Friday 2 April 2021

அதிமுக ஊழல் - சுமதி தியாகராஜன்

 அதிமுக ஊழல் - சுமதி தியாகராஜன்


றக்குறைய 14 வருடங்களுக்கு முன் நடந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் அனைவருக்கும் தெரியும். அதில் எந்த ஊழலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பின்பும் இன்னும் அந்த ஊழல் பேசப்படுகிறது. இது கூட பரவாயில்லை. 45 வருடங்களுக்கு முன் மத்திய அரசு அமைத்த சர்க்காரியா கமிஷன் இன்னமும் எல்லோருக்கும் நினைவில் இருக்கிறது. அந்த குற்றமும் நிரூபிக்கப்படாத குற்றச்சாற்று. இப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊழல் குற்றச்சாட்டு இன்னும் மக்களுக்கு நினைவில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு ஊழலை குறிப்பிட சொன்னால் மக்கள் தடுமாறுவார்கள். ஏன் ? ஊழல் என்றால் அது திமுக மட்டும் தான். அதிமுக ஊழல் செய்தால் ? அப்போது திராவிட கட்சி ஊழல். இது தான் தமிழக அரசியல். A1 குற்றவாளியான ஜெயலலிதாவை யாரும் பேச மாட்டோம். ஊழலே நிரூபிக்கப்படாத கலைஞர் , ஆ ராசாவை தான் பேசிக்கொண்டே இருப்போம். 

ஜெயலலிதா எதிர்த்து வந்த நீட் , உதய் மின் திட்டம் போன்ற திட்டங்களை அனுமதித்தது, 8 வழிச்சாலை என்னும் பெயரில் ஏழை எளிய விவசாயிகளின் நிலங்களை பறிக்க முயன்றது, உள்துறை அமைச்சரை தமிழக முதல்வரே விமான நிலையம் வரை சென்று வளைந்து வரவேற்றது, ஸ்டெர்லிட் போராட்டத்தில் பொது மக்களை சுட்டுக் கொன்றது, சங்பரிவாரின் ராம யாத்திரையை அனுமதித்தது என்று அடிமை அதிமுகவின் துரோகம் எவ்வளவு நீளமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் நீள்கிறது அதன் ஊழல் பட்டியல்.

தமிழக ரேஷனுக்கு ஒரு மாதத்திற்கு 20,000 டன் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. இதில்  18 மாதங்களில் ரூ 360 கோடி ஊழல் நடைபெறுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேல் புகழேந்தி  வழக்கு தொடர்ந்துள்ளார். சந்தை விலை ரூ 42.90 என இருக்க , அதிமுக அரசோ கிறிஸ்டி என்ற பன்னாட்டு நிறுவனத்திடம் இருந்து  ரூ 86.50  க்கு வாங்கி ஒரு கிலோவிற்கு ரூ 10 என்கின்ற விகிதத்தில் முறைகேடு செய்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் இந்த நிறுவனத்திற்கு, விதி திருத்தம் செய்து, டெண்டர் கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு டெண்டர் எடுக்கும் நிறுவனம் ரூ 4 கோடிக்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும் என்ற விதியை திருத்தி ரூ 40 கோடியாக இருக்க வேண்டும் என்று திருத்தியுள்ளார்கள்.கிறிஸ்டி - அதிமுக கூட்டணி அத்துடன் நின்றுவிடவில்லை. அனைத்து சத்துணவு கூடத்திற்கு தேவையான முட்டை , கொண்டை கடலை, எண்ணெய் ,சத்து மாவு போன்ற பொருட்களை விநியோகிக்கிறது. இவை விநியோகிப்பதில் ரூ 2400 கோடி வரை பல அதிகாரிகளுக்கும் கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னோடியாய் தமிழகம் விளங்கும் ஒரு துறை போக்குவரத்து. போக்குவரத்தை முதன்முதலில் தேசிய மயமாக்கியது கலைஞர் ஆட்சி. கலைஞரின் நிர்வாகத் திறமையால் லாபம் ஈட்டிக்கொண்டிருந்த போக்குவரத்துக் கழகம் இப்போது கடனில் இயங்குவதுடன் மட்டுமல்லாமல் அதில் ரூ 5000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்று சர்வதேச சாலை பாதுகாப்பு நிபுணர் டாக்டர் கமல் சோய் தெரிவித்துள்ளார். இது தவிர பல பேருந்துகளும் காலாவதியாகியும் இன்னும் இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. பொது  மற்றும் சரக்கு வாகனங்களில் வாகன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கருவியான GPRS பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதிலும் நேர்மையான டெண்டர் விடாமல், வெறும் 8 உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது எடப்பாடி அரசு.

8 வழிச்சாலை என்ற பெயரில் விவசாயிகள் நிலத்தை பறிக்க துடித்த அதிமுக அரசு, மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி பின் வாங்கியது. இதில் ரூ 6133.57 கோடி மதிப்புள்ள டெண்டர்களை முதலமைச்சர் தன் உறவினர்களுக்கு கொடுத்திருப்பதாக செய்தி கசிந்தது. அதிலும் குறிப்பாக முதல்வரின் சம்மந்திக்கு அதிக அளவில் டெண்டர் கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.அமைச்சர் வேலுமணி கிராம ஊராட்சி மன்றத்திற்கு led விளக்குகள் பொருத்தும்  திட்டத்தில் ரூ 875 கோடி ஊழல் செய்திருக்கிறார்.அமைச்சர் ஆர் காமராஜ் கொரோனா  காலத்தில்  உதவ வைத்திருந்த அரிசியை கள்ள சந்தையில் விற்று முறைகேடு செய்திருக்கிறார்.அமைச்சர் ஆர்பி  உதயகுமார் பாரத் நெட் டெண்டரில் ரூ 1950 கோடி ஊழல் செய்திருக்கிறார்.அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கும் திட்டத்தில் ரூ 30 கோடிக்கு முறைகேடு செய்திருக்கிறார். 

இவையெல்லாம் வெளியில் வந்தவை. இதை தவிர குட்கா ஊழல், ஆவின் பால் கலப்பட ஊழல் , மணல் குவாரி ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அம்மாவின் ஆட்சி என்றும் கூறும்  அமைச்சர்கள் அம்மாவின் வழியில் மத்திய அரசின் மாநில சுயாட்சியை அழிக்கும் திட்டங்களை எதிர்க்காமல் , A 1 குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட அம்மையாரின் வழியில் ஆட்சி செய்வது கொடுமை. இவ்வளவு முறைகேடுகளில் திமுக ஆட்சியில் ஒன்று நடந்திருந்தாலும் கற்பனைக்கு கூட எட்டாத அளவிற்கு ஊழல் தொகையை பெரிதாக்கி மக்களிடையே பரப்பி இருப்பார்கள். தலைவி எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழியே.

ஊழல் ஆட்சியை ஒழித்து மாநில சுயாட்சியை நிலைநாட்ட தமிழகம் மட்டுமல்ல , அனைத்து இந்திய மாநிலங்களும் எதிர்பார்ப்பது திமுகவின் ஆட்சியை தான். வரும் தேர்தலில் அதிமுக அரசை தோற்கடித்து சமூக நீதி காவலனாகிய திமுகவை ஆதரிப்போம். மாநில சுயாட்சியை மீட்டெடுப்போம்.


- சுமதி தியாகராஜன்



No comments:

Post a Comment