Saturday 30 January 2021

வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் - ஆர்.கே. ராதாகிருஷ்ணன்


வாக்குறுதியை அரசு ஆணையாக மாற்றுவது எளிமையான காரியம் அல்ல. அரசுத் துறையின் கீழ்மட்ட நிலையாகக் கருதப்படும் ஒரு பிரிவில் இதற்கான வரைவு கோப்பாகத் தயாரிக்கப்பட வேண்டும். கோப்பு ஒவ்வொரு மேசையாக நகரும். பல்வேறு திருத்தங்கள், மாற்றங்களுக்குப் பிறகு சம்மந்தப்பட்ட துறையின் செயலரிடமும், அமைச்சரிடமும் கோப்பு வந்து சேரும். நிறைவாக அரசு ஆணைக்காகக் கேபினெட் மற்றும் சட்டமன்ற ஒப்புதலுக்குக் கோப்பு அனுப்பி வைக்கப்படும்.


இந்த நடைமுறை காலங்கடந்து நிலைத்து நிற்பதுடன், இந்திய நிர்வாகத்தின் அடிப்படையாகவும்) விளங்குகிறது. எனினும் இதிலுள்ள ஒரே பிரச்சினை கோப்பு மெதுவாக ஆமைவேகத்தில் நகர்வதுடன், ஒவ்வொரு கட்டத்திலும் திருத்தங்கள் நீக்கங்கள், சேர்த்தல்கள் செய்யப்படும். மேலும் அவ்வப்போது பல எழுப்பப்படும், தெளிவுகள் கோரப்படும். பல வினாக்களும் இந்த நடைமுறையில் அரசு அதிகாரிகளைக் குறை கூறி எந்தப் பயனும் இல்லை என்று உணர்ந்து கொண்ட கருணாநிதி, இதை வேறு வகையில்

எதிர்கொண்டார். கடுமையாக, நீண்ட நேரம் உழைத்ததுடன், விடுமுறை நாட்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் அலுவலகத்துக்கு வரத் தொடங்கினார்.


முதலமைச்சரின் வேகத்துக்கு ஈடு கொடுப்பதைத் தவிர அரசு அதிகாரிகளுக்கு வேறு வழி தெரியவில்லை. வார இறுதி நாட்களில் சென்னையை விட்டு வெளியூர்களுக்குச் செல்லும் போது, பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமின்றி, மாவட்ட அளவில் அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்தார்.


மாவட்டங்களிலுள்ள உறவினர்கள், நண்பர்கள், கட்சி உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தமிழகத்திலுள்ள மத்திய அரசு அதிகாரிகளிடம் நிர்வாகம் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்தார்.


பின்னர், குறிப்பாக 1996 தொடங்கி, இந்த மேற்பார்வைப் பணியை முதலமைச்சர் அலுவலகத்துக்கெனப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி ஆர் இராமசாமி, அசோக் வர்த்தன் ஷெட்டி மற்றும் வெ. இறையன்பு (இப்போதும் பணியில் உள்ளார்) உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவிடம் ஒப்படைத்தார். 2006இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது மற்றொரு புதிய குழுவை உருவாக்கினார்.


அரசுத் துறைகள் பிரிக்கப்பட்டு தொடக்க மறுஆய்வு மற்றும் தொடர் நடவடிக்கைகளுக்கான

பணிகள் அவர்களிடம் வழங்கப்பட்டன. ஏதேனும் சிக்கல் ஏற்படும் போது மட்டும் முதலமைச்சர்

தலையிடுவார். நிர்வாகச் சீரமைப்பும், பணிகளைப் பிரித்துக் கொடுக்கும் முறையும் திறமையாகச் செயல்பட உதவின. இதன் காரணமாகவே 1996-2001 வரையிலான திமுக அரசு மற்ற கால கட்ட தமிழக அரசு நிர்வாகங்களை விடவும் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.


