Sunday 28 February 2021

அரசியல் பண்பாளர் மு.க.ஸ்டாலின் - ராஜராஜன் ஆர்.ஜெ

 அரசியல் பண்பாளர் மு.க.ஸ்டாலின் - ராஜராஜன் ஆர்.ஜெ


மிழக அரசியலில் ஒரு உயரிய பண்பாளர் மு.க. ஸ்டாலின் என்று சொன்னால் அது மிகையில்லை. மக்களை அணுகுவதிலும், கட்சித் தொண்டர்களை அணுகுவதிலும் அவர் காட்டும் இணக்கம் நெகிழ்ச்சி தரக்கூடியது. அதேபோல, அவரது சக அரசியல் தலைவர்களை மதிக்கும் மாண்பு, தமிழகம் சில காலம் இழந்திருந்த அரசியல் நாகரீகத்தை மீட்கக்கூடியது. 


‘இதோ ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப்போறாரு’ எனக் கூட்டங்களில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார். தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களைச்  சந்திக்கிறார். அவர்களோடு உரையாடுகிறார். அவர்களின் பிரச்சனைகளைக் காதுக்கொடுத்து கேட்கிறார். அவர்களின் மனுக்களை வாங்குகிறார். அந்த மனுக்குளுக்கான அத்தாட்சியாக ஒரு சீட்டை அவர்களிடம் தருகிறார். ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்கிற உறுதியை மக்களுக்கு தலைவர் ஸ்டாலின் தந்திருக்கிறார்.


தாயுள்ளம் கொண்ட தலைவர் 


மக்களும் அவர்களது குறையை உரிமையுடன் சொல்கிறார்கள். சில குறைகள் உண்மையில் மனவேதனை தரக்கூடியதாக இருக்கிறது. 


சிலிண்டர் வெடித்ததால் தாயையும் இழந்து, வீட்டையும் இழந்த ஒரு பெண்மணி, அரசாங்க உதவி எதுவும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்கக் கூறினார். 


இன்னொரு பெண்மணி, ஓமான் கடலில் தொலைந்த தனது உறவினர்களின் உடலும் கிடைக்கவில்லை.,அதற்கான டெத் சர்டிபிகேட்டோ, நிவாரணமோ கிடைக்கவில்லை என்று கதறினார்.


இன்னொரு ஆதரவற்ற விதவை பாண்டிச்செல்வி  என்கிற பெண்மணி, தனது மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துக்கொண்டு அரசு உதவி எதுவுமில்லாமல் மிகவும் சிரமப்படுவதாகக் கூறினார்.


திமுக தலைவர் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் கேட்டு, இதற்கெல்லாம் திமுக ஆட்சி அமையும் வரை காத்திருக்கத்தேவையில்லை, உடனடியாகக் கழகம் தீர்க்கும் என்று உறுதியளித்தார். மழைவெள்ளத்தில் வீடு சேதமடைந்த பெண்மணிக்கு திமுக உதவும் என்று சொன்ன வேளையில், அரசு உடனே அவரைத் தொடர்பு கொண்டு உதவியது. அப்பெண்மணி திமுக தலைவருக்குத் தனது முதல் நன்றியைத் தெரிவித்தார். ஓமான் கடலில் உறவுகளைத் தொலைத்த பெண்மணிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் உதவிட உறுதியளித்தார். மாற்றுத்திறனாளிப் பிள்ளையுடன் சிரமப்படும் பெண்மணிக்குத் திமுக மாவட்ட செயலாளர்கள் மூலம் உதவினார். இரண்டு லட்சம் கொடுக்கப்பட்டது. கழக ஆட்சியில் பாண்டிச்செல்விக்கு அரசு வேலைக்கும் ஆவண செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இம்மாதிரியான மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனவுடன் உதவ வேண்டும் என்று பாண்டிச்செல்வி உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். 


இப்படி மக்கள் பிரச்சனைகளைத் தாயுள்ளம் கொண்டு உடனுக்குடன் தீர்க்கும் தலைவராக மு.க. ஸ்டாலின் இருக்கிறார்.


இந்தத் தாயுள்ளம் அவருக்கு புதிதில்லை. அவரது வரலாற்றை எடுத்துப்பார்த்தால், இதுபோன்று எண்ணற்ற சம்பவங்கள் இருக்கின்றன.


1989 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் தளபதி மு.க ஸ்டாலின். மக்களைச் சந்தித்த வண்ணம் இருக்கும் அவர், அந்த பகுதியில் இருக்கும் அமுதம் குடியிருப்புக்குச் செல்கிறார். அந்தப்பகுதியில் வாழும் மக்கள், தளபதியிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். உமர் யூனுஸ் என்பவருக்கும் ஹம்சா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்தக் குழந்தைக்கு இருதயத்தில் கோளாறு என்று கண்டறிந்த பின் அவர்கள் நிலைகுலைந்து இருக்கிறார்கள். அவர்களிடம் குழந்தையைக் காப்பாற்ற போதிய வசதி இல்லை. குழந்தையின் அறுவைசிகிச்சைக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர். தளபதி ஸ்டாலின் அவர்களும் உதவி செய்வதாக உறுதி அளித்தார். 


சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த பின்பு, முதல் வேலையாக முதலமைச்சர் நிவாரண நிதியும், பிரதமர் நிவாரண நிதியும் கிடைத்திட உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வெற்றிகண்டார். அத்துடன் நின்றுவிடவில்லை. தனிப்பட்ட முறையில் நண்பர்கள், கட்சி பிரமுகர்கள் பலரைத் தொடர்பு கொண்டு நன்கொடை கிடைத்திட வகை செய்தார். தானே முன்னின்று சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக முடிக்க உதவினார்.  இதயக்கோளாறு நீக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. சிறுவன் சையது ரஜபுதீன்  ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். 


இப்படி எண்ணற்ற விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். 


ஆங்கோர் ஏழைக்குக் கல்வி அறிவித்தல்!


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தைச் சார்ந்த மாணவர் அஜித்குமாருக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் பொருளாதாரசூழ்நிலையில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். தேர்வில் 1200 க்கு 1149 மதிப்பெண்கள் பெற்றதுடன் 196.5 கட் ஆப் பெற்றிருந்தார். திருச்சி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், அம்மாணவரால் சேர முடியவில்லை. இந்நிலையில் அஜித்குமாரின் நிலையை இந்து நாளிதழ் 1.8.2014 தேதி அன்று வெளியிட்டிருந்தது. இதைக்கண்ட தளபதி ஸ்டாலின் உதவிட முன்வந்தார். திமுக இளைஞரணி சார்பில் மருத்துவப் படிப்பு முடிகின்ற வரை மாணவர் அஜித்குமாரின் கல்விச் செலவை இளைஞர் அணியே ஏற்கும் என உறுதியளித்தார். தளபதி ஸ்டாலினுடைய இந்த மனிதநேயத்திற்குக் குடும்பத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். 


(முரசொலி 03.08. 2014)


மாணவி அனிதா லட்சுமிக்கு உதவி!


“தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி எனும் குக்கிராமத்தில் வசித்து வரும் ஏழை பட்டதாரி மாணவி அனிதா லட்சுமி ஊராட்சி சபைக் கூட்டத்தில் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிலுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.


(முரசொலி, 30.1.2019)


பார்வை மாற்றுத்திறனாளி பிரான்ஸ் தூதரகத்தில் 


படித்திட ஆசை இருந்தென்ன பயன், கண்ணில் பார்வை இல்லையே எனப் பரிதவித்த சென்னையின் ஏழைப்பெண் பெனோசெபின் இல்லம் தேடிச்சென்று தேறுதல் கூறி, வாழ்க்கையில் தேற வைத்தார் தலைவர் மு.க.ஸ்டாலின். ஸ்டாலினின் அன்பையும், ஆதரவையும் பெற்ற அப்பெண் இன்றைக்கு ஐ.எஃப்.எஸ் படித்துப் பிரான்ஸ் நாட்டுத் தூதரகத்தில் உயர்நிலையில் பணியாற்றுகிறார்.


தலைவரைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளி சாண்டியாகு 


தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், சாண்டியாகு எனும் பார்வை மாற்றுத்திறனாளி, “தலைவரின் குரலை வானொலியிலும் தொலைகாட்சியிலும் பார்த்து இருக்கிறேன். அவரை ஒருமுறை தொட்டுப்பார்க்கவேண்டும்” என்று சொன்னார். உடனே மேடையில் இருந்து இறங்கிவந்து சாண்டியாகுவின் கரங்களைப் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார் தலைவர் ஸ்டாலின்.


தலைவர் கலைஞர், மாற்றுதிராணிகளைச் சமூகத்தின் அங்கமாகப் பார்த்து, அவர்களுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். கலைஞரிடம் இருந்த அதே நம்பிக்கை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தலைவர் ஸ்டாலின் மீதும் ஏற்பட்டு இருப்பதை நாம் இந்தச் சம்பவங்களின் மூலம் உணரலாம். 


உடல் உறுப்பு தானம்!


தலைவர் ஸ்டாலின் தனது உறுப்புகளைத் தானம் செய்து இருக்கிறார். அதுகுறித்து வந்த பத்திரிக்கைக் குறிப்பு இதோ:


கேள்வி: நீங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளீர்கள். அதற்கு உங்களைத் தூண்டியது எது? அல்லது யார்?


பதில்: “மியாட் மருத்துவ மனையில் உடல் உறுப்பு தானம்" என்னும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க என்னை அழைத்து இருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எனது துணைவியார் உடல் உறுப்பு தானம் செய்வதாக முடிவு எடுத்து முன்கூட்டியே அதற்கான விண்ணப்பத்தினை மருத்துவனையில் பெற்றுப் பூர்த்தி செய்து அதை நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது எனக்கும் உந்துதல் ஏற்பட்டு என் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான முடிவை அந்த நிகழ்ச்சியிலேயே அறிவித்தேன்" என்று ஆனந்தவிகடன் வாசகர்களின் கேள்விகளுக்குத் தளபதி மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.


(முரசொலி 30.12.2012)


சிறந்த அப்பா: 


மு.க.ஸ்டாலின் குறித்து திருமதி. துர்க்கா ஸ்டாலின் (குமுதம் பேட்டி) 


குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுபோய் விடுவாங்க. குழந்தைகளை நான் குளிப்பாட்டினால் அவர் சாக்ஸ் போட்டுவிடுவாங்க, புத்தகங்களை எடுத்துவைப்பாங்க, வீட்டுப்பாடங்கள் சொல்லிக்கொடுப்பாங்க. ஒரு அப்பாவாக குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை சரியாக செய்வாங்க. குழந்தைகளுக்காக எல்லாமே செய்வாங்க. இரண்டு பிள்ளைகளுமே அப்பா செல்லம் தான். நான் படிக்கலான அடிப்பேன். அவங்க அடிக்கவே மாட்டார். என்னைப் போக சொல்லிவிட்டு, பொறுமையாக உட்கார்ந்து சொல்லிக்கொடுப்பார். காலையில் அலாரம் வைத்து எந்திரிச்சி பரீட்சைக்கு சொல்லிக்கொடுப்பாங்க. மார்க் குறைந்தாலும் திட்டமாட்டாங்க.


இரண்டு பேருமே அவர்களது காதலை அப்பாவிடம் தான் முதலில் சொன்னார்கள். அப்பாவிடம் சொல்லிட்டே என்னிடம் சொன்னார்கள். உதயா, அப்பாவிடம் தனியாக பேசவேண்டும் என்று சொன்னப்போது, ஏன் என்னை போக சொல்ற.. எதுவும் லவ்வா என்று கேட்டேன். அவர் சொன்னவுடன், அதுக்கு என்ன, உனக்கு பிடிச்சி இருந்தா கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னேன். பொண்ணுக்கும் அதே மாதிரி தான். அவங்க அப்பாகிட்ட தான் முதல்ல சொன்னிச்சி. என் கணவர் அடிக்கடி சொல்லுவார், நீயே தேடி இருந்தாலும், இப்படியொரு மருமகள், மருமகன் கிடைத்திருக்க மாட்டார்கள் என்பார்.


உடல் நலம் பேணுதல் 


தளபதி ஸ்டாலினை பொறுத்தவரை, தனது உடல்நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். எத்தனை வேலை இருந்தாலும், அவர் தனது அன்றாட வாழ்வில், உடற்பயிற்சியை அங்கமாக கொண்டிருக்கிறார். இருக்கும் இடம் மற்றும் சூழ்நிலை பொறுத்து உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அல்லது மிதிவண்டி பயிற்சி என மேற்கொள்வார். 





67 வயதிலும் இளமையாக அவர் தோற்றமளிக்க, அவரது உடல் நலம் பேணும் அக்கறையே காரணமாகும். இன்றைய இளைஞர்கள் அவரிடம் கற்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று! 


தொண்டர்களின் தலைவர் "உங்களில் ஒருவன்" மு.க.ஸ்டாலின் 


2021 தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகம் முழுவதும் தனது பயணத்தை ஆரம்பித்து மாவட்டம் தோறும் சென்றுகொண்டு இருக்கிறார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி தென்காசி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள ஸ்டாலின், அம்பைத் தொகுதியில் பிரச்சாரத்திற்காக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் திமுகவின் மூத்த நிர்வாகி பத்தமடை பரமசிவம் என்பவரின் இல்லம் இருப்பதை அறிந்து உடனடியாகக் காரைத் திருப்பச் சொல்லி அவரது இல்லத்திற்குச் சென்றார். ஸ்டாலினின் வரவை சற்றும் எதிர்பாராத பத்தமடை பரமசிவம், இன்ப அதிர்ச்சியில், உரிமையோடு ஸ்டாலின் கை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்று உபசரித்தார்.


மூத்த தொண்டர் ஒருவர், மகிழ்ச்சியுடன் தி.மு.க தலைவரின் கைகளை உரிமையோடு பற்றி வீட்டிற்குள் அழைத்துச்செல்லும் அந்தப் படம் இணையதளங்களில்  பரவலாக நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டது. “தி.மு.க குடும்ப கட்சி தான்” என மார்தட்டிச் சொன்னார்கள் உடன்பிறப்புகள். 


"உங்களில் ஒருவன்" என்பதை வார்த்தைக்காக மட்டும் தலைவர் ஸ்டாலின் சொல்வதில்லை. தி.மு.க என்பது தொண்டர்களின் இயக்கம் என்பதை அண்ணாவில் தொடங்கி கலைஞர்  வளர்த்து இப்போது ஸ்டாலின் அதை முன்னெடுத்துச் செல்கிறார். தொண்டர்களின் தலைவனாக மிளிர்கிறார்.  


ரஜினிகாந்த் பார்வையில் தளபதி



நடிகரான வாகை சந்திரசேகர் என்ற ஒரு தொண்டர், நமது மதிப்பிற்குரிய துணை முதல்வரைச் சந்திக்க வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கலைஞர் அவர்களும் உள்ளார். நமது துணை முதல்வர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கிறார். வாகை சந்திரசேகரன் அவர்களைக் கண்டதும் நமது துணை முதல்வர் எழுந்து நின்று வரவேற்கிறார். அவர் வந்ததும் அவரைக் கட்டித் தழுவி அன்புடன் பேசி வரவேற்று மகிழ்கிறார்.


