Saturday 30 January 2021

பிராமணருக்கு எதிரியா…? - பிரேம் முருகன்

பிராமணருக்கு எதிரியா…? - பிரேம் முருகன்      

பிராமணர்களுக்கு திராவிடர்களும், கழகத்தவரும், பெரியாரியம் பேசுவோரும் எதிரானவர்கள் என்றப் பிரச்சாரம் பல நாட்களாகவே இருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் இதனை எதார்த்தமாக மாற்றிவிட்டனர். குறிப்பாக கலைஞரும் பிராமணர்களும் என்று வரும் பொழுது இந்தக் கட்டுக்கதைப் பிரச்சாரம் இன்னும் அதிகம் எனலாம் அதற்கு பிராமணர்கள் வாதங்களில் எடுத்து வைக்கும் முதல் புள்ளி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட வரையறை தான். 

என்னைப் பொறுத்த வரை இந்தக் கருத்து அவாளுக்குள் இருக்கும் ஒரு சாராரைச் சாடும் வன்மமாகவும், தர்மம் எனும் பிம்பத்தை முன்கட்டி அவர்களை கட்டிப்போடுவதுமாகத் தான் இருக்கின்றது. இதனை விசால பார்வையுடன் நோக்கினால், பிராமணருக்குள் வரையறுக்கப்பட்டுள்ள குறிப்புகள்

  சைவர்கள்

  வைணவர்கள்

இந்த இருபெரும் பிரிவுகளில் பெரும்பாலும் பிரச்சனைகள் வைணவர்கள் மத்தியில் எழுவதில்லை. இருவரும் பூசைகள் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். ராமானுஜம் என்ற மாமனிதனின் போராட்டம் எனலாம். ஆனால் அங்கு எழும் மிக முக்கியப் பிரச்சனை என்னவென்றால் ‘பாசுரம் பாடுவது’ தான். வருடம் தவறாமல் வரும் செய்திகளில் ஒன்று ‘பாசுரம் பாடுவதில் வடகலைக்கும் தெங்கலைக்கும் மோதல்’. இதைத் தாண்டி அவர்களுக்குப் பிரச்சனை எதுவுமில்லை.

இங்கு பெரும் பிரச்சனைக்குக் காரணம் சைவர்களிடத்தில் தான். ஐந்து உட்பிரிவு கொண்ட சைவர்களிடத்தில் சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜை செய்ய so called வேதங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிற நான்குக் குழுவினர் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு என்று சமையல் செய்வது, நந்தவனம் பராமரிப்பது போல் நான்கு வேலைகள் உள்ளன. கலைஞர் கொண்டு வந்த இந்தச் சட்டத்தின் மூலம் அவர்களும் கருவறைக்குள் சென்று பூஜைகள் செய்ய வழிவகுத்தது. ஆனால் இங்கு நடக்கும் வெறுப்பரசியல் காரணமாக இதனை மறைத்து அவர்களை அவாக்களே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். நூலைத் தாண்டி வஞ்சிக்கும் மனம் நிறைந்து தான் உள்ளது.

இதில் கலைஞரை வெறுப்பரசியலுக்குள் உட்படுத்துவது எப்படியென்றுத் தெரியவில்லை.

அதுபோன்றே அடுத்த வாதப் புரட்டு- இட ஒதுக்கீடு, மானியத்தில் வஞ்சனை

இட ஒதுக்கீடுக்கும் மாநில அரசுக்குமான சம்மந்தம் எந்த அளவுக்கு என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல, ஒரு சமூகத்தின் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, கொடுப்பது தான் இட ஒதுக்கீடு. சமூகம் முழுமையின் முன்னேற்றத்தைத் தான் கணக்கிட முடியுமே தவிர அதில் பார்சியாலிட்டி பார்த்துத் தருவது பொருளாதார ஒதுக்கீடாக வருமே தவிர சமூக இட ஒதுக்கீடாக வராது. தமிழகத்துக்கு 3% என்பது ஏற்றதாகவும் தான் இருக்கின்றது. இதில் இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி சமன் செய்யும் நோக்கில் தான் மானியம் முதலான சன்மானங்கள் வழங்குகின்றது அரசாங்கம். 

முதல் தலைமுறைப் பட்டதாரி ஊக்கத்தொகை வழங்கியதில் 3% மக்களும் அதிகம் பயன்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று இன்னும் பல மானியங்கள் கலைஞர் காலத்தில் பாரபட்சமின்றி வந்துள்ளது. தமிழகத்தின் பிராமணர்களுக்கு எதிரானவர்களுக்கு எதிரானவர்கள் யாருமில்லை; பார்ப்பணர்களுக்கு எதிரானவர்கள் தான் இருக்கின்றனர். அதற்கு உதரணங்களாகப் பல அரசு உயர் அதிகாரிகள் கலைஞர் காலத்தில் இருந்தது துவங்கி, திராவிடத்தை ஆதரிப்போர், மரியாதைக்குரிய ஐராவதம் மகாதேவன் போன்ற பெருமக்கள் கொண்டாடிக் கொண்டே இருப்பது தான்.

- பிரேம் முருகன்      


நாட்டின் அரசியலமைப்புச் சட்ட விற்பன்னர்களில் ஒருவரான பாலி நாரிமன் கூறுகிறார்: "பிரதேசப் பகுதிகள் அதிக வலிமை பெறாமலிருப்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுவதாகவே இந்தியாவின் கூட்டாட்சி அமைந்தது. சம்பத்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலேயே எந்தவொரு மாநிலத்தின் எல்லைகளையும் திருத்தியமைக்கவும், பெயரை மாற்றவும், புதிய மாநிலங்களை உருவாக்கவும், அல்லது தற்போதுள்ள மாநிலங்களை மாற்றியமைக்கவும் மத்திய அரசுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு அதிகாரம் வழங்கியது. இவ்வாறு அபரிதிமான அதிகாரத்தை மத்திய அரசிடம் கொடுத்ததன் விளைவாக, மாநிலங்கள் அதிகாரமற்ற உணர்வுடன் செயல்பட்டன. இது கூட்டாட்சியின் கட்டமைப்புக்கோ அல்லது உணர்வுக்கோ எந்த வகையிலும் உத்தரவாதம் தருவதாக அமையவில்லை!" கூட்டாட்சி அமைப்பையும் உணர்வையும் எப்படி நாம் பலப்படுத்தப்போகிறோம்? இந்தக்கேள்வி எழும்போதெல்லாம் எங்களுக்குத் தமிழ்நாடும் திராவிட இயக்கமும் நினைவுக்கு வரும். கூடவே கருணாநிதியும் நினைவுக்கு வருவார்!


- பிரதீப் பாஞ்சுபாம் (மணிப்பூரை சேர்ந்த ஊடகவியலாளர்)

No comments:

Post a Comment