Sunday 28 February 2021

திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - ராஜராஜன் ஆர். ஜெ

திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - ராஜராஜன் ஆர். ஜெ


மிழ்நாட்டை எத்தனையோ கட்சிகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். நீதிக்கட்சி, காங்கிரஸ், திமுக, அதிமுகவெனக் கட்சிகள் ஆண்டிருக்கிறார்கள். பனகல் அரசர், ஓமந்தூர் ராமசாமி, காமராசர், பக்தவச்சலம், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என எண்ணற்ற முதல்வர்களையும் தமிழகம் கண்டுள்ளது. சென்னை மாகாணமாக இருந்தது, தமிழ்நாடாக அண்ணா முதல்வரானபோது மாற்றப்பட்டது. தமிழ்நாட்டுத் தேர்தலைப் பொறுத்தவரை யார் முதல்வர் என்பதை முன்னிறுத்தியே நடத்தப்படும்.


காமராசர் vs அண்ணா

காமராசர் vs கலைஞர்

கலைஞர் vs எம்ஜிஆர்

கலைஞர் vs ஜெயலலிதா


என்று தான் தமிழகத் தேர்தல்கள் செல்லும். மக்கள் தேர்ந்தெடுப்பது, கலைஞர் அல்லது ஜெயலலிதாவைத் தான். ஆனால், ஊழல் குற்றச்சாட்டால் இருமுறை ஜெயலலிதா சிறைக்குச் செல்ல நேர்ந்ததால், ஜெயலலிதா ஆசிபெற்று ஓ. பன்னீர்செல்வம் இருமுறை முதல்வரானார். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியொரு முதல்வர் கைதாகிச் சிறைக்குச் சென்றதும், அதனால் இன்னொரு முதல்வர் பதவியேற்றதும் இதுவே முதன்முறை.


2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக 1.1 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழக்கிறது. மீண்டும் இரண்டாவது முறையாக ஜெயலலிதா முதல்வராகிறார். ஜெயித்துச் சில நாட்களிலேயே ஜெயலலிதா உடல்நலக் குறைவு என அப்போலோவில் சேர்க்கப்பட்டு 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்து இறந்து விடுகிறார். ஜெயலலிதா இறந்தவுடன், ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராகிறார். அதிமுகக் கட்சியின் பொதுச்செயலாளராகச் சசிகலா தேர்வாகிறார். சசிகலா முதல்வராகலாம் என எண்ணுகிறார். ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது எனச் சொல்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு உடனே வருகிறது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வருகிறது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், மற்ற மூவரும் சிறைக்குச் செல்கின்றனர். சிறைக்குச் செல்லும் முன், அதிமுகப் பொதுச்செயலாளரான சசிகலா, ஓ. பன்னீர்செல்வத்தைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, புதிதாக எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சராக அறிவிக்கிறார்.


கூவத்தூர் என்னும் இடத்தில் உள்ள உல்லாச விடுதியில், அதிமுக எம். எல்.ஏ க்கள் அனைவரையும் உள்ளே வைத்து, சசிகலா இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டுச் சிறைக்குச் சென்று விட்டார்.


சசிகலா சென்றபின், அதிமுகவின் முழுக்கட்டுப்பாடும் பாஜக கைக்கு வந்தது. பிரதமர் மோடி சென்னைக்கு வந்து ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை இணைத்து, எடப்பாடி முதலமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் ஆனார்கள்.

தமிழக அரசாங்கம் பாஜகவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விளைவு, 2017 வரை உள்ளே நுழைய முடியாத நீட் தேர்வு, தமிழ்நாட்டின் மேல் திணிக்கப்பட்டது. உதய் மின்திட்டம் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்பட்டது. ஜி. எஸ்.டி வரி தமிழ்நாட்டின் மீது திணிக்கப்பட்டது.

இப்படி அடுக்கடுக்காகத் தமிழ்நாட்டின் மீது வடவர் ஆதிக்கம் அதிகமானது. தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்கள், அரசாங்கப் பணிகள், வங்கிகள் என எல்லாவற்றிலும் வடவர் ஆதிக்கம் அதிகரித்தது.


ஜல்லிக்கட்டு எனும் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்தார்கள். அந்த ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த ஒரு மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் நடத்தவேண்டி இருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 உயிர்கள் பலியானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு இப்படியொரு நிகழ்வு நடந்தது தொலைக்காட்சி பார்த்துத் தான் தெரிந்தது என்றார்.

மத, மொழி சிறுபான்மையினரை அந்நியப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தைத் தமிழ்நாட்டு அதிமுக அரசு ஆதரித்தது.


புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் வரும் பழைய குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டு அதிமுக அரசு ஆதரித்தது.


விவசாயிகளை அழித்து விவசாயத்தைக் கார்பொரேட் கையில் கொடுக்கும் புதிய வேளாண் கொள்கையைத் தமிழ்நாட்டு அதிமுக அரசு ஆதரித்தது.


இப்படித் தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கம், மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, மத்தியில் நடைபெறும் பாஜக ஆட்சியின் ஊதுகுழலாகவே செயல்படுகிறது.


