Saturday 30 January 2021

கலைஞரின் உடன்பிறப்புகள் - சீ. சுந்தரராஜன்

 கலைஞரின் உடன்பிறப்புகள் - சீ. சுந்தரராஜன்  


ண்டு 1953 என நினைக்கிறேன், அப்போது எனக்கு வயது 7. மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு தான் என்னுடைய கிராமம். திமுக தொடங்கிய காலம் அது. கழக கொடிகளும், சுவரொட்டிகளும் எங்கள் வீட்டில் தான் கொண்டு வந்து வைத்தார்கள். 


எனது அம்மாவும், சித்தப்பாவும் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள் கிராமத்தில் உள்ள மற்ற நண்பர்களுடன் சேர்ந்து கொடிகளை நடுவார்கள், சுவரொட்டிகளை ஒட்டுவார்கள்.


"காகிதப்பூ மனக்கது, காங்கிரஸ் சோசியலிசம் நிலைக்காது, இனிக்காது" என்ற அண்ணா அவர்களின் வாசகத்தை சுவரொட்டியில் கண்டத்தில் இருந்து அந்த வாசகம் என் மனதில் இன்று வரை நிலைத்து இருக்கிறது.  

 

எனக்கு 73 வயதாகிறது, அப்போதைய திமுக மேடை பேச்சாளர்களின் மேடை பேச்சுகளை கேட்காமல் இருந்ததில்லை. சி.பி. சிற்றரசு அவர்கள் பேசும் போது 'பல் இல்லாதவனுக்கு பட்டாணி கடையில் என்ன வேலை' என்று அடிக்கடி பேசுவார். கைதட்டலும், சிரிப்பொலியும் மிகுந்து இருக்கும். 


நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பேசும்போது வலது கை பெருவிரலை ஆட்டி ஆட்டி பேசுவார்கள்.


நன்னிலம் நடராசன், மேயர் சிட்டிபாபு, ரகுமான்கான் சுப்பு, பம்மல் நல்லதம்பி, ஆலந்தூர் பாலன், வெற்றிகொண்டான், நாஞ்சில் மனோகரன், போலீஸ் கண்ணன், வேழவேந்தன், மதுராந்தகம் ரெங்கா, துரைமுருகன் அவர்கள் மேடையில் பேசும்போது தனது சட்டையை கழற்றிவிட்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட பிரம்படி தழும்புகளை காண்பிப்பார்கள். 


நாகூர் அனிபா அவர்கள் கலைஞர் மற்றும் அண்ணா அவர்களுக்கும் இனிய நண்பர் என்பதை நான் அறிவேன்.


திமுக பொதுக்கூட்டங்கள் நடக்கும் முன் நாகூர் அனிபாவின் பாட்டுக்கள் ஓடிவருகிறான் உதயசூரியன், அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா, கல்லக்குடி கொண்ட கருணாநிதி ஆகிய பாட்டுக்களை ஒளிபரப்புவார்கள். அந்த பாடல்களை கேட்கும் போது என்னை அறியாமலேயே கழகத்தின் மீது மிகுந்த பாசமும், உணர்வும் ஏற்படும்.


1947 ஆம் ஆண்டு என்னுடைய அத்தைக்கு கலைவாணர் திரு. என்.எஸ்.கே தலைமையில் சீர்திருத்த திருமணம் நடந்தேறியது. காலஞ்சென்ற கடலூர் இளம்வழுதியும் கலந்து கொண்டார்கள், திரு. இளம்வழுதி அவர்கள் எனது உறவினர் என்று கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.


- சீ. சுந்தரராஜன்  

 




No comments:

Post a Comment