Saturday 30 January 2021

கல்வியும் வன்மமும் - தனசேகர். மா

 கல்வியும் வன்மமும் - தனசேகர். மா


சுரன் படத்தில் ஒரு வசனம் வரும் இறுதிக்காட்சியில். இந்த இந்தியச் சமூக இயக்கத்தின் இயங்கு சக்தியாக இன்று இருக்கும் சாதியால் அனைத்து வகைகளிலும் ஒடுக்கப்பட்ட நாயகன் தனுஷ் தன் மகனுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருப்பார். “உன் படிப்ப மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்”. இது இந்தக் காலத்திற்கேற்ற வசனம். இதனையே திருவள்ளுவர் கல்வி ஒன்று தான் செல்வம். மற்றவை எல்லாம் உண்மையான செல்வங்கள் ஆகா என்று கூறிச் சென்று விட்டார். தனுஷ் கூறும் வசனம் எளிய பார்வையில் பொருளாதாரத்துடன் பொருத்திப் பார்த்தால் பெரிதாகத் தெரியாது. ஆனால் கல்வி சமூகம் விழிப்புணர்வு பெறுவதற்கு, ஒரு புரட்சியை ஏற்படுத்த கூடிய வல்லமையும் கொண்டது. புத்தன், வள்ளுவன், ஜோதி ராவ் பூலே, அம்பேத்கர், பெரியார் என்று அனைத்துச் சமூகச் சீர்திருத்தவாதிகளும் கல்வியை மக்களிடையே கொண்டு செல்ல பாடுபட்டவர்கள். நூற்றாண்டு காலமாகக் கல்விக்காகத் திராவிட இயக்கம் இம்மண்ணில் தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். கல்விச் செல்வத்தை அனைவருக்கும் பாரபட்சமின்றிக் கொடுப்பதில் இந்திய அரைக் குறை கூட்டாட்சிக்கு ஏன் இத்தனை பெரிய தயக்கம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆரம்பக் கல்வி முதல் தொழிற்கல்வி வரை நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களின் தரத்தைச் சோதிக்கிறோம் என்று சொல்கிறார்களே, ஏன்? தரம் என்பது அயோக்கியத்தனம் இந்தியாவைப் பொறுத்த வரையில். சமமற்ற சமூகத்தில் தரம் குறித்துப் பேசிக்கொண்டிருப்பது ஏமாற்று வேலை அன்றி வேரில்லை. ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் கல்வி அவனைச் சுற்றியுள்ள சமூகத்துடன் எப்படி வினை புரிகிறது என்று பார்ப்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி கற்பனையல்ல.


இந்தியக் கிராமங்களுக்கே உரியத் தனித்த அடையாளமான சாதிய இறுக்கத்துடனே அந்தக் கிராமமும் இருந்தது. ஊரின் ஒரு திசையில் தாழ்த்தப்பட்ட மக்களும் மற்றொரு திசையில் பிற்படுத்தப்பட்ட மக்களும் வாழ்ந்தனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கியே வாழ்ந்து வந்தனர். பேச்சு, நடை, உடை, பழக்க வழக்கங்கள் என்று அனைத்திலும் ஆதிக்கத்தின்பாற்பட்டு ஒடுங்கி வாழ்ந்த மக்களின் இயலாமை, அவ்வூரில் ஊறிப் போயிருந்ததைக் காண முடிந்தது. இது இன்றும் நடந்து கொண்டிருப்பது தனிக்கதை. பொதுவாக உயர் சாதி இந்துக்கள் எனப்படும் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தொடுக்கும் சாதிய ஆதிக்கச் செயல் அவர்களுக்குள் ஓர் கர்வத்தையும் பெருமிதத்தையும் ஆணவத்தையும் ஒருங்கே சேர்ந்து கொடுக்கும். அப்படி நடந்து கொள்ளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார். இலவச பள்ளிக்கல்வி, உயர் கல்விச் சலுகைகள், பெற்றோர் ஆதரவு, தொடர்ந்த உழைப்பு, இட ஒதுக்கீடு என்று தமிழ்நாட்டிற்கே உரிய சமூக நீதிக் கட்டமைப்புகளைச் சரிவரப் பயன்படுத்தி அதே அரசு அலுவலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் அரசு அலுவலராகப் பணிநியமனம் பெற்று தன் பணியைத் தொடங்குகிறார். தொடக்கத்தில் இருவருக்குள்ளும் ஒரு தயக்கம். எப்படித் தன்னை விட மேல் சாதியில் இருக்கும் ஒருவருடன் பழகுவது என்று இந்தப் பெண்ணுக்கும், காலமெல்லாம் யாரை அடக்கி ஒடுக்கி, ஒதுக்கி வைத்து நான் மேலானவள் என்று கர்வம் கொண்டு திரிந்தோமோ அந்தக் கூட்டத்திலிருந்து வந்த பெண்ணுடன் எப்படி இறங்கிப் போய்ப் பழகுவது என்று அந்தப் பெண்ணுக்கும் மனதளவில் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.