இந்தச் சூழ்நிலையில் 2021 தேர்தலைத் தமிழகம் சந்திக்கிறது. பாஜக - அதிமுகக் கூட்டணியை எதிர்க்கும் ஒற்றை முகமாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.


ஒன்றிணைவோம் வா

2020 ஆம் ஆண்டு, உலகமே கொரோனா எனும் கொடும் தொற்று நோயால் முடங்கியது. தமிழ்நாட்டிலும் கொரோனா நோய்த்தொற்றால், பல உயிர்கள் போனது. நோயைத் தடுக்க லாக்டவுன் எனும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், பலர் வேலையை இழந்தார்கள், வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் குதித்தது. "ஒன்றிணைவோம் வா" என்றொரு திட்டத்தைத் தி. மு. க தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதன்மூலம், 76 லட்சம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், 51 லட்சம் முகமூடி மற்றும் கிருமி நாசினி பாட்டில்கள், 28 லட்சம் சமைத்த உணவுப் பொட்டலங்கள் என அனைத்து மக்களுக்குமான ஒரு நிழல் அரசாங்கத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியது. கட்சிப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்குமான ஆபத்தில் கைகொடுக்கும் ஆதரவு கரமாக "ஒன்றிணைவோம் வா" திட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தினார்.


பாசிசத்தை வேரறுக்கும் மாவீரர்


2019 ஆம் ஆண்டு, தலைவர் ஸ்டாலின் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் ஒரு வெற்றியைப் பெற்று, தலைவர் கலைஞர் இல்லாவிட்டால் என்ன, “நான் இருக்கிறேன் தமிழ்நாட்டைக் காக்க” என்று நிரூபித்துக் காட்டினார். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராய் முன்மொழிந்தார். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பிரச்சாரம் செய்து, நாடும் நமதே, நாற்பதும் நமதே எனப் பிரச்சாரம் செய்தார். மோடி அரசின் பாசிச மதவாத போக்கையும், அதற்கு அடிமைச் சேவகம் செய்த அடிமை அதிமுக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிவில், 40 க்கு 39 தொகுதிகளைத் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி கைப்பற்றியது. நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என்னும் குரலைத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி, தமிழ்நாடு என்றும் பெரியார் மண் தான் எனப் பறைசாற்றினர். இந்த வெற்றிக்கு அச்சாணியாக இருந்தது கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் வியூகம், பிரச்சாரம் ஆகியவையே!


தளபதி தலைவரானார்


2018 ஆகஸ்ட் 7ஆம் நாள் மாலை ஓயாமல் உழைத்த தலைவர் கலைஞர் உறங்கச்சென்றார். தமிழினம் கண்ணீர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போதும், இன எதிரிகள், கலைஞருக்கான மரியாதையும், புகழும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள். “நீ இருக்கும் இடம் தேடி யான் வரும்வரையில் இரவலாய் உன் இதயத்தைத் தந்திடண்ணா” என்று அண்ணனுக்குப் பக்கத்தில் ஆறடி நிலத்தைக் கேட்டது தான் கலைஞரின் ஒரே ஆசை என்று சொல்லலாம். அந்த ஆறடி நிலத்தைத் தர முடியாது என்றது ஆளும் அடிமை அரசு. அவர்களை ஆட்டிவைத்தது மேலே இருக்கும் ஆதிக்கக் கூட்டம். மக்கள் கொந்தளித்தனர். கலைஞருக்கு இடம் மறுப்பதை மாற்றுக் கட்சியினர் கூட விரும்பவில்லை. கலைஞருக்கான இடம் வேண்டும் என்று போராட்டம் துவங்கியது. அந்த இக்கட்டான சூழலில் நிதானமாகத் தளபதி ஸ்டாலின் செயல்பட்டார். சட்டரீதியாகக் கலைஞருக்கான இடத்தைப் பெற்றுத்தரத் திமுகவின் சட்டத்துறைக் களத்தில் இறங்கியது. நள்ளிரவில் உயர்நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது. காலை தீர்ப்பு வந்தது. கலைஞர் தனது கடைசி “இட ஒதுக்கீடு” போராட்டத்திலும் வென்றார். கலைஞர் உடல் இருந்த ராஜாஜி அரங்கத்தில் மகிழ்ச்சி ஆராவாரம். அந்த நேரத்தில் தளபதி ஸ்டாலின் அந்த இடத்திற்கு வருகிறார். தொண்டர்களின் ஆராவாரம் விண்ணை முட்டுகிறது. அதுவரை நிதானமாக இருந்த தளபதி ஸ்டாலின் வெடித்து அழுகிறார். வாழ்க வாழ்க வாழ்கவே, கலைஞர் புகழ் வாழ்கவே என்னும் கோசங்கள், அந்த இடத்தில் உணர்ச்சி எழ வைத்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் களத்திலும், கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியிலும் இந்தக் காட்சியைப் பார்த்தனர். தளபதி ஸ்டாலின் தலைவர் ஸ்டாலின் ஆன தருணமிது.
மு. க ஸ்டாலின் கடந்து வந்த பாதை:


பிறப்பு


01.03.1953 கலைஞர் கருணாநிதி - தயாளு அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர் தளபதி ஸ்டாலின். ரஷ்யப் புரட்சி மாவீரர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவாக ஸ்டாலின் எனக் கலைஞர் பெயரிட்டார்.


