Saturday 30 January 2021

சளைக்காத சட்டமன்ற உறுப்பினர் - ஏ. எஸ். பன்னீர்செல்வம்

 சளைக்காத சட்டமன்ற உறுப்பினர் - ஏ. எஸ். பன்னீர்செல்வம்


நங்கவரம்


அவருடைய குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்காவரமில் நிலச்சுவான்தார்கள் விவசாயத் தொழிலாளர்களைச் சுரண்டிப் பிழைக்கும் கூலி முறையைப் பின்பற்றினார்கள். ஆச்சரியப்படத்தக்க வகையில், நீதிமன்றங்கள் தொழிலாளிகளுக்கு உரிய கூலியை வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்தன. அன்றைய காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்யாமல் மெத்தனம் காட்டியது. நங்கவரம் கிராமத்தை சேர்ந்த ஏழைப்பெண்கள், ஆண்கள், குழந்தைகளின் கண்ணீர் வர வைக்கும் நிலை குறித்துக் கலைஞர் கருணாநிதி கவனப்படுத்தினார். ஆளும் அரசை இடித்துரைக்கும் எதிர்க்குரலாக ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக,


'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.' (குறள் 448)


என்கிற குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். இந்த உரையில் நிலவுடமை எவ்வளவு ஏற்றத்தாழ்வுடன் இருக்கிறது, சுரண்டல் எவ்வளவு சட்டபூர்வமாக நடக்கிறது. நீதித் துறையின் வர்க்க சார்பு, அரசு எந்திரம் எப்படி ஏழைகள், ஒதுக்கப்பட்ட மக்களுக்குரிய அடிப்படைப் பாதுகாப்புகளை வழங்கத் தவறியது என்று சுட்டிக் காட்டினார். உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சரியாக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை இந்த உரை அரசுக்கு ஏற்படுத்தியது. அரசு தாமதமாகவும் மெதுவாகவும் செயல்பட்ட போதிலும், நங்கவரம் விவசாயிகளுக்கு மேம்பட்ட ஊதியத்தையும், கண்ணியத்தையும் மீட்டுத் தர உதவியது இந்த உரை இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த காவிரி டெல்டா நங்கவரம் வெற்றியால் படிப்படியாக திமுக வசமானது.


இந்தி திணிப்பு, காவல்துறை சீர்திருத்தங்கள், நிதிப்பற்றாக்குறை, பொதுப்பட்டியலில் உள்ளவற்றை மத்திய அரசு கட்டுப்படுத்த முனைவது என்று அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் தெளிவானதாக, அழுத்தமானதாக வெளிப்பட்டன. அவை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் குறித்தும், அரசமைப்பை உண்மையான கூட்டாட்சியாக மாற்ற உதவும் சிறப்பான செயல்திட்டங்கள் பற்றியும் விரித்து உரைத்தன. அவரின் சட்டமன்ற உரைகள் சமூக நீதி என்கிற கருத்தாக்கத்தைச் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, விளிம்புநிலை மக்களைக் கைதூக்கி விடும் வகையில் இயற்றப்படும் சிறப்புச் செயல்திட்டங்கள் முதலிய எல்லைகளைத் தாண்டிப் பேசின. இந்த உரைகள் முன்மொழிந்த திட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக மட்டும் இல்லாமல், அமல்படுத்தும் வகையிலும் இருந்தன.


இந்த அனைவருக்குமான சமூகநீதியின் மையப்புள்ளியாக அனைவருக்கும் மின்சாரம்,

போக்குவரத்து கொடுக்கும் திட்டங்கள் அமைந்தன. திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்த ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் எதிர்ப்பையும் மீறி, பேருந்து சேவையை நாட்டுடைமை ஆக்கினார். அதோடு, தனியார் பேருந்துகளை இயக்கும் முதலாளிகளின் வருமானத்திற்கு ஏற்ப பல்வேறு வரி வரம்புகளை அறிமுகப்படுத்தினார். இது தனியார் துறையை முடக்கப்போகும் சுமை என்று சுதந்திரா கட்சி சாடியது.


இதற்குச் சட்டமன்றத்தில் பதிலளித்துப் பேசிய கருணாநிதி, தனியார் துறை இந்த வரி விதிப்பைச் சுமை எனக்கருதினால் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை விட அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் குவியாது என்று சுட்டிக்காட்டினார். “புதிய வழித்தடங்களில் பேருந்து செலுத்த அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள், தனியார் துறை கூடுதலாக வரி செலுத்த விருப்பப்படுகிறது என எண்ண வைக்கிறது... தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை கூடியிருப்பதைக் கருத்தில் கொள்வது முக்கியம். அது 1966-ல் 5,395, ஆக இருந்தது; 1967-ல் 5,681 ஆனது. இதே ஆண்டுகளில் மாநில அரசு பேருந்துகளின் எண்ணிக்கை முறையே 1,234 மற்றும் 1,638 ஆகும். இதைத் தொடர்ந்து, கைக்குக் கட்டுப்படியாகும் காசில் பயணம் புரிவதன் நன்மைகளையும், அது எப்படி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் விளக்கினார்.


இதே வேகத்தோடுதான், 1969-ல் தமிழகத்தின் எல்லாக் கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்க வேண்டும் என்று அயராது இயங்கினார். இந்தியாவிலேயே அந்த இலக்கை எட்டிய முதன் மாநிலமாகத் தமிழகம் மாறியது. “மின்சார வசதி என்பது நகர்ப்புற-ஊரகப் பாகுபாட்டைப் புரிந்து கொள்ள உதவும் மிகச்சிறந்த அளவுகோலாகும். எல்லா வகையான ஏற்றத்தாழ்வுகளையும் நீக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கட்சி என்கிற முறையில், அனைவருக்கும் மின்சார வசதியை கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமை தருகிறோம்.'' என்றார்.


- ஏ.எஸ். பன்னீர்செல்வம் (தமிழில் பூ.கொ. சரவணன்)

நன்றி: ஒரு மனிதன் ஒரு இயக்கம் புத்தகம் 

No comments:

Post a Comment