சில நாட்களில் அந்தத் தயக்கமும் உடைந்து போனது. பணிச்சூழல் அவர்களை ஒன்று சேர்ந்து இயங்கச் செய்தது. தொடக்கத்தில், வேண்டா வெறுப்பாக நடந்து கொண்டாலும், அந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்குகிறார். பின்னாளில் நல்ல தோழிகளைப் போல் மாறி விடுகிறார்கள். தன் அவசர உதவிகளுக்கு இருவரும் மாறி மாறி அழைத்துக் கொள்வதும், தன் வீட்டுச் சுக,துக்க நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொள்வதும், ஒன்று சேர்ந்து கோயிலுக்குச் செல்வதும், மனம் விட்டுப் பேசுவதும் என்று முற்றிலும் ஒரு ஆரோக்கியமான உறவு அவர்களுக்குள் மலர்ந்திருந்தது அந்த ஓரிரு ஆண்டுகளுக்குள்.


நாட்கள் உருளுகின்றன. அந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் மனதில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தன்னுடைய தோழியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணின் தாயோ, தந்தையோ கண்ணில் தென்பட்டால், தேடிச் சென்று நலம் விசாரிக்கிறார். முன்பெல்லாம் தண்ணீர் கேட்டால் கூட அவர்களுக்குக் கொடுக்க மனம் வராத அல்லது வந்தாலும் எவருமே பயன்படுத்தாத பித்தளை அல்லது அலுமினிய குவளையில் தண்ணீர் ஊற்றி, கையில் தராமல், திண்ணையில் வைத்து தீண்டாமையைக் கடைப்பிடித்த மனதில், சரிக்குச் சமமாக உட்கார வைத்துப் பேசுமளவிற்கு மனதில் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அதன் பின்னர் அவர் எந்த ஒரு தாழ்த்தப்பட்டவரையும் இழிவாகப் பேசுவதையோ, நடத்துவதையோ காண முடியவில்லை, முற்றிலுமாகச் சாதிய உணர்வு அவரை விட்டு நீங்கி விடவில்லை எனினும், குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை அந்தப் பெண்ணிடம் காண முடிந்தது.


எத்தகைய மாற்றம் தெரியுமா இது? கிராமப்புறச் சூழல்களில் வளர்ந்தவர்களுக்கு இது நன்றாகப் புரியும். சாதாரணப் பேச்சில் தொடங்கி, அடிப்படை உரிமை வரை சாதிப் பெருமை என்று சொல்லிக் கொண்டு செய்யப்படும் அனைத்து அநாகரீகச் செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில், இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்களிடையே நட்பு மலர்கிறது. ஒரு பெண்ணுக்கு தன் சுயமரியாதை மீதான இழிவு துடைக்கப்பட்டிருக்கிறது; தன் சுற்றத்தாரையும் அந்த இழிவிலிருந்து பாதுகாக்கிறது. மற்றொரு பெண்ணுக்குத் தான் செய்து வந்த செயல் எத்தனை இழிவானது என்பது புரிந்துள்ளது.