சர்ச் பார்க் கான்வெட்டில் ஸ்டாலினைப் படிக்க அழைத்துச்சென்றபோது, ஸ்டாலின் என்பது கம்யூனிச பெயராக இருக்கிறதே, பெயரை மாற்ற முடியுமா என்று கேட்டதற்கு, பள்ளியை வேண்டுமானால் மாற்றிக்கொள்கிறேன் எனக் கலைஞர் சொன்னார். அவர் படித்தது சென்னை கிருத்துவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளி.சிறுவயதில் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம் கொண்ட ஸ்டாலினுக்கு வளர வளர அரசியல் ஆர்வமும் ஏற்பட்டது. மாநிலக்கல்லூரியில் படிக்கும் போது நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.


இளைஞர் திமுக:


1967 ல் கோபாலபுரத்தில் ஒரு முடித்திருந்த நிலையத்தில் "இளைஞர் திமுக" என்றொரு அமைப்பை ஆரம்பித்தார். அதுவே அவரது அரசியல் வாழ்வின் தொடக்கமானது. இளைஞர் திமுகச் சார்பில் அண்ணா பிறந்தநாள் கூட்டங்கள் நடைபெறும். அதில் மாண்புமிகு அமைச்சர் கோவிந்தசாமி,புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர் எம்.எல்.ஏ.,, சிலம்புச் செல்வர் ம.பொ.சி எம்.எல்.ஏ , திரு. ப.உ. சண்முகம் எம்.எல்.ஏ,திரு. அப்துல் சமது, எம்.ஏ. எம்.பி, திரு. துரைமுருகன் பி.ஏ , திரு. இரா. சனார்த்தனம்., எம்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். அண்ணாவை அழைக்கச்சென்று, அவர் தேதி கொடுத்ததும், உடல் நிலை சரியில்லாததால் அவரால் வரமுடியாமல் போன வருத்தம் இன்றும் தளபதி ஸ்டாலினுக்கு இருக்கிறது.

மிசா நாயகன்:
1976 ஆம் ஆனது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையே ஸ்டாலின் எனும் தலைவனை உருவாக்கியது என்று சொல்லலாம். நெருக்கடி நிலையைக் கடுமையா எதிர்த்த திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியைக் கலைத்தது இந்திய ஒன்றிய அரசு. கலைஞர் கருணாநிதியைத் தனிமரமாக நிற்க வைக்க, திமுகக் கட்சியினர் வேட்டையாடப்பட்டனர். முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், சிட்டிபாபு,ஆசிரியர் வீரமணி, ஆற்காடு வீராச்சாமி, டி.ஆர். பாலு, திருச்சி சிவா எனப் பல்லாயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர். முதலமைச்சர் மகன் ஸ்டாலின் என்பதால் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. அவரைக் காப்பாற்றியது மறவர் சிட்டிபாபு அவர்களே..


சிட்டிபாபு டைரிக்குறிப்பில் இருந்து…

"தமிழகத்து முதல் அமைச்சர் மகன் என்று நேற்றுவரை அறிந்திருந்த அந்த அதிகாரி (சுருளி ராஜன்) தன் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து, கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் அவனது கன்னத்தில் கை நீட்டினான்.


கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்று விடுவர் என்று உணர்வு எனக்கு ஏற்பட்டது. மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர். உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள் என்ன செய்வது. எனக்கென்று ஒரு துணிவு! திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தம்பியைத் தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில் விழுந்தன. அவைகள் அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினைத் தட்டிப் பதப்படுத்தி உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தன. கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். தம்பியோ தான்பட்ட அடியை மறந்து தன் உடன்பிறப்புக்களை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். என்னை ஒருவன் "வாடா, தம்பி வா” , என்று வாயில் ஒரு குத்து விட்டு உள்ளே தள்ளினான்.

பூட்டுப் பூட்டப்பட்டது! உள்ளே அழுகுரல்! முனகல் அப்பா! அம்மா! என்ற ஒலி அன்புத் தம்பியோ அருகில் வந்தான். அண்ணன் நீலத்தை, வி. எஸ். கோவிந்தராசன் மார்பில் சாய்த்துவிட்டு, அவன் தன் பிஞ்சுக்கரங்களால் என் முகத்தைத் தடவி கொண்டே கேட்டான். “அண்ணே இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா?" ஆமாம் அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது. அடிக்க வந்தவர்கள் அல்லவே அவர்கள்! கொலை வெறிதாக்குதல் அல்லவா நடத்தினார்கள்.

அன்புத் தம்பியோ அதிர்ச்சி அடைந்திடவில்லை! அழுகையில் என்னைக் காண்கிறான்! அவன் அச்சங்கொள்ளக்கூடாது என்று அன்பொழுகச் சொன்னேன். "அடி பலமா உனக்கு?" என்றேன்.

