டு வந்து சேர்த்ததில் பெரும் பங்கு கலைஞர் ஆற்றியது; கலைஞர் மறைந்த போது ஊடகங்களில் அவருடைய சாதனை பட்டியல்களைப் பட்டியலிட்ட போது தான்  காலமெல்லாம் கலைஞரைத் தூற்றியவர்கள் கூட கலைஞரின் சாதனைகளை எண்ணி வியப்பில் ஆழ்ந்தார்கள். மரணத்திலும் திராவிட சித்தாந்தத்தின் போர்வீரராக மிளிர்ந்த வரலாறு கலைஞருக்கு மட்டுமே உண்டு. 


கவிஞர் குடியரசு தன்னுடைய புதுக் கவிதை வரிகளில் கலைஞரைப் பற்றிக் கூறுகின்ற போது


தலைவரே உன் அனுபவங்கள் தனிமனிதனின் நெளிவுசுளிவுகள் அல்ல!
 ஓர் சமுதாயத்தின் பாதிப்புகள் !
நீ பல நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டாய் , அதை வேதனையாக நினைக்கவில்லை- மாறாக யோக நிலையாக மாற்றிக் கொண்டாய் !

 தலைவா!!

 என் உடன்பிறப்பே !!என் கலைஞரே !

 பெரியாரும் அண்ணாவும் இல்லாத குறையை நீ நிரப்பிவிட்டாய் !
 எங்கள் தலைமுறையின் தலைநட்சத்திரமே!!
உன் தலைமையை வெறுத்தவர்கள் தலை இல்லாமல்
போய்விட்டார்கள்!! கட்சி நடத்தும் எவருக்கும்
 இலக்கணப் புத்தகம் நீ தான் !!ஆம் பெரியாரின் கொள்கைத்  தீர்மானங்களை அறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்கிக் காட்டியவர் கலைஞர்!!

1929இல் தந்தை பெரியார் அவர்கள் முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார், அந்த தீர்மானத்தைச் சட்டமாக்கி இந்தியாவிற்கே வழிகாட்டியவர் கலைஞர். 1989இல் பெண்களுக்கான சொத்துரிமை தமிழ்நாட்டில் சட்டமாக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் 2005இல் தான் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா முழுவதும் பெண்களுக்குச் சொத்துரிமை என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகப் பெண்கள்  நியமிக்கப்பட வேண்டும் என்பதை 1997இல் இரண்டாம் வகுப்பு வரை பெண்கள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது கலைஞர் அரசு.  பெண்கள் குஸ்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியவர் தந்தை பெரியார், 1920களில் தந்தை பெரியார் இந்த சிந்தனையை எழுதுகிறார், 1973இல்  கலைஞர் அரசுதான் இந்தியாவிலேயே பெண்களைக் காவல் துறையில் முதன்முதலாக நியமித்தது.
அதேபோல 1973ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதிக்கான இடம் காலியானது அப்பொழுது தந்தை பெரியார் அந்த இடத்தை தாழ்த்தப்பட்ட  சமூகத்தைச் சேர்ந்தவருக்குக்  கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாநில அமைச்சரவை பரிந்துரையின்படி நியமிக்கும் முறை இருந்த காலம் அது ,கோரிக்கையை ஏற்று அப்பொழுது சீனியாரிட்டி முன்னிலையில் இல்லாதபோதும் திரு .அ.வரதராஜன் என்பவரை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்தார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதியரசர் ,பிற்காலத்தில் உச்சநீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட நீதியரசரும் அவர்தான்!!


இப்படி தந்தை பெரியார் அவர்களுடைய கனவை அவர்களுடைய தீர்மானங்களை எல்லாம் சட்டமாக்கிய பெருமை கலைஞரைச் சாரும் என்பதை நாம் அறிவோம்.


திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட போது Keep the Gun Powder dry - துப்பாக்கி மருந்தை  உலர்ந்த நிலையிலேயே வைத்துக்கொள், நனைந்து  போக விட்டு விடாதே என்று பாபு ஜெகஜீவன்ராம் கூறினாராம்.  கலைஞரின் அந்த துப்பாக்கி மருந்து தான் இன்றும் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் -பாஜக உள்ளிட்ட மதவாதச்  சக்திகளிடம் இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது!


அந்த துப்பாக்கி மருந்து உயிர்ச்சேதத்திற்கானது அல்ல, போராட்டக் குணத்திற்குரியது. அதன் குண்டுகள் எதிரில் இருப்பவரைப் பெரியாரின் சித்தாந்தம் கொண்டு வீழ்த்தும் வல்லமை பெற்றது .