இத்தகைய மனமாற்றம் சமூகத்தில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு நடந்து விட்டால் என்ன ஆகும்? சமுதாயத்தில் சாதியத்தின் இறுக்கம் படிப்படியாகக் குறையும். இதற்குக் கல்வி மிக மிக அவசியம். கல்விதான் அறிவென்னும் ஆயுதத்தைக் கூர்தீட்டும் கருவி. இதன் சமூக நீதி நீட்சிகளான இட ஒதுக்கீடு, பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகள் போன்றவை அதிகாரப் பரவலையும், அதன் காரணமாக அனைத்து சமூகத்தினருக்குமான அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்கிறது. சாதி என்னும் மன மயக்கத்திலிருந்து விடுபட இவை மிக மிக இன்றியமையாததாகிறது. இந்தச் சமூக நீதிக்கூறுகள் சமுதாயத்தில் வலுப்பட, வலுப்பட, சாதிப் பிடிமானம் குறையத் தொடங்கும். முற்றிலுமாகச் சாதி ஒழியும் வரை இந்தச் சமூக நீதிக் கொள்கையை இடைவிடாமல் பின்பற்றுவதற்காக உழைப்பதே ஆகச்சிறந்த மனிதத்தன்மை என்று நான் கருதுகிறேன்.


சரி! இந்தக் கல்விக்கும் நான் தலைப்பிட்டிருக்கும் வன்மத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? கேட்டுக்கொண்டாள் நல்லது. தொடர்பு இருக்கிறது. இந்த அதிகாரப் பரவலாக்கல் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை நாம் மேலே பார்த்தோம். அதற்கான அடித்தளத்தைப் போட்டுக்கொடுத்தது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம். அதில் மிக முக்கியமான அங்கமான தி.மு. கழகம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கல்வி, இட ஒதுக்கீடு போன்றவற்றில் பல சாதனைகளைச் செய்துள்ளது. இந்தச் சாதனைகளில் கலைஞர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்.


அதற்காகக் கலைஞர் எதிர் கொண்ட சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. சந்தித்த துரோகங்கள் வியப்பிற்கு ஆழ்த்துபவை. சரி அரசியல் என்றால் சவால்கள் இருக்குமல்லவா? அதை விட்டுவிடுவோம். வன்மங்கள் ஏன்? அந்த வன்மங்கள் எந்தெந்த வடிவங்களில் கலைஞர் மீது ஏவப்பட்டன என்று ஏறக்குறைய கலைஞரின் வரலாற்றைத் தெரிந்துகொண்டவர்கள் அனைவரும் அறிவர். அதில் சிலவற்றை இங்குத் தர முயல்கிறேன்.


அண்ணாவைப் புகழ்ந்து கலைஞரின் செயல்பாடுகளை மட்டம் தட்டுவது. ஒருவரைப் புகழ்ந்து தனக்கு வேண்டாதவரை ஒப்பிட்டு அவரைக் கீழ்மைப்படுத்த நினைப்பது. இது ஒரு வடிவம்.

தனக்கு வேண்டாதவரின் மன உறுதியைக் குலைத்து, தன் வழியில் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வது. இதில் கலைஞர் மீதான நெருக்கடி நிலை தாக்குதல் வரும். இது ஒரு வடிவம்.


