Saturday 30 January 2021

தமிழகத்தின் ஓய்வறியா சூரியன் கலைஞர். - சுமதி தியாகராஜன்

 தமிழகத்தின் ஓய்வறியா சூரியன் கலைஞர். -  சுமதி தியாகராஜன்


ள்ளி காலங்களில் ஒவ்வொரு விடுமுறைக்கும் அப்பா அம்மா ஏதாவது ஒரு சொந்தக்காரர் ஊருக்கு அழைத்து சென்று விடுவார்கள். பெரும்பாலும் கோவைக்கு தான் செல்லுவோம். அம்மாவின் ஊர். அதை தவிர அமரபூண்டி (பழனி) , திருப்பூர், காரத்தொழுவு (உடுமலை) என்று செல்லுவோம். நான் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது அப்பா வெள்ளை அம்பாஸடோர் கார் வாங்கினார். வாங்கிய பொழுதில் குடும்பமாக சில கோவில்களுக்கும், வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கும் சென்றும். அதை தவிர எப்போதாவது தான் காரில் அழைத்து செல்வார்கள். அதுவும் கூட கார் சும்மாவே நின்றால் பழுதாகிவிடும் என்று. பிறகு அப்பா அந்த காரையும் விற்றுவிட்டார். அதன் பிறகு இன்று வரையில் எங்கள் வீட்டில் கார் வாங்கவேயில்லை.நான் மேற்படிப்பு முடித்ததும் அப்பா கார் வாங்கிக்கொள்ள சொன்ன போது வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். ஏனென்றால் வீட்டில் காரை நிறுத்த இடமில்லை. பக்கத்தில் எங்காவது இடம் வாடகைக்கு எடுத்து அங்கு நிறுத்திவிட்டு வீட்டுக்கு நடந்து வர வேண்டும். மேலும் என்னிடம் இரு சக்கர வாகனம் இருந்தது. அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. கார் என்பது வெறும் ஸ்டேடஸ் சிம்பல் தான். அத்தியாவசியம் இல்லை.


உள்ளூருக்கு இருசக்கர வாகனம் சரி, வெளியூர்களுக்கு ? அதற்கு பேருந்து வசதி இருந்தது. அப்பாவை பொறுத்த வரை பகலில் பயணம் செய்வது கால விரயம். இரவில் பயணம் செய்தால் தூங்கும் நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடலாம்.அப்பாவுடன் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் தூக்கம் கெட்டு தான் செல்ல வேண்டும் என்று அனைவர்க்கும் தெரியும். அந்த பயணம் தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் பொருந்தும். தமிழ்நாட்டை தாண்டினால் தமிழ்நாட்டில் இருக்கும் அளவிற்கு பேருந்து வசதிகள் இருக்காது என்பது மட்டுமில்லை , தமிழகத்துடன் ஒப்பிட்டால் மற்ற மாநிலங்களின் பேருந்துகளின் இருக்கைகளும் , ஜன்னல்களும் சிறியவையாக இருக்கும். திருப்பதியில் , குருவாயூரிலும் பேருந்தில் சென்ற அனுபவம் உள்ளது. தெற்கு மாநிலங்களிலேயே இப்படித்தான் என்றால் வாட மாநிலங்களில் கேட்கவே வேண்டாம். அதுவும் திருச்சியில் விடிய விடிய பயணம் செய்யலாம். இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை முக்கிய இடங்களாகிய ஸ்ரீரங்கம் , சத்திரம் பேருந்து நிலையம் , ஜங்ஷனை இணைக்கும் பேருந்துகள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதனாலோ என்னவோ எங்கள் வீட்டில் கார் வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் போய்விட்டது.


பெரு நகரங்கள் , சிறு நகரங்கள் என்றில்லை, குக்ராமத்திற்கு கூட பேருந்து வசதிகள் உண்டு. அப்பாவின் மாமாவின் ஊர் அமரபூண்டி. பழனி - திண்டுக்கல் வழியில் ஆயக்குடியின் உள் செல்ல வேண்டும். பாட்டியின் அண்ணன் ஒருவர் ஆயக்குடியில் இருந்தார். அது அமரபூண்டியையும் தாண்டி உள் செல்ல வேண்டும். கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்பதை தவிர நான்கு மணி நேரத்துக்கு அங்கும் ஒரு பேருந்து செல்லும். இதெல்லாம் மற்ற மாநிலங்களில் சாத்தியமா என்றால் விதிவிலக்கான ஊர்களை தவிர , சரியான சாலை வசதி கூட உள்ளதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் சாலை மற்றும் பேருந்துகள் அனைத்தும் மாநில பட்டியலில் வருபவை. அப்போது இவ்வளவு சாலை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகளை எந்த ஆட்சி கொடுத்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தால் மலைப்பு மட்டுமே மிச்சமாக இருக்கிறது. பல முக்கிய , எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்கள் என்றால் அதில்  95% கலைஞர் ஆட்சியில் நடைமுறை படுத்துவது போல் , இதிலும் கலைஞரின் பங்கே தலை நிமிர்ந்து நிற்கிறது. 


