Saturday 30 January 2021

கலைஞரின் உணவு சுயமரியாதை அரசியல் - ஜெ. ஜெயரஞ்சன்

 கலைஞரின் உணவு சுயமரியாதை அரசியல் - ஜெ. ஜெயரஞ்சன்  


திமுக 1967க்குப் பின் பல திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தியது. அண்ணாவின் மறைவிற்குப் பின் முதல்வரான கலைஞர் இதனைப் பல தளங்களிலும் மிக நுட்பமாகச் செயல்படுத்தினார். போக்குவரத்து, மின் வசதி, கல்வி, இட ஒதுக்கீடு, மகளிர் நலன், ஒடுக்கப்பட்டோர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோர்நலன், நிலச் சீர்திருத்தம் என பல துறைகளில் இந்த சுயமரியாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.


இதனை நுட்பமாக உற்றுநோக்க நாம் ஒரு துறையை எடுத்துக் கொள்வோம்.


உணவும் சமூக அநீதியும்


தமிழகத்தில் 50-60 ஆண்டுகள் முன்பு வரை மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் ஊரகப் பகுதிகளில் வாழ்ந்தனர். பெரும்பான்மையானோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். பெரும்பாலானவர்களிடம் நிலமில்லை.


நிலம் வைத்திருந்தோரை அண்டித்தான் இந்த நிலமற்றவர்கள் பிழைத்தனர். நிலம் மேல் சாதிக்காரர்களிடம் குவிந்திருந்தது. பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் இவர்களிடம் வேலை செய்துதான் வயிற்றைக் கழுவினர். சாதிய அடுக்குமுறையும், நில உடைமையும் இணைந்து செயல்பட்டதால் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் உணவுத் தேவைக்காக அன்றாட அவமானங்களைச் சுமந்து வாழ்ந்தனர். வேறு வேலை கிடைப்பதும் அரிது.


வறுமையும் வாட்ட, இழிநிலைக்கிடையேதான் அவர்கள் வாழ்க்கை நடந்தது. வேளாண் உற்பத்திக்குத் தேவையான மனித உழைப்பைப் பெற தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் நில உடைமையாளர்கள் அவர்களை வைத்திருந்தனர். அவர்கள் மனது வைத்தால்தான் நிலமற்றவர்களின் வீடுகளில் அடுப்பெரியும் என்பதுதான் நெடுங்காலம் நிலவிய நிலை. அதுமட்டுமல்ல, உழைப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட கூலி (அது தானியமாக இருந்தாலும் பணமாக இருந்தாலும்) அவர்களின் உணவுக்கு எவ்வளவு தேவையோ அதே அளவில்தான் நெடுங்காலம் தொடர்ந்ததை ஆய்வுகள் துல்லியமாக படம்பிடித்துள்ளன. இத்தகைய சூழலில் நிலமற்றோர் நில உடைமையாளர்களை எந்த அளவிற்கு சார்ந்து இருந்திருப்பார்கள்? அன்றாட உணவே நில உடைமையாளர்களை நம்பித்தான் என்றால் சாதிய படிநிலையும், நில உடைமையும், நில உடைமையாளர்களின் அதிகாரமும் எவ்வளவு வலுவுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும்? இந்த அமைப்பில் உழைக்கும் மக்களின் சுயமரியாதை என்னவாக இருந்திருக்கும்?


உழைக்கும் மக்கள் இந்த அவமானங்களிலிருந்தும், ஒடுக்குமுறைகளிலிருந்தும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தப்பிக்க பெருமுயற்சி செய்துள்ளனர். அப்படி நிகழ்ந்ததுதான் பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் வெளிநாடுகளுக்கான இடப் பெயர்ச்சி. இலங்கைக்கும், மலேசியாவுக்கும், மொரீசியசுக்கும் தோட்டங்களில் வேலை செய்ய ஓடினார்கள். ஓடியதால் என்ன விடிவு கிடைத்திருக்கும்? ஒடுக்கப்பட்டவர்களில் பலர் மதம் மாறியும் பார்த்தனர். பெரும் அளவிலான விடுதலை ஒன்றும் கிடைக்கவில்லை. உணவின் மீதான நில உடைமையாளர்களின் பிடி தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்தப் பிடி தளர்ந்தால் மட்டுமே அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு ஆட்டம் காணும். உழைக்கும் மக்களுக்கு சமூகநீதி கிடைத்து அவர்கள் சுய மரியாதை பெறுவர்.


