Saturday 30 January 2021

சமூக நீதி அரசின் வேர்கள் - எஸ். நாராயண்


சமூக நீதி அரசின் வேர்கள் - எஸ். நாராயண்


Dravidian Years புத்தகத்தில் இருந்து 


மிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையத்தின் தரவுகளை நோக்கினால், 1960-1980 காலத்தில் அரசுப்பணிகளில் நுழைபவர்களின் சாதிப்பின்புலம் பெருமளவு மாற்றமடைந்தது தெரிகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் அரசுப்பணிகளில் நுழைந்தார்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்களை அரசுப்பணிகளில் பணிக்கு அமர்த்தப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் விளைவாக அரசுப்பணிகளில் அமைப்பு மாற்றம் ஏற்பட்டது. புதிதாகப் பணிக்கு எடுக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் ஊரகப் பின்னணியைக் கொண்டவர்கள். இதனால், கிராமங்களின் உண்மையான நிலவரங்களை அவர்கள் எளிதாக உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்தப் புதிய அதிகார வர்க்கம் ஆட்சியில் இருந்த திமுகவின் எதிர்பார்ப்புகள், கனவுகளுக்கு ஏற்றதாக நடந்து கொண்டது.


ஆட்சி நிர்வாகத்தின் கடைக்கோடி மட்டத்தில் காவல்துறை, வருவாய் அதிகாரிகளாகப் பணிக்குச் சேர்ந்த தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. பல்வேறு சமூகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பில் அமர்த்தப்படுவது என்று தீர்மானிக்கப்பட்டதால், புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் உயர்சாதியினரின் எண்ணிக்கை பெருமளவில்

குறைந்தது. அதே வேளையில், பிற்படுத்தப்பட்ட சாதிகள், பட்டியல் சாதியினர், பழங்குடிகளுக்கான வாய்ப்புகள் கூடின. மக்கள் தொகையில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்த பிராமணர்கள் அதற்கேற்ப அரசுப்பணிகளிலும் குறைவான எண்ணிக்கையில் பணிக்குச் சேர்க்கப்பட்டார்கள்.


மக்கள்தொகையில் காணப்படும் பல்வேறு சாதிகள், வர்க்கங்களை முன்னிறுத்தும் வகையில் அரசுப்பணியில் புதிதாக நுழைந்தவர்களின் பின்புலங்கள் இருந்தன. இது மிக முக்கியமான மாற்றமாகும்.


காஞ்சிபுரம் காங்கிரஸ் கூட்டத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி அது ஈடேறாமல் வெளியேறிய பெரியாரின் கனவு பல ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. சிறுநகரங்கள், கிராமப்புறங்களில் சேர்ந்த பலதரப்பட்ட சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள், பற்பல கனவுகள் கொண்டவர்கள் அரசுப்பணிகளில் நுழைந்தார்கள். திராவிட இயக்கங்களின் உணர்வுகளோடு ஒத்த மனப்போக்குக் கொண்ட அன்றைய மெட்ராஸ் மாணவர்களைப் போலவே இவர்களும் திகழ்ந்தார்கள். இதுவே, அரசு நிர்வாகத்தில் சமூகச் சமத்துவத்தைப் பேணிக்காக்க, முன்னெடுக்க உதவுகிறது. மேலும், சமூக நலத்திட்டங்கள், சமூக நல சேவைகளை அடுத்தடுத்த ஆட்சிகளிலும் கச்சிதமாகக் கொண்டு சேர்க்க இதுவே உதவுகிறது. நான் ஆட்சிப்பணியில் சேர்ந்த 1965-ல் அரசுப்பணியில் இருந்த நிலை வேறு. இப்போது அரசுப்பணியில் இருப்பவர்களே தமிழகத்தின் பல தரப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களாகத் திகழ்ந்து தமிழகத்தின் பன்மைத்தன்மையைப் பிரதிபலிக்கிறார்கள். காங்கிரசின் கொள்கை, கலாச்சாரத்தில் மாநிலத்தின் அரசாங்க அமைப்புகள் ஊறிப்போய் இருப்பதாகத் திமுகக் கருதியது. மத்திய அரசு வகுத்து கொடுக்கும் திட்டங்களுக்கு ஏற்ப காங்கிரசின் கைப்பாவையாகச் செயல்படும் அமைப்புகள் என்றே அவை ஐயத்தோடு அணுகப்பட்டன.