குண்டேந்தும்  பீரங்கி வந்தாலும் கொள்கையிலே மாறாத கருணாநிதி , என்ற வரிகள் நமக்கு நினைவிற்கு வருகிறதல்லவா. அந்த உறுதியான போராட்டக்குணத்தை முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்தபோதும், அவர் குறைத்துக்கொள்ளவில்லை. சக்கர நாற்காலி என்று ஏளனம் பேசியோர் மரணத்திற்கும் நீதி கேட்டு அவரே அறிக்கை கொடுத்தார். 


பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்தபோது  அமெரிக்காவின் குறிப்பிடத்தக்கப் பத்திரிகைகளில் ஒன்றான எஸ்கொயர் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டது. நடைபாதையில் ஒரு சிறுவன் ரூஸ்வெல்ட் என்று எழுதிக் கொண்டிருக்கிறான் . அதைப் பார்த்த அவனது அண்ணன் தன் தாயாரிடம்," அம்மா இதோபார் தம்பி ஒரு கெட்ட வார்த்தையை எழுதுகிறான் ," என்று கூச்சலிடுகிறான் .இதுதான் அந்தக் கேலிச் சித்திரம் ஏட்டில் அதனைக் கண்ட ரூஸ்வெல்ட் ஆத்திரப்படவில்லை. பத்திரிகைகளில் நியாயமான உரிமையைப் பறிக்கும் தண்டனைக்குரிய பயங்கர சட்டங்களை எதையும் கொண்டு வரவில்லை அந்த கேலிச்சித்திரத்தை ரசிப்பது மட்டுமல்ல அதற்குக் கண்ணாடியும் சட்டமும் அமைக்கச் செய்து வெள்ளை மாளிகையில் அவரது படுக்கை அறைக் கதவில் மாற்றி வைக்கச் சொன்னாராம் இங்கேயும் சில பத்திரிக்கை அதிபர்கள்,  ஆதிக்கபுரியினர், ஆலை  அரசர்கள், பெரும் பணக்காரர்கள் ,சீமான்கள் ,கோமான்கள் ஒரு கெட்ட வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். அவர்களது பார்வையில் கெட்ட வார்த்தையாகப் பட்ட அந்த பெயர் தான் கருணாநிதி என்பது! இதனைக் கலைஞர்  அவர்கள் நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில் பதிவு செய்திருக்கிறார்!! தன் வாழ்நாளெல்லாம் தான் யாரால் எப்படி எதிர்க்கப்படுகிறோம் என்பதை அறிந்தே கலைஞர் பயணித்தார். 


ஆனால் அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைகொண்டதில்லை கலைஞர். ஏன் கலைஞர் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ? நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் நிலவுடைமையாளார்களின் பகட்டு முதுகெலும்பை உடைத்தவர் கலைஞர் என்பதால்!!

விடுதலைப் போராட்ட காலத்தில் நில உச்சவரம்பு முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. 1959 ஆம் ஆண்டிலேயே வரப்போகிறது வரப்போகிறது என்று பரிவட்டம் கட்டிக் கொண்டு வந்த காரணத்தால் நிலப்பிரபுக்கள் அத்தனை பேரும் முன்கூட்டியே தங்கள் நிலங்களை உற்றார் உறவினர்களுக்கு அறநிலையங்களின் பெயராலும் வீட்டில் உள்ள சாமி சிலைகள் சாமி படங்கள் பெயராலும் பிரித்துப்  பிரித்து எழுதி வைத்துக் கொண்டு தங்களுக்கு வசதியாக எழுதி வைத்துக் கொண்டு பிறகு 1960ஆம் ஆண்டு 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 1959இல் அவசர அவசரமாக என்ன நடந்தது என்பதற்கு சில உதாரணங்களைத் தர விரும்புகிறேன்

1959 வரையில் கபிஸ்தலம் பண்ணையில் நில அளவு மொத்தம் 2,028 ஏக்கர் , அதில் 1464 ஏக்கரா பிரித்துப் பிரித்து விற்பனை செய்யப்பட்டு விடுகிறது, மிச்சத்தில் 389 ஏக்கர் தரிசு நிலம் என்று அறிவிக்கப்படுகிறது 125 ஏக்கர் அறக்கட்டளை என அறிவிக்கப்படுகிறது, எனவே 30 ஸ்டாண்டர்டு உச்சவரம்பு சட்டப்படி அந்த பண்ணையிலிருந்து அரசுக்கு உபரியாகக் கிடைப்பது 4 ஏக்கர் 84 சென்ட் மட்டுமே!

