Sunday 28 February 2021

சென்னை மேயர் ஸ்டாலின் - பாலகுமார் பா.

சென்னை மேயர் ஸ்டாலின் - பாலகுமார் பா.


சிங்காரச் சென்னை! சிங்காரச் சென்னை! என்று அதிகமாகப் பலர் கூற கேட்டுக்கொண்டிருக்கிறோம். என் போன்ற இன்றைய இளைஞர்கள் அதிகம் சிலாகித்துச் சொல்லும் சொல்லாக “சிங்காரச் சென்னை” இருக்கின்றது. எப்படிச் சென்னை என்று சொன்னாலே அதற்கு முன்னொட்டுச் சொல்லாக “சிங்கார” என்று ஒட்டிக் கொள்கிறது என்று தேடும் பொழுது, நமக்கு ஆச்சரியத்தையும் ஆளுமைத் திறன் கொண்ட, நிர்வாகத்திறன் மிக்க ஒரு நபரை அடையாளம் காட்டுகிறது அந்தத் தேடல்.


“எனக்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் விதமாகவும் வாக்களிக்காதோர் வாக்களிக்காமல் விட்டோமே என்று எண்ணும் படியாக என் பணி இருக்கும்.”


1996 ஆம் ஆண்டுச் சென்னை மாநகராட்சியின், 37-வது மேயராக 44 வயதில் மு.க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட போது இவ்வாறு கூறியிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற சிறப்பும் அவரையே சாரும்.

மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் தன் கனவான “சிங்காரச் சென்னை” என்ற முழக்கத்தோடு களமிறங்குகிறார். அவர் ஊடாகவே அச்சொல் மக்களிடம் பரிச்சயமானது. நிறையப் பேர் தங்கள் கனவுகளுடன் வந்திறங்கும் பரபரப்பான நகரம் தான் சென்னை. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களானாலும் சரி வெவ்வேறு வெளிநாடுகளுக்குச் செல்வதானாலும் சரி சென்னையைத் தொட்டுவிட்டுத் தான் செல்ல வேண்டும். அதே போலத் தன் அன்றாட வாழ்விற்கான பொருளாதாரத்தைத் தேடி ஓடுபவர்களாகட்டும், அனைவரின் கனவுகளைத் தாங்கிக் கொண்டு பயணிப்பதாகத் தான் சென்னை மாநகரம் உள்ளது. அம்மாநகரம் 1973 லிருந்து 1996 வரையிலான 23 ஆண்டுகள் பிரதிநிதிகள் இல்லாமல், போதிய பராமரிப்பின்றி மக்கள் தினசரி போக்குவரத்து நெரிசலாலும், மழைக்காலங்களில் வீடுபுகும் மழை நீராலும் நோய்த் தொற்றுக்குள்ளாகித் துன்பப்பட்டுக் கிடந்தனர். அந்தக் காலகட்டத்தில் தான் மிகப்பெரிய சவால்களோடு, தன் கனவான சிங்காரச் சென்னை - யை கட்டமைக்கக் களத்திற்கு வருகிறார்.


மேம்பாலங்கள்

மேம்பாலங்கள் மற்றும் உட்புறச் சாலைகள் மேம்பாடு தளபதி அவர்களின் ஆளுமை மற்றும் நிர்வாகத் திறனால் சென்னையில் 10 - க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள், 49 குறும்பாலங்கள் கட்டப்பட்டன. இது தவிர 18 முக்கியச் சந்திப்புகளில் பூங்காக்கள், நீரூற்றுகள் மற்றும் 84 - க்கும் மேற்பட்ட பூங்காக்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்பட்டுப் புதுப்பொலிவு பெற்றது, என்று பட்டியல் நீள்கிறது.


மேம்பாலங்கள் அனைத்தும் வெளிநாட்டுத் தொழில் நுட்பத்தால், அமைப்பிலும் தரத்திலும் தன்னிகரின்றி நிற்கும் படியாக எழுப்பப்பட்டது. அதற்குச் சாட்சியாகக் காந்தி மண்டபம் அருகில் இருக்கும் மேம்பாலத்திற்கு “இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃ பிரிட்ஜ் இன்ஜினியர்ஸ்” என்ற அகில இந்திய அமைப்பால் முதல் பரிசு அளிக்கப்பட்டது. மு.க ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் திறமையைப் பறைசாற்றும் விதமாக மேலுமாவது, சென்னை மேம்பாலங்கள் கட்டப்பட்ட பொது போக்குவரத்துத் தடை செய்யப்படவில்லை.


பாலங்களில் கீழுள்ள பகுதிகளை யாரும் ஆக்கிரமித்து விடாதபடி வாகனம் நிறுத்தத்திற்குப் பயன்படுத்தியது. பாலங்கள் கட்டப்படும் பொழுது தோண்டப்படும் குழிகளில் பலவிதமான கேபிள்கள் தட்டுப்படுவது இயல்பான ஒன்று தான். அதனால் பணிகள் முடங்கி விடக்கூடாது என்பதில் அதிகக் கவனம் கொண்டு அந்தந்த துறைகள் சார்ந்த அதிகாரிகளை நேரில் அழைத்துக் களத்தில் நின்று பணிகளை முடுக்கி விட்டார். நிதி மேலாண்மைக்கு ஓர் சான்றாக, பாலங்கள் அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்டுத் திறக்கும் தறுவாயில், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மீதமிருந்தது. மாநகரின் உட்புறச் சாலைகள் மேம்பாட்டிற்காக அதற்கு முன் இல்லாத வகையில் கூடுதல் நிதி ஒதுக்கியது. பேருந்து வழித்தடங்கள் உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இவை அனைத்தும் தளபதி அவர்களின் நிர்வாகத் திறமையையும் நிதி மேலாண்மையையும் காட்டுவதே அன்றி வேரில்லை.


