Saturday 30 January 2021

கலைஞர் கொடுத்த முதல் ஏணி - அருண்மொழி

 கலைஞர் கொடுத்த முதல் ஏணி  - அருண்மொழி

2006. பன்னிரெண்டாம் வகுப்பு.

நான் இதுவரை பார்த்தேயிராத புத்தகம் ஒன்றை படித்து கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். 

“என்னடா இது”

“Entrance exams question bank டா”

“Entrance தான் இருக்காதுனு சொல்லிருக்காங்களே டா”

“போன வருஷமும் இதே தான் சொன்னாங்க. கடைசில வச்சாங்கள்ள. சென்னைல எல்லாம் entrance examக்கும் சேர்த்து தான் சொல்லி தராங்களாம்”. கேட்டவுடன் எனக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடுமுறையில் தான் நான் நுழைவுத்தேர்வு என்ற ஒன்றையே முதன்முதலாக கேள்விப்பட்டேன். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் பொதுத்தேர்வு முடிந்தும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். பொதுத்தேர்வு ஒன்றுடன் நுழைவுத்தேர்வு ஒன்றையும் எழுதவேண்டும் என்றும் அதையும் சேர்த்து தான் மேற்படிப்புக்கான கட்ஆஃப் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிந்து கொண்டேன். 


நுழைவுத்தேர்வு என்றவுடனே என் நினைவுக்கு வந்தவன் ரகு. கம்ப்யூட்டர் க்ளாஸில் தான் அறிமுகம். ரகு எங்கள் ஊர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன். 95சதவீத மதிப்பெண்களை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் எதிர்பார்த்திருந்தான். Bio maths groupல் படித்ததனால் engineeringல் உதவும் என்று கம்ப்யூட்டர் க்ளாஸில் சேர்ந்திருந்தான். திடீரென்று க்ளாஸில் இருந்து நின்று விட்டதால் தொடர்பற்று போய்விட்டது. பின் சில மாதங்கள் கழித்து அவனை ஊர் பேருந்து நிலையம் அருகில் காண நேர்ந்தது. ஊருக்கு அருகில் உள்ள பொறியியல் கல்லூரி பேருந்து ஒன்றிலிருந்து இறங்கி சென்று கொண்டிருந்தான். ரகு 90சதவீத மதிப்பெண்கள் பெற்றதாக கேள்விப்பட்டிருந்தேன். பின் ஏன் இந்த கல்லூரியில் பயில வேண்டும் என்று தோன்றியது. நலம் விசாரிப்புகளுக்கு பின் நானே அதை கேட்டேன். 


“Entranceல போச்சுடா. என் மேல தான் தப்பு. நான் பப்ளிக் எக்ஸாமுக்கு முக்கி முக்கி படிச்சேன். ஏப்ரல்ல மட்டும் தான் entranceக்கு prepare பண்ண முடிஞ்சது. கவர்ன்மென்ட் காலேஜ் கிடைக்கல. சரி இங்க பக்கத்துல படிச்சா கடையையும் பார்த்துக்கலாம்னு சேர்ந்துட்டேன். நீயாவது ஆரம்பத்தில் இருந்தே படி”


பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வு என்று எதற்கு இரண்டு பரிட்சை எழுதனும் என்று தோன்றும். ஊரில் கடை வைத்திருக்கும் கண்ணன் அண்ணன் பல வருடங்களுக்கு முன்பே +2வில் நல்ல மார்க்காம். ஆனால் நுழைவுத்தேர்வு என்ற ஒன்று இருப்பதே அவருக்கு தெரியாதாம். அவரின் அறியாமை ஆச்சரியமளிக்கவில்லை. எங்கள் ஊர் ஒரு சிறு நகரம். அப்பொழுது ஊரில் கோச்சிங் சென்டர்களே கிடையாது. சில பள்ளிகளில் entrance coaching உண்டு. சில ஆசிரியர்கள் தனி ட்யூசனும் நடத்தி கொண்டிருந்தடர். 20கிமீ தள்ளி பக்கத்து ஊரில் சில சென்டர்கள் இருந்தது. பெரும்பான்மையானவர் பொதுத்தேர்வு முடிந்து மதுரைக்கு சென்றும் ஒரு மாதம் படித்தனர். நான் படித்த பள்ளியே 25 கிமீ தள்ளி இருந்தது. காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு நேரம் இரு நகரபேருந்துகள் மாறி செல்ல வேண்டும். இதில் எங்கு தனியாக entrance examsக்கு படிப்பது. துணிந்து விட்டு விட்டேன். ஒரு வேளை entrance exam இருந்தால் பொதுத்தேர்வு முடிந்து பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன். 


