Saturday 30 January 2021

கலைஞர் என் அவமானங்களைப் போக்கியவர் - ராஜேஷ்.S

 கலைஞர் என் அவமானங்களைப் போக்கியவர் - ராஜேஷ்.S


ரவு உணவு முடித்து, Netflix-ல் படம் பார்க்கலாமென்று முயன்று, பின்னர் அது பிடிக்காததால், Amazon Prime-க்குள் சென்று படம் பார்க்க முயன்று, அதுவும் பிடிக்காததால், நீர் அருந்திவிட்டு, இந்தப் பெரிய King Size படுக்கை மெத்தையில், தனி ஆளாக, கால் கைகளை நீட்டி, அகட்டி படுத்துக்கொள்கிறேன். வீட்டின் உட்கூறையில் இருந்த, அணைக்கப்பட்ட மின்விளக்கை காரணமின்றிப் பார்த்தவாறு, “அட... விடிந்தால் 1800$ மாதவாடகை செலுத்த வேண்டுமே. சரி, செலுத்திவிடலாம்” என்று நினைத்துக்கொண்டிருக்கையில், திடீரென்று மனதில் ஒரு பாய்ச்சல். யார் நான்? எங்கிருந்து வந்திருக்கிறேன்? 10 வருடங்கள் முன்புவரை என் வாழ்க்கை எப்படி இருந்தது? மழைநீர் ஒழுகும் குடிசையிலல்லவா வாழ்ந்திருந்தேன்! இப்போது சர்வசாதாரணமாக 1 லட்சத்து 18ஆயிரம் (இந்திய ரூபாயின் மதிப்பில்) மாத வாடகை கொடுப்பதைப் பற்றி இவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்! இவ்வளவு வசதியான வாழ்க்கைக்குப் பாத்திரனா நான்? எப்படி என் வாழக்கையில் இம்மாற்றங்களனைத்தும் நிகழ்ந்தது? என்று நினைத்துக்கொண்டிருக்கையில், கலைஞர் எனும் ஒற்றை மனிதரின் முகம்தான் மனதில் பளீரென்று மின்னியது. அப்போது, நினைவுகள் தானாகவே அம்மாற்றங்கள் நிகழ்ந்த தருணங்களை நோக்கி ஓடத்தொடங்கின. அனைத்து தருணங்களிலும், அவர் பூரணராக நிறைந்திருந்தார்..


திருப்பூர் நகரத்திலிருந்து 10 கி. மீ தொலைவில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பின்னர் அங்கேயே வளர்ந்தவன் நான். அந்தகாலக் கட்டத்தில் சுமார் 50 வீடுகள் மாத்திரமே இருந்த ஊர் அது. அதில் ஒருவர் கூடக் கல்லூரி படிப்பை முடித்தவர் கிடையாது. எனது தாய்மாமா 1 வருடம் சிக்கன்னா கலைக்கல்லூரியில் பி. ஏ படிக்க முயன்று, பின்னர்க் குடும்பச் சூழ்நிலை காரணமாக நின்றுவிட்டு, பனியென் கம்பெனி வேலைக்கு என் தந்தையுடன் சென்று விட்டார்.


எங்கள் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இருந்தது (இன்னும் அது இருக்கிறது). இரு அறைகள் மாத்திரமே கொண்ட ஒரு சிறிய கட்டிடம், அதில் ஒரு அறை பூட்டியே கிடக்கும். மற்றொரு அறையில் 5 வகுப்புகளில் 30 பேர் படித்தோம். முதல் வரிசையில் முதல் வகுப்பு மாணவர்கள், 2ம் வரிசையில் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் என ஐந்து வரிசை இருக்கும். அங்கே படித்த 30 மாணவர்களும் அன்றாடங் காய்ச்சிகளின் பிள்ளைகள். எங்கள் உணவில் புரதம் எனத் தனியே சேர்க்க அப்போதெல்லாம் ஏது வழி? சத்துணவில், கலைஞர் அறிமுகப்படுத்திய 2 முட்டைகளே எங்களின் பிரசாதம். செவ்வாய், வியாழன் கிழமைகள் வருகைப்பதிவு 30/30 ஆக இருக்கக் காரணம் 30 முட்டைகளே. “கலைஞர் என் பசியைப் போக்கியவர்”