நிலசீர்திருத்தம் 


கருணாநிதி அன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பகுதியாக இருந்த புதுக்கோட்டையில் பயணம் செய்தார். திருச்சிராப்பள்ளி நெடுங்காலமாகத் திமுகவின் கோட்டையாகும். திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்கள் கட்சியில் அதிகாரம் பெருந்தியவர்கள். அவ்வப்போது அமைச்சர்களே முக்கியமான முடிவுகளை மாவட்ட செயலாளர்களை எடுக்க விடுவார்கள். சி.பி.ஐ (எம்) தலைவர் உமாநாத் தலைமையில் கம்யூனிஸ்ட் இயக்க செயல்பாடுகளின் விளைநிலமாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது. அப்போதுதான் சிறு இனாம்கள் ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. நிலச் சுவான்தார்கள், இனாம்தாரர்களிடம் தங்களுக்கான நில உரிமைகளுக்காக விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டி போராட செய்தார்கள். அப்போது புதுக்கோட்டையின் துணை ஆட்சியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் நிலச்சுவான்தார்கள், குத்தகைக்காரர்களுக்கு இடையேயான மோதல்களால் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. கலைஞர் கருணாநிதி ஒரு நாள் முழுக்கப் புதுக்கோட்டை பகுதியில் செலவிட்டார். அன்று மட்டும் 19 கூட்டங்களில் பேசினார். அவரின் அத்தனை உரைகளும் செவிக்கு விருந்தாக அமைந்தன. எல்லாவற்றையும் கூர்ந்து கேட்டேன்.


அவர் கம்யூனிஸ்ட்களைத் தாக்கிப் பேசினார். திமுகவிற்கு விவசாயிகளின் பாடுகள் குறித்து நன்றாகத் தெரியும். ஏழைகளின் இன்னல்களை அது நன்கறியும். எப்படி விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது குறித்து யாரும் தங்களுக்கு அறிவுரை தர வேண்டியதில்லை என்பது அவரின் உரைகளின் சாரமாக இருந்தது. முதல் முறை சட்டமன்ற உறுப்பினரான குளித்தலையில் உள்ள நங்கவரம் பகுதியின் கைத்தறி, பீடித்தொழிலாளர்களின் துயர் துடைக்கத் தான் மேற்கொண்ட போராட்டங்களை நினைவுகூர்ந்தார் கலைஞர் கருணாநிதி. நங்கவரம் பகுதி ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை நிலை குறித்தே தன்னுடைய சட்டமன்ற கன்னிப்பேச்சில் அவர் கவனப்படுத்தினார்.


அந்த உரையில் ஒரு வர்க்கத்துக்குச் சார்பாக நீதித்துறை நடந்து கொள்வதாகச் சாடினார். ஏழைகள், கடைக்கோடி மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு இயந்திரம் தவறி விட்டதாகவும் இடித்துரைத்தார். அதே உரையில், இடதுசாரிகளை நோக்கி, “உங்களுக்கு என்னைவிடவா வறுமையில் வாடுவது எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடப் போகிறது?" என்று கேள்வி எழுப்பினார். திமுகவின் ஆட்சிக்காலத்தில் இடதுசாரி கட்சிகளோடு தேர்தல்களில் கூட்டணிகள் வைத்துக் கொள்வது, அதே வேளையில் இடதுசாரிகளின் நிலம், தொழிலாளர் சார்ந்த அமைப்புரீதியான பிரச்சினைகளில் இருந்து தள்ளி இருப்பது என்று திமுக இரட்டைநிலையைக் கடைபிடித்தது.


கிராம நிர்வாகத்தில் மாற்றம்


கிராம நிர்வாகத்தில் முக்கியமான மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் முறையானது ராயத்வாரி முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிலப்பகுதியையும் சிலருக்கு 'ஒதுக்கி' விடுவார்கள். இந்த ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டு அதனை ஆங்கிலேயே அரசுக்குக் கப்பம் கட்டிவிட வேண்டும்.


