Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி - தனசேகர் மாணிக்கம்

 ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி - தனசேகர் மாணிக்கம்


மிழகத்தின் எதிர்காலம் திமுக ஆட்சியில் அமரவைக்கப்படுவதில்தான் இருக்கிறது!!!


தமிழகத்தின் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டாயிற்று. இந்தத் தேர்தலில் தமிழக அரசியலின் மிக முக்கிய ஆளுமையான கலைஞர் அவர்களும், அதிமுக-வின் ஒற்றை முகமாக விளங்கிய ஜெயலலிதா அவர்களும் இல்லாமல் நடைபெறப்போகும் முதல் சட்டமன்றத் தேர்தல். இவர்களுக்கடுத்து தமிழகத்தை வழிநடத்தப்போகும் ஆளுமை யார் என்ற கேள்விக்குள் எல்லாம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய திமுக தலைவரின் செயல்பாடுகளும், இந்திய ஒன்றியத்தின் வலதுசாரி அரசியல் நடத்தும் பிரதமரே திமுகவை ஆட்சியில் அமர வைக்கக்கூடாது என்று ஒரு மாநில கட்சியின் மீது விமர்சனம் வைக்கும் அளவுக்கு திமுகவை சமூகநீதியின்பால் வழிநடத்திக்கொண்டு வரும் பொறுப்பும், தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் என்ற சொல்லாடலை தவிடு பொடியாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் அதற்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. 


       தனக்குப் பின்னான ஒரு தலைவனை உருவாக்கி விட்டுச் செல்பவனே ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும். இந்த சொற்றொடர் படிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இது ஆகப்பெரிய செயல். தன் அபார உழைப்பின் மீது நம்பிக்கையும், தனக்குப் பின்னான தன் மக்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சிந்தனையும், இதற்கான வற்றாத தேடலும், தன்னை மேம்படுத்திக்கொள்ளுதலும், தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கும் சொல்லித் தெரியப்படுத்துதலும் என முற்றிலும் எந்த வகையிலும் தன்னுடைய அகங்காரத்திற்கு துளி அளவேனும் இடம் கொடாமல், பொறாமைக் குணம் மேலோங்காமல், தன் அறிவையும் அனுபவத்தையும் தனக்குப் பின்னானவர்களுக்கும் கடத்துபவனே ஒரு நல்ல வருங்கால தலைவனை உருவாக்க முடியும்.  அப்படிப்பட்ட தலைவர்களைக் கொண்ட இயக்கம்தான் காலம் தாண்டியும் தன்னை உருமாற்றம் செய்து கொண்டு நிலைத்து நிற்கும். 


        இதற்கு முற்றிலும் பொருந்திப்போவது திமு கழகம். சந்தேகமே இல்லாமல் அறிஞர் அண்ணா தொடங்கி, இன்றைய தலைவர் ஸ்டாலின் வரை, திமுக ஒவ்வொரு மிகப்பெரிய தலைவர்களின் மறைவிற்குப் பின்னும் அதே வீரியத்துடன், தன் கொள்கைகளில் சமரசமில்லாமல் இன்றும் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோர் கொள்கைகளை முன்னெடுத்துச்சென்ற பணியானது உண்மையில் இன்றைய காலகட்டத்தில் நாம் அறிந்து வியக்கக்கூடிய ஒன்று. அவர்களின் ஆகச்சிறந்த தலைமைப் பண்புகளால்தான் இன்றும் திமுக மிகச்சரியான தலைவரைக் கொண்டு தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல ஆயத்தமாகி வருகிறது.  இன்றளவிலும் திமுக மீதான சனாதன, பாசிச, மறைமுக பாசிச ஆதரவாளர்களின் வன்மம் தான் திமுக மிகச்சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதற்கான அளவுகோல். 


