Saturday 30 January 2021

சமூகநீதி நாயகர் கலைஞர் - கி. வீரமணி

 சமூகநீதி நாயகர் கலைஞர் - கி. வீரமணி


1969 ஆம் ஆண்டில் ஏ. என். சட்டநாதன் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென ஆணையம் அறிக்கை அளித்தது. பாலாஜி Vs மைசூர் மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வெளிப்படுத்திய (Obiter dictum) மொத்த இட ஒதுக்கீடு வரம்பு 50 விழுக்காடு அளவிலேயே இருக்க வேண்டும் என்பதற்கு இணங்க 1971 ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டின் அளவினை - தாழ்த்தப்பட்டோர் - பழங்குடி மரபினருக்கு 18 விழுக்காடாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடாகவும் உயர்த்தி முதலமைச்சர் கலைஞர் உயர்த்தி ஆணை பிறப்பித்தார். கலைஞர் தலைமையில் இரண்டாம் முறையாக (1971-1976) அமைந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நாட்டிலேயே முதன்முறையாக பிற்படுத்தப்பட்டோருக்கான, அமைச்சகம்' என ஒரு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது.


1979 ஆம் ஆண்டில் முதலமைச்சர் எம்.ஜி. இராமசந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இட ஒதுக்கீட்டு உரிமையினைப் பெறுவதற்கு வருமான உச்சவரம்பினைக் கொண்டுவந்தார். பிற்படுத்தப்பட்டவர்களில் ஆண்டு வருமானம் ரூ.9000/-க்கு மிகாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு எனப் 'பொருளாதார அளவுகோலை' கூடுதலாக திணித்து ஆணை பிறப்பித்தார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ஒத்த கருத்துடைய இதர கட்சிகள் சேர்ந்து இந்தப் 'பொருளாதார வரம்பு' ஆணையினை எதிர்த்தனர்.


இந்திய அரசியலமைப்புச் சட்டமும், இட ஒதுக்கீடு பெறுவதற்கு சமூக, கல்வி நிலை அடிப்படையில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட நிலைமை அடையாளம் காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.


பொருளாதார அளவுகோல் என்பது அரசமைப்புச்சட்ட விதிகளுக்குப் புறம்பானது. இட ஒதுக்கீட்டிற்குப் 'பொருளாதார அளவுகோலை’ அடிப்படையாக்குவது எப்படி நியாயமற்றது, நிலையில்லாதது என்பதை திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், இதர கட்சிகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தன; போராட்டங்களை நடத்தின. திராவிடர் கழகம் தனியே அரசாணை யினை எரித்து தமிழ்நாடு முழுவதும் ஊர்வலங்களையும் எதிர்ப்புக் கூட்டங் களையும் நடத்தியது. தமிழக அரசின் பொருளாதார வரம்பு ஆணையினை எரித்து அந்தச் சாம்பல் மூட்டைகளை மாநில அரசினருக்கு அனுப்பியது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு, சமூக நீதியின் அடிப்படைக்குப் புறம்பாக நடந்து கொள்கிறது என்பதனை தி.க., தி.மு.க மற்றும் இதர கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறின.


இத்தகைய கடும் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் பலன் 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. மக்கள் செல்வாக்கு மிக்கவரான எம்.ஜி. ஆர் தலைமையில் அ.தி.மு.க., தமிழ்நாட்டு நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டைத் தவிர மற்ற இடங்களில் தோல்வியினைச் சந்திக்க நேர்ந்தது. தோல்விக்குக் காரணம், சமூக நீதியின் ஆணிவேருக்கு மாறாக பொருளாதார அளவுகோலைப் புகுத்திய அரசாணை தான் என்பதை எம்.ஜி. ஆர் உணர்ந்தார்.


நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் சரிவைச் சந்தித்த முதலமைச்சர் எம். ஜி. ஆர் உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டினார்.


திராவிடர் கழகத்தின் சார்பாக நாம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றோம். 'பொருளாதார அளவுகோல்' என்பது ‘இரப்பர் அளவுகோல்’ போன்றது. அதைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டோரின் பின்தங்கிய நிலையினை அளவிட முடியாது என்பதை விரிவாக எடுத்துக் கூறி விளக்கம் அளித்தோம். அதற்குப் பின் பொருளாதார அளவுகோல் அரசாணையினை எம்.ஜி.ஆர். ரத்து செய்தார். மேலும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த இட ஒதுக்கீட்டினை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினருக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீடு மக்கள் தொகைக்கேற்ப தொடர்ந்தது.