5ஆம் வகுப்புக்குப்பின் 6ஆம் வகுப்பிற்காக 3 கி.மீ தொலைவிலிருக்கும் ஒரு பக்கத்து கிராமத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். தினமும் பொடிநடையாகத்தான் பள்ளி சென்று வரவேண்டும் என்ற நிலையிருந்தது. எனக்கு முன்னால் 5ஆம் வகுப்பு முடித்த பலர் அவ்வளவு தூரம் காடுகளின் வழியே நடந்து ஏன் செல்ல வேண்டுமென்றே பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் பெண்பிள்ளைகளின் பெற்றோர் இந்தப் பயத்தினாலேயே அவர்களின் படிப்பை நிறுத்தி விடுவர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை, காடுகளினூடே அவ்வளவு தூரம் தன் பெண்பிள்ளை போய்வர எந்தக் கிராமத்து பெற்றோருக்கு மனது வரும்?. நடக்காமல், பேருந்தில் போக வேண்டுமென்றால் 1 கி.மீ சாலையில் நடந்து சென்று பேருந்து ஏறி 2 ரூபாய் காசு கொடுத்துப் போக வேண்டும். ஆனால் 2ரூபாய் என்பது அப்போது கணிசமான தொகை. “அடேய், 2ரூவா இருந்தால் கால் கிலோ சக்கர வாங்கிரலாம்” என வீட்டில் சொல்லுவார்கள். ஆக, அதுவும் சாத்தியமில்லை, சாத்தியமிருந்தாலும் நாங்கள் கேட்க மாட்டோம். அப்போதுதான், இலவச பஸ்பாஸ் எனும் திட்டத்தைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாக நானும், என்னுடன் பயின்ற நண்பர்களும் இலவசமாகவே பேருந்தில் பள்ளி சென்று வர ஆரம்பித்தோம். இலவசமாகப் பேருந்தில் பிள்ளைகள் பள்ளி செல்லும்போது, எந்தப் பெற்றோர் வேண்டாமெனச் சொல்லுவர்? 5ஆம் வகுப்பு நிறைவு செய்த அனைவரும் 6ஆம் வகுப்பு சேர்ந்தோம்.  “கலைஞர் என் கால்வலியை போக்கியவர்”


8ம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, மாணவர் திறனாய்வு தேர்வு என்று ஒரு தேர்வை கலைஞர் அறிமுகப்படுத்தினார். அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருடம் 250ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். உண்மையைச் சொல்லப்போனால், அது என்ன தேர்வு, எதற்கான தேர்வு, என்ன கேள்விகள் வரும் என்று எதுவுமே தெரியாது. ஒரு வெள்ளிக்கிழமை மாலை, 8ஆம் வகுப்பின் அனைத்து பிரிவிலும் உள்ள முதல் ஐந்து ரேங்கில் உள்ள மாணவர்கள் ஞாயிறு காலை பள்ளிக்கு வரவேண்டுமென அறிவிப்பு வந்தது. எதற்கென்றே தெரியாமல், நாங்கள் ஒரு 15 பேர் ஞாயிறு காலை பள்ளிக்கு வந்தோம். எங்களை ஒரு டெம்போ வேனில் ஏற்றி அவினாசி அரசுப் பள்ளிக்கு அனுப்பினர். அங்கே சென்ற பின்னர்தான் தெரியும், ஏதோ தேர்வு எழுத வந்திருக்கிறோமென்று. தலை, கால் புரியாமல் ஒரு தேர்வை எழுதி முடித்தோம். என்னவோ தெரியவில்லை, அதில் நான் தேர்ச்சி பெற்று, 10ம் வகுப்பு வரை வருடம் 250ரூபாய்ப் பெற்றேன். அதை வைத்து தேவையான பேனா, பென்சில், பேக் என்று வாங்கிக்கொண்டேன். “கலைஞர் என் தேவைகள் அறிந்து பூர்த்தி செய்தவர்”.


8ஆம் வகுப்புவரை அரைக்கால் டவுசர் அணிந்து சென்ற நான். அதற்கு மேல் பேன்ட் போடவேண்டிய கட்டாயத்திற்குள்ளானேன். ஆனால், துணி, தைக்கும் கூலி என அது இமாலய செலவாக இருந்ததால், உடன் படிக்கும் மாணவர்களின் கிழிந்த பேன்ட்டை வாங்கித் தைத்துப் போட்டு பள்ளிக்குச் சென்றேன். ஒருநாள் திடீரெனச் சத்துணவு பொறுப்பாளர் சத்துணவு உண்ணப் பதிவு செய்து மாணவர்களை அழைத்து, எங்களுக்குப் பள்ளி சீருடை அரசு இலவசமாக அளிப்பதாக அளித்தார். “அட ஆமால்ல. நமக்குக் கவர்மென்ட்டே இலவசமா துணி குடுக்கும்ல, மறந்தே போய்ட்டேன்” என்று நினைத்துக்கொண்டேன். இனிமேல் கிழிந்த ஆடை அணிய வேண்டியதில்லை என்றெண்ணி எல்லையற்ற மகிழ்ச்சிக்குள்ளானேன். “கலைஞர் என் மானம் காத்தவர்”