இதையெல்லாம் பார்த்த ரஜினிகாந்த் திகைத்துப்போனார். இந்த நிகழ்ச்சியைப்பற்றி ரஜினிகாந்த் அவர்கள் மு.க. ஸ்டாலினைப்பற்றிய கட்டுரையில் குறிப்பிட்ட வண்ணம் அப்படியே தருகிறோம். படித்துப் பார்த்தால் உண்மையில் மெய்சிலிர்த்துப்போகும்.


"துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சந்திரசேகர் அவர்களைத் தழுவி அவரின் நலத்தையும் அவருடைய குடும்பத்தாரின் நலத்தையும் விசாரித்தார். இதிலே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் திரு. சந்திரசேகர் தி.மு.கழகத்தின் ஓர் உண்மையான தொண்டர். திரு. ஸ்டாலின் அவர்களோ துணை முதல்வர். இவர் தன்னுடைய கட்சித் தொண்டருக்குக் கொடுத்த மரியாதையைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். ஸ்டாலின் அவர்கள் காட்டிய அன்பையும் அரவணைப்பையும் கண்டு ஆச்சரியப்பட்டேன். மனத்திற்குள்ளேயே “தந்தைக்கேற்ற தனயன்" என்று நினைத்து என் இதயம் அவரை வாழ்த்தியது.


அவர் எல்லாப் புகழுடனும் மன நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் நீடூழிவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” இவ்விதமாக மதிப்பிற்குரிய தளபதி பற்றிக் குறிப்பிட்டிருந்தது கண்டு பெரிதும் மகிழ்வுற்றோம். இப்படி ஒரு பண்பாளரா என்று உண்மையில் வியப்புற்றோம்.


பாங்கொலி கேட்டுப் பேச்சை நிறுத்திய தளபதி மு.க. ஸ்டாலின்!


நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தாம்பரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, மசூதியிலிருந்து பாங்கொலி கேட்டவுடன் தளபதி ஸ்டாலின் தன்னுடைய உரையைச் சில மணித்துளிகள் நிறுத்திக் கொண்டார். இதன் காரணமாகத் தளபதி ஸ்டாலினுக்கு இஸ்லாமியப் பெருமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


(முரசொலி, 3.4.2014)


மதநல்லிணக்கம் பேசும் தலைவர் 


இந்துக்களின் எதிரி தி.மு.க என எதிரிகளால் பொய்யாக பரப்பப்படும் செய்திகளை எப்போதும் மறுக்கும் தி.மு.க தலைவர், தி.மு.கவில் பெரும்பான்மையாக இருப்பது இந்துக்கள் தான் என்றும், இந்துக்களுக்கு அதிக நன்மைகளைச் செய்த கட்சி தி.மு.க தான் என்றும் அடிக்கடி பதிலடி கொடுத்துவந்தார். 2021 தேர்தலின் போது, எதிரிகள் வேல் யாத்திரை நடத்துகிறோம் என்கிற பெயரில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்துக்கொண்டு இருந்தனர். 


திருத்தணியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது. அதை அவர் வாங்கிக்கொண்டார். 


இதைப் பொறுக்காத எதிரிகள் பொறும ஆரம்பித்தார்கள். 


குன்றக்குடி அடிகளாரை மகா சன்னிதானம் என்று போற்றியவர் தந்தை பெரியார்.


சாய்பாபா கலைஞரை வீடுதேடிச் சென்று நேரில் பார்த்தவர். கலைஞர் எப்போதும் சொல்வது, “கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது பிரச்சனையில்லை. கடவுள் ஏற்றுக்கொள்ளும்படி நாம் வாழ்கிறோமா என்பது தான் முக்கியம்”. 


ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொன்னது தான் திமுகவின் கொள்கை என இன்றைய தலைவர் மு.க. ஸ்டாலின் அனைத்து மதங்களையும் நல்லிணக்கத்துடன் பேணுவதில் அக்கறை காட்டுபவராக இருக்கிறார். ஆனால், ஆதிக்கவாதிகளுக்கு அது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.  


  



புத்தகக் காதலர்:


அப்பாவின் எந்தப் பழக்கத்தை நீங்கள் தக்கவைத்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


இரவு படுக்கைக்குப் போகும்போது அவர் கையில ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். அன்றாடம் நேரில் நூறு பேரையாவது சந்திச்சிடுவார். இது இரண்டையும் தக்கவைக்கணும்ன்னு நெனைக்கிறேன்.


- திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேட்டி (தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகம்) 


வீட்டிற்கு ஒரு நூலகம் இருக்கவேண்டும் என்பது அறிஞர் அண்ணா அவர்களின் எண்ணமாகும். ஆனால், கிராமங்களில் ஊருக்கு ஒரு நூல்நிலையம் இல்லாத நிலைதான் இருந்துவந்தது. இந்த நிலையை மாற்றித் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு நூலகம் அமைத்திட வேண்டும் என்ற திட்டத்திற்கிணங்க செயல்பட்டு நூலகம் இல்லாத ஊராட்சியே இல்லை என்ற நிலையை உண்டு பண்ணியவர் நமது மதிப்பிற்குரிய துணை முதல்வராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். 


"தம்மை சந்திக்கவரும் கழக உடன்பிறப்புகள், அணிவிக்கும் பொன்னாடை சால்வைகளுக்குப்பதிலாக நூல்களைப் பரிசளித்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்” என்று செயல் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், தளபதியார் அறிவித்தது கண்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரைப் பாராட்டியது.


நூல்களைத் தொண்டர்களிடம் இருந்து பெற்று, அதனை தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழ் பரப்பும் நூலகங்களுக்குத் தளபதியார் அனுப்பி வைக்கிறார். அண்மையில் துபாய்க்கு நேரில் சென்று விழா ஒன்றில் கலந்து கொண்டபோது, ஆயிரக்கணக்கான நூல்களைப் பரிசளித்தார் என்பதை நாம் அறிவோம். இன்றளவும் இந்தப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது, நடைபெறும்.


ஏனென்றால், ஒவ்வொரு நாளும், படுக்கையில் உறங்குகின்ற நேரம் வரையில் கைகளில், ஒரு நூலைப் படித்துக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தான் தளபதி ஸ்டாலின் அவர்களும் பயணிக்கிறார். 


செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் இந்தச் செயலை இந்து நாளிதழ் பாராட்டி எழுதியது.


பாரதி புத்தகாலயம் மேலாளர் திரு.நாகராஜன் குறிப்பிடுகிறார், "ஸ்டாலின் அறிவிப்பால் மார்ச் 1 ஆம் தேதி காலை 7.30 க்கே விற்பனையைத் தொடங்கி விட்டோம். மார்ச் 1 ஐ முன்னிட்டு 12 ஆயிரத்துக்குப் புத்தகங்கள் விற்பனை ஆயிற்று. 3 ஆயிரம் என்பதோடு இதை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்", என்றார். 


அண்ணாசாலை ஹிக்கின்போதம்ஸ் முதுநிலை மேலாளர் ஹேமலதா, "2 நாட்கள் சிறப்பு விற்பனை நாட்கள் என்று சொல்லலாம். உயர்ந்த தரமான புத்தகங்களையே தேர்வு செய்தார்கள். மார்ச் 1 ம் தேதி காலை 8 மணிக்கே எப்போது கடைதிறப்பீர்கள்? என்று கேட்டு ஒரு கூட்டம் கடைவாசலிலேயே நின்றது. இதற்குக் காரணமான திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" என்று குறிப்பிடுகிறார். 