    மறுபக்கம் தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள அதிமுக.  தொடங்கப்பட்ட போதே தெளிவற்ற கொள்கையைக் கொண்டு தொடங்கப்பட்ட டில்லி ஏகாதிபத்தியத்தின் அடிமைக் கட்சி. நம் தமிழக மண்ணிற்கே உரிய, சமூக நீதி, மொழியுணர்வு போன்றவற்றின் தாக்கத்தால் ஓரளவு கட்டுப்பட்டு நடந்து கொண்டிருந்தது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி.எனினும் அராஜகங்கள், சமூகநீதிக்கெதிரான திட்டங்கள், ஊழல் என்று மோசமான ஆட்சிதனையே தமிழகத்துக்கு கொடுத்தனர். பிம்ப அரசியல், ஆணவம், அதிகார போதை என்று இறுமாப்புடன்தான் இருந்தனர் அதிமுக முன்னாள் தலைவர்கள். எதிர்த்து நின்று வலுவான திராவிட அரசியலை கலைஞர் செய்தபடியால், வேறு வழியின்றி அவர்களும் அந்தப் பாதையில்தான் பயணிக்க வேண்டியதாயிற்று. இல்லையென்றால் அன்றே இன்றைய பழனிச்சாமி அவர்களின் மெய்நிகர் பாஜக ஆட்சிபோல ஆட்சி நடைபெற்றிருக்கும். அதிமுகவின் இருபெரும் தலைவர்களும் மக்களிடையே தன்னுடைய தன்முனைப்பை காட்ட முயன்று தனக்காக கட்டமைத்துக்கொண்ட பிம்பங்களால் மட்டுமே மக்களிடையே புகழைத் தேடிக்கொண்டனர். விளைவு! அதிகமுவை அடுத்த நல்ல தலைமையிடத்தில் ஒப்படைக்க இருதலைவர்களும் தவறிவிட்டனர்.தன் நாயக பிம்பத்தைக் கட்டமைப்பதில் இருந்த ஆர்வம் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் துளி கூட இருந்ததில்லை என்பதே இன்றைய அதிமுகவின் அவல நிலையின் காரணம்.


    ஒரு கட்சியை தத்துவமும் கொள்கையும் வழிநடத்துவதற்கும், நாயக மற்றும் தலைவன் பிம்பங்களை கொண்டு வழிநடத்துவதற்கும் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு திமுக மற்றும் அதிமுக. பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் போன்ற திராவிட மண்ணின் முதுபெரும் ஆளுமைகள் இன்றும் வரலாற்றாய்வாளர்கள் தொடங்கி, திராவிடம் நோக்கி வரும் அனைவராலும் நினைவுகூறப்படுவதற்குக் காரணம் அவர்கள் கொண்ட கொள்கைக்காக நேர்மையுடனும் தன்னலமற்றும் உழைத்தது மட்டுமல்லாமல் வாழந்து காட்டியும், இயக்கங்களை கொள்கையினின்று வழுவாமல் நடத்த தனக்கடுத்த அறிவுசார் மற்றும் தத்துவ தளத்தில் இயங்குகின்ற தலைவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டிச்சென்றதால்தான். மக்களிடையே இவர்களுக்கு இருந்தது அறிவுசார் தளத்தினூடான புகழ். ஆனால் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போன்றோர் இயங்கியது தத்துவார்த்த பின்புலத்தில் அல்ல. வெகுஜன மக்களிடையே அவர்களுக்கிருந்த பிம்பங்களினூடான புகழ். அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்கள் எந்த அளவிற்கு இன்று நினைவுகூறப்படுகிறார்கள் என்று எண்ணிப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.


   இப்படி கொள்கையே இல்லாமல் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து இன்று தமிழகமே முற்று முழுதாக வெறுக்கும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கிறது அதிமுக. 10 வருடங்கள் முழுமையாக ஆண்டிருக்கிறது அதிமுக. அதில் ஐந்தாண்டுகள் பாஜகவின் நிழல் ஆட்சி. என்ன? முகங்கள் மட்டும் வேறு. தேர்தலுக்குப்பின் அதிமுக சுக்குநூறாகாப் போகிறது என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.