பத்தாம் வகுப்பு முடித்தபின்னர், 11 மற்றும் 12ம் வகுப்பிற்காகத் திருப்பூர் நகரத்தில் ஏதாவதொரு பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். ஆகத் திருப்பூரில் ஒரு அரசுப்பள்ளியில் சேர்ந்தேன். 8 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்கு நேரமே கிளம்பிப் போகவேண்டும், ஆனால் 1 கி.மீ நடந்து சென்று ஏறுவேனே, அந்தப் பேருந்து அந்த நேரத்திற்கு இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல், தெரிந்தோர், தெரியாதோரெனக் காண்போரிடம் லிஃப்ட் கேட்டு செல்வேன். அந்த நேரத்தில் தான், மினிபஸ் திட்டத்தைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார். அரசு பேருந்துகள் போகமுடியாத அனைத்து சந்து பொந்துகளுக்கும் தனியார் சிற்றுந்துகள் சென்று வந்தன. இதில் இன்னொரு சுவாரசியமென்னவென்றால், மினிபஸ்ஸில் எந்த இடத்தில் ஏறி, எந்த இடத்தில் இறங்கினாலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இருப்பதிலேயே குறைவான பயணச்சீட்டுக் கட்டணம்தான். பக்கத்து கிராமத்திற்கே அரசு பேருந்தில் 2ரூபாய் கொடுத்துச் சென்ற நாட்களில், பள்ளி மாணவனான நான் 8கி.மீ திருப்பூர் நகரத்திற்கே 2 ரூபாயில், அதுவும் தனியார் பேருந்தில் சென்று வந்தேன். “கலைஞர் என் பயணத்தை இலகுவாக்கியவர்”.


அதுவரை எங்கள் ஊரிலேயே மூன்று வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சிப்பெட்டி இருக்கும். அம்மூவருமே ஆதிக்கச் சாதியினர். டிவி பார்க்கவேண்டுமெனில் நான் அவர்கள் வீட்டு வாசலில்தான் அமர்ந்து பார்க்க வேண்டும். அதுவும் சிமென்ட் தரை வாசலில் அமரக்கூடாது, மண் தரையில்தான் அமர வேண்டும். நிறைய நேரங்களில், தொலைக்காட்சிப்பெட்டி நிறுத்தப்பட்டு விரட்டப்பட்டிருக்கிறேன். நிறைய முறை தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ முறை நான் ரசித்துப் பார்க்கிறேன் என்ற காரணத்திற்காகவே, சேனல் மாற்றப்பட்டிருக்கிறது. இத்தனை அவமானங்களையும் தாண்டி அந்தத் தொலைக்காட்சி-யில் என்ன இருக்குமென்று தெரியவில்லை, ஆனால் நான் அத்தனை அவமானங்களையும் பொருட்படுத்தாமல் செல்வேன் ஏன்? சென்றேனெனத் தெரியவில்லை. இப்போது நினைத்தால் சிரிப்பும் கோபமும் என்மீதே எனக்கு வருகிறது. அந்த நேரத்தில் தான் கலைஞர் இலவச வண்ண தொலைக்காட்சிப்பெட்டி அளித்தார். அன்றிலிருத்து என் அவமானங்கள் குறைந்தன. எப்போது என்ன காண வேண்டுமோ, அதை நான் எங்கள் வீட்டிலேயே கால்மேல் கால் போட்டுத் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். “கலைஞர் என் அவமானங்களைப் போக்கியவர்”.


ஒருவழியாக 12ஆம் வகுப்பு முடித்தேன். அதுவரையில் பொறியியல் நுழைவுத்தேர்வு இருந்தது. என்னால் அதற்கு எப்படித் தேர்ச்சி பெற முடியும் என்ற தருணத்தில், அந்தத் தேர்வையே நீக்கி, மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங் என்ற முறையைக் கொண்டு வந்தார். நினைத்துப் பார்க்கிறேன், ஒருவேளை அப்போது அந்தத் தேர்வு இருந்திருந்தால், நான் அதில் தேர்ச்சியடைந்திருப்பேனா என்பது சந்தேகம். காரணம், எனக்கு அதைப் பற்றிய அறிவு சுத்தமாகக் கிடையாது, வழிநடத்தவும் அங்கே யாரும் கிடையாது. தேர்வு நடந்திருந்தால், இருட்டில் விடப்பட்ட பார்வையற்றவனாக, தேர்ச்சியடையாமல் போயிருப்பேன், என் வாழ்க்கை வேறுதிசையில் போயிருக்கும். ஆனால் கலைஞர் புண்ணியத்தில் அந்தத் தேர்வு ரத்தானது, நானும் பொறியியலில் சேர்ந்தேன். “கலைஞர் எனக்குக் கல்வி தந்தவர்”.


