Saturday 30 January 2021

முக என்னும் திமுக - கௌதம்

முக என்னும் திமுக  - கௌதம்

“வாழ்க! வாழ்க! வாழ்கவே!! கலைஞர் புகழ் வாழ்கவே!” என்று ராஜாஜி அரங்கம் அதிர்ந்த போது மற்றெவரைவிடவும் அண்ணா அதிகமாக மகிழ்ந்திருப்பார். 

தம்பி வருகிறான்,

அண்ணனின் பெயரைக் காத்த அன்புத் தம்பி வருகிறான்,

இரவலாக வாங்கிய இதயத்தோடு வருகிறான்,

திராவிட இனம் செழிக்கச் செய்த என் தளபதி வருகிறான் என்று நெகிழ்ந்திருப்பார் அண்ணா. 

திமுக ஆட்சிக்கட்டிலைப் பிடித்ததிலிருந்தே அண்ணாவுக்குப் பிடித்த தளபதி ‘முக’தான். காந்திக்கு நேருவைப் போல், அண்ணாவுக்கு ‘முக’தான் அரசியல் வாரிசு. அண்ணாவும் ‘முக’வும் பெரியாருக்குக் கிடைத்த இரட்டைக் குழந்தைகள். 

ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவுடன் இரண்டாண்டுகளில் அண்ணா மறைந்தார், ஆனால் அவர் இருந்தால் என்ன செய்வாரோ அதைத் தான் ‘முக’வும் செய்தார். பெரியார் விரும்பியதும் திமுக ‘முக’ தலைமையில் இயங்க வேண்டும் என்பது தான்.

ஒரு முறை சென்னை மாநகராட்சி தேர்தலில் ‘முக’ வென்றபோது, தங்க மோதிரம் வழங்கி “இந்தக் கழகத்தின் அன்புக்குரியவன் கருணாநிதி” என்றார் அண்ணா. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான முதல் சந்திப்பு 1942-ல் நடந்தது. அந்தச் சமயத்தில் வெளியான திராவிட நாடு பத்திரிகையில் கலைஞர் எழுதிய “இளமை பலி” என்ற கட்டுரை வெளியானது. அதன் பின் ‘முக’ அண்ணாவுக்கு நிரந்தர “தம்பியாக” மாறினார். பெரியார் மீது பேரன்பு கொண்ட ‘முக’ அதை விட அதிகமாக அண்ணாவை நேசித்தார் என்பதற்கு 1949 திமுக உருவாக்கம் ஒரு பெரும் சான்று.


    
அண்ணாவின் மறைவு ‘முக’வினால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிழப்பு. அண்ணா மறைந்த போது “என் தந்தையை இழந்ததை போல உணர்கிறேன், இது என் வாழ்வின் மறுக்கமுடியாத பேரிழப்பு” என்று பதிவுசெய்திருப்பார். மற்றவர்களுக்கு அண்ணாதுரை என்பது பெயர் என்றால் ‘முக’வுக்கு மட்டும் அது உணர்வு. 

சென்னையில் எங்கு திரும்பினாலும் அண்ணா இருப்பார். அண்ணா சாலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பூங்கா, அண்ணா முனையம் (விமான நிலையம்), அண்ணா சதுக்கம், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ, அண்ணா அறிவாலயம் எனப் பார்க்கும் இடமெல்லாம் அண்ணா இருப்பார். இதையும் தாண்டி பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்ட போது ‘முக’ அதற்கு Anna Transport Corporation (ATC) என்று தான் பெயர் வைத்தார். அண்ணாவின் நூற்றாண்டில் அறிஞர்கள் போற்றும் வகையில் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” திறந்தவர் ‘முக’தான்.

அண்ணாவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன் களத்தில் என்றைக்கும் ‘முக’ இருப்பார். அண்ணா அவரை உறுதியாக நம்பியதால் அந்த அளவுக்கு முன்னிலைப்படுத்தினார். 

பிரிவினை தடைச் சட்டம் வந்தபொழுது, அண்ணா தம்பிகளுக்காக எழுதிய “எண்ணித் துணிக கருமம்” என்ற நூலில் பாசறை மற்றும் படை வரிசை என்று குறிப்பிடும் போது “நாவலரும் நடராசனும் பாசறையினர், கருணாநிதியும் மதியும் படைவரிசையினர்” என்று படைத் தளபதியாக ‘முக’வை முன்னிலைப் படுத்துவார். 

அண்ணாவுக்கு எழுதிய அஞ்சலியில், 

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:

இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?

கடற்கரையில் காற்று

வாங்கியது போதுமண்ணா

எழுந்து வா எம் அண்ணா

வரமாட்டாய்; வரமாட்டாய்,

இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ

இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..

நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை

உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா? என்றார் ‘முக’.

இரவலாக வாங்கிய இதயத்தோடு மெரினா அடைந்தார் ‘முக’.

கட்டுரை முழுக்க ‘முக’ ... ‘முக’ என்று சொல்லுவதற்குக் காரணம், ‘முக’ தான் “திமுக”; முக இல்லை என்றால் திமுக இல்லை; இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர் தான் திமுக (திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி).

“திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது” என்று ட்விட்டரில் பதிவிட்ட கலைஞர் ஒரு தீர்க்கதரிசி.
வாழ்க கலைஞர்! வாழ்க திராவிடம்! 

வளர்க பகுத்தறிவு! வெல்க தமிழ்!


No comments:

Post a Comment