"அதெல்லாம் இல்லை அண்ணே", என்று அனுபவம் பெற்றவனைப் போல் பேசினான்! தெம்பு குறையக் கூடாது என்பதற்காக, “தம்பி உன்னையும் அடித்தார்களே பாவிகள்" என்றேன். “இருக்கட்டும் அண்ணே'' என்று சொல்லி என்னைத் தன் கரங்களால் அடிபட்ட இடங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டே கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவி புரிந்தான்.”


என்று மாவீரர் சிட்டிபாபு தனது டைரிக்குறிப்பில் எழுதி இருக்கிறார்.திமுக இளைஞரணி:
1980 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாள், திராவிட முன்னேற்றக் கழகம், இளைஞரணியைத் தொடங்கியது.

இளைஞரணிக்கென்று திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, சேலம் மணி, பஞ்சவர்ணம், ஜெயம் ஜீலியஸ், வாலாஜா அசேன் இவர்களோடு மு.க ஸ்டாலின் என உறுப்பினர்கள் கொண்டதொரு குழு உருவாக்கப்பட்டது.

இளைஞரணியில் மு.க. ஸ்டாலின் திறம்படச் செயல்பட்டார். அதுவரை ஊர்வலமாக நடந்ததைப் பேரணியாக மாற்றினார். இளைஞரணிக்கென்று தனிச் சீருடைகள் வைத்து ஒரு ராணுவ அணிவகுப்பைப் போல நடத்திக் காட்டியவர் மு.க. ஸ்டாலின். சமூகநீதி காவலர் வி.பி. சிங் அவர்களால் இந்தப் பேரணிக்காகப் பாராட்டைப் பெற்றவர் தளபதி ஸ்டாலின்.

தனது உழைப்பால், இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்றார்.
அன்பகம்
திமுகவின் கட்டிடமான அன்பகத்தை இளைஞரணியும், தொழிலாளர் அணியும் தங்களது அலுவலகமாக மாற்றிக்கொள்ளக் கேட்டது.


யார் 10 லட்சம் நிதி திரட்டி தருகிறார்களோ, அவர்களுக்குத் தான் அன்பகம் எனக் கலைஞர் அறிவித்தார். இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 11 லட்சமாகத் திரட்டி அன்பகத்தை இளைஞர் அணிக்காக வாங்கினார்.

பின்னாளில் கண்ணகி சிலையை ஜோதிடத்தைக் காரணம் காட்டி சென்னை கடற்கரையிலிருந்து ஜெயலலிதா அப்புறப்படுத்திய போது, அன்பகத்தில் கண்ணகி சிலை ஒன்று நிறுவிக்காட்டியவர் தளபதி ஸ்டாலின்.


கலைஞர் கருவூலம் – கண்காட்சி
கழக மாநாடுகளில், இளைஞரணி சார்பில் வைக்கப்படும் கண்காட்சி புகழ்பெற்றது. திராவிட இயக்க வரலாற்றை விளக்கும் வகையில் அந்தக் கண்காட்சி இருக்கும். ஒரு நிரந்தரக் கண்காட்சி அமைக்கப்பட வேண்டும் என்று அறிஞர் முரசொலி மாறன் விருப்பப்பட்டார். அதை நிறைவேற்றும் வகையில், அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் கருவூலகத்தில், நிரந்தரக் கண்காட்சி ஒன்று தளபதி ஸ்டாலின் அவர்களின் உழைப்பால் உருவானது.

சென்னை மேயர் ஸ்டாலின்

1996 ஆம் ஆண்டு, சென்னை மாநகர மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தளபதி ஸ்டாலின் அவர்கள். மேயர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்று கலைஞர் சொன்னதற்கேற்ப, மேயர் பொறுப்பில் திறம்படச் செயல்பட்டார் ஸ்டாலின். சென்னை, சிங்கார சென்னையாக மாறியதும், கார்ப்பரேஷன் பள்ளி என்று கீழாகப் பார்க்கப்பட்ட பள்ளிகளின் நிலையை மாற்றியதும், பாலங்களின் நகரமாகச் சென்னையை மாற்றியதும் என நவீன சென்னையின் தந்தையாக மேயர். மு. க ஸ்டாலின் விளங்கினார். மேயராக அவரின் செயல்பாடுகளை வைத்து ஜெ. ஆர்.டி. டாடா மெம்மோரியல் விருது, கிளீன் சிட்டி விருது,சிறந்த பாலத்திற்கான விருது,"ஐரிஷ்" பன்னாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் எனப் பல விருதுகள் வழங்கப்பட்டது.


மேயராகத் தளபதி ஸ்டாலினின் சாதனைகள்

வணக்கத்திற்குரிய மேயராகத் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர மக்களுக்குச் செய்திட்ட சாதனைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. அவற்றில் சில துளிகள் மட்டுமே இவை.