அடுத்தது பூண்டி பண்ணையார் நிலம்.அந்தப் பண்ணையில் மட்டும் சுமார் 4000 ஏக்கர் நிலத்தில் ,  1959 இறுதியில் சட்டம் வரப்போவதை அறிந்து முன் ஜாக்கிரதையாகக் காரியங்கள் மாற்றியதால் அரசுக்கு உச்சவரம்பு சட்டத்தில்  கிடைத்த நிலம் 48 ஏக்கர் மட்டும்தான். இதே வழியைப் பின்பற்றித் தான் வடபாதிமங்கலங்களும்  மூலங்குடிகளும்  தப்பித்துக் கொண்டன!! அதனால்தான் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உச்சவரம்பு சட்டத்தை அண்ணா அவர்கள் மிச்ச வரம்பு சட்டம் என்று கேலி பேசினார்.

 ஆனால் 1970 ஆம்  ஆண்டு பிப்ரவரியில் திமுகழக ஆட்சி 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு  என திடீரென அறிவித்து ஒரு சட்டத்தை இயற்றியது. அந்த உச்சவரம்பு சட்டத்தால் , உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது 1,08,068 ஏக்கராகும் !! அதில் அரசு கைப்பற்றியது 88 ஆயிரத்து 146 ஏக்கர்!!நிலமற்றவர்களுக்கு ஒப்படைப்பு செய்த ஏக்கர், 62,682 ஏக்கர் ! பயனடைந்த உழவர் பெருமக்கள் 38 ஆயிரத்து 504 பேர்!!

இத்தகைய புரட்சிகரமான சட்டங்களை எல்லாம் கொண்டுவந்த அரசு கலைஞர் அரசு என்ற காரணத்தினால் தான் கலைஞர் மீது வெறுப்பு. மதுவிலக்கைப் பற்றி இன்று பேசக்கூடியவர்கள் ஒன்றை மறந்து விட்டுப் பேசுகின்றார்கள், நிதி நெருக்கடி காரணமாக 1970 இல் மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டதே  தவிர மீண்டும் 1973ஆம் ஆண்டு கலைஞர் அரசு மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டு வந்தது என்பதுதான் வரலாறு. அதன் பிறகு அதனை ரத்து செய்தது எம்ஜிஆர் அரசு தான். 


மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்னான காலம் நமக்கு வாய்க்க வேண்டும் என்று சொன்னால் வருகிற 2021 ஆம் தேர்தலில் திமுக கூட்டணியை மிகப்பெரிய வெற்றி பெற வைக்க வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நாம் ஆதரவு தரவேண்டும் என்று முன்பொரு நாளில் சொன்ன செய்தி இன்றைக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்;

 தந்தை பெரியார் அண்ணா அவர்களின் உயிர் கொள்கையான வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கூறுகிற அதிமுக பதவிக்கு வருமானால், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்கால நிலைக்காக நாம் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலம்தான் பொற்கால ஆட்சிக் காலம் ஆகும், எனவே திமுகழகத்தை  தமிழ்ப் பெருமக்கள் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த நிலைதான் இன்றைக்கு மீண்டும் நமக்கு வாய்த்திருக்கிறது.

 பாஜகவும் அதிமுகவும் தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டின் உரிமைகளை எந்த அளவிற்கு நாசம் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் தினம் தினம் அனுபவித்துக் கொண்டு வருகின்றோம். இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை நாம் வெற்றிபெற வைக்க வேண்டும்; ஆசிரியர் அவர்கள் மேலும் குறிப்பிடும்போது திமுகழகத்தின் எதிர்காலமே தமிழகத்தின் எதிர்காலம் என்றும் கூட இருப்பவர்களை கடைசிவரையில் காப்பாற்றுகிற தலைவர் கலைஞர் கருணாநிதி ஒருவர்தான் எனவே அவர் தலைமையில் உள்ள கழகம்  வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பார் . அந்த செய்திகளையும் எடுத்துக்கொண்டு இன்றைக்குத் தமிழ் நாட்டின் எதிர்காலம் திமுகழகத்தின் எதிர்காலத்தில் தான் அடங்கி இருக்கின்றது அன்று நம்மிடையே தலைவர் கலைஞர் இருந்தார் இன்றைக்குத் திமுக தலைவராக இருக்கக் கூடிய தளபதி ஸ்டாலின் அவர்கள் இருக்கின்றார்கள்; எனவே அவருடைய தலைமையில் திமுக கூட்டணியை நாம் வெற்றிபெற வைக்க வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும் என்ற உறுதியை நாம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்!!

No comments:

Post a Comment