சரி. நுழைவுத்தேர்வு தான் ரத்தாகி விட்டதே.. மதிப்பெண்ணை வைத்துக் கல்லூரியில் சேரலாமென்றால், அதிலும் ஒரு சிக்கல். பேருந்தில் 40 நிமிட பயணம் செய்து பள்ளி சென்று, படித்துவிட்டு, பின் 40 நிமிட பயணத்தில் வீட்டுக்கு வந்து, அம்மா சமைப்பதற்காக விறகு வெட்டி அடுப்படியில் போட்டு, மண்வாசல் மீது நீர்தெளித்து, விளக்கமாரால் வாசல் பெருக்கி, ட்யூசன் செல்ல காசு இல்லாமல், கிடைத்த நேரத்தில் படித்த என்னால் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க முடியும்.? உடன் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் ட்யூசன் சென்றனர். பணமில்லாத காரணத்தால் நான் செல்லவில்லை. இருப்பினும் முயன்று படித்துக் குறைவான மதிப்பெண் எடுத்தேன்; 1200க்கு 928 அது. இந்த மதிப்பெண்ணுக்கு நாம் எதிர்பார்க்கும் கல்லூரியில் இடம் கிடைக்காது என நினைத்தேன். இருப்பினும் இடஒதுக்கீட்டின் மூலம் எனக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைத்து. “கலைஞர் என் மேற்படிப்பை உறுதி செய்தவர்”.


பின்னர்க் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில், படிப்புக்கான அனைத்து செலவுகளுக்கும் கந்து வட்டிக்கு வாங்கிதான் என்னைப் படிக்க வைத்தனர். அப்போதுதான் கலைஞர் முதல் பட்டதாரிகளுக்கான கல்வி உதவித்தொகையை வழங்கினார். ஒன்றிரண்டு ரூபாயல்ல..12000ரூபாய்.. அந்தத் தொகை கந்து வட்டியிலிருந்து மீள பெரும் உதவியாக இருந்தது..


“என்னை ஏழையாக, கீழ்சாதியனாகப் பார்த்த சமூகத்தில், கலைஞர் பட்டதாரியாகப் பார்த்தவர்”.


இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் நிறைய இடத்தை அடைத்துக்கொள்ள வேண்டாமென நிறுத்திக்கொள்ளுகிறேன். முடிந்தால் என் சுயசரிதையை எழுதி, அதில் கலைஞரால் நானடைந்த அனைத்து நலன்களையும் எழுதி விடுகிறேன். ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூற முடியும்.. மேற்குறிப்பிட்ட என் வாழ்க்கை பயணத்தில் ஏதாவதொன்று வேறுமாதிரி நடந்திருந்தால், நான் எங்கள் ஊரின் முதல் பட்டதாரியாகி, இன்று ஆஸ்திரேலியா நகரான சிட்னிக்கு இடம்பெயர்ந்து, நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி, கை நிறையச் சம்பாதித்து, என் ஏழ்மையைப் போக்கி, என் பெற்றோரின் கனவான மழைநீர் ஒழுகாத வீட்டில் அவர்களைக் குடியமர்த்தி, என் கிராமத்து இளைஞர்களுக்கு ரோல்மாடலாக ஆகியிருக்க முடியாது.


“என்னைத் தற்போதைய நானாக ஆக்கியவர் என் அன்பு கலைஞர்”


-ராஜேஷ்.Sதமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு 50%- க்கும் அதிகமாக உயர கருணாநிதி முக்கியமான காரணம், சமூக நீதி அரசியலை அரசுத் திட்டங்களாக உருமாற்றியது அவருடைய இன்னொரு முக்கியமான சாதனை. சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுக, அதிமுக இடையில் ஆரோக்கியமான போட்டி எப்போதும் நிலவியது. இதனால்தான் சமூக நலத்திட்ட அமலாக்கத்திலும் வளர்ச்சியும் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னே நிற்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு திராவிட இயக்கத்தின் நிரந்தரமான பங்களிப்பு என்றால் அது, 'இந்தி - இந்து - இந்துஸ்தான்' என்ற தேசியவாதத்தை ஏற்க மறுத்து அது உறுதியாக நிற்பதுதான், கருணாநிதியின் ஆட்சியில் மாநில அரசு ஒருபோதும் மத்திய அரசுக்கு கீழான அரசாகச் செயல்பட்டதில்லை. மத்திய - மாநில உறவு தொடர்பாக அவர் நியமித்த ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தாலும் கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கான கதவை அது திறந்தது. சுதந்திர தினத்தன்று முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவரும் அவரே. தன்னுடைய ஆட்சியையே விலையாகக் கொடுத்து நெருக்கடிநிலை அமலாக்கத்தைத் துணிவோடு எதிர்த்த முதல்வர் என்று வரலாற்றில் என்றும் கருணாநிதி நினைவுகூரப்படுவார்.


- யோகேந்திர யாதவ், சமூகவியல் அறிஞர்

No comments:

Post a Comment