ஆசிரியர்களுக்கும் மாணவ- மாணவியருக்கும் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, ஊக்கப்படுத்தியதன் பயனாக, 1996-97ஆம் கல்வியாண்டில் 55 சதவிகிதமே இருந்த மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 2000- 2001ஆவது கல்வி ஆண்டில் 78 சதவிகிதத்தைத் தொட்டது. பல கோடி ரூபாய் செலவில் 250க்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன. 1,767 இடைநிலை ஆசிரியர்கள் உள்பட 2.020 ஆசிரியர்கள் பின்னடைவு பணியிடங்களில் அமர்த்தப்பட்டனர். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும், கணிப்பொறிக் கல்வி நடைமுறைக்கு வந்ததுடன், 500

கணிப்பொறிகள் வழங்கப்பட்டு இணையதளக் கல்வியும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஏழை எளிய மக்களின் கனவை நினைவாக்கும் வண்ணம் 102 ஆசிரியர்களைக் கொண்ட 30 மழலையர் (LKG-UKG) வகுப்புகள் தொடங்கப்பட்டன.


சென்னை மாநகரைக் ‘குப்பையில்லா நகரமாக்கிட, துப்புரவுப் பணிகளில் நவீன ரக இயந்திரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, அதுநாள் வரை, 450 லாரிகள் மூலம் நாளொன்றுக்கு 1,836 மெட்ரிக் டன் அளவிற்குக் குப்பைகள் சேகரிக்கப்பட்ட நிலை மாறி 790 லாரிகள் மூலம் தினசரி 3,158 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு The Clean City எனும் பெயரைச் சென்னை பெற்றது.


சென்னை நகரின் தோற்றம் முதல் 1996ஆம் ஆண்டு வரை, 663 கி.மீ. நீளமே மழை நீர் வடிகால்வாய்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன. தளபதி பொறுப்பேற்ற ஐந்தாண்டுக் காலத்தில் பயனற்றுக் கிடந்த 88 கி.மீ. அளவுள்ள கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதுடன், 135 கி.மீ தூரத்திற்குப் புதிய கால்வாய்களும் கட்டி முடிக்கப்பட்டன. ஆக, 77.44 கோடி ரூபாய் செலவில் 223 கி.மீ. நீளத்திற்குப் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு, சாலைகளில் பெருக்கெடுத்தோடும் மழைநீரால் மக்களுக்கு ஏற்படும் இன்னல் தடுக்கப்பட்டது.


சென்னையில் 102 கி.மீ. நீளமுள்ள பேருந்து சாலைகளில், புதிதாகச் சாலைகளையும் நடைபாதைகளையும் அமைத்தல், பழையவற்றைப் பராமரித்தல் போன்ற 1156 பணிகள் 8167 கோடி ரூபாய் செலவிலும், இதனைப் போன்றே சென்னையின் 2.023 கி.மீ. நீளமுள்ள உட்புறச் சாலைகளில் 10.818 பணிகள் 139.32 கோடி ரூபாய் செலவிலும் நிறைவேற்றப்பட்டன. இதனால் மக்களின் வாகனப் போக்குவரத்து மகிழ்ச்சிகரமாய் அமைந்தது.


போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த சென்னை நகர மக்களின் அவலத்தை நீக்கும் பொருட்டு, பீட்டர்ஸ் சாலை, பாந்தியன் சாலை, சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட ஒன்பது சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. வணக்கத்திற்குரிய தளபதி அவர்களின் நேரிய பார்வையில் இப்பணிகள் நடைபெற்றதன் பயனாய், பாலங்கள் விரைந்து கட்டி முடிக்கப்பட்டதுடன், அதற்கான மதிப்பீட்டு தொகையான 94.60 கோடி ரூபாயில், 60.78 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு, 33.72 கோடி ரூபாய் மக்களின் பணம் மீதமாகி மாநகராட்சியின் கருவூலத்திற்கே திரும்பச் சென்றது. அவரது வாழலற்ற நிர்வாகத்திறனுக்குச்

சான்றாய் அமைந்து மக்களின் பாராட்டைப் பெற்றது.


மேம்பாலங்கள்:


மேயராகச் செய்த சாதனைகளுக்காக "நவீன சென்னை நகரத்தின் தந்தை" என்று போற்றப்படுபவர் தளபதி மு.க. ஸ்டாலின். சிங்காரச் சென்னை என்ற முழக்கத்தை முன்னெடுத்து அதை மக்களிடையே பரவலாக்கினார். சென்னை நகரத்தின் சாலைகள் புதுப்பொலிவு பெற்றன. மிகப்பெரிய மேம்பாலங்களைக் கட்டி, சென்னை நகரத்தின் நெரிசலுக்குத் தீர்வு கண்டார். இவரது ஆட்சியில், 9 பெரிய மேம்பாலங்களும், 49 குறும் பாலங்களும் கட்டப்பட்டது. இதுதவிர 18 முக்கியச் சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான சென்னை மெரினாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது.