தனக்கு ஆகாதவன் பெயரைக் கெடுப்பது. இந்த வடிவத்தில் கலைஞர் மீது எண்ணற்ற வன்மங்களை ஏவியுள்ளனர். ஏனெனில் கலைஞரின் உழைப்பு என்பது ஓடும் நதிக்கு ஒப்பானது. அது என்றுமே தேங்கியதில்லை. அந்த உழைப்பின் மூலம் அவர் பெற்ற உயரம் என்பது அவரின் புகழை மறைக்கமுடியாதபடி செய்திற்று. கலைஞரின் மன உறுதியைப் பற்றி நான் உங்களுக்குக் கூற வேண்டுமா என்ன? அவரின் நெஞ்சுரம் ஒவ்வொருவரும் வாழ்வில் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பண்பு. அது அவ்வளவு சீக்கிரம் வராது. ஏனெனில் அது அண்ணா சொன்னது போல, கையில் எண்ணெய் நிரம்பிய கரண்டியைக் கொண்டு சிந்தாமல் சிதறாமல் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, மலையின் உச்சியை நோக்கி நடப்பதற்குச் சமம். அந்த அளவு மன உறுதியுடன் இருந்ததால், கலைஞரை மனதளவில் வீழ்த்துவது என்பது எதிரிகளுக்கு ஆகாத காரியமாகத்தான் தோன்றியது. எனவே அவர்கள் கையில் எடுத்த சூழ்ச்சிகளுமான, சாணக்கி யத்தனம் எனப்படும் அயோக்கியத்தனத்தின் ஒருவகைத் தான், பொய் புரட்டுகளைப் பரப்பி, தன் எதிரியின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாகுவது. கேட்பதை அப்படியே நம்ப ஒரு கூட்டம் தயாராக இருந்தது உண்மையில் தமிழகத்திற்குக் கேடு என்றுதான் சொல்ல வேண்டும். இது நன்றாகக் கை கொடுக்கவே, எதிரிகள் பல்வேறு பொய்களை, வதந்திகளைப் பரப்பி விட்டனர்.


திருட்டு ரயிலில் ஏறி வந்தவர், தெலுங்கர், ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணமானவர், காமராசருக்கு இறந்த பின்பு அவரைப் புதைக்க இடம் தராதவர், தமிழுக்கு ஒன்றுமே செய்யாதவர், ஈழ துரோகி, காவிரிப் பிரச்சினைக்கு ஒன்றும் செய்யாதவர், இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றியவர், ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர், விஞ்ஞான ஊழல் செய்பவர், மதுவை அறிமுகப்படுத்தியவர், கச்சத்தீவு விட்டுக் கொடுத்தவர், 2ஜி, என்று கணக்கற்ற பொய்களை அவர் மீது, அதன் வழியாகத் தி.மு.க மீது சுமத்தி, சமூகத்தில் பரவ விடுதல். இப்படிச் செய்வதால், கலைஞரின் பெயரை மக்கள் மத்தியில் கெடுக்க முடியும். திரும்பத் திரும்பச் சொல்வதால், இந்தப் பொய்களை ஆழமாக மக்கள் மனதில் விதைக்க முடியும். தி.மு.க மீதான அவதூறுகளாய் இவற்றை மாற்றி, ஆட்சிக்கு வர முடியாமல் தடுக்க முடியும்.


ஒரு கட்டத்தில் இந்த வன்மம் கலைஞரின் கொள்கை வாரிசுகளான ஸ்டாலின் அவர்களையும், கனிமொழி அவர்களையும் விட்டு வைக்கவில்லை. சமூக நீதி பேச அடுத்தத் தலைமுறை உருவாவதைக் கண்ட எதிரிகள், அவர்களையும் இந்தப் பொய், புரட்டுகளால் வீழ்த்த தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்த வன்மம் வளர்ந்து வளர்ந்து தனிப்பட்ட வாழ்க்கையை அநாகரிகமாக விமர்சிக்கும் அளவுக்குப் போயிற்று. கொலை முயற்சியும் இதில் அடக்கம். இது உட்சபட்ச வன்மம்.