இட ஒதுக்கீட்டிற்குள் இட ஒதுக்கீடு


இந்தச் சமுதாயத்தில் மனிதரை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தி அவர்களுக்கிடையே படிநிலை சமத்துவமில்லாத நிலை உள்ளது. இதனை நீக்குவதற்கான வழிமுறைதான் இட ஒதுக்கீடு.


சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் சமத்துவமற்ற நிலை திடீரென மாறிவிடாது. இட ஒதுக்கீடு உரிமைக்கு உரியவர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு உடனே கிடைத்துவிடாது. ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடும், அதன்பலன் உரிய அளவில் உரியவர்களுக்குச் சென்று சேராது. காரணம் படிநிலை சமத்துவமின்மையால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிக்கப்பட்டு இருப்பதுதான். எனவே வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிலும் அந்தந்தப் பிரிவினருக்குள்ளும் தனியாக ஒதுக்கீடு செய்யப்படுவது அவசியமாகிறது.

இட ஒதுக்கீட்டிற்குள் புது ஒதுக்கீடு தேவைப்படுகிறது.


மூன்றாம் முறையாகக் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது (1989-1991) பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த இட ஒதுக்கீடு அளவான 50 விழுக்காட்டை, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு எனவும் பிரித்து அளிக்க ஆணை பிறப்பித்தார்.


2006-2011 இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தபொழுது இதர பிற்படுத்தப்பட்டோரிலும் 3.5 விழுக்காட்டினை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வழங்கிட வழிவகுத்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளவான 18 விழுக்காட்டில் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் அருந்ததியினருக்கு 3 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்கிடவும் அரசாணை பிறப்பித்தார். இதனால் துப்புரவுத் தொழில் மேற்கொள்ளும் அருந்ததியின சமுதாயத்தினர் முதன்முறையாக டாக்டர்கள், என்ஜினியர்கள், உயர் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் என பல்வேறு உயர்நிலைகளுக்கு வர முடிந்தது.


தமிழக இட ஒதுக்கீடு முன்னுதாரணம்


மூன்றாம் முறையாகத் தமிழகத்தின் முதலமைச்சராகக் கலைஞர் ஆட்சி செய்த பொழுது (1989-1991) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மரபினருக்கான 18 விழுக்காடு மொத்த இட ஒதுக்கீடு 19 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீடான 1 விழுக்காடு பழங்குடி மரபின மக்களுக்கு மட்டும் என ஆணை வெளியிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டோருக்கான மொத்த இட ஒதுக்கீடு 69 விழுக்காடு எனும் நிலையினை அடைந்தது.


இந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு மேலும் பாதுகாப்பு அளித்திட அடுத்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் 69 விழுக்காட்டிற்கான ஒரு தனிச் சட்டம், (ஆணையாக இருந்து மாற்றப்பட்டு) அரசியலமைப்புச் சட்ட விதி 31(C)ன் படி உருவாக்கப்பட்டது.


உருவாக்கப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசியலமைப்புச்சட்ட 76 ஆம் திருத்தத்தின்படி அதன் 9-ஆம் அட்டவணையில் இடம் பெற்றது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான தனிச்சட்டமும், 9-ஆம் அட்டவணைப் பாதுகாப்பும் பெற்றிட திராவிடர் கழகம் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியது.


9-ஆம் அட்டவணையில் இட ஒதுக்கீடு சட்டம் இடம் பெறுவது ஒரு தனிச் சிறப்பாகும். இப்படி இடம் பெறும் சட்டத்தின் செல்லுபடித் தன்மையினை நீதிமன்றங்கள் முடிவு செய்திட முடியாது. சமூக நீதி வரலாற்றில் இட ஒதுக்கீட்டிற்கான ஒரு தனிச்சட்டம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது; நாட்டிலேயே இட ஒதுக்கட்டிற்கான சட்டம் உருவாக்கப்பட்டது அதுதான் முதல்முறையாகும்.


மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கேட்டுப் பல சமுதாயத்தினர் போராட்டம் நடத்தி வரும் இன்றைய சூழலில் அந்தந்த மாநிலங்களில் மொத்த இட ஒதுக்கீடு அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் உயரும் பொழுது அந்தந்த மாநில அரசுகள் 'தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு மாதிரியைத்தான் முன்னுதாரணமாகக் கடைபிடிக்கின்றன.


தமிழக ஆட்சிச் சக்கரத்தின் அச்சாணி சமூக நீதியாகும். சமூக நீதியின் சரியான பயணத்திலிருந்து விலகிச் செல்லவோ, வழி தவறியோ நடந்திட முற்பட்டால் ஆட்சியாளர்கள் தோல்வியைத்தான் சந்தித்துள்ளனர் என்பதே வரலாறு.


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்


ஆட்சியில் அமர்ந்த நிலையிலும், எதிர்க்கட்சி நிலையிலும் எப்பொழுதும் தந்தை பெரியாரின்

கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதிலேயே கலைஞர் அக்கறை காட்டினார். பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகத்தில் அனைவருக்கும் சமத்துவமும் சமவாய்ப்பும் கிடைக்கச்செய்வதே பெரியார் தத்துவத்தின் உள்ளார்ந்த நிலையாகும். பிறப்பின் அடிப்படையிலான சமூக அந்த பினைப் போக்கிட இட ஒதுக்கீடு வழிமுறை விடை தந்தை பெரியார் வலியுறுத்தி வந்தார். அந்த வகையில் இட ஒதுக்கீடு என்பது பாகுபாட்டைக் களைத்திடக் கடைப் பிடிக்கப்படும் வழிமுறையாகியது.


கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டீன் வழியில் ஓரளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்கள்

பிரதிநிதித்துவம் பெற்று வருகின்றனர். முழுமையாகப் பிரதிநிதித்துவம் பெறுவதற்குச் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகமாகத்தான் உள்ளது. பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராக முடியாது எனும் 'சமூகநீதி' மறுத்த நிலைமை நீடித்தது. இந்து சமயத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்துக் கோயில்களிலும் பார்ப்பனர்களே அர்ச்சகர்களாகத் தொடர்ந்திடும் நிலையும் இருந்தது.


பரம்பரை பரம்பரையாகப் பார்ப்பன அர்ச்சகர்களே நியமனம் பெற்று வந்தனர். கோயில் கர்ப்பக்கிருகத்திலும் சமத்துவம், சமவாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையாக 1969-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்திற்கு அறிவுப்புக் கொடுத்தார்.


தந்தை பெரியாரின் போராட்ட அறிவிப்பினை அறிந்து அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர், பெரியார் அவர்களைச் சந்தித்தார். பெரியாரிடம் கலைஞர் முறையிட்டார். "அய்யா, உங்களது கொள்கைச் சீடர்கள் ஆட்சி செய்யும் பொழுது நீங்கள் ஏன் போராட வேண்டும்?" பெரியார் தனது பதிலாக, "உங்களது (அரசின்) கடமையினை நீங்கள் செய்யுங்கள். சமூகநீதிக்கான போராட்டத்தினை நாங்கள் நடத்துகிறோம். இதில், நீங்கள் துயரப் பட வேண்டாம்'' கூறினார்.


கலைஞர் உடனே, "எங்களது கொள்கை ஆசானை எப்படி கைது செய்திட முடியும்" எனக் கூறி ஒரு வேண்டுகோளைத் தந்தை பெரியாரிடம் வைத்தார்.


“அய்யா, எங்களுக்குச் சற்றுக் கால அவகாசம் அளியுங்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்

ஆகிட வழிகோலும் சட்டத்தினை உருவாக்குகிறோம். அதுவரை கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தினை அருள் கூர்ந்து கைவிடுங்கள்'' எனகலைஞர் கேட்டார். கலைஞரின் வேண்டுகோளுக்குப் பெரியாரும் சம்மதம் தெரிவித்தார். தந்தை பெரியாரிடம் உறுதி அளித்தபடி, முதலமைச்சர் கலைஞர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். சட்ட மன்றத்தில் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்து 1970-இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் உருவானது.


2006 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைத்த போது கலைஞர், வேத ஆகமங்களில் முறையாக பயிற்சி பெற்றவரை நியமிக்க வழிகோலும் சட்டத்தினை கொண்டுவந்தார். 