மெட்ராஸ் பரம்பரை கிராம அதிகாரிகள் சட்டம் 1895- படி கிராம நிர்வாகிகளின் பதவிகள் தீர்மானிக்கப் பட்டன, மேலும் சில பரம்பரை பதவிகளுக்கு அடுத்தடுத்து யார் வரவேண்டும் என்பதும் நெறிப் படுத்தப்பட்டது. கிராமக் கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் பொறுப்புக் கர்ணம் (கிராமத்து கணக்காளர்) என்பவரிடம் இருந்தது. கிராமத் தலைவரே வரிவசூல் செய்ய வேண்டும். இந்தச் சேவைகளுக்காக இவர்களுக்குக் தொகை தரப்பட்டது. இந்தக் குழுவே பல்வேறு குறிப்பிட்ட வாய்க்கால்கள், குளங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு ஏற்ப பாசன நீரை பங்கிட்டுத் தர வேண்டும். கிராமத்தலைவர் நிலபலம் மிக்கச் சாதிகளில் இருந்தே நியமிக்கப்பட்டார்கள். 


இப்பதவி மரியாதைக்குரிய பதவியாகக் கருதப்பட்டது. இந்தப் பதவிகளைப் பல்வேறு பிராமணர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாகத் தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் இவர்கள் செல்வாக்கு செலுத்தினார்கள். கிராம கணக்காளர்கள் நிலங்கள் மிகுந்தவர்களாக இல்லாவிட்டாலும் பிற சாதிகளில் கல்வியறிவு பெற்றவர்களாகவே இருந்தார்கள். தலித்துகள் கிராம காவல்காரராக, கிராம நீர்நிலைகளின் ஒழுங்கான நீர்ப்பங்கீட்டுக்கு தேவையான உடல் உழைப்பை நல்குபவர்களாக இருந்தார்கள். இவை பரம்பரை பரம்பரையாக அந்தந்த சாதிகளுக்கே சென்றன.


துணை ஆட்சியர்களான எங்களுடைய மிக முக்கியமான பொறுப்பு இந்தப் பதவிகளுக்கு உரிய ஆட்களை நியமிப்பதே ஆகும். இந்தப் பல்வேறு பதவிகளுக்கான தகுதியானது சாதி அமைப்பின் அடுக்குநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.


இந்தப் பதவிகள் கௌரவம் மிக்கவையாகக் கருதப்பட்டன. இவற்றை எப்படியாவது பெற்றுவிடப் பல்வேறு தகுதியுள்ள ஆட்கள் முண்டியடிப்பார்கள். துணை ஆட்சியர் செய்த நியமனத்தை எதிர்த்து மூத்த, அனுபவமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்பு வகிக்கும் வரி வாரியத்தையோ அல்லது சமயங்களில் உயர்நீதிமன்றத்தையோ நாடி அதிகாரிகள் செல்வார்கள். ஒரு துணை ஆட்சியருக்கு தான் செய்த நியமனத்தை வரி வாரியமோ, உயர்நீதி மன்றமோ ஏற்றுக் கொள்வது பரவசம் தரும் அனுபவமாகும்.


உயர் சாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமூகநீதியை நிலைநாட்ட இம்முறையை மாற்றுவது திமுக அரசுக்கு முக்கியமானது. நிர்வாகச்சீர்திருத்தங்கள் குழு ஒன்று 1973-ல் அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது பகுதி நேரமாகக் கிராம அலுவலர்களாக இருப்பவர்களின் இடத்துக்கு முழுநேரமும், முறையாகப் பணியாற்றுகிற, இடமாற்றம் செய்யக்கூடிய அரசுப் பணியாளர்களை நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இவர்களை வருவாய்த்துறையோடு முழுவதும் இணைத்துவிடவும் பரிந்துரைக்கப்பட்டது. அப்போது வருவாய்த்துறை செயலாளராக இருந்த கே. திரவியம் அவர்கள் மிகச்சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவர் தமிழ் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் சம வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இந்தப் பணியைக் காலனிய காலத்து அமைப்புகளைச் சீர்திருத்தங்களின் மூலம் அரசு மாற்றியமைத்தே செய்ய இயலும் என்று அவர் கருதினார். ஆழ்ந்த அறிவும், திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் திறமையும் ஒருங்கே பெற்றவர் திரவியம். மதிய உணவுத்திட்டத்தின் தோற்றம், அமலாக்கம் ஆகியவற்றில் அவரின் பங்கு குறித்து நான்காம் அத்தியாயத்தில் விரிவாக விவரித்து உள்ளேன். மேற்சொன்ன பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு கிராமப்புற அலுவலர்கள் பணி விதிகள், 1974 ஐ 17 மே 1975 அன்று செயல்படுத்தியது. இந்த விதிகள் காலங்காலமாக நிலவி வந்த கிராம கர்ணம், கிராமத்தலைவர் முதலிய பரம்பரை பதவிகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. இறுதியாக, கிராம அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஆணையத்தின் மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்படுவது