தமிழகத்தின் முதல் பேருந்து 1947 வாக்கில்  இயக்கப்பட்டது. கோவை மற்றும் பழனிக்கு பொள்ளாச்சி வழியே இயக்கப்பட்டது. GD நாயுடு கடனாக வாங்கி அந்த பேருந்தை இயக்கினார். அவர் ஊர் கோவை என்பதால் கோவையில் இருத்து இயக்கப்பட்டது. காலப்போக்கில் டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் பேருந்து தொழிலில் கோலோச்சியது. அதெல்லாம் திமுகவின் முதல் ஆட்சி காலம் வரையில் தான். 1967ல் அண்ணா பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமையாக்கினார். அதனை தொடர்ந்து ஆட்சியில் அரியணை ஏறிய அண்ணாவின் தம்பி கலைஞர் 3500 தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார். மேலும் பல அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டன. கலைஞரின் எதிரி கூட அவரை பாராட்டுவதென்றால் அது கலைஞரின் நிர்வாக திறமையை தான். அதனைப்படி பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கிய கையோடு போக்குவரத்துக்கு கலகங்களை உருவாக்கினார். முதலில் பல்லவன் , சேரன் , சோழன் , பாண்டியன் எனவும் பின்னர் தலைவர்கள் பெயர்களிலும் பெயர் மாறி மாறி அமைக்கப்பட்டாலும், நிர்வாகம் மிக சிறப்பாக இருந்தது. எவ்வளவு சிறப்பென்றால், போக்குவரத்துக்கு துறையில் வந்த வருமானத்தில் ஒரு பொறியியல் கல்லூரி , ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் 3 பொலிடெக்னிக்குகள் உருவாக்கப்பட்டன. குறைந்த அளவு பெருந்துகளாக துவங்கப்பட்ட போக்குவரத்துக்கு கழகம் பின்னர் 18000 பேருந்துகள் வரை இயக்கியது. இது எதை காட்டுகிறது என்றால் மக்களுக்கு பேருந்தின் தேவையை உணர்த்துகிறது. குக்கிராமத்தில் இருக்கும் விவசாயியும் மாணவரும் டவுனுக்கு தினமும் குறைந்த செலவில் செல்லலாம். அதிலும் மாணவர்கள் இலவச பஸ் பாசில் சென்று படிக்கலாம். 


இன்றைய தேதியில் 24000 பேருந்துகள் அரசால் இயக்க படுகிறது. இதில் 15000 பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. அந்த 15000 பேருந்துகளை மீள்மற்றம் செய்வதற்கு கூட நிதியில்லாமல் கடனில் தத்தளிக்கிறது. கேட்டால் திமுக ஆட்சியில் நடந்த சீர்கேடு என்கிறார்கள். 2011ல் திமுக ஆட்சியை இழக்கும் பொழுது இருந்த கடன் ரூ 3392.15 கோடி . அது இப்போது ஆலமரமாய் வளர்ந்து ரூ 35000 கோடியில் நிற்கிறது. திமுகவின் ஆட்சியில் ஏற்பட்ட கடனை கூட திமுகவின் நிர்வாகம் என்று கூற முடியாது. ஏனென்றால் திமுகவை விட அதிமுக தான் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது. கலைஞர் கொண்டுவந்த பல திட்டங்களை செல்வி ஜெயலலிதா கிடப்பில் போட்டதை பலமுறை தமிழ்நாடு பார்த்திருக்கிறது.