"பலர் சென்னை சென்று வரும் செலவைக் கணக்கிட்டு புத்தகங்களைக் கூரியரில் வாங்கி அனுப்பினர்" என்று மதுரை நபர் குறிப்பிட்டதாகவும் இந்து நாளிதழ் பதிவு செய்கிறது. சென்னையில் எல்லா புத்தகக் கடைகளிலும் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாயின. இந்த ஆரோக்கியமான புத்தகங்கள் வாங்கும் பணி தொடரட்டும் என்றும் இந்து நாளிதழ் எழுதி இருந்தது.  


உலகப் புத்தக நாளையொட்டி, தளபதி ஸ்டாலின் அவர்களின் "உங்களில் ஒருவன் கடிதம்" மூலமாக, "ஊரெங்கும் நூலகங்களை உருவாக்குவோம் என்ற கடிதத்தில்,


"தலைவர் கலைஞர் அவர்களின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் அவரது பெற்றோர் முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையார் பெயரிலான நினைவு இல்லத்தில் உள்ள நூலகத்தை நான் திறந்து வைக்கும் பொறுப்பு கிடைத்தது. 1989 - 91 கழக ஆட்சிக்காலத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகம் இன்றுவரை செயல்படுகிறது."


"புதுக்கோட்டையிலுள்ள கழக அலுவலகத்தில் உள்ள நூலகத்தை ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட தேர்வுகளை எழுதும் மாணவர்களும் பயன்படுத்தி பலன் பெற்று வருகிறார்கள்."


"கழகக் கிளைகள் தோறும் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டது, அந்தப் பொன்னான காலம் போல மீண்டும் ஒரு வசந்த காலம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உங்களில் ஒருவனான என்னுடைய விருப்பம். மாவட்டக்கழக அலுவலகத்தில், கலைஞர் அறிவாலயத்தில், நல்ல முறையில் நூலகங்களை உருவாக்கி கழகத்தினரும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்தும் பணியைத் துவக்கவும், பின்பு நகர ஒன்றிய அளவில் கழக அலுவலகங்களில் நூலகங்களைத் தொடங்க முனைப்பு காட்டிட வேண்டும். அடுத்த உலகப் புத்தகநாளில் கழக அலுவலகங்களில் நூலகங்களில் இருப்பதையும், வாசகர்கள் அதைப் பயன்படுத்துவதும் நடைபெற்று வருகிறது என்ற இனிப்பான செய்தியை நானும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். "புத்தகங்கள் படிப்போம்! புதிய உலகம் படைப்போம்" என்று தளபதி கடிதம் எழுதியதை வைத்து புத்தகங்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்ந்துகொள்ளலாம். 


இதோ, கழகப் பாரம்பரியம் தொடரும் வகையில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 12-02-2021 அன்று வெளியிட்ட அறிக்கை:


எனக்கு நினைவுப் பரிசு தரும் தோழர்கள் சால்வைகள், பூங்கொத்துகள், மாலைகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டுப் புத்தகங்களைப் பரிசளிக்குமாறு வேண்டுகிறேன். ஏற்கெனவே அப்படி நீங்கள் எனக்கு அளித்த புத்தகங்களை அரியலூரில் தங்கை அனிதாவின் பெயரில் இயங்கும் நூலகம் உட்பட பல்வேறு நூலகங்களுக்கு வழங்கினேன். இப்படி நீங்கள் தரும் புத்தகங்கள் பலர் பயன்பெறும் வகையில் நூலகங்களுக்கு வழங்க ஏதுவாக இருக்கும்.


எளிமையே வலிமை என்பதை உணர்ந்து இணைந்து செயல்படுவோம். நம் தலைவர் அவர்கள் தலைமையில் கழக அரசை அமைப்போம். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆதிக்க-அடிமைக் கூட்டணி இருளை அடித்து விரட்டும் வரை விடியலை நோக்கிய நம் பிரச்சாரப் பயணம் தொடரும்.


அரசியல் என்றால் எச்சரிக்கக்கூடிய - பயமுறுத்தக்கூடிய நிலைமை உள்ளது!


மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி தளபதி மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பேசிய போது, "சில மாணவர்கள், அந்த மாணவர்களைப் பெற்றெடுத்திருக்கிற பெற்றோர்கள், தங்களுடைய மகன் படிக்க வேண்டும், பட்டதாரியாக வரவேண்டும், பல பொறுப்புகளை ஏற்க வேண்டும், நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது எதார்த்த நிலை. அது தவறல்ல. ஆனால் அதே நேரத்தில், "அவர்கள் அரசியலுக்குப் போகக் கூடாது. அரசியலில் அவர்கள் விழுந்துவிடக் கூடாது" என்று எச்சரிக்கக் கூடிய நிலைமை, பயமுறுத்தக்கூடிய நிலைமை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. அதையும் நாம் மறுத்திடவோ மறைத்திடவோ முடியாது. அந்த நிலையும் மாற வேண்டும்" என்றார். மேலும் பேசுகையில், 'மாணவர்களைத் தேடி அரசியல்வாதிகள் வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார். “1965ல் தமிழக ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக மாணவர்கள் போராட்டம்! அந்த மொழி உணர்வுப் போராட்ட நிகழ்வை நீங்கள் ஏற்றுக் கொண்டு நம்முடைய இனத்தைக் காப்பாற்ற, மொழி, கலாச்சாரத்தை, காப்பாற்ற திமுக ஆட்சி தமிழகத்திலே மலரக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.


(முரசொலி, 15.9.2015. ப. 9)


ஓர் உயர்ந்த சமூகத்திற்கு இளைய தலைமுறையிடம் சமுக, அரசியல் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடே தளபதி ஸ்டாலினின் பேச்சில் உணரலாம். 


பெருந்தன்மைமிக்க பண்பாளர் தளபதியார்!


கழகச் செயல்தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான தளபதியார், கடற்கரை காமராஜர் சாலை வழியாகச் சட்டப் பேரவைக்குத் தமது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்பும் பின்பும் பாதுகாப்புப் படை போலீசாரின் கார்கள் சென்றன. அப்போது முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் தலைமைச்செயலகத்துக்குத் தமது காரில் வந்துகொண்டிருந்தார்.  அவரது காருக்கு முன்பும் பின்தொடர்ந்தும் பாதுகாப்பு  போலீசாரின் கார்கள் சென்றன.


தளபதியார், தமது காருக்குப் பின்னால் முதல்வரின் கான்வாய் வருவதைக் கவனித்து வழிவிடுவதற்காக, தனது ஒட்டுநரிடம் காரைச் சாலை ஓரமாக மெதுவாக ஓட்டுமாறு கூறினார்.  அதன்படி, தளபதியாரின் காரும் பாதுகாப்புப் படையினரின்கார்களும் மெதுவாகச் சென்றன. அதே நேரத்தில், தனது காருக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் தளபதியாரின்  கார்கள் செல்வதைக் கவனித்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது பாதுகாப்பு அலுவலரிடம், “மெதுவாகச் செல்லுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் முதலில் செல்லட்டும்..” என்று கூறியுள்ளார். இதனால் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் கான்வாய் மெதுவாக நகர்ந்தது. முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கான்வாய்கள் ஒன்றாக மெதுவாகச் செல்வதை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


முதல்வரின் கான்வாய் வேகம் குறைந்ததைக் கவனித்த தளபதி,  தனது ஓட்டுநரிடம் காரை ஓரமாக நிறுத்தி முதல்வருக்கு வழிவிடச் சொன்னார். அதன்பின், முதல்வரின் கார்கள் வேகமாக முந்திச் சென்றனவாம். பின்னால் அணிவகுத்துச் சென்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே, இச்சம்பவம் கண்டு ஆச்சரியமடைந்தனராம்.