சென்னை மாநகரில் 10 மேம்பாலங்கள்:


இதேபோல், சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுத்தவர் தளபதி ஸ்டாலின் மட்டுமே. அவரது பதவிக் காலத்தில், நெரிசல் மிகுந்த 10 சாலைகளில் மேம்பாலங்கள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, பதவிக்காலம் முடியும் முன்பே,


1. பீட்டர்ஸ் சாலை – கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு,

2. பீட்டர்ஸ் சாலை – வெஸ்ட்காட் சாலை சந்திப்பு,

3. பாந்தியன் சாலை – காசா மேஜர் சாலை சந்திப்பு,

4. புரசைவாக்கம் நெடுஞ்சாலை – ஆண்டர்ஸ் சாலை சந்திப்பு,

5. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – இராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு,

6. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – டி.டி.கே சாலை சந்திப்பு,

7. டி.டி.கே.சாலை – சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு,

8. சர்தார் பட்டேல் சாலை – டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பு,

9. சர்தார் பட்டேல் சாலை – காந்தி மண்டபம் சாலை சந்திப்பு

ஆகிய 9 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டன. மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதி மீதம் இருந்தது. தலைவர் ஸ்டாலின் அவர்களது நிர்வாகத் திறமை, நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு இதுவே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில், இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த ஒரு மாநகராட்சியும் இத்தகைய மேம்பாலங்களைக் கட்டி முடித்ததில்லை.


10-வதாகக் கட்டிமுடிக்கப்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலம் பின்னர்த் திறந்துவைக்கப்பட்டது. இன்று, சென்னை மக்கள் ஓரளவேணும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிகிறதென்றால், அதற்கும் மு.க.ஸ்டாலின் மட்டுமே காரணம். தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பாலும் சாதனைகளின் பலனாகவும் 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் சென்னை மக்களால் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வணக்கத்திற்குரிய மேயராகப் பணியாற்றிய தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் மணிமகுடத்தில் இடம் பிடித்த முத்துக்களில் ஒன்றிரண்டே இவை.சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின்

1984 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த தளபதி ஸ்டாலின் அவர்கள், இதுவரை ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதில் 4 முறை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், இரண்டு முறை கொளத்தூர் தொகுதியிலும் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறார்.

தமிழகச் சட்டமன்றத்தில் அவர் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செவ்வனே நடத்திக்காட்டி இருக்கிறார். உள்ளாட்சித் துறை அமைச்சர், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர், துணை முதலமைச்சர் எனப் பொறுப்புகளில் அவரது பணிகள் மிகச்சிறப்பானவை.


அவர் சாதனைகளில் சில:

-> ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை 30/01/2007 அன்று தொடங்கி 11/06/2009 அன்று முடிக்கப்பட்டது.

->தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் 26/02/2008 அன்று தொடங்கப்பட்டது.

-> சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 10/06/2009 அன்று தொடங்கப்பட்டது.

->அருந்ததியர் மக்களுக்கான 3% உள் ஒதுக்கீடு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டது. அதைத் தீர்மானமாக 29/05/2009 அன்று சட்டசபையில் நிறைவேற்றியவர் தளபதி மு.க.ஸ்டாலின்.

-> சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் 2010 இல் நிறைவேற்றப்பட்டது.

-> முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் 1989 இல் கலைஞரால் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு தளபதி ஸ்டாலின் அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது.(மெட்ரோ ரயில் மேற்பார்வையில் அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின் )


ஏற்றமிகு எதிர்க்கட்சித்தலைவர்:

கடந்த பத்தாண்டுகளாக 2011-2021 திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சியை ஆளும் கட்சி என்று சொல்லும் வகையில், செயல்படாமல் இருக்கும் அதிமுக அரசை செயல்பட வைக்கும் கட்சியாகத் தி.மு. கவும் செயல்பட வைக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.


2006 - 2011 ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலைஞர் ஆட்சி, தனது தேர்தல் வாக்குறுதிகளில் தந்ததைத் தாண்டி சாதனைகளைப் படைத்துக்காட்டியது. ஆனாலும், 2011 ஆம் தேர்தலில் தி.மு. க விற்குத் தோல்வியே கிடைத்தது. பல காரணங்களைச் சொல்லலாம். அதில், 2ஜி ஊழல் குற்றச்சாட்டு ஒரு முக்கியக் காரணம். 2ஜியை காரணம் காட்டி மோடியை உயர்த்திப் பிடித்து, காங்கிரஸ் ஊழல் கட்சி என்பது போல நாடகமாடினர் வடநாட்டு ஊடகங்கள். அதற்குத் துணை போனார்கள் மதவாதிகள். 2ஜி வழக்கை மானமிகு ஆ.ராசா சுக்குநூறாக உடைத்து விடுதலை பெற்றார். ஆனால், நாடு அதற்குள் படுபாதாளத்திற்குள் பாஜகவால் தள்ளப்பட்டு இருந்தது.