2007. கோயமுத்தூரில் உள்ள பொன்விழா கொண்டாடிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.  அங்கு சமூகத்தின் சாதி/வர்க்க ரீதியாக மிகவும் பிற்பட்டவர்களை காண நேர்ந்தது. +2 முடித்து ஒரு வருடம் லாரி க்ளீனராக இருந்து வந்த ஒருவர், ஏற்காடு மலை கிராமத்திலிருந்து தன் கிராமத்திலேயே முதன் முதலாக பொறியியல் படிக்க வந்த ஒருவர், தூத்துக்குடி அருகே குறவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக பட்ட படிப்பு படிக்க வந்திருந்த ஒருவர் என்று பலதரப்பட்டவர்களை காண நேர்ந்தது. ஏன் உங்க பேட்ச்ல தமிழ் மீடியம் பசங்க அதிகமாக இருக்காங்க, ஏன் உங்க பேட்ச்ல சென்னை பசங்க கம்மியா இருக்காங்க என்று சீனியர்கள் கேட்ட பொழுது தெரியவில்லை அதற்கான காரணம் நுழைவுத்தேர்வு ரத்து என்பதை.


எங்கள் ஊரிலிருந்து அந்த கல்லூரிக்கு சென்றவர்கள் வெகு சிலர் தான். மூன்றாம் வருட சீனியர் ஒருவரை கண்டு பிடித்தோம். எங்கள் பேட்ச்சில் ஆறு பேர் எங்கள் ஊரிலிருந்து வந்தவர்கள் என்பதை கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தார். ஆனால் நான் நான்காம் ஆண்டு படிக்கும்போது விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பியபோது ஒட்டு மொத்த பேருந்தே எங்கள் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கியது. 


படித்து முடித்தவுடன் வேலை பின் மேற்படிப்பு படிப்பதற்கான தகவல்கள் என்று அத்தனையும் நான் பெற்றது இளங்கலையில் தான். CATல் தேர்ச்சிபெற்று இந்திய மேலாண்மை நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பையும் பெற்றேன். அதற்கான அடிப்படையை சிற்றூரில் இருந்து மிகக் குறைந்த அனுபவங்களுடன் பதின் வயதில் இருந்த நான் பெற்றிருக்கவில்லை. எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஏணி நுழைவுத்தேர்வு ரத்து. எனக்கு திறக்கப்பட்ட முதல் பெரும் கதவு அது. இளங்கலையில் கற்றுகொண்டதே நான் இன்று இருக்கும் நிலைக்கு அடிப்படை. வந்த வழியை மறந்து “நான் எப்படியும் படிச்சிருப்பேன்” என் சுய முயற்சி தவிர வேறு காரணமில்லை என்று நான் சொல்வது அறமாகாது. இதற்காக திராவிடத்துக்கும் கலைஞருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.


இன்று நீட் எதிர்ப்பு சமூக நீதி என்பதை தாண்டி ஒரு நன்றியுணர்வு. தனக்கு கிடைத்த ஏணி எல்லோருக்கும் கிடைக்கனும் என்ற எண்ணம்.  கீழிருப்பவர்க்கு கைத்தூக்கி விடுவதே திராவிட மரபு. என்னைப் போன்றோரின் சமூக முன்னேற்றத்திற்கு திராவிடம் என்றும் துணைநிற்கும்.


- அருண்மொழி


திமுகவின் இறுதி லட்சியம்?

சமுதாயத்துறையில் சமத்துவம், பகுத்தறிவு, பொருளாதாரத் துறையில் சமதர்மம், அரசியலில் ஜனநாயகம்.


திராவிடம், தமிழ் உணர்வு என நீங்கள் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை, இனிவரும் காலங்களில் பேசி, அரசியலில் வெற்றி பெற முடியும் என நினைக்கிறீர்களா?


திராவிடம், தமிழ் உணர்வு போன்ற இலட்சியங்கள், எப்போதும் சுடர்விட்டு எரியும் தீபங்கள், அவை எல்லா காலங்களுக்கும் பொருத்தமானவை. தமிழன் என்பது எப்படி நிரந்தரமானதோ அதைபோன்றதுதான் திராவிடமும் தமிழ் உணர்வும். தைபாசத்துக்கு எப்படி கால நிர்ணயம் இல்லையோ, அதைப்போல் தமிழ் உணர்வுக்கும் கால நிர்ணயம் கிடையாது.


- கலைஞர் கருணாநிதி



No comments:

Post a Comment