இவையெல்லாம் உண்மையில் படிப்பதற்கு எளிதாகத் தெரியலாம். ஆனால் இத்தனை உளவியல் தாக்குதலைத் தாக்குப்பிடித்து, கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது என்பது எளிதான காரியம் அன்று. கலைஞரின் சூழல், தன் மீதான அவதூறுகளுக்குத் தானே பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஊடகத்துறையும் அவரின் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேச, எழுத முன் வரவில்லை என்பதே கசப்பான உண்மை.


இப்படிச் சுற்றிச் சுற்றி தன் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வகையான வன்மங்களையும் அவர் தன் புன்சிரிப்பாலேயே கடந்து சென்றார். ஏனெனில், அவருக்கு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில்தான் கவனம் இருந்தது. மக்கள் அவருக்கு அளித்த வாய்ப்புக் குறைவுதான். ஆனால் கிடைத்த காலத்திற்குள் அவர் செய்ய வேண்டிய வேலைகள் மலை போல் இருந்தன. உண்மை என்றேனும் ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்பது அவர் ஆழத் தெரிந்திருந்த நியதி. எனவே தேவையற்றதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தேவையானவற்றைச் செய்வதில்தான் அவர் கவனம் கொண்டிருந்தார்.


இத்தனை வன்மங்க்கொண்டு கலைஞர் மீதும், தி.மு.க மீதும் மாறி மாறி தீய தோற்றத்தை ஏற்படுத்த எதிரிகள் காலம் காலமாக முயன்று கொண்டே இருப்பது ஏன்? அதற்குக் காரணம் அவர்கள் ருசி கண்ட பூனைகள்.


நான் எதிரிகள் என்று குறிப்பிட்டது, நம் மண்ணில் சாதி என்னும் நிறுவனமயப்படுத்தப்பட்ட சுரண்டலை உருவாக்கி, ஏக போகமாக வாழ்ந்து வந்த பார்ப்பனர்களைத்தான். ஏனெனில், மிக நுணுக்கமாக, நம்மை அறியாமை இருளில் வைத்திருந்து, அதிகாரத்தையும், அதற்குத் தேவையான கல்வி மற்றும் அது சார்ந்த துறைகளையும் பயன்படுத்தித் தான் மட்டுமே பயன்படுத்தி, உடல் உழைப்பைச் சாராமல், மற்றவர்களைச் சுரண்டித் தின்ற கூட்டம் தான் அது. திராவிட இயக்கம் வீறு கொண்டு எழுந்து, திராவிட மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்துக் கொள்ள ஆரம்பித்தவுடன், அதன் வளர்ச்சியைத் தடுக்க அவர்கள் காலம் காலமாகச் செய்யும் முயற்சிகள்தான் அவர்களின் நம் மீதான வன்மத்தின் வெளிப்பாடு. ஏன் நாமும் முன்னுக்கு வர வேண்டும் என்று அவன் எண்ணவில்லை?


வராது. ஏனெனில் அவர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்த அதிகார ருசி அத்தகையது. அதைத்தான் மனுதர்மமாக அவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்துவிட்டனர். அதிகாரம் என்பது ஒரு போதை. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் அதற்கு அடிமையாகி விடுவோம். அப்படி ஒரு போதையில் தள்ளாடிய கூட்டம் தான் இந்த ஆரியக் கூட்டம். அத்தகைய அதிகாரத்தை நாம் அடைந்து விடக் கூடாது, கல்வி அறிவு பெற்று, சமூகச் சமநிலை அடைந்து விடக்கூடாது என்று மிக நுணுக்கமாக அவன் புகுத்திய கேவலமான அறிவுக்கொல்லி தான் இந்தச் சாதி. அதைப் பாதுகாக்க ஒரு மதம். அதைப் பாதுகாக்கக் கையாளாகாக் கடவுள்கள்.