 

நவீன அரசியல் நாகரீகத்தின் உச்சம் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சொல்லலாம். யாரையும் அவதூறு பேசாமல், நிதானத்துடன் கையாளும் போக்கும், பேரறிஞர் அண்ணாவின் "மாற்றான் தொட்டது மல்லிகைக்கு மனமுண்டு" என்கிற பொன்மொழிக்கு ஏற்ப, அனைவரையும் மதித்து நடக்கும் குணமும் இன்றைய அரசியலில் அரிதானவையாக இருக்கின்றன. அண்ணாவைப் போல, கலைஞரைப் போல, மிகசிறந்த ஜனநாயகவாதியாகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகளைச் சொல்லலாம்.


ஜெயலலிதாவும் ஸ்டாலினும் 


2004 சுனாமி பேரழிவால் தமிழகம் தத்தளித்துக்கொண்டிருந்த போது, ஜெயலலிதா முதலமைச்சர். அப்போது திமுக சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 21 லட்சம் ருபாயை நேரில் கொண்டு சென்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கொடுத்தது இன்றைய தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தான். 




ஜெயலலிதாவை அரசியல் எதிரியாகத் தான் தி.மு.கவும் அதன் தலைவர்களும் பார்த்தார்களே அன்றி, அவரைத் தனிப்பட்ட எதிரியாக பார்க்கவில்லை. இது தான் தி.மு.கவின் ஜனநாயகப் பண்பு.


2016 தேர்தலுக்கு பின்னர், திடீரென ஒருநாள் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். திமுகவின் தலைவராக இருந்த கலைஞர், ஜெயலலிதா குணமடைந்து வரவேண்டும் என்று கூறினார். தி.மு.கவின் இன்றைய தலைவர் மு.க ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து வந்தார். 


ஆனால், 74 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்தவர், 5 டிசம்பர் 2016 அன்று இறந்ததாக அறிவிக்கப்படுகிறார்.  தேர்தல் வெற்றி அடைந்த சில மாதங்களில் ஒரு முதலமைச்சர் இத்தனை நாள் ஒரு பெரிய மருத்துவமனையில் இருந்து இறந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.


திமுகவின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 




"எதையும் சந்திக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் ஜெயலலிதா” - மு.க ஸ்டாலின் 


எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவை தலைமைதாங்கி நடத்தியதோடு  ஆளுங்கட்சியாகக் கூடிய வகையில் வெற்றி பெறச் செய்தவர்  ஜெயலலிதா!


"அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, "அவர் உடல் நலம் பெற்று விரைவில் திரும்ப  வேண்டும்" என்று எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


அறிக்கை வெளியிட்டது மட்டுமல்ல, என்னையும், எங்களுடைய துணைத்தலைவர் மற்றும் பொன்முடி வேலு போன்றவர்களை  எல்லாம் மருத்துவமனைக்கு அனுப்பி, உடல் நலம் விசாரித்து வருமாறு உத்தரவிட்டார்"


"அவர் நலம் பெற்றுத் திரும்புவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்"


ஆனால் எதிர்பாராத நிலையில், அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சியாக அமைந்தது."

"காவேரி மருத்துவமனையில் எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தில், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சிக்குள்ளாகி, உடனடியாக நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வாருங்கள்" என்று எங்களுக்கு உத்தரவிட்டு, அதன் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்களும் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்"


"அம்மையாருடைய சிறப்புகள் எத்தனையோ இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரையில் பாராட்டப்படக்கூடிய பெருமை பாடிய ஒரு சிறப்பு என்னவென்று கேட்டால், எதற்கும் அஞ்சாமல், கவலைப்படாமல், எதையும் சந்திக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவராக அவர் விளங்கினார் என்பது தான் உண்மை. நாம் அவரை இழந்திருக்கிறோம். ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், குறிப்பாக, தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று, 2401.2017 அன்று. தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு  குறித்துக்கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் மீது, கழகச் செயல் தலைவரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதியார் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


கலைஞரை நள்ளிரவில் கைது செய்தவர் ஜெயலலிதா என்பதை வரலாறு மறக்காது. இந்தியாவின் மிகப்பெரிய தலைவர் கலைஞர். கருணாநிதி அவர்களை அந்த இரவில் நடத்திய விதத்தைத் தமிழர்கள் யாரும் மறந்திட மாட்டார்கள். ஆனால், தி.மு.க தலைவர் கலைஞரோ, ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவர் நலம்பெற வேண்டும் என்று சொன்னார். இன்றைய தலைவர் மு.க. ஸ்டாலின் அதற்கும் இன்னொரு படி மேலே இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.


ஜெயலலிதாவிற்குமான நீதி! 


ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது என்று இன்றைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு குற்றசாட்டை வைத்தார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களை வைத்து ஒரு  ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் பத்துமுறைக்கு மேல் கூப்பிட்டும் ஓ பன்னீர்செல்வம் இன்னும் ஆஜர் ஆகவில்லை. 


ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது என்கிற கருத்து மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசுபடுவதும் உண்மை தான். ஆகவே, திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் 2019 மக்களவைத் தேர்தல் பரப்புரையில் சரி 2021 சட்டசபைத் தேர்தலிலும் சரி, ஒரு வாக்குறுதியை மக்களுக்கு குறிப்பாக அதிமுக தொண்டர்களுக்குக் கொடுத்தார்.


"எங்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். 1.1 சதவிகிதத்தில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து அவர் முதலமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால், எங்களுக்கும் அவர் தான் முதல்வர். இறந்தவர் யாரோ ஒரு சுப்பனோ, குப்பனோ இல்லை. இந்த நாட்டின் முதலமைச்சர். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது என்று தி.மு.க சொல்லவில்லை. நான் சொல்லவில்லை. சொன்னது இன்றைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், விசாரணைக்கு கமிஷன் 10 முறைக்கு மேல் அழைத்தும் ஓபிஎஸ் செல்லவில்லை. 2021 தேர்தல் முடிவுக்கு பின், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தபின், ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை நீக்கி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டியது என் பொறுப்பு. யார் இதை விட்டாலும், இந்த ஸ்டாலின் விடமாட்டான்" என ஆணித்தரமாகத் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசி வருகிறார்.


துண்டுச்சீட்டு:


முன்னாள் முதல்வர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்த, அவமதித்து, இழுத்து வந்த காட்சியை நாம் எளிதில் மறக்க முடியாது. ஒரு 77 வயது முதியவர் என்ற அடிப்படை இரக்கம் கூட இல்லாத வரலாற்றுக் கொடும் அரசியல் பழிவாங்கல் சம்பவத்தில் அதுவும் ஒன்று. கலைஞரைக் கைது செய்து, அலைக்கழித்துச் சிறையில் அடைக்க முற்படுகின்றனர். 77 வயது கலைஞர், சிறையின் வாசலிலேயே உட்கார்ந்து தர்ணா செய்கிறார். 




அப்போது, அவரிடம் கருத்துக்கேட்க ஒரு துண்டுச்சீட்டு நீட்டப்படுகிறது. கலைஞர் எழுதித்தருகிறார் “அநீதி வீழும், அறம் வெல்லும்” என்று.





கலைஞரை அன்று அவமதித்த, ஜெயலலிதா அப்பல்லோவில் 75 நாட்கள் இருந்து இறக்கிறார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது என அதிமுகவின் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறுகிறார். அந்த இறப்பிற்கான நீதியை “மு.க. ஸ்டாலின் எனும் நான்” பெற்றுத்தருவேன் எனத் திமுக தலைவர் சொல்லியிருக்கிறார். வரலாற்றை அந்தச் சின்னத் துண்டுச்சீட்டில் அன்று கலைஞர் எழுதிக்காட்டினார். நாளை மு.க. ஸ்டாலின் செயல்படுத்திக் காட்டுவார். “அநீதி வீழும், அறம் வெல்லும்”. 


