Sunday 28 February 2021

53 ஆண்டுகள் ஒரு தலைவரின் பயணம் !! - கனிமொழி ம.வீ

 53 ஆண்டுகள் ஒரு தலைவரின் பயணம் !! - கனிமொழி ம.வீ


புரட்சியாளர் ஜோசப் ஸ்டாலின் மரணத்தை ஒட்டி அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலைஞர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பிறந்த மகன்தான் ,இன்று திமுகவின் தலைவராக இருக்கக் கூடிய மு க ஸ்டாலின். ஒரு மாபெரும் புரட்சியாளர் பெயரைத் தாங்கி பிறந்து வளர்ந்ததாலே இயல்பிலேயே அவருடைய குணமும் போராட்ட களங்களை விரும்பியது. பதின்ம வயதில்  தன் வயதொத்த பிள்ளைகளோடு விளையாடப் போகவில்லை, தன் வயதொத்த பிள்ளைகளை இணைத்து இளைஞர் திமுக என்ற அமைப்பை கோபாலபுரத்தில் தொடங்கி தன் பொது வாழ்விற்கு 1968 ஆம் ஆண்டே வித்திட்டவர். இந்தியாவில் தமிழ்நாட்டில்  இன்றைக்கு 53 ஆண்டுகள் அரசியல் அனுபவமிக்க தலைவர்களை நாம் காண்பது அரிதாகிவிட்ட நேரத்தில்,  ஒரே கழகம் ஒரே கொள்கை, ஒரே தலைவர் என்று 53 ஆண்டுகள் பயணிக்கின்றவர் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

கலைஞர் அவர்கள் தேர்தல் நிதிக்காகப் பேரறிஞர் அண்ணாவிடம் 11 லட்சம் திரட்டிக்கொடுத்து "மிஸ்டர் கருணாநிதி 11 இலட்சம்", என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டக்கூடிய அந்த நிலையைப் பெற்றவர் என்பதை நாம் படித்திருக்கிறோம், அதேபோல திருச்சியில் திமுகவின் 10வது மாநில மாநாட்டில் அன்றைக்கு திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலின் அவர்கள் திரட்டிய நிதி 101 இலட்சம் ; அதற்காகக் கலைஞரிடம் பாராட்டு பெற்றவர் ஸ்டாலின் , கழகத்திற்கு உழைப்பதில் பம்பரமாய் சுழன்ற வரலாறு இன்றைய திமுக தலைவருக்கு உண்டு.

அதேபோல இன்றைக்கு அறிவகம் இருக்கக்கூடிய இடத்தை திமுக இளைஞரணி தனக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தது திமுகவின் தொழிலாளர் அணியும் கோரிக்கை வைத்தது, எனவே இரண்டு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டி வைத்தார் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். அதன்படி இரு அணிகளில் யார் கட்சிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி தருகின்றனரோ  அவர்களுக்குத் தான் அறிவகம் என்று அறிவித்தார். இந்த சவாலை ஏற்று ஸ்டாலின் அவர்கள் இரவு பகல் பாராது பல நிகழ்ச்சிகளில் கட்சி சார்பாகக் கலந்து கொண்டு பதினோரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்து, திமுக இளைஞரணிக்கு அறிவகத்தை  பெற்றிருக்கின்றார், பேராசிரியர் அவர்களும் மகிழ்ச்சியோடு அந்த இடத்தை திமுக இளைஞரணிக்கே  கொடுத்திருக்கிறார்  என்பதே வரலாறு.

1990 இல் கலைஞர் ஒருங்கிணைத்து நடத்திய ஐம்பெரும் விழாவில் திமுக இளைஞரணியை இராணுவம் போலச் சீராக நடை போட்டு வரும் படி ஒருங்கிணைத்து அந்த இளைஞர் அணி படையைத் தலைமை தாங்கி கம்பீரமாக நடத்திக் காட்டியவர் ஸ்டாலின். இதை அன்றைய பிரதமர் விபி சிங் அவர்கள் வியந்து  பாராட்டினார். இந்த வரலாறெல்லாம் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் கழகத்திற்காக எவ்வாறு திறம்படச் செயலாற்றினார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

1975 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசர நிலையின் போது மிசாவில் கைதாகி ஓராண்டுக் காலம் திமுகழகத்தின் மற்ற தொண்டர்களோடு சிறைத்தண்டனை பெற்று தன் பொதுவாழ்வில் மேலும் உரம் ஏற்றிக்கொண்டவர் தளபதி முக ஸ்டாலின்.