ஒவ்வொரு முறையும் கருணாநிதி ஆட்சி அமைத்த போதும் கொண்டாடுவதற்கு நூற்றுக் கணக்கான சாதனைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். முதல் முறை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகச் சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். இந்த ஆணையத்தின் வழங்கிய பரிந்துரைகள் அடிப்படையில் 1971இல் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை 25% இல் இருந்து 31%ஆகவும், தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தவருக்கான ஒதுக்கீட்டை 16% இல் இருந்து 18% ஆகவும் உயர்த்தினார். இதன் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீடு 49% ஆக அதிகரித்தது. அதே நேரம் இந்த ஆணையம் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கவும் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.


ஆனால் கருணாநிதி அந்த வலையில் சிக்காமல் அப்பரிந்துரையைக் கண்டு கொள்ளவே இல்லை. 


பல ஆண்டுகள் கழித்து ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் (அதிக வருமானம் பெறுவோருக்கு ஒதுக்கீடு கிடையாது) என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது கருணாநிதி அதைக் கடுமையாக எதிர்த்தார்.


நாட்டிலேயே தகவல் தொழில்நுட்பத்துக்கான முதல் கொள்கை வரைவு 1996ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில்தான் அறிமுகமானது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டுமின்றிச் சிறிய நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைக்க அவர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.


'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற பெயரில் கருணாநிதி முதன் முதலாக அறிமுகப்படுத்திய

பொது மக்களுக்கான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் மூலம் எட்டாக் கனியாக இருந்த மருத்துவ

சிகிச்சையை ஏழைகளுக்கும் கிடைக்கச் செய்தார்.


குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிக்குப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி என்ற முறை கருணாநிதி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்க்ஷாவை ஒழித்ததுடன், அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை வழங்கும் முடிவுக்கும் பரவலான வரவேற்பு கிடைத்தது. ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் செலவுகளைக் கணிசமாகக் குறைத்து வசதியற்றவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. மாநிலத்தில் காணப்படும் பெரும்பான்மைக் கட்டுமானங்கள் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் உருவானவைதான். சென்னை அண்ணா சாலையிலுள்ள ஜெமினி மேம்பாலம், கோவை மேம்பாலம், டைடல் பூங்கா, அண்ணா நூற்றாண்டு விழா நூலகம், புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், புனரமைக்கப்பட்ட பூம்புகார், சென்னையிலுள்ள மேம்பாலங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இணைப்பு மற்று

சாலைப் போக்குவரத்துகளுக்கு முன்னுரிமை அளித்தார். கண்மூடித்தனமான வளர்ச்சியில் அவருக்கு உடன்பாடில்லை.


2006இல் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அப்போதைய தொழிற்துறை செயலரான எம். ஹெச். ஃபாரூக்கியிடம் முதலீட்டு முடிவுகள் அனைத்தையும் அவரே சொந்தமாக எடுக்கும்படி வலியுறுத்தினர்.


அவரது பரிந்துரைகளை உயர்நிலைக் குழு விவாதித்த பிறகு ஒப்புதல்கள் உடனுக்குடன் விரைந்து வழங்கப்பட்டன. ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகமென்று கருணாநிதி உணர்ந்ததால், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட எவரையும் சந்திக்க முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.


2008இல் ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தியை விரிவுபடுத்திட டவுன்ஷிப் மற்றும் கீழ்மட்ட (டவுன் ஸ்ட்ரீம்) தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என்று விண்ணப்பித்தது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவு பெற்றிருந்தால் மராட்டியம் மற்றும் குஜராத்திலுள்ள தொழில் மையங்களை விடவும் மிகப் பெரிய தொழில் மையமாக தூத்துக்குடி உருவெடுத்திருக்கும். ஸ்டெர்லைட் விண்ணப்பத்தை மகிழ்ச்சியுடன் கருணாநிதியிடம் எடுத்துச் சென்றார் ஃபாரூக்கி.


ஒரு மணி நேரம் பொறுமையாகக் கேட்ட கருணாநிதி 'பார்க்கலாம்'' என்று சொன்னார். இதற்குப் பின்னர் ஃபாரூக்கியும் அது பற்றி விவாதிக்கவில்லை. கருணாநிதியும் கேட்கவில்லை!

- ஆர்.கே. ராதாகிருஷ்ணன்  

 

No comments:

Post a Comment