எதிரிகளை மதிக்கும் மாண்பும், எதிரிக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணமும் கொண்டவரே தலைவர் மு.க ஸ்டாலின். 


தலைவர் எனும் அப்பா 


நீங்களும் சரி, கனிமொழியும் சரி; அப்பாவைத் தலைவர் என்றே குறிப்பிடுகிறீர்கள். இது என்ன வீட்டில் அரசியல்ரீதியாக அளிக்கப்பட்ட பயிற்சியா?


நானும் கனிமொழியும் மட்டும் அல்ல; அண்ணன், செல்வி, மாமா பசங்க யாரோட பேசினாலும் ‘தலைவர்'னுதான் அவரைக் குறிப்பிடுவாங்க. இதுல ஒண்ணும் அரசியல் வியூகம்லாம் இல்லீங்க. 'அப்பா, அப்பான்னு கூப்பிடுற சூழல்ல அவர் வீட்டுக்குள்ள இருந்தது இல்லை. அன்றாடம் நூற்றுக்கணக்கான கட்சிக்காரங்க பொழங்குற வீடு எங்களது. 'தலைவர்'னுதான் அவங்க எல்லாரும் சொல்வாங்க, நாங்களும் அவங்ககிட்ட  அப்படித்தான் பேச வேண்டியிருக்கும். மாடிக்குப் போனாலும் பெரும்பாலும் கட்சித் தோழர்கள் மத்தியிலதான் இருப்பார். எங்க அம்மாவே 'தலைவர்'னுதான் எங்ககிட்டேயே அவரைக் குறிப்பிடுவாங்க, சின்ன வயசுலேர்ந்தே இது பழகிடுச்சு.


- மு.க ஸ்டாலின் (தெற்கிலிருந்து ஒரு சூரியன்) 


ஒரு பேரியக்கத்தின் தலைவன். ஒரு இனத்தின் நம்பிக்கை நாயகன். இந்தியாவின் அரசியல் முகத்தைத் தீர்மானிக்கக் கூடிய மதசார்பின்மை அரசியல் முகம், வருங்கால முதல்வர். இப்படி பல அடைமொழிகளைத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்குத் தந்தாலும், தமிழ்நாடே அவரைத் திரும்பிப் பார்க்கவைத்த முகம் ஒன்று இருக்கிறது. அது, ஒரு மகனாக தந்தைக்கான உரிமையையும், மரியாதையையும் பெற்றுத்தந்த முகம். இப்படியொரு மகன் நமக்கில்லையே என ஏங்கியவர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.


கலைஞரைக் காலம் காலமாகக் குடும்ப அரசியல் செய்கிறார் என்று திட்டியவர்கள் எல்லாம், இப்படியொரு பாசக்குடும்பமா என்று வியந்து பார்த்த தருணம் அது. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய், இனத்தின் தலைமகனாய் நடந்துக்கொண்ட தளபதியை உலகம் வியந்து பார்த்தது. 


எத்தனை நிதானம், எத்தனை நெஞ்சுறுதி, எத்தனை நேர்த்தி! தமிழாய்ந்த தலைமகன் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மறைந்த நாள், தளபதி எனும் தலைவன் மீண்டும் பிறந்தநாள் என்று சொன்னால் அது மிகையில்லை. 


கலைஞர் வயது காரணமாகப் படிப்படியாகத் தனது செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டு வீட்டோடு இருந்த காலம் அது. ஆனாலும், கலைஞரின் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கும் உடன்பிறப்புகள் கலைஞரை அவர் மறையும் வரை சென்று பார்க்க முடிந்தது. கலைஞரின் கோபாலாபுரம் வீடு பெரிய பங்களா இல்லை. பெரிய தோட்ட வீடு இல்லை. தெருவின் ஓரத்தில் இருக்கும் ஒரு சாதாரண வீடு. இன்னும் சொல்லப்போனால், அந்த வீட்டிற்குக் காம்போவுண்ட் சுவர் கூட கிடையாது. அந்த வீட்டிற்குள் யார் வேண்டுமானாலும் சென்று வரலாம் என்பதை அந்த வீடும் உணர்த்தும், அந்த வீட்டில் வாழ்ந்தவர்களும் உணர்த்துவார்கள். மக்களைச் சந்திப்பது என்பது கலைஞரின் அன்றாட நிகழ்வு. முரசொலி அலுவலகம் செல்வது என்பது கலைஞரின் தினசரி வேலை. 


இதை உணர்ந்த தளபதி ஸ்டாலின் அவர்கள், கலைஞரை அடிக்கடி மக்களைச் சந்திக்க வைத்தார். முரசொலி அலுவலகம் கூட்டிச் சென்றார். ஒரு பொங்கலன்று கலைஞர் வீட்டிற்கு வெளியே வந்து உடன்பிறப்புகளுக்குக் கையசைத்தார். இவையெல்லாம், கலைஞரை நேசிப்பவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தந்த விஷயங்கள். 


கலைஞரின் உடல்நிலை குறித்தும் வெளிப்படைதன்மையுடன் தளபதி ஸ்டாலின் நடந்துக்கொண்டார். ஏனெனில், அவர் சாதாரண ஆளில்லை. ஒரு இனத்தின் தலைவர். அவர் குறித்து அறிவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்பதை உணர்ந்து தளபதி ஸ்டாலின் கலைஞர் குறித்த அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கைகளை அளித்த வண்ணம் இருந்தார். 


சென்னை காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்ட பின், தமிழகமே தன் பார்வையைக் காவேரி மருத்துவமனையின் மீது வைத்தது என்று தான் சொல்லவேண்டும். கலைஞர் இறந்துவிட்டார் என்கிற வதந்தி பல காலமாக வரும். ஒவ்வொருமுறை வரும்போது துடிப்பவர்களும் இருப்பார்கள், மகிழ்பவர்களும் இருப்பார்கள். துடிப்பவர்கள், கலைஞரால் உயர்ந்தவர்களாக இருப்பார்கள். மகிழ்பவர்கள், கலைஞரால் ‘அதிகாரத்தை’ இழந்தவர்களாக இருப்பார்கள்.


ஆனால், இம்முறை கலைஞர் குறித்த எந்த வதந்திக்கும் வேலையில்லாமல் செயல் தலைவர் ஸ்டாலின் பார்த்துக்கொண்டார். ஆகஸ்ட் 7 2018 அன்று மாலை 6.10 மணிக்கு ‘ஓய்வில்லாமல் உழைத்தவர் உறங்க சென்றார்’. தமிழகம் கண்ணீரில் தத்தளித்தது. 


கலைஞரின் சாதனைகள் தொலைக்காட்சிகள் எங்கும் ஒளிபரப்பப்பட்டது. ‘இத்தனையும் செய்தவர் கலைஞரா? கலைஞராலா நான் இன்று நன்றாக இருக்கிறேன்?’ எனப் பல இளம் தலைமுறையினர் உண்மையை அறிந்து, இந்தத் தலைவனை இத்தனை நாள் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேனே என வருந்தினார்கள். 


கலைஞரின் சாதனைகள் குறித்துப் பேச ஆரம்பித்து நடத்தப்பட்ட கூட்டங்கள் பல மாதங்கள் தொடர்ந்ததே சொல்லும் கலைஞர் ஏன் தமிழினக் காவலர் என்று! 


