Saturday 30 January 2021

கலைஞரும் மக்களாட்சியும் - தாமரை வில்கின்ஸன்

கலைஞரும் மக்களாட்சியும் - தாமரை வில்கின்ஸன்லைஞரின் திட்டங்கள், ஆளுமை, நிர்வாகத்திறன், மொழி ஆளுமை, என்று அவரது பன்முகத்தன்மையை விவாதிக்கும் போது அவரது மக்களாட்சி மீதான உறுதியான பற்று பற்றியும் கண்டிப்பாகப் பேசவேண்டும்.


என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் கூறி இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைமலை நகரில் வசித்து வந்த நான், எங்கள் ஊரின் மோசமான சாலைகளை விமர்சித்து நீண்ட, கடுமையான விமர்சனக் கடிதத்தை முதல்வர் கலைஞரின் வீட்டுக்கு அனுப்பினேன். கடிதம் அனுப்பி இரண்டு நாட்கள் இருந்திருக்கும். கிறிஸ்துமஸ் தினம், மதியம் நான் குட்டி தூக்கத்தில் இருந்தேன். திடீரென்று எனது அப்பா என்னை எழுப்பி “உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க” என்று கூறினார். வெளியே சென்ற நான் அதிர்ச்சி அடைந்தேன். அன்றைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. பொன்முடி நின்றிருந்தார். எனக்கு உடனே புரிந்து விட்டது! கூடவே பயமும் பதட்டமும் வந்துவிட்டது. அமைச்சர் திரு. பொன்முடி என்னிடம் “உங்க கடிதத்தை முதலமைச்சர் முழுக்க படித்தார். எங்க எல்லாருக்கும் ஃபேக்ஸ் அனுப்பினார்.  அவர் எழுதிய பதில் கடிதம் விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்” என்று கனிவுடன் கூறினார், நான் பிரமிப்போடு கவனித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் என்ன பேசினேன் என்று எனக்கு முழுமையாக ஞாபகமில்லை. ஆனால் அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியமும், பிரமிப்பும் இன்றும் எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. சாதாரண பொறியியல் கல்லூரி மாணவியான எனது கடிதத்தை மதித்து, அதுவும் கடுமையாக விமர்சித்து எழுதிய எனது கடிதத்தை முழுவதும் படித்து, ஓர் அமைச்சரை எனது வீட்டிற்கு அனுப்ப வேண்டிய தேவை என்ன? இளைய தலைமுறையைச் சேர்ந்த எனக்கு மக்களாட்சியின் மேல் ஏற்பட வேண்டிய நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் தான் முதல்வர் கலைஞர் அன்று அப்படி நடந்து கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு இரண்டு முறை அவருக்கு அரசியல் ரீதியான கடிதங்கள், முக்கியமாக திமுக மேற்கொண்டிருந்த சில அரசியல் முடிவுகளைப் பற்றி கடிதங்கள் எழுதியிருந்தேன். அவ்விரண்டு கடிதங்களுக்கும் கலைஞர் பதில் கடிதங்கள் உடனே அனுப்பினார். அதுவும் மறைமலைநகருக்கு அருகில் வசித்த ஒரு தலைமைச் செயலக ஊழியரிடம் கொடுத்தனுப்பினார். ஒரு மாநில முதல்வரான கலைஞருக்கு திமுகவின் உறுப்பினராகக் கூட இல்லாத எனது அரசியல் கருத்துகளுக்கு மதிப்பளித்து, கடிதங்களுக்குப் பதில் எழுத வேண்டிய அவசியமே இல்லை!! ஆனால் கலைஞர் மக்களாட்சித் தத்துவத்தின் மீது கொண்ட மாறாதப் பற்றினால் எனக்குப் பதில் எழுதி, அதன்மூலம் என்னைப் போன்ற இளைஞர்களும் அரசியல் பேசி, மக்களாட்சி தத்துவத்தை அரவணைக்க வேண்டும் என்ற உந்துதலை ஊட்டினார்.
“உங்களைச் சந்திக்க வேண்டும்” என்று ஒரு முறை கேட்டவுடனே சந்திக்கும் வாய்ப்பையும் கொடுத்தார். கலைஞரைச் சந்தித்த அந்தக் காலைப் பொழுது இன்றும் என் நினைவில் பசுமையாகத் தங்கியிருக்கிறது!


மக்களாட்சி தத்துவத்தை முன்னெடுக்கும் தலைவரானவர் தன்னுடைய கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எளியவர்களையும், இளைய தலைமுறையினரையும், கட்சி உறுப்பினர்களையும், செய்தித்துறை ஊடகவியலாளர்களையும் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்குக் கலைஞரின் வாழ்க்கை ஒரு பாடம்.அவரது ஆட்சியின் கீழ் தமிழகம் கருத்துச் சுதந்திரத்தின் மெக்காவாகத் திகழ்ந்தது. அவர் இருக்கும் மேடையிலேயே அவரை விமர்சித்துவிட்டு, எந்தவித பழிவாங்கலுக்கும் ஆளாகாமல் நிம்மதியாக வாழ முடிந்தது. அவர் ஆட்சியில் இருக்கும் போதுதான் மணிரத்னம் ‘இருவர்’ திரைப்படத்தை வெளியிட்டார். இவையெல்லாம் சிறு எடுத்துக்காட்டுகள்தான்.