தமிழக அளவில் இதனைச் சாத்தியமாக்கியவர் கலைஞர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட்டபோது நகர்ப்புறங்களில் ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நகர்ப்புறங்களில் மட்டும் சிறிய அளவில் பொது விநியோகம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலை 1970களின் தொடக்கம் வரை தொடர்ந்தது. 1967 தேர்தலை சந்தித்த திமுக, ரூபாய்க்கு மூன்று படி என்ற திட்டத்தை முன்வைத்தது. ஆட்சிக்கு வந்தபின் அதற்கான நிதி, தானியம், கட்டமைப்பு போன்ற எதுவும் இல்லை என்பதை உணர்ந்தது. சிறிய அளவில் செயல்பட்ட அரிசி திட்டமும் சென்னை, கோவை நகரங்களில் மட்டுமே நிகழ்ந்தது. ஊரகப் பகுதிகளில் பொதுவிநியோகம் என்ற ஒன்றே இல்லை. பஞ்சமோ, வறட்சியோ கிராமப் புறங்கள் கண்டுகொள்ளப்பட்டதில்லை. உணவுப் பற்றாக்குறை நகரங்களுக்கானது என்றே அதுவரை கருதப்பட்டது. பசுமைப் புரட்சி தோன்றிய தருவாயில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட கோதுமையையும், அரிசியையும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்க இந்திய உணவுக் கழகம் 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சேமித்து வைக்கப்பட்ட உணவு தானியத்தை மாநிலங்களுக்கு விநியோகிக்க எந்த கொள்கையையும் ஒன்றிய அரசு கொண்டிருக்கவில்லை. மாறாக தன் விருப்பம்போல் அதனை மாநிலங்களுக்கு அளித்து வந்தது. இதன் விளைவாக தானிய விநியோகம் ஒரு அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசிடம் வந்து சேர்ந்தது. பிற நாடுகளின் கையை எதிர்பார்த்தால் உணவு ஒரு அரசியல் ஆயுதமாகிவிடும் என்பதை உணர்ந்த ஒன்றிய அரசு பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது. ஆனால் அதே ஒன்றிய அரசு உணவு தானிய விநியோகத்தை ஒரு ஆயுதமாக வெகுகாலம் பயன்படுத்தியது.


நுகர்பொருள் வாணிபக் கழகம்

1969ஆம் ஆண்டில் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட, முதல்வராகக் கலைஞர்

முதன்முறையாக டெல்லி சென்றபோது அவரது முக்கிய வேண்டுகோள் அரிசி வேண்டும் என்பதே. அப்போதைய உணவு அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் கலைஞர் மீது இருந்த அன்பினால் முதல் தவணையாக 20,000 டன்னும், இரண்டாம் தவணையாக 10,000 டன்னும் அளித்தார். அதன்பின்னர் எப்போது உணவு தேவைப்பட்டாலும் ஒன்றிய அரசிடம் பிச்சை எடுப்பது போன்ற சூழல் நிகழ்ந்துகொண்டே வந்தது. குறிப்பாக, 1971 தேர்தலில் திமுக பெருவெற்றி பெற்று கலைஞர் மீண்டும் முதல்வரானதும் ஒன்றிய அரசு கையிலெடுத்த ஆயுதம் உணவுதான். எப்போது தமிழகம் உணவு வேண்டும் என கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய அரசு செவிகளை மூடிக்கொள்ளும். இந்த அரசியலை சமாளிக்கும் வண்ணம் கலைஞர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினை 1972ஆம் ஆண்டில் உருவாக்கினார்.