       ஏனெனில், சித்தாந்தங்களை முன்வைத்துச் செயல்படும் கட்சிகள்தான் காலம் தாண்டியும் நிலைக்கும்.அதற்கு ஆகச்சிறந்த உதாரணங்களாக நான் திமுக வையும் அதற்கு நேரெதிர் திசையில் இயங்கும் பாஜக வையும் பார்க்கிறேன். வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட, அதுசமயம் தீவிர பார்ப்பனியத்தை இந்திய ஒன்றியமெங்கும் செயல்படுத்துவதையே தன் கொள்கையாகக் கொண்ட பாஜக, தொடங்கப்பட்ட பொழுது காங்கிரஸ் அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்த கட்சி. ஆனால் இன்று நிலைமை வேறு. காங்கிரஸை 60 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்த்திவிட்டு தீவிர வலதுசாரிக் கொள்கைகளின் அரசியல் முகமான பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது.இரண்டாவது முறையாக பாஜக விடம் காங்கிரஸ் தோற்றிருக்கிறது. இதற்கான விதைகளை எல்லாம் பாஜக 90களின் தொடக்கத்திலேயே போட்டுவிட்டனர். இதுநாள்வரை தங்கள் சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கான களத்தை அமைத்துக்கொண்டிருந்தவர்கள், இன்று ஆட்சி கிட்டியவுடன் அதுவும் அசுர பலத்தில் கிட்டியவுடன், இந்திய ஒன்றியத்தின் மொத்த ஜனநாயகத்தன்மையையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு பார்ப்பனிய இந்தியாவிற்குள் நம்மை மெதுமெதுவாக அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த  காங்கிரஸ் இன்று தன்னை பல்வேறு விஷயங்களில் முக்கியமாக சித்தாந்த தளத்தில் சுய பரிசோதனை செய்துகொள்ளும் இடத்தில் உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை. 


      இதே போல, ஜனநாயகத்தன்மையையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் தூக்கிப்பிடிக்கும் திமுக. இந்தியாவின் மொத்த பார்ப்பனிய சக்திகளுக்கு எதிரான மிகத் திடகாத்திரமான, நேரெதிர்  மற்றும் வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் பகுத்தறிவு, சமூகநீதி, ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவம், சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, ஜனநாயகம் என்று மொத்த இடதுசாரிச் சித்தாந்தமான திராவிடக் கொள்கையின்படி இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிற கட்சி.திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, அதன் அசுர வளர்ச்சியைக் கண்டு, அதனை அழிக்க எத்தனையோ கட்சிகள் தோன்றி மறைந்தும்விட்டன என்பதுதான் வரலாறு. திமுக வில் இருந்து பிரிந்த கட்சிகளும் கூட திமுக வை சித்தாந்த தளத்தில் தொட்டுக்கூடப் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை. வகை வகையான உருட்டுகளை எல்லாம் உருட்டிப்பார்த்தும், டில்லி அரசுக்கு தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கை குலைக்க முடியாமல் போனதற்குக் காரணம், திராவிடத்தில் பண்பட்ட தமிழக மக்களும், திராவிட இயக்கத்தின் பாதை மாறாமல் நடக்கும் திராவிட முன்னேற்றக்கழகமும் தான். 


  எனவே தெளிவான கொள்கை என்பது  மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காரணி. நாம் எதை நோக்கி நடைபோடப் போகிறோம் என்கிற பாதை தெரிந்தால்தானே முன்னேறி நடக்க முடியும். பாதையில் வரும் சறுக்கல், வழுக்கல்களை எல்லாம் தாண்டி பண்பட்டு முன்னேறிச் செல்ல முடியும். அப்படி இல்லாததால்தானே அதிமுக கூடாரம் நாறிப்போய் கிடக்கிறது. அதிமுக ஆதரரவாளர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் பாஜக வின் இந்துவத்தையே தங்கள் கொள்கையாகக் கொண்டு திமுக வை எதிர்ப்பதெல்லாம் காண முடிகிறது இன்று.  எந்த வித இலக்குமற்ற செயல்பாடுகள்தான் அதிமுகவின் இந்த இழிநிலைக்குக் காரணமென்பேன். 