அப்படிப் மக்களைப் பிரித்தவன், கல்வியை மட்டும் தனதாக்கிக் கொண்டான். ஏனெனில், கல்வி கிடைத்தால் அறிவு வளர்ந்து விடும். வளர்ந்தால் நாம் நம் உரிமைகளைக் கேட்போம் இல்லையா? அதிகாரத்திற்கு வந்து விடுவோம் இல்லையா? வந்து விட்டால் அவன் அனுபவித்த இடம் பறிபோகும் இல்லையா? பறிபோனால், அவன் உழைத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான் இல்லையா? அவன் அனுபவித்து வந்த அத்தனை வசதிகளும் அவன் கண் முன்னால் பறிபோவதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பான். எனவே தான் அதிகாரப் பரவலைத் தலையெடுக்க விடாமல் செய்யச் சமூக நீதி பேசும் இயக்கங்களைக் குறி வைத்துத் தாக்குகிறான். ஆட்சி அதிகாரத்துக்குள் நம்மை நுழைய விடாமல் செய்ய நம் தொடக்கக் கல்வியிலிருந்தே கை வைக்கிறான்.


எனவே தான், கலைஞரும் சரி, அவரின் முன்னோடிகளும் சரி, நம் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்று பெரு முயற்சியினையும், அதற்குத் தடையாக இருக்கும் மற்ற காரணிகளைக் களைந்தெடுக்கும் வேலையினையும் தொடர்ந்து செய்து வந்தனர். இந்தப் போராட்டம், வெறும் கல்வி சார்ந்தது மட்டுமல்ல. நீண்ட நெடிய பண்பாட்டுப் போராட்டம். அதில், நம் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம். திராவிடம் வெல்லும்.


நான் என் அறிவுக்கு எட்டியவரை எழுதியிருக்கும் இக்கட்டுரையின் சாரத்தை, கிட்டதட்ட நூறாண்டுகளுக்கு முன்னரே யோசித்துச் செயல்படுத்தி, இன்னும் நூறாண்டுகளுக்கு நடை போட வேண்டிய பாதையைக் காட்டி விட்டுச் சென்றிருக்கிறார்கள், திராவிட இயக்கத்தின் முக்கியமான மூவர். அம்மூவரில், என் சம காலத்தில், எனக்கு எளிதாக என் ஊரிலேயே கிடைத்த தொடக்கல்வி, நடுநிலைக் கல்வி, மேல் நிலைக் கல்வி, தொழிற்கல்வி அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து, என் வாழ்வில் அறிவொளி ஏற்றி வைத்து, என்னையும் என் குடும்பத்தையும் சுய மரியாதையுடன், வாழ வைத்துக் கொண்டிருக்கும் கலைஞருக்கும், அவரின் முன்னோடிகளான பேரறிஞருக்கும், பெரியாருக்கும் இக்கட்டுரையை எழுதுவதன் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தனசேகர். மா
திரைப்படங்களை தி.மு. கழகம், நாத்திகப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாம்! 'சோ' தான் சொல்லுகிறார்!


அண்ணா எழுதிய வேலைக்காரி படத்தில் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கருத்து தான் வலியுறுத்தப்பட்டது!


"கோவில் கூடாதென்பதல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது" என்றுதான் பராசக்தி படத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது!


"ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!" என்று முழங்கிய முண்டாசுக்கவிஞர் பாரதியை ஏற்றுக்கொள்வார்களாம் - "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என உரைத்திடும் தி.மு.க வினர் நாத்திகர்களாம்! பெரியாரும் அண்ணாவும் செய்த நாத்தீகப் பிரச்சாரத்தால்தான் மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறிவிட்டார்களாம்!


மீனாட்சிபுரத்தில் மதம் மாறியவர்கள் எம்மதத்திற்குச் சென்றுள்ளனர்? அல்லாவைத் தொழுகின்ற முஸ்லீம் மதத்திற்குத்தானே சென்றிருக்கிறார்கள்? அந்த மதம் என்ன "நாத்திக மதம்" என்று நண்பர் சோ அவர்கள் வாதிடுகிறாரா?


- தலைவர் கலைஞர்

No comments:

Post a Comment