அதேபோல, தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசாங்கம், கலைஞர் கொண்டுவந்த ஒவ்வொரு திட்டத்தையும் முடக்குவதிலேயே அக்கறை காட்டியது. அனைத்து மாணவர்களுக்கும் சரிசமமான கல்விமுறையைக் கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட சமச்சீர் பாடத்திட்டத்தைத் தனியார் பள்ளிகளின் நலனுக்காக ஜெயலலிதா அரசு நிராகரித்தது. கலைஞர் கட்டிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, திருமண மண்டபமாக்க முயற்சித்து, பிறகு எழுந்த எதிர்ப்பால் கைவிட்டது. ஆனால், ஆசியாவிலேயே பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கட்டிமுடிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பயன்பாட்டுக்கு உதவாமல் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தது அரசு. கலைஞர் கட்டிய புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா பின்னாளில் அதற்குச் சொந்தம் கொண்டாடினார். இப்படி ஆக்கும் திட்டங்களை விட, அழிக்கும் திட்டங்களையே அதிகம் செய்தார்.


ஒருகட்டத்தில் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டால் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. அப்போது முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதிமுக அரசு செயல்படாத அரசாகவே மாறியது. பிறகு, ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றார். ஆயினும், ஒரு மாற்றமும் இல்லை. அவர் கொடநாட்டில் ஓய்வுக்குச் சென்ற நாட்களே அதிகமாக இருந்தது.


ஜெயலலிதாவின் செயல்படா தன்மைக்கு 2015 சென்னை பெருமழை ஒரு சான்றாகும். ஒரு முதலமைச்சரை அதிகாரிகள் தொடர்பு கொள்ளமுடியாத நிலை இருந்தது. விளைவு, நள்ளிரவு, செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.


இப்படி அவலமான ஒரு ஆட்சியை ஜெயலலிதா கொடுத்தார். ஆயினும், 2016 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டது.


நமக்கு நாமே:


2016 பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் 89 இடங்களைப் பெற்றது. 1.1 சதவிகிதத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தது. 2011 தேர்தலில் திமுக 23 இடங்களையே பெற்றிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தளபதி ஸ்டாலின் அவர்கள் "நமக்கு நாமே" என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்களின் பிரச்சனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு, அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
89 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக்கழகம், சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது. தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் அனைத்திற்கும் முதல் குரலாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குரலும் ஒலித்தது.

ஜல்லிக்கட்டு


பொதுமக்கள் முன்னின்று சென்னை மெரினாவில் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குத் தி.மு.கவின் ஆதரவைத் தந்தது மட்டுமில்லாமல், அதிமுக அரசின் இரட்டை வேடத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டினார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சனையில் போது வெளியான அவர் அறிக்கை ஒன்று..


ஜல்லிக்கட்டு விசயத்திலும் மாநில அரசு பிரச்சனையை எளிமையாகத் தீர்க்காமல் மாபெரும் போராட்டம் உருவாகத் தான் வழிவகைச் செய்தது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம், அதுவும் நான்கு நாட்களில் அணைக்க வேண்டுமென்று உத்தரவிட்டபோது, அதை அப்பொழுது ஏற்றுக்கொண்டு, ஆனால், அதற்குப்பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவு போடுவதற்கு உரிமை கிடையாது என்று மத்திய அரசு அந்த விஷயத்தில் சொல்லுகிறபோது, ஏன் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்பது தான் கேள்வியாக இருக்கிறது. ஆகவே, மத்திய அரசைப் பொறுத்தவரையில், ஜல்லிக்கட்டு விஷயத்தில் இரட்டை வேடம் போடக்கூடிய நிலைதான் இருக்கிறது எனத் தளபதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.


விவசாயிகள் பிரச்சனை:
இந்தியாவில் விவசாயிகளின் பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாகத் திராவிட முன்னேற்றக்கழகமும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகின்றனர்.

புதிய வேளான் கொள்கையை ஆதரித்த கட்சி அதிமுக. அதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் விமர்சித்து வருகிறார். கார்பரெட்டுகளிடம் விவசாயத்தைத் தாரைவார்க்கும் இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு அதிமுக நாடகம் ஆடுகிறது என்கிற குற்றச்சாட்டை திமுகத் தலைவர் மு. க ஸ்டாலின் வைக்கிறார். பழனிசாமி அரசு விவசாயிகளுக்கு எதிராக வாக்களித்துவிட்டு, நாங்கள் விவசாயிகளின் நண்பன் என்று நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஸ்டாலினுக்கு விவசாயத்தைக் குறித்து என்ன தெரியும் என்று பழனிசாமி கேட்டதற்குப் பதிலடியாக, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய, ஏழாயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கலைஞர் அவர்களின் மகன் என்கிற தகுதி ஒன்றே போதும் விவசாயிகளின் பிரச்சனையை அறிந்துகொள்ள என்று மு.க. ஸ்டாலின் பதிலடி தந்தார்.

மதவாதத்திற்கு எதிரான குரல்:

இந்திய ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சியாக மதசிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை/ செயல்பாடுகளைக் கொண்டிருப்பதைத் தி.மு. க தலைவர் தொடர்ச்சியாக எதிர்த்தும்/ விமர்சனம் செய்தும் வருகிறார்.