    தமிழகம் இன்றும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக ஒப்பிடப்படுவதற்குக் காரணம் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளால்தான். குறிப்பாக திமுகவினால் தான். இதற்கு 1967 ல் தொடங்கி இன்று வரை, ஏராளமான சமூக நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மருத்துவம், தொழில் என்று எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு படி அரிசி நிச்சயம், மூன்று படி அரிசி இலட்சியம் என்று தொடங்கிய அந்த திட்டம் இன்று இலவமாக அரிசி வழங்குவதில் வந்து நின்று, தமிழகத்தில் கிட்டத்தட்ட பட்டினிச்சாவே இல்லை என்ற நிலைக்கு மாறியிருப்பதற்குப் பின்னால் அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், அரும்பெரும் உழைப்பும் அடங்கியுள்ளது. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் அதிக கவனம் செலுத்தி, அவர்களின் கல்வி, மகப்பேறு, சொத்துரிமை, அரசுப் பணி இவற்றிலெல்லாம் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த திமுக, இன்று உரிமைத்தொகையாக 1000 ரூபாயை வீட்டு நிர்வாகம் செய்யும் பெண்களுக்கெல்லாம் அளிப்பதாகச் சொல்லியிருப்பது, எந்த வகையிலும் பெண்களை தன் சொந்தக்காலில் நிற்கும் படியான, ஆணாத்திக்கத்திற்கு அடிபணியாத, ஒரு உறுதியினை அவர்களுக்குக் கொடுக்கிறது. மாறிவந்த உலக நட்ப்புகளுக்கு ஏற்ப, தமிழக இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுத்ததில், திமுகவிற்கு மட்டும்தான் மிக மிகப் பெரிய பங்கு இருக்கிறது. உயர்கல்வி இலவசம் என்று தொடங்கி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச தொலைக்காட்சி, நுழைவுத்தேர்வு ரத்து, தொழில்நுட்பப் பூங்காக்கள் என்று இத்தனை அடிப்படைகளையும் கட்டமைத்து இட ஒதுக்கீடு எனும் மாபெரும் சமூக நீதியின் மூலம் தமிழ் மண்ணின் இளைஞர் பட்டாளங்களையெல்லாம் தொழில் மற்றும் சேவைத்துறை நோக்கித் திருப்பி, நம்முடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய பெருமைக்குரியவர் கலைஞர் மற்றும் திமுக. 


     பண்பாட்டுத்தளத்தில், வள்ளுவர் , கண்ணகி சிலைகள், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற இலக்கியங்கள் முன்னெடுப்பு, தமிழ்த்தாயின் பெயரில் தாய்த்திருநாடு, தமிழுக்குச் செம்மொழித் தகுதி, தமிழ்ப்புத்தாண்டை தை 1 க்கு மாற்றம், மக்கள் தமிழர் திருநாளை சிறப்புறக் கொண்டாட இலவச வேட்டி சேலை, நிதியளிப்பு,  தமிழை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புகுத்தியது, அனைவரும் அர்ச்சகராகும் சட்டம், சுயமரியாதைத் திருமண சட்டம், கலப்புத் திருமண ஊக்குவிப்பு என்று தமிழன் எவ்வித வேறுபாடுகளுமின்றி சிறப்புற வாழ்ந்த சங்க காலத்திய வாழ்க்கை மற்றும் பண்பாட்டுக் கூறுகளை நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பித்து வரும் வேலையைச் செய்தே வந்துள்ளது திமுக.


   இன்னும் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி பார்த்து,  பார்த்து திமுக செதுக்கிய தமிழகத்தை கிட்டத்தட்ட பத்தே ஆண்டுகளில் செல்லரிக்க வைத்ததுதான் அதிமுகவின் சாதனை. ஒவ்வொன்றாய் பார்ப்போமா? 


1. தமிழக முதல்வர்! ஆனால் மர்மமான முறையில் இறக்கிறார். இன்று வரை பதில் இல்லை அரசினிடத்தில். அவர் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு சென்னை வாழ் மக்களை படுத்திவிட்டார். 

ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டு நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருந்தார்.  


2. நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்து மசோதா அனுப்பப்படுகிறது.ஆனால் மத்திய எதேச்சதிகார அரசு கிடப்பில் போடுகிறது.பின்னர் நிராகரித்து விடுகிறது. இரண்டு வருடங்கள் வாயே திறக்காமல் இந்த உண்மையை மறைத்து வைத்திருந்தனர். விளைவு கிட்டத்தட்ட 15 மாணாக்கர்களின் உயிர்களை இந்த அடிமை அதிமுக பாஜக வுடன் கூட்டு சேர்ந்து பறித்துள்ளது.


3. தூத்துக்குடி படுகொலை. மறக்க முடியுமா? 13 பேர் பச்சைப் படுகொலை செய்யப்பட்டனர். சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறார் பழனிச்சாமி! என்னவென்று? இப்போதுதான் நான் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன் என்று. 