இவை அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் கலைஞர் தன்னை எப்படி ஒற்றைவரியில் அடையாளப் படுத்துவார் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, "நான் ஒரு மானமிகு சுயமரியாதைக் காரன்'' எனக் கொள்கை பூர்வமாகப் பதிலளித்தார்.


முதலமைச்சராக இருந்த பொழுது, சமூக அடுக்கில் அடியிலும் அடியாக இருக்கும் மக்களுக்காக நடத்தப்படும் 'நாலாந்தர மக்களின் அரசு' என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்தார்.


அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள மாநில உரிமைகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் போராடி பெற்றுத் தந்தார்.


சமுதாயத்தின் மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து தான் வந்ததை கலைஞர் வெளிப்படையாகக் குறிப்பிடுவார். தான் பிறந்தது பொருளாதார வளமிக்க குடும்பம் அல்ல என்பதையும் கூறுவார். இவை அனைத்தையும் நெஞ்சில் நிறுத்தி அதனையே பொது வாழ்க்கையில் முனைப்பு ஆற்றலாகக் கொண்டு தமது அரசியல் வாழ்க்கையில், கலை இலக்கிய பயணத்தில், சமூகநீதிப் பாதையில் பயணித்து ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பட பாடுபட்ட ஒரு நாயகர் கலைஞர் என்பதை வரலாறு என்றைக்கும் கூறிடும்.


- கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

நன்றி: ஒரு மனிதன் ஒரு இயக்கம் புத்தகம் 



அப்பா உங்களுக்கு அதிகம் சொன்ன அறிவுரை என்ன?


எல்லோரையும் அனுசரிச்சுப்போ. இதைத்தான் அடிக்கடி சொல்வார். எனக்கு அவர் வாயால் அதிகம் சொன்னது கட்சியோட வரலாற்றையும், கட்சிக்காரங்க செஞ்சிருக்குற தியாகத்தையும்தான். கட்சிக்குள்ள இருக்குற பிரச்சனைகளைப் பத்தியெல்லாமும் சொல்வார். 'ஆனா, இதையெல்லாம் தெரிஞ்சுக்கோ, வெளியில விவாதிக்காதே! ன்னு சொல்வார். கட்சிங்கிறது அவரைப் பொறுத்த அளவுல குடும்பம் மாதிரி தான். சின்ன வயசுல அண்ணா பிறந்தநாள் கூட்டம் நடத்துறப்போ ஒருமுறை கொஞ்சம் பெரிசா பந்தலைப் போட்டுட்டோம். தெருவுல இருக்குற கிருஷ்ணன் கோயிலை இந்தப்பந்தல் மறைச்சுடுச்சு. அப்போல்லாம் எங்க தெரு பிராமணர்கள் அதிகம் வசிச்ச தெரு. எங்க குடும்ப டாக்டர் கிருஷ்ணன் - அவரும் பிராமணர் தான். - 'மூணு நாளைக்கு வீட்டிலிருந்தபடி சுவாமியைச் சேவிக்க முடியாம செஞ்சிட்டான் உங்க பிள்ளை! ன்னு தலைவர்கிட்ட சொல்லிட்டார். அன்னிக்கு சாயங்காலம் கூட்டத்துல பேசினப்போ, "நேற்று ஸ்டாலின் கனவில் வந்த கிருஷ்ணன், 'எல்லோரும் வீட்டிலிருந்தே என்னைக் கும்பிடுகிறார்கள், ஒரு மூன்று நாட்களுக்காகவாது கோவிலுக்கு வந்து கும்பிடச் செய்' என்று சொல்லித்தான் ஸ்டாலின் இந்த வேலையைச் செய்துவிட்டார்போலும்" என்று நகைச்சுவையாக சொல்லிச் சமாளித்த தலைவர், இரவு என்னை அழைத்தார். "நமக்குக் கடவுள் மேல் நம்பிக்கை இருக்குதா, இல்லையாங்குறது வேறு; கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோட நம்பிக்கையை மதிக்கிறது வேறு. அறியாமைகூட சில சமயங்கள்ல அலட்சிகம் ஆகிடும்ன்னு உணரணும்பா" ன்னார். இது ஒரு பெரிய பாடமா அமைஞ்சுச்சு!

- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

No comments:

Post a Comment