Friday 2 April 2021

கைம்பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய திமுக ஆட்சி - டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து

 கைம்பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய திமுக ஆட்சி - டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து 


“கைம்பெண்கள் நல முன்னேற்றத்திற்காகக் கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்கப்படும்”

- திமுக தேர்தல் அறிக்கை

இப்படி ஒன்று நடந்தால் உலகிலேயே விதவைகளின் நலனுக்காக அமைக்கபடும் மாநில அரசுகளின் பட்டியலில் தனித்த இடத்தை தமிழகம் பெறும்.

நம் சமூகப் படி நிலையைப் பொறுத்த வரை எப்போதுமே அதிகம் பாதிக்கப்படக்கூடிய (vulnerable) வரையறையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கணவனை இழந்தை கைம்பெண்களின் நிலை மிக துயரமானது. ஒரு புறம் அவர்களது வாழ்வாதரம், மற்றொரு புறம் சமூகத்தின் பிற்போக்கானசடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்ற பெயரில் நடக்கும் துயரங்கள், இவை எப்போதுமே கைம்பெண்களை சித்திரவதைக்குள்ளாக்கும் காரணிகள். இவற்றைத்தான் தந்தை பெரியார் கடுமையாக சாடினார்.

அவரது சீடரான பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் பின்னாளில் ஆட்சி பீடத்தில் ஏறிய போது விதவைகள் மறுமலர்ச்சியில் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டனர். அது குறித்த பார்வையே இப்பதிவு. இதன் வழியாக திமுகவின் தேர்தல் அறிக்கையையும் பார்ப்போம்.

கணவரை இழந்த கைம்பெண்களின் நலனை மனதிற் கொண்டே கலைஞர் இந்தியாவிலேயே பல நலத்திட்டங்களை அறிவித்தார். அதில் முதல் புரட்சியாக அவர் செய்தது 1975 ல் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவித்திட்டம். இதன் மூலம் இளம் மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.  

தற்போது திமுக தேர்தல் அறிக்கையில்,

“டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், தற்போது வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன் தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கமும் வழங்கப்படும்.”

தேர்தல் அறிக்கை எண்: 258

மேலை நாடுகளில் விதவைகள் மறுமணம் செய்வதற்கு அந்நாட்டு அரசுகள் பெரிய அளவில் உதவி செய்வதில்லை. ஆனால், அவர்களுக்கென்ற ஒரு எதிர்காலம் உள்ளது, அதற்கான தொடக்கத்திற்கு எந்த சிரமமும் படக்கூடாது என தாயுள்ளதோடு சிந்தித்தவர் கலைஞர்.

ஏழை கைம்பெண்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்த இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1978 ல் துவக்கி வைத்தார். எண்ணற்ற பெண்களுக்கு அக்காலகட்டத்தில் இது மிகப் பெரிய உதவியாக இருந்தது.

கணவனால் கைவிடப்பட்டப் பெண்களுக்கு 18 வயது  நிரம்பிய மகன் இருந்தாலும் முதியோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்க 1998ல் ஆணையிட்டு நடைமுறைப்படுத்தினார். இத்திட்டத்திற்கு முன்பு வரை கணவனை இழந்தாலும் “உனக்குத்தான் வயது நிரம்பிய மகன் இருக்கிறானே, அவன் வேலைக்குப் போய் சோறு போட மாட்டானா? என்று பேசிய து சமூகம்”, அப்பையன் 18 வயதில் கல்லூரிக்கு போய் கல்வி பெறுவானா? அல்லது குடும்பத்தை காக்க வேலைக்கு போவானா என்று கூட சமூகம் உணரவில்லை. அந்த கவலையை கலைஞர் கவனத்திற்க் கொண்டார். பல ஆயிரம் கைம்பெண்களுக்கு பொருளாதார உதவி கிடைத்ததோடு அவர்களது குழந்தைகளுக்கு தடையற்ற கல்வியும் கிடைத்தது.

விதவைப் பெண்களுக்கு மகள் இருப்பின், அவர்களின் திருமணத்திற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்படக்கூடாது என்பதனையும் கலைஞர் நினைவில் கொண்டார். அவர்களுக்காகவே “ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம்” என்ற திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். 