4. எட்டு வழிச்சாலை. கடும் எதிர்ப்பு.ஆனால் இன்றும் அதிமுக அதில் பின்வாங்கி மறுக்கிறது. 


5. குடியுரிமை திருத்தச்சட்டம்.நாடெங்கும் வெடித்த போராட்டங்களுக்கும், கலவரங்களுக்கும் இந்த சமூகநீதி மண்ணில் இருந்து சென்று ஆதரவாக வாக்களித்த கயவர்களே காரணம்.கொஞ்சம் கூட சுய மரியாதையற்ற நயவஞ்சகர்கள். 


6. வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள். நானும் விவசாயிதான் என்று கூறும் எடப்பாடி , விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த திட்டத்திற்கு ஆதரவை அளித்துவிட்டு வெட்கமில்லாமல் அதைக் கூறுகிறார்.


7. முத்தலாக் தடை சட்ட மசோதா! அதிமுக ஆதரவு.எதற்காக தெரியாது? மோடி சொன்னார்! அவர்கள் செய்தார்கள்!


8. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்! அதிமுக எம்.பிக்கள் ஆதரவு! எதற்காக இந்த நிலைப்பாடு? தெரியாது! பாஜக சொல்லிற்று! நாங்கள் செய்தோம்!


9. தமிழகத்தில் வடவர்கள் அரசுப்பணிகளில் அமர வைப்பு! ஏன் தமிழர்களுக்கு இடமில்லை? அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! மோடி சொன்னார்! நாங்கள் செய்கிறோம்!


10. இட ஒதுக்கீடு மருத்துவ உயர்கல்விக்கு மறுக்கப்படுகிறதே! மறுத்துவிடுங்கள்! பாஜக வே சொன்ன பின்னாடி அதிமுக மறு பேச்சா?


11. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு நடைபெறுகிறதே! அதனால் அதிமுக வுக்கு என்ன லாபமப்பா? 


12. புதிய கல்விக்கொள்கையைக் கொண்டுவந்து திணிக்கிறார்களே! நம் பிள்ளைகளின் மேல்! அதிமுக பரிசீலனை செய்து ஆதரவு தரும்! இப்படிதான் இவர்கள் இருந்தார்கள்.


13. சரக்கு மற்றும் சேவை வரிக்கான தொகையை தமிழகத்துக்குத் தர மறுக்கிறார்களே பாஜக மத்திய அரசு! அதனால என்னங்க! எங்க டாடி மோடி கிட்ட இருந்தா என்ன? இல்ல எங்ககிட்ட இருந்தா என்ன? இரண்டும் ஒன்னுதானுங்களே என்றவாறு நடந்துகொண்டார்கள்.


14. ஒக்கி புயல் போன்ற பேரிடரின் பொழுது மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டதே! அதிமுகக்கும்   இதுக்கும் சம்மந்தமில்லைங்கோ என்றார்கள். 


15. கொரோனா பரவலின்போது அலட்சியத்தால் சில ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தோமே! அதிமுக அதன் கடமையை சரியாகத்தான் செய்தது! மக்கள் ஒழுங்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனிக்கவில்லை என்று சொன்னார்கள். 


16. பொள்ளாச்சி பாலியல் விவாகரம், அதை அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் விட்டது எல்லாம் உச்சபட்ச கொடுமை. 

     

   இவையெல்லாம் அதிமுக அரசு தமிழக்ததிற்கு மட்டுமல்லாது சிற்சில விசயங்களில் இந்திய ஒன்றியத்திற்கும் சேர்ந்தே துரோகம் இழைத்துள்ளார்கள். 


    பாஜக ஒரு பாசிச முகத்தின் அரசியல் முகமூடி. அதனுள்ளே இந்துத்துவ சித்தாந்தத்தை மூளையாக வைத்துக்கொண்டு செயல்படுகிற ஆர்.எஸ்.எஸின் முகம் ஒளிந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். என்றும் அதன் முகமூடியைக் கழட்டாது. ஆனால் முகமூடிகள் மாறலாம்.