திமுக ஆட்சியில் இருக்கும்போது, எப்பொழுதும் மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளி குறையாது பார்த்துக் கொள்ளப்படும். சாதாரண பொதுமக்களின் பிரச்சனைகளை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் உடனுக்குடன் கொண்டு செல்ல திமுகவின் மாவட்ட பிரதிநிதிகள் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரை எப்பொழுதும் கவனம் செலுத்துவர் என்பது நாம் அறிந்ததுதான். மக்கள் குறை கேட்கும் நாள் 1969-ல் திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டதுதான். இவ்வாறு பல்வேறு வகைகளில் மக்களின் குறைகளும், கோரிக்கைகளும் உடனுக்குடன் அரசின் கவனத்திற்குச் செல்லக் கலைஞர் வழிவகைகள் செய்து கொண்டே இருந்தார்.


ஆட்சியதிகாரத்தில் இல்லாத போது மேலும் வீரியமாக மக்களாட்சியின் மாண்புகளைக் காத்தார் கலைஞர். ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில்  எதிர்க்கட்சித் தலைவராகக் கலைஞர் சுட்டிக் காட்டிய குறைகளையும், கண்டனங்களையும், ஆளும் அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்த அவரின் அறிக்கைகளையும் எதிர்கொண்டு, அவர் காட்டிய திசையிலேயே எம்ஜியாரும், ஜெயலலிதாவும் பல கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.


முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்ல கட்சித் தலைவராகவும் கலைஞர் கட்டிக் காத்த உட்கட்சி ஜனநாயகம் இந்தியாவில் இருக்கும் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு முன்னுதாரணம். கலைஞர் தூக்கிப் பிடித்த மக்களாட்சி மாண்புகளை அவரது அமைச்சர்களும் கூடக் கட்டிக் காத்தார்கள் என்றே செல்லவேண்டும்.


மாநில சுயாட்சியின் பிதாமகனாக விளங்கிய கலைஞர் 1971-ம் ஆண்டு சமர்ப்பித்த ராஜ மன்னார் குழு அறிக்கை இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரி. இந்தியாவின் மாநிலங்களில் ஜனநாயகம் தழைத்து, அதிகாரப் பரவலாக்கல் மூலமே இந்திய மக்களாட்சியைப் பலப்படுத்த முடியும் என்ற நுட்பமான புரிதலும், தொலைநோக்கும் இந்தியத் தலைவர்களுள் அண்ணாவின் வழிவந்த கலைஞருக்கு மட்டுமே இருந்தது.


தேர்தல் வெற்றி தோல்விகளைக் கலைஞர் எதிர்கொண்ட விதமே அலாதியானது. திமுக வெற்றி பெற்ற போதும் சரி தோல்வியுற்ற போதும் சரி ஒரே மாதிரி உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார் என்பது அவரைப் பற்றிக் கூறப்படும் ஓர் ஆச்சரியமான அல்லது அதிசயமான செய்தி. தேர்தலில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் மக்களாட்சி தத்துவத்தின் ஒருபாகம் தான். வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும் சரி, எதிர்க்கட்சியாகச் செயல்பட்டாலும் சரி மக்களின் இன்ப துன்பங்களைக் கணக்கில் எடுத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை. அதற்கு உதவுவதே மக்களாட்சித் தத்துவத்தில் பங்கு கொண்டிருக்கும் கட்சிகளின் முக்கிய கடமை என்பதை ஆழமாகப் புரிந்து வைத்திருந்தார் கலைஞர். அதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு நூலிழையில் ஆட்சியதிகாரத்தைத் தவற விட்ட போதும் கலைஞர் முகத்தில் குழந்தையைப் போன்ற ஒரு சிரிப்பு குடிகொண்டிருந்தது.


