Friday 2 April 2021

நீர் மேலாண்மையும் திமுகவும் - ஜெயன்நாதன் கருணாநிதி

 நீர் மேலாண்மையும் திமுகவும் - ஜெயன்நாதன் கருணாநிதி


மார்ச் 22 சர்வதேச நீர் தினம். நம் தமிழ்நாட்டின் நீர் உள்கட்டமைப்பினை உறுதிப்படுத்த திமுகழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டங்கள் பற்றிய சிறு குறிப்பு:


* இயற்கை பேரிடர்களான வெள்ளம், வறட்சி போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் தமிழகத்திற்கு கிடைக்கும் நீரை வேளாண்மைக்கு பயன்படுத்தும் வகையில் சேமித்து வைப்பதற்கும், தற்போது பொதுப்பணித்துறையோடு இணைந்திருக்கும் நீர் பாசனத்துறைக்கெனத் தனியாக ஒரு அமைச்சகம், கழக அரசில் உருவாக்கப்படும்.


* தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள், நீரோடைகள், ஏரிகள், குளங்களை சீரமைக்கவும் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் அகற்றவும் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய நீரின் அளவை உறுதி செய்யவும் நீர் மேலாண்மை ஆணையம் (𝗪𝗮𝘁𝗲𝗿 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁 𝗔𝘂𝘁𝗵𝗼𝗿𝗶𝘁𝘆) அமைக்க சட்டம் இயற்றப்படும். இந்த ஆணையத்தில் வானிலை ஆய்வறிஞர்கள், நீர்ப்பாசனத்துறைப் பொறியாளர்கள் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.


* முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் ஏரி - குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட முதல் கட்டமாக 10,000 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.


* சென்னையில் புயல் வெள்ளக் காலங்களில் ஏற்படும் இடர்களை களைய சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு (𝗖𝗵𝗲𝗻𝗻𝗮𝗶 𝗠𝗲𝘁𝗿𝗼 𝗙𝗹𝗼𝗼𝗱 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁 𝗖𝗼𝗺𝗺𝗶𝘁𝘁𝗲𝗲) அமைக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


* சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்பு க்கு ரூபாய் 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அதோடு தமிழக ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் (𝗧𝗮𝗺𝗶𝗹 𝗡𝗮𝗱𝘂 𝗥𝗶𝘃𝗲𝗿 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁) உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.


* 200க்கும் குறையாத தடுப்பணைகள் கட்டுவதற்கு 2000 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


* அதிமுக அரசு 2013 இல் ரத்து செய்த தமிழ்நாடு நிலத்தடி நீர்ப் பாதுகாப்புச் சட்டத்தினை புதிதாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


* கடந்த திமுக அரசு, 05-02-2009 இல் தொடங்கி வைத்த காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தினை வரும் திமுக அரசு விரைந்து நிறைவேற்றும். அதோடு தெற்காறு - குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்.


* கடந்த திமுக அரசு, 21-02-2009 இல் தொடங்கி வைத்த தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு இணைப்புத் திட்டத்தினை வரும் திமுக அரசு விரைந்து நிறைவேற்றும்.


* நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் 40000 ஏக்கர் நிலங்கள் பயனடைய கன்னிகா மதகினை சீரமைக்கும் பணி முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். 


* 2016 இல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அத்திக்கடவு - அவினாசித் திட்டம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். கலைஞர் உருவாக்கிய இந்தத் திட்டத்தை திமுக அரசு முனைப்போடு செயல்படுத்தும்.


* கடலூரில் வெள்ளப் பாதுகாப்புக்கு அப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான "அரிவாள்மூக்கு வடிகால் திட்டம்" போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும்.


* சுற்றுச் சூழலினை பாதுகாத்திட திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், வேலூர் மற்றும் அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் வெளியேற்றப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதற்கான பொது சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கிட மத்திய அரசை திமுக வலியுறுத்தும். அதோடு அந்நிலையங்களுக்கு தேவைப்படும் மின்சாரம் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும்.


* பத்தாண்டுகளில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 36 லட்சம் வீடுகளுக்கு புதிதாக குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 


* பத்தாண்டுகளில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதம் (𝗣𝗲𝗿𝗰𝗲𝗻𝘁𝗮𝗴𝗲 𝗼𝗳 𝗪𝗮𝘁𝗲𝗿 𝗥𝗲𝘂𝘀𝗲) 5 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 


* புஞ்சை நிலங்களையும் தரிசு நிலங்களையும் தகுந்த விளைச்சல் நிலங்களாக (𝗗𝗿𝘆𝗹𝗮𝗻𝗱 𝗙𝗮𝗿𝗺𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝗪𝗮𝘀𝘁𝗲𝗹𝗮𝗻𝗱 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁) மாற்றிட, நுண்ணிய நீர்ப்பிரிமுகடு மேலாண்மை (𝗠𝗶𝗰𝗿𝗼 𝗪𝗮𝘁𝗲𝗿𝘀𝗵𝗲𝗱 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.


* மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். முழுவதும் தொழில்நுட்ப இயந்திரங்களே இனி இப்பணிக்காக பயன்படுத்தப்படும். 


#WorldWaterDay2021


- ஜெயன்நாதன் கருணாநிதி





No comments:

Post a Comment