மாட்டிறைச்சிக்குத் தடை, பாபர் மசூதி இடிப்பு வழக்கு, குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு உரிமை பறிப்பு எனத் தொடர்ச்சியாகச் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மோடி அரசைக் கடுமையாக எதிர்த்து வருபவர் திமுகத் தலைவர் மு.க. ஸ்டாலின்.


குடியுரிமை சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்திய திமுக 2 கோடி கையெழுத்தைப் பெற்று அனுப்பியது.


மாநில உரிமைகள் பறிப்பு:

தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கென இருந்த தனி அடையாளங்கள் சிதைக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு, சமஸ்கிருத/ இந்தி திணிப்பு, நவோதயா பள்ளிகள், கல்வி நிலையங்களில் ஒன்றிய அரசின் தலையீடு, ஆளுநர் மாநில உரிமைகளில் தலையீடு எனப் பல்வேறு பிரச்சனைகளைத் தந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு அதிமுக அரசாங்கமோ எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அப்போதெல்லாம், உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல்கொடுப்போம் என்கிற கலைஞரின் குரலாய் திமுகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களே ஒலித்துக்கொண்டிருக்கிறார்.


மக்கள் விரோத அரசாங்கங்கள்:


நீட் தேர்வினால் மாணவ செல்வங்கள் உயிரிழப்பு, ஓரிரவில் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பு, ஜி. எஸ்.டி வரியால் சிறு குறு தொழில்கள் முடக்கம், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனை, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என மக்கள் அன்றாட வாழ்விற்கே போராடும் நிலை தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் களத்தில் நிற்கும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாரு
2021 தேர்தல் களம் சூடாக இருக்கும் காலம் இது. தமிழகம் மீட்போம் என்று மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது பணியைத் தொடங்கிவிட்டார். அன்றாடம் அவர் லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்கிறார். மக்களும் அவரைத் தங்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். அவரிடம் தங்கள் குறைகளைச் சொல்லி அழுகின்றனர். தங்களை மீட்க வந்த இரட்சகனாக மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. அது ஒவ்வொரு கூட்டங்களிலும் அவரிடம் பேசும், அவருடன் நின்று படம் எடுத்துக்கொள்ளும், அவரை அன்பொழுக பார்க்கும் பார்வையிலும் பிரதிபலிக்கிறது. அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று மக்கள் உணர்ச்சியோடு தீர்மானம் போடுவதில் உதயசூரியனின் வெளிச்சம் தெரிகிறது.


உங்களது பிரச்சனைகளை நூறு நாட்களில் தீர்ப்பது இந்த ஸ்டாலின் கடமை என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்து இருக்கிறார். விடியலை நோக்கி தமிழகம் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாரு என நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கிறார்கள்.


இது வாழ்வா? சாவா? தேர்தலில்லை. தமிழகம் மீட்கப்படுமா? இல்லையா? என்பதைச் சொல்லப்போகும் தேர்தல் என்று ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

அது உண்மைதான். தமிழகத்திற்கு ஸ்டாலின் தேவை. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி தேவை. கடந்த பத்தாண்டுகளில் விட்டுப்போன உரிமைகளை மீட்க, மீண்டும் தமிழ்நாடு சமூகநீதி பாதையில் வெற்றிநடை போடத் தேவை இங்கே "திராவிடத்தின் ஆட்சி", "கலைஞரின் ஆட்சி". அதை நமக்குத் தரப்போவது திராவிட நம்பிக்கையான "மு.க. ஸ்டாலின்" தான்.


ஆயிரமாண்டு காலப் பகையுணர்வு இன்னும் விட்டுப்போகவில்லை என்பதைத் தான் 2016 ல் ஜெயலலிதா இறந்துபோன பின்னான காட்சிகளும், 2018 ல் கலைஞர் இறந்தபோது தெரிந்த வன்மமும் காட்டுகிறது.


தமிழினத்திற்கு இனி ஆளில்லை என்று ஆதிக்கவாதிகள் கொக்கரித்துக்கொண்டிருக்கும் போது, "நானிருக்கிறேன்" என்று எழுந்து நின்று பாசிச சக்திகளை 2019 தேர்தலில் தலைவர் மு.க ஸ்டாலின் விரட்டிக்காட்டினார். இன்னும் இங்கே ஆரிய - திராவிடப் போர் தான் நடக்கிறது என்பதைக் கடந்த சில ஆண்டுகளில் பல தமிழர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் இன்று தலைவர் மு.க. ஸ்டாலினின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள். அவர்களின் திராவிட நம்பிக்கையை "மு.க. ஸ்டாலின் எனும் நான்" என்று சொல்லப்போகும் நாள் மெய்ப்படுத்தும்!


-ராஜராஜன் ஆர்.ஜெசென்னை என்கிற அன்னையின்

ரத்தநாளங்கள் உனது பாலங்கள்!

வாகனங்கள் எல்லாம்

ஒரு வேளை தம் வரலாற்றை

எழுத ஆரம்பித்தால்

பிள்ளையார் சுழியாய் - உன்

பெயரைத்தான் போடும்!


கவிஞர் விவேகா


No comments:

Post a Comment