அதே சமயத்தில் இத்தகைய அமைப்புகள் கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும் தோன்றின. ஆனால், தமிழகத்தில் வாணிபக் கழகத்துக்கு வேறு உருவம் கொடுத்தார் கலைஞர். இந்திய உணவுக் கழகம் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருந்ததோ அதே வகையில் நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி கொள்முதல் நிலையங்கள், அதனை சேமித்து வைக்கக் கிடங்குகள், நெல்லை அரிசியாக்க நவீன ஆலைகள் என அனைத்துக் கண்ணிகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. ஓரிரு ஆண்டுகளிலேயே இந்திய உணவுக் கழகம் செயல்பட்ட அளவுக்கு தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகமும் துவங்கியது. வாணிபக் கழகம் துவங்கப்பட்டபோது துவங்கப்பட்ட கர்நாடக, ஆந்திர அமைப்புகளின் வளர்ச்சியைவிட தமிழக அமைப்பின் உருவானது. நெல்லை கொள்முதல் செய்வதற்கு வளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் 10 மடங்கு கூடுதலாக இருந்தது. ஆனால் இதோடு மட்டும் அரசின் முயற்சி நின்றுவிடவில்லை.


கொள்முதல் செய்து சேமித்து வைக்கப்பட்ட தானியங்கள் தேவைப்படுவோரின் தட்டுகளுக்கு சென்றடைந்தால்தான் நோக்கம் நிறைவேறும். இதற்காக வாணிபக் கழகம் விற்பனை நிலையங்களை திறக்குமாறு பணிக்கப்பட்டது.


1974ஆம் ஆண்டு கலைஞர் பொது விநியோக முறையில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கினார். அதுவரையில் நகர்ப்புறங்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்ட நிலையை மாற்றி மாநிலத்தின் ஊரகப் பகுதிகளுக்கும் பொது விநியோகத்தை விரிவுபடுத்தினார். இதனைச் செயல்படுத்த சில்லறை விநியோகக் கடைகளைத் திறந்தது மட்டுமின்றி ஊரகம், நகர்ப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் இருந்த குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. இந்தக் கொள்கை முடிவுதான் அரிசியின் அரசியலை சமூக நீதி செயல்பாடாக மாற்றியமைத்தது.


அரிசிக்கு நில உடைமையாளர்களை நம்பியிருந்த நிலையைத் தகர்க்க வைக்கப்பட்ட முதல் புள்ளி இதுதான். ஊரகத்திலிருப்போருக்கும் பொது விநியோகம் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் சுயமரியாதையை சிந்திக்காதவர்களிடம் ஏற்பட வாய்ப்பே இல்லை.


சமூக அநீதியும்‌, அதன்‌ வழித்‌ தோன்றலான இழி நிலையும்‌ மாறின. உணவு கிட்டாமை என்னும்‌ தளை அறுந்ததால்‌ மக்கள்‌ புதிய பாதையில்‌ பயணிக்கத்‌ தொடங்கினர்‌. இன்று தமிழகத்தின்‌ ஊரகம்‌ ஒரு வேளாண்‌ சமூகமாக இல்லாமல்‌ அதிவிரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. வேளாண்மையை மட்டுமே தொழிலாகக்‌ கொண்டவர்களின்‌ எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்‌ குறைவு. ஒற்றை இலக்க விழுக்காடாக அது சுருங்கிப்போனது. இந்த மாற்றத்தின்‌ காரணகர்த்தா கலைஞர்‌. பொருளாதார தளத்தில்‌ ஏற்பட்ட மாற்றங்கள்‌ ஒருபுறம்‌ இருக்கட்டும்‌.


நில உடைமையாளர்களின்‌ கைகளில்‌ இருந்துவந்த உணவு என்ற பேராயுதத்தைப்‌ பறித்து அதிகார மாற்றத்தை விளைவித்ததும்‌ சாமானியர்களின்‌ சுயமரியாதையை மீட்டதும்‌ சமூக நீதி எனும்‌ நெடும்பயணத்தில்‌ ஒரு குறிப்பிடத்தக்க படிநிலை அல்லவா? 


- ஜெ. ஜெயரஞ்சன் (நன்றி: ஒரு மனிதன் ஒரு இயக்கம்)

No comments:

Post a Comment