ஆனால், இத்தனை பெருமைக்குரிய தலைவனுக்கு அவரது கடைசி ஆசையான "இடத்தைத்" தர மறுத்த வன்மம் பிடித்த இன எதிரிகள், தமிழர்களுக்கு உணர்த்தினார்கள், "ஏ தமிழர்களே! நீங்கள் தூங்கிக்கொண்டிருக்காதீர்கள். நாங்கள் இன்னும் மாறவில்லை. அப்படியே தான் இருக்கிறோம் என்று!"


கலைஞரின் கடைசி ஆசை என்ன?

நீ இருக்கும் இடம் தேடி யான் வரும் வரையில், 

இரவலாக உன் இதயத்தைத் தந்திரு அண்ணா!


என்று அண்ணா பக்கத்தில் ஒரு இடம் தானே கேட்டார். அதை மறுக்க எத்தனை கல்நெஞ்சம் வேண்டும். 


ஆனாலும், கலைஞர் தனது கடைசி "இட ஒதுக்கீட்டு" போராட்டத்திலும் வென்றார். கலைஞரை அவரது மகன், தலைவர் மு.க. ஸ்டாலின் வெல்ல வைத்தார். 


மறக்க முடியுமா அந்தக் காட்சியை?  





“எழுந்துவா தலைவா! எழுந்துவா!”, என்று காவேரி மருத்துவமனை முன் நடந்த கோஷங்களுக்கும், ராஜாஜி ஹாலில், தலைவரின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த போது எழுந்த "வாழ்க வாழ்க வாழ்கவே! தலைவர் கலைஞர் வாழ்கவே!" என்கிற கோஷத்திற்கும் மத்தியில் நடுநாயகமாக நின்று எங்கள் தலைவர் தளபதி அழுத போது, தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தவர்களும், நேரில் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் தாங்க முடியாமல் அழுதார்களே! அந்தக் கணம் சொல்லும் தலைவர் ஸ்டாலினின் மேன்மையை!


கலைஞருக்கு இடம் மறுத்தவர்கள் தோற்றார்கள். சட்டத்தால் தளபதி ஸ்டாலின் அவர்களைத் தோற்கடித்தார்.   




திமுகவின் சட்டத்துறை மின்னல் வேகத்தில் செயல்பட்டு, நீதிமன்றத்தில் தீர்ப்பை வாங்கியது. 


இதை 11 ஜனவரி 2021 நடந்த திமுக சட்டத்துறையின் இரண்டாவது மாநாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார். அவரது பேச்சு கீழே:


ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் இன்று மாநிலங்களவையில் இருக்கிறார்கள். மற்ற அணியைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு இது.

இன்னும் சொன்னால் நம்முடைய கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஒரு வழக்கறிஞர்! துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா. ஒரு வழக்கறிஞர்! அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. ஒரு வழக்கறிஞர்! அதனால் தான் வழக்கறிஞர்கள் இல்லாமல் கட்சி நடத்த முடியாது என்று நான் முதலிலேயே குறிப்பிட்டேன்!


இவை அனைத்துக்கும் மேலாக எனக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பது சட்டத்துறையால் கிடைத்தது என்பதை எனது வாழ்நாளில்; உயிர் போகிற வரை நான் மறக்க மாட்டேன். 95 வயது வரை இந்தத் தமிழ்ச்சமுதாயத்தின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, அவரது வாழ்நாள் ஆசையான 'அண்ணாவுக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்' என்ற ஆசையாவது எங்கே நிராசையாகப் போய்விடுமோ என்று நினைத்தபோது சட்டத்தின் சம்மட்டியால் அ.தி.மு.க. அரசின் மண்டையில் கொட்டி அந்த உரிமையை மீட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள் என்பதை நான் மறக்க மாட்டேன்.


தலைவரோடு சேர்த்து எனது தந்தையை இழந்து நின்றேன். 




அன்றைய தினம் நான் என்ன மனநிலையில் இருந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் அனைவரும் தலைவரை இழந்து நின்றீர்கள். நான் தலைவரோடு சேர்த்து எனது தந்தையை இழந்து நின்றேன். ஒரு தலைவருக்குத் தொண்டன் ஆற்ற வேண்டிய கடமையையும் ஆற்றியாக வேண்டும் - ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையையும் ஆற்றியாக வேண்டும்!

இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சவாலை அன்றைய தினம் நான் எதிர்கொண்டேன். தலைவரை இழந்த சோகத்தில் இருக்கும் போது, அவருக்கான உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டிய நெருக்கடியும் எனக்கு ஏற்பட்டது.


இடம் தர மறுத்தால், தடையை மீறித் தலைவர் கலைஞரின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வது என்ற முடிவோடு நான் இருந்தேன். அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை நினைத்தும் கவலைப்பட்டேன். தொண்டர்களுக்கும் ஏதும் ஆகிவிடக்கூடாது, அதேநேரத்தில் நமது எண்ணமும் நிறைவேற வேண்டும் என்று யோசனையில் இருந்தேன்.


அப்போது எனது பாதிப் பொறுப்பை எடுத்துக் கொண்டு சட்டத்துறை போராடியது, பாதிப் பொறுப்பு என்று கூடச் சொல்ல மாட்டேன்; முழுப் பொறுப்பையும் ஏற்றுப் போராடியது; வழக்கறிஞர் வில்சன் வந்து வழக்குத் தாக்கல் செய்யலாம் என்று சொன்னபோது என் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. உடனடியாக அது நடக்குமா என்று யோசித்தேன். 12 மணி நேரத்துக்குள் அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள் நம்முடைய வழக்கறிஞர்கள்.


உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.


'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்ற அண்ணாவுக்கு அருகில். 'ஓயாமல் உழைத்தவர் இங்கே ஓய்வெடுக்கிறார்' என்று கலைஞரை உடன் வைக்கும் உரிமையை நிலைநாட்டிக் கொடுத்தவர்கள் நீங்கள். அதனால் தான் சட்டத்துறைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்தேன்.


குறிப்பாக மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், சண்முகசுந்தரம், விடுதலை, என்.ஆர்.இளங்கோ, வீரகதிரவன் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!


என்று தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 


கலைஞர், தளபதிக்கு எத்தனையோ சவால்களைத் தந்து அவர் எப்படி செயலாற்றுகிறார் என்று பார்த்திருக்கலாம். 


அன்பகம் கட்டிடத்தைத் தர 10 லட்சம் நிதி திரட்டித் தரவேண்டும் என்று சொல்லி, அதைத் தளபதி சாதித்துக் காட்டியதாக இருக்கட்டும், 


மேயர் என்பது பதவியல்ல.. பொறுப்பு என்று சொல்லி, அதைத் தளபதி நிறைவேற்றி, சிறந்த மேயராக பேர் வாங்கியதாக இருக்கட்டும், 


அவர் துணை முதல்வர் என்றால், எனக்குத் துணையாக இருந்து செயல்படுகிறார் என்று பாராட்டியதாக இருக்கட்டும், 


ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பாராட்டியதாக இருக்கட்டும்.


தளபதிக்கான உயர்வைச் சாதாரணமாக தந்துவிடவில்லை கலைஞர். 


ஏனெனில் கலைஞருக்குத் தெரியும், அவர் தாங்கியது தங்கக்கிரீடமல்ல, முட்கிரீடம் என்று. 


இனக்காவலன் என்கிற பட்டம் சாதாரணமாய்க் கிடைக்கக்கூடியதல்ல. இங்கே நன்றியுடையுடைய நாய்களை விட, நன்றிகெட்ட ஓநாய்களே அதிகம் என்பதும் அவருக்குத் தெரியும்.


கலைஞரின் பெயருக்குப் பின்னாலும், வாழ்விற்குப் பின்னாலும் இருப்பது பெருமை மட்டுமல்ல, அதற்குப் பின்னால் மிகப்பெரிய வலியும் இருக்கிறது. 