வழக்கமானது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அங்கே கிராம கணக்கு வழக்குகள் பாதுகாக்கப்பட்டு, வரி வசூலும் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக,

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த 1981-ல் தமிழ்நாடு பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்புச் சட்டம், 1981 இயற்றப்பட்டு இம்முறை முற்றாக ஒழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் கிராமங்களில் நிலவிவந்த சமூகப்படிநிலைகள் பெருமளவில் மாற்றமடைந்தன.


எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 1980. 1984) ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அவர் மாநிலத்தின் சமூக நிலையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அவர் 1981-ம் ஆண்டுச் சட்டத்தை முழுமூச்சாக ஆதரித்தார். கிராமங்களில் நிலவி வந்த கிராம அலுவலகர்கள் அமைப்பை மாற்றியமைக்கும் முயற்சிகள் திமுக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டு, அவை அஇஅதிமுக காலத்தில் முழுமையாக நிறைவேறியது என்பது சுவையானது. இந்தச் சீர்திருத்தம் நிறைவேற வேண்டும் என்பதில் இரு ஆட்சிகளும் ஒத்த கருத்துக் கொண்டிருந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


திமுகவின் கருத்தாக்கம், அது சமூகச் சீர்திருத்தம், சமூக நீதிக்கு தந்த முக்கியத்துவம் ஆகியவை இன்னொரு மிக முக்கியமான அமைப்பு ரீதியான மாற்றத்தைச் சாதித்தது. 1967-க்கு முன்புவரை போக்குவரத்து (பேருந்து) சேவைகள் பெருமளவில் தனியார்வசமே இருந்தன. மதுரையில், டி.வி.எஸ். குழுமமே மாநகர், புறநகர் பகுதிகளில் பேருந்து சேவைகளை வழங்கியது.


டி.வி.எஸ் குழுமம் உயர்சாதி குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் பல்வேறு தொழிற்துறைகளிலும், உற்பத்தி துறையிலும் கோலோச்சினார்கள். சேலம், அதன் சுற்றுவட்டாரங்களில் காலங்காலமாகப் பணக்காரர்களாக இருந்த பண்ணையார்களின் வசமே பேருந்து சேவைகள் இருந்தன. 1967 - 1971 காலத்தில் தனியார் வசமிருந்த எல்லாப் பேருந்து சேவைகளும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இவற்றை ஏற்று நடத்தும் பொறுப்பு மாநில அரசின் கட்டுபாட்டிற்கு உட்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்குத் தரப்பட்டன. பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதிகளை மட்டுமே அரசு புதுப்பிக்க மறுத்தது, இதன்மூலம் தனியார் முதலாளிகளுக்குப் பெரிதாக இழப்பீடும் கிடைக்கவில்லை. இந்த மாற்றத்தைக் கண்காணிக்கவும், புதிய போக்குவரத்துக் கழகங்களைப் பொறுப்பேற்று நடத்தவும் நியமிக்கப்பட்ட ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் மிகச்சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கலாம். குறிப்பிட்ட அதிகார வர்க்கத்திடம் இருந்து சொத்துக்களைக் கைப்பற்றி, நாட்டுடைமை ஆக்கும் செயல்பாட்டை ஆட்சிப்பணியாளர்கள் உடனே புரிந்துக்கொண்டதோடு, அதில் பங்கேற்கவும் செய்தார்கள். இது ஆட்சி நிர்வாகத்தில் இருந்தவர்கள் அக்காலத்தின் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப தாங்களும் மாறிக்கொண்டார்கள் என்பதற்குச் சான்றாகும். 


- எஸ். நாராயண் (தமிழில் பூ.கொ. சரவணன்) நன்றி: ஒரு மனிதன் ஒரு இயக்கம் புத்தகம் 

No comments:

Post a Comment