திட்டம் 1:

- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும் (கல்வித்தகுதி தேவையில்லை)


திட்டம் 2:

- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும். 

- திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரமாக உயர்த்தப்படும். அத்துடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் (24 கேரட்) வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிமுகவை விடவும் அதிக அக்கறை கொண்டது திமுக அரசு. ஏனெனில் ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது இத்திட்டத்தினை திமுக அரசு தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே உள்ளது. உதாரணத்திற்கு, 2010 ஆம் ஆண்டு அன்றைய திமுக அமைச்சர் திருமதி கீதா ஜீவன் (13.5.2010) சட்டசபையில் 25 ஆயிரமாக உயர்த்திய அறிவிப்பிற்கு பிறகு இன்று வரை அதே தொகைதான் தரப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, இந்தியாவிலேயே முதன் முறையாக விதவைப் பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு வழங்கினார். இதன் வாயிலாக கணவனை இழந்தவர்களின் உயர்கல்விக்கு பெரிய பாதை போடப்பட்டது. ஆனால் சமீப வருடங்களில் இந்த திட்டம் நடைமுறையில் இல்லை.

தற்போது விதவைகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வாய்ப்பு பல துறைகளில் கிடைக்கிறது. இதன் மூலம் அவர்களின் பொருளாதரம், அவர்களது குழந்தைகளின் கல்வி, சமூக பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதரவற்ற விதவைகளுக்கான (destitute widows) வேலை வாய்ப்பில் திராவிட ஆட்சிகள் கொண்டு வந்த நலத்திட்டங்கள் யாவும் வளர்ந்த நாடுகளுக்கே முன்னுதாரனமாக இருப்பவை.


தற்போதைய தேர்தல் அறிக்கையில் 

- “35 வயதிற்கு மேற்பட்ட கணவனால் கைவிடப்பட்ட மற்றும் கைம்பெண்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்”

- “கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் பத்து பேர் இணைந்து நடத்தும் ஆடு மற்றும் கோழி வளர்ப்பு பண்ணைகளுக்கு 30 சதவிகித மானியம் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.”

இரண்டாவதாக சொல்லப்பட்டிருக்கும் வேளாண் மகளிர்க்கான திட்டத்தில் கைம்பெண்கள் அல்லது கைவிடப்பட்ட பெண்கள் முன்னெடுக்கும் செயல் ஒரு சமூகப் புரட்சி என்றே சொல்லலாம். இந்த திட்டம் மிகச் சிறப்பாக செயல்படும் போது கிராமப் புறங்களில் நிகழும் விதவைகள் குறித்த அமங்கலமான சிந்தனைகள் தூக்கியெறியப்படும். 

வளர்ந்த நாடான பிரித்தானியாவில் வழங்கப்படும் விதவை பெற்றோர் உதவித் தொகையில் (Bereavement Support Payment) இறந்த பெற்றோரில் ஒருவர் தேசிய இன்சூரன்ஸ் திட்டத்தில் குறைந்தது 25 வாரங்கள் பங்கேற்று பங்களிப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் மிக ஏழ்மையான சூழலில் வருபவர்களைக் கருத்தில் கொண்டே திராவிட அரசுகள் இது போன்ற நிபந்தனைகள் இன்றி பரிவுடன் உதவுகிறது.

மேலே சொன்ன திட்டங்களை பார்க்கும் போது விதவைகளின் குடும்பம், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களுக்கான வேலை வாய்ப்பு, திருமண உதவி என இயன்ற வரை கைம்பெண்களின் நலனில் அக்கறை செலுத்திய கலைஞர் அவர்களின் “தந்தைக்கு நிகரானவர்” என்றால் வியப்பில்லை. 

கைம்பெண்களோடு, கணவனால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வாதரத்தையும் கனிவுடன் உற்று நோக்கும் ஒரு அரசு அமைவதை நாம் நிச்சயம் பரிசீலிக்க வேண்டும்.


-டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து M.Sc., M.Phil., Ph.D, FRSC

பிரித்தானியாNo comments:

Post a Comment