இதனால் தான் கலைஞர் எளிமையாகச் சொன்னார்.. 


“தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எரிந்தாலும் கட்டுமரமாகத் தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் கவிழ்ந்து விட மாட்டேன்”


இதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. இதைத் தான் இன்றைய தலைவருக்கு உணர்த்திச்சென்று இருக்கிறார் தலைவர் கலைஞர்.


அவரின் கடைசி நாள் "இடப்போராட்டம்" தளபதி ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கடைசி தேர்வு. தலைவர் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட முதல் தேர்வு. 


தேர்வில் வெற்றிபெற்றுத் தளபதி தலைவரானார் என்பது வரலாறு!  


தலைவர் கலைஞருக்குத் தளபதி ஸ்டாலின் இரத்த வாரிசு மட்டுமல்ல.. கொள்கை வாரிசு என்பதையும் நாம் அவர்கள் சொற்களில் இருந்தே உணரலாம்: 


முதல் கேள்வி தலைவர் கலைஞரிடம் கேட்கப்பட்டது..


உங்கள் அரசியல் வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைச் சொல்லலாமா?


நெருக்கடிகள் நிறைய இருந்தன என்றாலும், வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைக் குறிப்பிட முடியாது. அண்ணா மறைந்தபோது உருவானதுதான் பெரும் நெருக்கடி. அண்ணாவால் சில லட்சியங்களை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்ததைவிடவும் பெரிய நெருக்கடி ஏதும் இல்லை.


கீழ்காணும் கேள்வி தலைவர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது..


கேள்வி : திரும்பிப் பார்க்கையில் இந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் எதை முக்கியமானது என்று சொல்வீர்கள்?


தலைவர் மு.க. ஸ்டாலின் பதில்: அரசியல் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த 50 வருஷங்களைத் தனிச்சுப்பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனா, தனியா ஒரு தொடக்கம்னு வரையறுக்கணும்னா, கோபாலபுரம் சண்முகம் அண்ணன் சலூன்ல உருவாக்கின இளைஞர் தி.முக. 

மன்றம் 1967 செப்டம்பர் 15 அன்னைக்கு நடத்தின அண்ணா பிறந்தநாள் கூட்டமும் தான் தொடக்கம்.


அங்கிருந்து பார்த்தா கட்சி கூடவே உயரங்கள்லேயும் பள்ளங்கள்லேயும் மாத்தி மாத்திப் பயணிக்கிறதாலே என் வாழ்க்கையும் இருந்திருக்கு.


கொஞ்சக் காலம் முன்னாடி இதே கேள்வியைக் கேட்டிருந்தீங்கன்னா நெருக்கடி நிலை காலகட்டத்தை முக்கியமானதாகச் சொல்லியிருப்பேன்.


அப்போதான் கல்யாணம் ஆகிருந்துச்சு. ஒரு புது வாழ்க்கையில நுழைஞ்சிருந்தோம். கைது நடந்துச்சு, துர்கா  மிரண்டுட்டாங்க. சிறைக்குள் எப்பவும் ஒழிச்சுக் கட்டப்படலாம்கிற நிலமை. ஒவ்வொரு நாளும், அடிச்சு நொறுக்கப்படுற கட்சித் தோழர்களோட மரண ஓலம் அறையிலே கேட்டுக்கிட்டே இருக்கும்.


வெளியே தி.மு.கவை நிர்மூலமாக்குற முயற்சிகள். எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடிக்கொண்டிருந்தார் தலைவர். மறக்கவே முடியாத நாட்கள். 


ஆனா, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிடுச்சி, தலைவர் உடல்நலம் குறைஞ்சு வீட்டோட முடங்கின பிறகான இந்த ஒரு வருஷம்.


"களத்துல எவ்வளவு சுமையையும் சுமந்துடலாம். முடிவு எடுக்குறது எவ்வளவு பெரிய சுமைன்னு, கிட்டத்தட்ட ஐம்பது வருஷம் இந்தச் சுமையை அவர் சுமந்திருக்கிறது எவ்வளவுப் பெரிய வலிங்கிறதும் இப்போதான் புரியுது"  


(தமிழ் இந்து திசை பேட்டி: 28.01.2018)


நீங்கள் கலைஞரின் பதிலையும், ஸ்டாலினின் பதிலையும் ஒப்பிட்டு பார்த்தால், அவர்களின் வாழ்வின் நெருக்கடியான காலகட்டம் என்பதை வேறெந்த காலத்தையும் சொல்லாமல், தலைவர் இல்லாத காலகட்டம் என்பதையே சொல்கிறார்கள். இதன் மூலம், அண்ணா மீது கலைஞர் கொண்ட பற்றும், கலைஞர் மீது தளபதி கொண்ட பற்றும் தெளிவாகும். அதைத்தாண்டி, கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும், இயக்கத்தை வழிநடத்த வேண்டிய கடமையும் தான் இதில் தெரியும். இதனால் தான் இவர்கள் தலைவர்கள் ஆகிறார்கள். 


அண்ணா வழியில் கலைஞரும் 

கலைஞர் வழியில் தளபதியும் பயணிக்கிறார் என்பது தெளிவாகும். 


இதையே தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  ஐம்பெரும் முழக்கங்களாகக் கலைஞரும் கொடுத்தார், தளபதியும் கொடுத்தார். அதிலும் நம் "திராவிட இயக்கத்தின்" தொடர்ச்சியாய், "திராவிட நம்பிக்கையாய்" மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்பது புரியும்.


1970ஆம் ஆண்டு திமுக மாநில மாநாட்டில் கலைஞர் கருணாநிதி முன்வைத்த ஐம்பெரும் முழக்கங்கள் 


அண்ணா வழியில் அயராது உழைப்போம். 

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். 

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். 

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். 

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி.


மார்ச் 25 2018 நடந்த ஈரோடு மண்டல மாநாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட ஐம்பெரும் முழக்கங்கள் 


கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம். 

தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம். 

அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம். 

மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம். 

வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்.


தலைவர்கள் தானாக உருவாவதில்லை. காலம் தான் அவர்களை உருவாக்குகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் இயங்கியல் விதிபோல, திராவிட இயக்கத்திற்கும் ஒரு வலுவான தலைவர் கிடைத்துக்கொண்டே தான் இருப்பார். இதில் யார் இரத்த வாரிசு என்பது கேள்வியாக இருக்காது? யார் கொள்கை வாரிசு என்பதே கேள்வியாக நிற்கும்! யார் அதிகமாக உழைக்கிறார்கள்? யார் தொண்டர்களை அரவணைத்துச் செல்கிறார்கள்? யார் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய் இருக்கிறார்கள்? யார் திராவிடத்தைக் காக்கிறார்கள்? என்பதே அளவீடாக பார்க்கப்படும். அந்த வகையில், "திராவிட நம்பிக்கையாய்", நேற்றைய தளபதியும், இன்றைய தலைவருமான திரு.மு.க ஸ்டாலின் எழுந்து நிற்கிறார்.  


- ராஜராஜன் ஆர். ஜெ





நீ நேற்றுப் பெய்த மழையில்

இன்றைக்கு முளைத்து

அரிச்சுவடி பேசும்

அரசியல் காளான் அல்ல

நீ சூரிய ஆலமரம்

தமிழர்களுக்காய் வியர்வை சிந்தம்

வெளிச்ச போதிமரம்!

குடித்தபால் உதட்டில் இருக்கும் போதே

தி.மு.க கொடி பிடித்தவன் நீ!


கவிஞர் இளைய கம்பன்


2 comments:

  1. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. நன்றி RJ

    ReplyDelete