Friday 2 April 2021

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 10 - தேர்தல் அரசியல் பற்றி பெரியார் - கனிமொழி MV.

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 10 - தேர்தல் அரசியல் பற்றி பெரியார் - கனிமொழி MV.

பெரியாரைப் படிப்பது என்பது அவரை நூல்களிலிருந்து படித்து மனப்பாடம் செய்வது அல்ல. அன்றாட வாழ்க்கையில், அரசியலில் அவருடைய கருத்துக்களைப் பொருத்திப் பார்ப்பது என்பதுதான் பெரியாரைப் படிப்பது என்பதற்கான வெளிப்பாடு. தட்டையாக அவரது கருத்துகளைப் புரிந்து கொண்டு பெரியார் தேர்தல் அரசியலுக்கு எதிரானவர் என்று கட்டமைப்பது அறியாமை அல்ல அயோக்கியத்தனம்.


2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகத் தலைமையிலான அரசு அமைந்திட வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் இலக்காக இருக்கின்றது.


கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு இழந்த உரிமைகளின் பட்டியல் நீளம். கல்வி உரிமை தொடங்கி அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே தமிழ்நாடு தினம் போராடும் அவல நிலை தொடர்கிறது.


இந்த நிலை மாற 2021 தேர்தலில் திமுகக் கூட்டணியே அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற உழைக்கும் அனைத்து தோழர்களும் சிலரின் கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் இருக்க , தந்தை பெரியாரின் தேர்தல் அரசியல் அணுகுமுறைகள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியத் தேவை.

தேர்தல் அரசியல் என்பது அன்றாட வாழ்வில் பெரியாரியலாகுமா? என்று கேட்டால் , ஆம். அன்றாட வாழ்வில் நமைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல் உண்டு. அதே போல, அந்த அரசியலை அறிந்து கொண்டு வினையாற்றுவதில் பெரியாரியலுக்கு முக்கியப் பங்குண்டு.


தந்தை பெரியாருக்கு ஜனநாயகத்தைப் பற்றித் தேர்தலைப் பற்றிக் கடும் எதிர்ப்புக் கருத்துக்கள் இருந்தது என்றாலும் எந்த நிலையிலும் தேர்தல் அரசியலிலிருந்து விலக வேண்டும் என்று அவர் நினைத்தது கிடையாது.


1951 ஆம் ஆண்டு நவம்பர் 25, 26, 27 தேதிகளில் திருச்சியில் திராவிடர் கழகத் தோழர்களுக்குத் தேர்தல் பிரச்சாரப் பயிற்சி வகுப்பைத் தந்தை பெரியார் நடத்தினார். தேர்தல் அரசியலைத் தந்தை பெரியார் வெறுத்தார் என்ற ஒரு கருத்தைப் பரப்புகிறவர்கள் இந்தச் செய்தியை அறிவார்களா?


இந்தச் சமூகக் கட்டமைப்பில் தேர்தல் முறையில் இயங்க வேண்டிய தேவை இருக்கின்றது, எனவே ஒரு சமுதாய இயக்கத்திலிருந்து கொண்டு அதனை எவ்வாறு கையாள்வது? இயக்கமும் தேர்தல் அரசியலும் சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை குறித்துத் தன்னுடைய தொண்டர்களுக்குப் பயிற்சி நடத்திய தலைவரைத் தேர்தல் அரசியலுக்கு எதிரானவராகக் கட்டமைப்பது பெரிய தவறு.


நீதிக்கட்சிக்கு ஆதரவு, காமராசருக்கு ஆதரவு என்று தொடர்ந்து அரசியலில் யார் மக்களை ஆள வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையோடு இருந்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் ஓட்டு அரசியலுக்கு வரவில்லை, அவரைத் தேடி முதலமைச்சர் பதவி வந்தபோதும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் ஒருபோதும் அவர் தேர்தல் அரசியலிலிருந்து விலக வேண்டும் என்று பரப்புரை செய்ததும் இல்லை விலகியதும் இல்லை.


இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் மட்டுமே இனி வரும் காலங்களில் பெரியாரைத் தேர்தல் அரசியலுக்கு எதிராக நிறுத்துகின்றவர்களின் முகமூடியைக் கிழித்தெறிய முடியும்.

அண்ணா ஒருவர் தான் எந்தப் புரட்சியும், கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால், அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பார்ப்பனரைப் பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார்கள். - விடுதலை, 23.12.1969

தான் மறையும் வரை திமுக ஆதரவு நிலையிலிருந்து தந்தை பெரியார் மாறவில்லை. மேலும் பேராற்றலாளர் மணியம்மையாரும் தந்தை பெரியார் மறைவிற்குப் பின்னும் நெருக்கடிக் காலத்திலும் கூடத் திமுகவை ஆதரித்தார்.


இந்த வரலாற்றை நினைவில் கொண்டே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மாபெரும் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும்.

இந்தப் பகுத்தறிவு ஆட்சி மக்களின் நலனுக்கானது. அந்த ஆட்சி தொடர திமுக மீண்டும் அரியணை ஏற வேண்டும்.

234/234 நமதே!

-கனிமொழி MV.


No comments:

Post a Comment