சரி , கலைஞர் பேருந்துகளை நாட்டுடைமை ஆகிவிட்டால் போதுமா. அத்தனை பேருந்துகளையும் எங்கு நிறுத்துவது , எப்படி பராமரிப்பது, இவற்றையெல்லாம் விட , எங்கு இயக்குவது. பல இடங்களிலும் பணியிடமனைகள், போக்குவரத்துக்கு துறை வருமானத்தில் உருவாக்கப்பட்டன. ஒரு கிராமத்தில் 1500 பேருக்கு மேல் இருந்தால் அங்கு தார் சாலை வசதி செய்யப்பட்டது. மக்கள் தொகை அதிகமாக, அனைத்து தர மக்களும் பேருந்தை பயன்படுத்த, சிற்றுந்து அறிமுகமாகியது கலைஞர் ஆட்சியில் தான். அதுவரை பேருந்து வசதி இல்லாத பல கிராமங்களுக்கும் சிற்றுந்து ஒரு வரப்ரசாதமாகவே அமைந்தது. கலைஞர் அறிமுகப்படுத்திய சிற்றுந்துக்கு மஞ்சள் வண்ணம் அடித்து அழகு பார்த்தது தான் அதிமுக ஆட்சியின் ஒரே சாதனை.


விடுதலை அடைந்து திமுக ஆட்சியில் வரும் வரை காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் 50. இது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலம் உட்பட. திமுகவின் முதல் 7 ஆண்டுகளில் மட்டும் கட்டப்பட்ட பாலங்கள் 80. 1996 - 2001 கலைஞர் ஆட்சியில்  247 பாலங்கள் கட்டப்பட்டன. ஆட்சி முடியும் தருவாயில் மேலும் 200 பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தது. இவைதவிர பல தமிழகமெங்கும் முக்கியமாக சென்னை போக்குவரத்துக்கு நெரிசலை சமாளிக்க பல புதிய முக்கியமான மேம்பாலங்கள் கலைஞர் ஆட்சியில்தான் கட்டப்பட்டது. அதில் கத்திப்பாரா மேம்பாலம் உலகத்தரம் வாய்ந்தது. சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டிய ஒரே அரசு திமுக தான்.


2006 ஆம் ஆண்டில் கலைஞர் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தார். அது ரூ 14600 கோடியில் 45 கிமீ தூர திட்டம். சென்னை நெரிசலை குறைப்பதற்காக கலைஞர் அறிவித்த திட்டம். இதற்காக 'சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்' என்ற நிறுவனத்தை அரசு உருவாக்கியது. அதன் பின்னர் மத்திய மாநில அரசு நிதி 41 % , ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவ முகமையின் நிதி 59%  என்று ஒப்பந்தம் போடப்பட்டு , 2009 கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது. இது இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து இரண்டாவது பெரிய மெட்ரோ சேவையாகும்.


நெடுஞ்சாலைத்துறை உருவகம் , போக்குவரத்துக்கு தொழிலாளாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லா மக்களுக்காகவும் சிந்திக்கும் தலைவர்கள் மிக குறைவே. அதிலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி கொடுத்தவர் கலைஞர். தமிழகத்தின் ஓய்வறியா சூரியன் கலைஞர். 


- சுமதி தியாகராஜன்


கடவுள் கொள்கைகையில் தந்தை பெரியார் மிகவும் தீவிரவாதி! கடவுளே இல்லை என்று மறுப்பவர்!


உண்டென்பார் சிலர், இல்லையென்பார் சிலர், எனக்கில்லை கடவுள் கவலை எனப்பாடியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.


'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் கொள்கையே தி.மு. கழகத்தின் கடவுட்கொள்கையென அறிவித்தவர் அண்ணா.


ஆதிக்கப் பெரியோர் கூடியதோர் அவையில் எண்ணெய் பற்றிக் குறிப்பிட்ட பண்டாரசன்னதிகள் ஒருவர், "கருணாநிதி அவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றாலும், கடவுள் காரியங்களுக்கு அவர் ஆட்சி குறுக்கே நிற்கவில்லை" என்றார். அதற்கு விடையளித்த நான்,"கடவுளை நாம் ஏற்றுக்கொள்வது பெரிதல்ல; கடவுள் நம்மை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நாம் நடக்கிறோமா என்பதுதான் முக்கியம்" என்று சுட்டிக்காட்டினேன்.


ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற கவிதாகூரின் தத்துவதைத் தான் அறிஞர் அண்ணாவும், அவர் அமைத்த கழக அரசும் செயல்படுத்தியதை நினைவூட்டுகிறேன்.


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வடலூர் வள்ளலாரின் கருத்தாழமிக்க வரிகளை மறவாமல் - கடவுட் பணியென்பது என்னவென்று தெளிவாக உணர்ந்து காரியமாற்றியதுதான் கழக அரசு!


- தலைவர் கலைஞர் (1976 எழுதிய உடன்பிறப்பே கடிதத்தில் இருந்து)

No comments:

Post a Comment