      அரசியலுக்கு என்று ஒரு மாண்பு எப்போதும் உண்டு. அதில் மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கிற, சமூக மேம்பாட்டிற்கு உழைக்கிற, உழைத்த அரசியல் மாமேதைகளும் உண்டு. அதே சமயம் மக்களைச் சுரண்டுகிற, அதிகார போதையில் ஆடுகிற, ஆணவம் மிக்க, சுயநலமிகள் என்று பலரும் அதில் உழலுவார்கள். இந்த இரண்டாம் வகையறாவில் வருபவர்கள் கூட குறிப்பிட்ட சில விசயங்களில் மக்களின் எலிர்ப்புகளைக் கண்டு அஞ்சுவார்கள். அடிபணிவார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் முற்று முழுதாக சுயநல வெறி ஊறிப்போன, துரோகங்களைச் செய்யத் தயங்காத, ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்று கிஞ்சித்தும் கவலைப்படாத, போலி சிரிப்பிற்கு பின்னே பல்வேறு உயிர்களைக் காவு வாங்குகிற கொடூர முகம் கொண்ட, என்ன நடந்தாலும் மக்கள் மறந்துவிடுவார்கள்; பணத்தை விட்டெறிந்தால் போதும் என்று இறுமாப்பில் உழலுகிற, தான் செய்த தப்புகளை மறைக்க, தவறான வழிகளில் சேர்த்த செல்வங்களையும் கட்டிக் காப்பதையே வேலையாகச் செய்த, அதற்கு சர்வாதிகார மிதப்பில் திரியும் பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும், மதவெறி ஊட்டி வளர்க்கும் ஓநாய்களை தமிழகத்துக்குள் அண்டவிடத் துணிந்து அதன் மேல் செம்மறியாட்டுத் தோலாய் படர்ந்து கொண்டு அந்த ஓநாய்களின் வேட்கையை தமிழகத்தில் நிறைவேற்றிக்கொள்ள உதவிய, முற்று முழுதாக சனாதனச் சாக்கடையில் உழலும், எத்தகைய விலை கொடுத்தாயினும் அது மக்கள் உயிரானாலும் சரி என்று தன் இருப்பை, சொகுசுகளை அனுபவிக்க பலிகடாவாக்கும் அடிப்படை அறமற்ற மனிதர்கள்தான் நம்மை ஆண்டார்கள். இன்னும் இவர்களை ஆள அனுமதித்தால் அது தமிழகம் தன் தலையில் சேற்றை வாரி இறைப்பதற்குச் சமம். தனக்கு தானே சவக்குழி தோண்டும் செயல். சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் மேம்பட்டு நிற்கிற தமிழ்நாடு, இவற்றிலெல்லாம் மிகவும் பின்தங்கிய பீகாரைப் போலவோ அல்லது உத்திரப்பிரதேசமாகவோ மாறிவிடுவது உறுதி. 


  அன்றே தலைவர் ஸ்டாலின் கூறினார்; 2019 நாடாளுமன்றத் தேர்தலை  இரண்டாம் சுதந்திரப் போர் என்று வர்ணித்தார்.இன்று இந்திய அளவில் உள்ள கட்சிகள் அதை உணரத் தொடங்கியுள்ளன. அதே போல, இது தமிழகத்துக்கான வாழ்வா சாவா தேர்தல். இன்றும் நாம் முற்று முழுதாக பின்தங்கி விடவில்லை. இழந்ததை மீட்கும் நிலையில் இருக்கிறோம். இந்த வாய்ப்பையும் தவர விடுவோமேயானால் இனி தமிழகம் மீண்டு வருவது மிக மிகச் சிரமம். ஏனெனில் பாசிச பாஜக தமிழகத்தை சீரழிப்பதற்கான அனைத்துத் திட்டங்களையும் கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறது. எனவே திமுக வை ஆதரிப்பதுதான் அறிவார்ந்த செயல். திமுக ஆட்சி மலர வேண்டும்.


    தமிழகத்தை தாங்கி நிற்பது திராவிடம். திராவிடத்தைப் பேண வேண்டியது தமிழ் மக்களின் கடமை என்றே நான் கருதுகிறேன். திராவிடம்தான் தமிழகத்தை முன்னே நகர்த்திக்கொண்டு செல்லும் தேர். அந்தத் தேரை அனைவரும் சேர்ந்து இழுப்போம். தமிழகத்தைக் காப்போம். தமிழனாய் உயர்வோம்!


நன்றி!

- தனசேகர் மாணிக்கம்

No comments:

Post a Comment