அதுமட்டுமா மக்களாட்சியின் முக்கிய அங்கமாகத் திகழ வேண்டிய காட்சி/செய்தி ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரைக் கலைஞர் நடத்திய விதம் மிகவும் போற்றத்தக்கது. இப்பொழுதும் பழைய காணொளிகளில் நாம் காணும் போது கலைஞர் தன்னுடைய காரில் ஏறப் போகும் போது அருகில் ஒரு பத்திரிகையாளரைக் கண்டுவிட்டால் ஒரு நிமிடம் நின்று, அவரை பார்த்து அவர் ஏதேனும் கேள்வி கேட்டால் அவருக்குப் பதில் அளித்துவிட்டு, பின் தனது காரில் சென்று ஏறுவார்.  கலைஞர் தானே ஒரு பத்திரிகையாளர் என்ற காரணத்தினால் மக்களாட்சித் தத்துவத்தில் பத்திரிகையாளர்கள் எத்தனை பெரிய முக்கியமான அங்கம் வகிக்கிறார்கள் என்று முற்றிலும் உணர்ந்தவர்!! தமிழக ஊடகங்களும் இந்திய ஊடகங்களும்  திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கலைஞர் மற்றும் அவரது குடும்பத்தினரையும், திமுகவின் மற்ற தலைவர்களையும் எப்பொழுதுமே நியாயமாக நடத்தியதில்லை. ஏதேனும் ஒரு வகையில் திமுக மீதும் கலைஞர் மீதும் அளவுக்கு அதிகமான வன்மத்துடன் கூடிய அபத்தமான குற்றச்சாட்டுகள் வீசப்பட்டுக் கொண்டே இருந்தன. அவருக்கும், திரு. மு.க. ஸ்டாலினுக்கும் எதிராக மலினமான புரளிகளைப் பரப்பியதில் தமிழகத்தின் முன்னணி புலனாய்வு இதழ்களுக்குப் பெரும்பங்குண்டு. ஆனாலும் கலைஞர் ஊடகங்களை  மிகுந்த நியாய உணர்வோடு நடத்தியிருக்கிறார், ஊடகத் துறையினருக்குப் பல நன்மைகளைச் செய்து இருக்கிறார். மக்களாட்சித் தத்துவத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் செய்தித்துறை மற்றும் காட்சி ஊடகத் துறையினரைக் கலைஞர் அளவு யாரும் மதித்துப் போற்றியதில்லை என்று தைரியமாகக் கூறலாம்.


கலைஞர் வசித்த வீட்டை எடுத்துக் கொள்வோம். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் கோபாலபுரத்தில் அவர் வாழ்ந்த வீடு ஒரு சாதாரண street house என்று சொல்லப்படக்கூடிய வீதியைத் தொட்டு நின்றிருந்த வீடுதான். எனக்கு இன்றும் நினைவிருக்கிறது... 1996 ஆம் ஆண்டு திமுக பெருவெற்றி பெற்றது, அந்த வெற்றிச் செய்தி வந்தவுடன் நூற்றுக்கணக்கான மக்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து விட்டார்கள், வெற்றியைக் கொண்டாடுவதற்காக. அப்போது அவரது மகள் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லோரும் அந்த வீட்டில் இருக்கும்போதே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து திமுகவின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் என்று விகடனில் நான் படித்த செய்தி இன்றும் எனக்குப் பசுமையாக  நினைவிருக்கிறது. வேறு எந்தத் தலைவர்கள் வீட்டிற்குள்ளாவது பொதுமக்கள் இப்படிச் சாதாரணமாகப் புக  முடியுமா? எப்பொழுதும் மக்களுக்கு அருகிலேயே இருந்து கொண்டிருக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தைக் கலைஞர் தனது ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். மக்களிடமிருந்து விலகி பெரிய மதில் சுவரால் சூழப்பட்ட பங்களாவிலோ, அல்லது மலை வாசஸ்தலத்திலோ ஒளிந்து கொள்ளாமல் மக்களுக்கு எவ்வளவு அருகில் இருக்க முடியுமோ அவ்வளவு அருகிலிருந்து கொண்டே இருப்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தைப் போற்றும் ஒரு தலைவன் செய்யவேண்டியது. அதைத்தான் கலைஞர் தன் இறுதி மூச்சு வரை செய்தார்.


இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். தமிழக மக்களின் மேல் கொண்ட பேரன்பினால் கலைஞர் செயல்படுத்திய திட்டங்களும், செய்த சாதனைகளும் அளப்பரியன. அதற்கு அடித்தளமாக விளங்கியது மக்களாட்சித் தத்துவத்தை அவர் முழுமையாக உள்வாங்கி, போற்றிப் பாதுகாத்ததுதான்.


தமிழக மக்களின் நலன் காக்க ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் இன்றைய தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் ஏனைய திமுக தலைவர்கள் இந்த கோவிட்-19 காலத்தில் செய்த மக்கள் பணியை நாம் வியந்து பார்த்தும், பாராட்டியும் வருகிறோம். மக்களாட்சி தத்துவத்தின் சாரத்தை திமுகவின் அடுத்த தலைமுறைக்கும் கலைஞர் மிகச் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார். இன்று தலைவர் ஸ்டாலினும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை அயராது எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்.  கலைஞர் என்றென்றும் நம்மிடையே வாழ்வது அவர் கடைப்பிடித்த மக்களாட்சிப் பண்புகளை இன்று முன்னெடுக்கும் திராவிட இயக்கத்தவர் மூலமாகத்தான்!!!


No comments:

Post a Comment