கல்வி

பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்ட பெற்றோர்கள் யாவரும் மாநகராட்சிப் பள்ளிகளினை நாடுவதில்லை என்ற நிலை இருந்தது. அந்நிலையிலிருந்து மாநகராட்சி பள்ளிகளை மீட்டெடுக்க நிதி ஒதுக்கி பள்ளிகளின் தரத்தை மற்ற கல்வி நிலையங்களைக் காட்டிலும் உயர்த்தினார். மண்டலத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம் 30 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மு. க ஸ்டாலின் அவர்கள் பேசும்போது,


“சிங்கார சீருடை அணிந்து நமது குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற பல்லாயிரக்கணக்கான குடிசைவாழ் ஏழை மக்களின் எண்ணக் கனவுகளை நனவாக்கி, நிஜமாக்கியது மாநகராட்சியின் மழலையர் பள்ளிகள்.”

என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் மாநகராட்சி சார்பில் 9 தொழில் பிரிவுகளில் சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது.


விர்ச்சுவல் கிளாஸ் ரூம் வகுப்புகள் உருவாக்கப்பட்டது.

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்கப்பட்டது.

தீவிர மாணவர் சேர்க்கை இயக்கம், ஆசிரியர்கள் அறிவொளி இயக்கத்தோடு சேர்ந்து வீடு வீடாகச் சென்று ஏறக்குறைய 18 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்தனர். இதன் மூலம் மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்து இருக்கும் குடிசைவாழ் மக்கள் பயனடைந்தனர்.


சுகாதாரம்


“குப்பைகளற்ற மாநகரம்” அமைப்பதற்காகச் சென்னையில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம் தளபதி அவர்கள். குப்பைகளை அள்ளும் பணிகளை நவீனப் படுத்தினார். குப்பைகள் அதிகம் சேரும் மண்டலங்களாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி கோடம்பாக்கம் கண்டறியப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுக் குப்பைகள் விரைவாக அகற்றப்பட வழிவகுத்தார். குப்பைகளை மட்டுமல்லாமல் சாலைகளையும் தூய்மைப் படுத்தும் வேலையில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சிறியது முதல் பெரியது வரையிலான குப்பைத்தொட்டிகள் வீதிகளெங்கும் வைக்கப்பட்டன. அதில் சேரும் குப்பைகள் பெரிய வண்டிகள் கொண்டு இடமாற்றம் செய்யப்பட்டு நவீன இயந்திரங்கள் கொண்டு அளிக்கப்பட்டது. இந்தச் சீரிய பணிகளால் சென்னை வாழ் மக்கள் அதிகாலை புது வெளிச்சத்துடன் தூய்மையையும் உணர்ந்தனர். இதன் மூலம் சென்னைக் குப்பைகளற்ற சிங்காரச் சென்னையாக மாறியது என்று சொன்னால் அது மிகையாகாது.


மழைநீர் கால்வாய்கள்

1996 -க்கு முன்பாகச் சென்னையில் மழை நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்தன. அதன் விளைவாகச் சாலைகளில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகிச் சிரமப்பட்டனர், மேலும் நோய்த்தொற்றுக்கு ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர். தளபதி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு அவரது சீரிய பணியால் பழைய மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1999 - 2000 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் 22 கோடி செலவில் 53 கிலோமீட்டர் வரையிலான புதிய மழைநீர் கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூர்வாரப்படாமல் இருந்த பழைய, பெரிய கால்வாய்கள் தூர்வாரப்பட்டது, உதாரணமாக நந்தனம் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், டிவிஎஸ் கால்வாய், ஐசிஎப் கால்வாய், டிரஸ்ட்புரம் கால்வாய் மற்றும் செல்லம்மாள் காலேஜ் கால்வாய்கள் இதிலடங்கும்.


இவை அனைத்தும் தேடலில் கிடைத்த சிறு தகவல்களே. இதுபோன்று இன்னும் எண்ணிலடங்கா சாதனைகளும், தளபதியின் உழைப்பும் சிங்கார சென்னையின் பின்னால் உள்ளது. இப்போது சொல்லுங்கள் “நவீன மாநகரத்தின் தந்தை” என்று மு. க ஸ்டாலின் அவர்கள் அழைக்கப்படுவதில் பொருள் உண்டா? இல்லையா? அவர் சொன்னது போல வாக்களித்தோர் பெருமைப்படும் விதமாகவும் வாக்களிக்காதோர் வாக்களிக்காமல் விட்டோமே என்று எண்ணும் படியாகவும் அவர் பணி இருந்ததால் தான், மீண்டும் சென்னை மக்கள் 2001 ஆம் ஆண்டு ஸ்டாலின் அவர்களையே மேயராகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அப்போதைய அம்மையார் ஆட்சியால் கொண்டு வரப்பட்ட ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தினால், மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற பணியைத் தொடர்ந்தார்.


-பாலகுமார் பா."மிசா" என்ற தீயில் குளித்திராவிட்டால் இன்று "மேயர்" என்ற தங்கம் இல்லை.


"அடக்குமுறை" என்ற உளியால் செதுக்கப்பட்டிருக்காவிட்டால் இன்றைக்கு "ஸ்டாலின்" என்ற சிற்பம் இல்லை.


பள்ளியறை ஆளவேண்டிய வயதில் சிறையறை ஆண்டதாலும், கனவுகளை எண்ணவேண்டிய வயதில் காயங்களை எண்ணியதாலும் துணிவு-பணிவு- கனிவு கொண்ட ஆற்றல் மறவராகக் காலம் தளபதி  ஸ்டாலினை கனியவைத்திருக்கிறது,


- கவிப்பேரரசு வைரமுத்து
No comments:

Post a Comment