அந்த உரம் தான் , கலைஞருக்கு ஓய்விடத்தை ஒதுக்குவதில் ஆரியம் தன் பன்னெடுங்கால பகையைத் தீர்த்துக் கொள்ள முயன்றபோது, அதற்கு அசராமல் கலவரத்தில் தன் தொண்டர்களை ஈடுபடாமல் கட்டிக்காத்து, நீதிமன்ற உத்தரவோடு வென்று காட்டியது.

1996 ஆம் ஆண்டு சென்னையின் மாநகரத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைக் கொணர்ந்தவர் ஸ்டாலின் என்பதை நாம் நன்கு அறிவோம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் கழகத்தில்,  அரசியலில்  தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து வரக்கூடியவர், இன்றைக்கு ஒரு முக்கியமான இக்கட்டான தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் தமிழ் நாட்டையே வழிநடத்தக் கூடிய ஒரு நிலையில் இருக்கின்றார் என்பதே தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

53 ஆண்டுகள் அரசியல் அனுபவம் இருந்தபோதும், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்காது தேர்தல் மூலமே ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதற்காக  மக்களைச் சந்தித்து பெரும் களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றார் திமுக தலைவர்.

அண்மையில் அவர் அறிவித்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பில் ,  ஒரு நாளைக்கு 8 தொகுதிகள் ஒரு தொகுதியில் 2 இடங்கள் 234 தொகுதிகளில் 468 இடங்கள்! என்ற இலக்கை நோக்கி வேகமாகத் தமிழ்நாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை நடுவண் அரசிடம் அடகுவைத்துவிட்ட இன்றைய எடப்பாடி அரசின் அட்டூழியங்களை மக்களிடம் எடுத்துக்கூறி மக்களை அரசியல்படுத்துவது ஒரு தேர்ந்த தலைமைப் பண்பு.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படை பிரச்சனைகளை , தீர்க்க திமுக உழைக்கும் என்று மக்களிடம் உறுதி கூறி மனு வாங்கி , மக்களின் உள்ளத்தில் நேர்மறை எண்ணங்களை , திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முயற்சிகள் என்பதெல்லாம் சிறந்த நிர்வாகத் திறனும் அவரிடம் மிளிர்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்த திட்டத்தினை முன்னாள் ஐஏஎஸ் கிறிஸ்துதாஸ் காந்தி மிகவும் பாராட்டியதோடு அவைகளை 30 நாட்களில் கூட தீர்த்துவிடலாம் என தனது அனுபவத்தினால் சொல்கிறார், அத்தோடு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின்  இம்முயற்சியால் தமிழ்நாடெங்கும் அதிகார பரவல் ஏற்படும். சிறு சிக்கல்களுக்கு எல்லாம் பெரிய அதிகாரிகளை மக்கள் எதிர்பார்க்கவேண்டாம் என்பதே இதில் சிறப்பான செய்தி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அனைத்து வகையிலும் ஒரு மிகச் சிறந்த தலைவரைத் தமிழ்நாடு 2021 தேர்தலில் முதலமைச்சராகப் பெறப் போகிறது என்றால் மிகையல்ல.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறிப்பிட்டது போல,

கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை
கொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை.

கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை

காட்டை அழிப்பது கூடும் - அலை
கடலையும் தூர்ப்பது கூடும்
மேட்டை அகழ்வதும் கூடும் - விரி
விண்ணை அளப்பதும் கூடும்
ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும் - உரிமை
எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?

அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை
அழிக்குமுறை எவ்வாறு முடியும்?
ஒடுக்குசிறை காட்டுதல் முடியும் - உணர்
வொடுக்குதல் எவ்வாறு முடியும்?
திடுக்கிடச் செய்திடும் உன்னை - இத்
திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்?

திராவிடர் எழுச்சி திமுகவை மீண்டும் அரியணை ஏற்றி நம் உரிமைகளை வென்றெடுக்கும் தளபதி மு க ஸ்டாலின் தலைமையில் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. வெற்றிடம் உருவாகி விட்டது என்று ஓயாமல் மென்று கொண்டிருக்கும் வாய்கள் விரைவில் ஓய்வு பெரும். 


- கனிமொழி ம.வீ

 

எங்களுக்கெல்லாம்

தாயாய் தமிழ் இருக்கிறது - உனக்கோ

தமிழே தந்தையாய் இருக்கிறது!


நீ ஆலமரத்துக்குக்

கீழ்முளைத்த அரசமரம்

சுருள்முடிக்குள்

சூரியனைக் காண்பவன்


விசா வாங்காமல்

'மிசா'வைச் சந்தித்த

தசாவதாரம்!


- கவிஞர் யுகபாரதி


No comments:

Post a Comment