Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி – அப்பாஸ்

 ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி – அப்பாஸ்


"ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி" என்பதை விட "ஏன் மலர வேண்டும் திமுக அரசு" என்பதே சரியான கேள்வியாக இருக்கும். அரசமைப்பு சரியாக இருக்கும் போது "ஆட்சி மாற்றம்" மட்டும் போதும். ஆனால் கடந்த 10 வருடங்களில் நடந்திருப்பது என்ன? ஒட்டு மொத்த அரசமைப்பே சீர்குலைந்துள்ளது. மாநில உரிமை, நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, சுய நிர்ணயம் என எல்லா கூறுகளும் சிதைந்து போன நிலையில் எல்லாவற்றையும் சீரமைக்கும் ஒரு புதிய அரசு அமைய வேண்டும். அது திமுக-வால் மட்டுமே சாத்தியப்படும்.


அடையாளம் மீட்பு


இந்திய ஒன்றிய அரசியலமைப்பு பிற தேசங்களில் இருந்து வேறுபட்டது. வேறுபட்ட தேசிய இனங்களின் கூட்டமைப்பாகவும், அதே நேரத்தில் ஒரே தேசமாகவும் இயங்கும் ஒரு சிறப்புமிக்க அமைப்பு. குறிப்பாக சொல்லப்போனால் முந்தைய சோவியத் யூனியன் போலவோ, அல்லது இன்றைய ஐரோப்பிய யூனியன் போன்ற கூட்டமைப்பையோ ஒத்தது இந்திய ஒன்றியம். இந்த கூட்டமைப்பு தேசமாக உருவெடுத்தப்போது ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் அவர்களுக்குரிய உரிமையை, பங்களிப்பை உறுதி செய்யும் வாக்குறுதிகள் அரசியலமைப்பின் மூலம் தரப்பட்டன. ஆனால் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்டமைப்பு பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஒற்றை தேசிய இனம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்ற குறிக்கோளில் பிற தேசிய இனங்களை நீர்த்துப் போகும் செயல்களை அது செய்து வருகிறது.


தன் இன உரிமையை கேட்பவர்களை தேசத்திற்கு எதிராக காட்டும் முயற்சியின் மூலம் அது இன்னும் உத்வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு பல தேசிய இனங்கள் பலியாகி விட்டன என்பதும் கசப்பான உண்மை. அந்த தாக்குதல் திராவிட, தமிழ் இனத்தின் மீதும் தொடர்ந்து வைக்கபட்டுக் கொண்டே இருக்கிறது. இன்றைய ஆளும் அரசு அதை எதிர்க்கும் துணிவு இல்லாமல் வாய்மூடி இருந்தாலும், பெரியாரால் பண்படுத்தப்பட்ட இந்த மண்ணும், மக்களும், அந்த மக்களுக்கான இயக்கமுமான திராவிட முன்னேற்ற கழகம் தரும் கடும் எதிர்ப்பினால் இன்னமும் அந்த அடையாளம் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியில் உள்ள அசுர அதிகார பலத்தை எதிர்கொள்ள அதற்கு இணையான அதிகாரத்தை மக்கள் திமுகவிற்கு தருவதன் மூலமே இதன் அடுத்த கட்ட நகர்வை எதிர்கொள்ள முடியும்.


மாநில உரிமைகள்


இந்த பத்தாண்டுகளில் தமிழகம் இழந்த மாநில உரிமைகள் எண்ணிலடங்கா. கல்வியில் உரிமை இழந்ததால் நம் வீட்டு பிள்ளைகளை காலனிடம் ஒப்படைத்தோம். வேலை வாய்ப்பில் உரிமை இழந்ததால் வாழ்வாதாரத்தை இழந்தோம். இலவச மின்சாரம் கொடுத்து காத்து வைத்த விவசாயத்தை அழிக்க வழி கொடுத்தோம். தனியாரின் லாபங்களுக்காக சுற்றுசூழலை பலி கொடுத்தோம். எல்லாவற்றிக்கும் மேலாக சுயமரியாதை இழந்த ஒரு கூட்டத்தால் "கேள்வி கேட்கும்" அடிப்படை உரிமையை இழந்தோம். இன்னும் என்ன மிச்சமிருக்கு இங்கு இழப்பதற்கு. இழந்ததை மீட்க இருப்பவரால் எந்நாளும் இயலாது. முதுகெலும்புள்ள, ஒரு சுயமரியாதை கூட்டத்தால் தான் அதை நடத்திக்காட்ட முடியும். அது திமுகவால் தான் முடியும்.


நிர்வாக சீர்கேடு


அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் அடி முதல் தலை வரை ஊழலால் திளைக்கிறது. எரிகிற வீட்டில் கிடைப்பது லாபம் என்பது போல தான் கடந்த ஆட்சி நடந்துள்ளது. கடந்த நான்காண்டுகளில் உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறையில் நடந்திருக்கும் ஊழல்கள் மலைக்க வைப்பவை. அதிலும் இந்த கோரோனோ காலத்தில் கேட்பாரின்றி கொஞ்சமும் மனசாட்சியின்றி அடித்த கொள்ளைகள் கடுகளவும் மன்னிக்க, மறக்க இயலாதவை. இப்படி அனைத்து துறைகளிலும் ஊழலாலும், நிர்வாக திறமையின்மையாலும் அரசின் நிதி கட்டமைப்பையே சீர் குலைத்துள்ளது இந்த அரசு. இதை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதை செய்துமுடிக்க ஆட்சி திறனும், அனுபவமும் மிக்க ஒரு அவை அமைய வேண்டும். அந்த அவை திராவிட முன்னேற்ற கழக அவையாக தான் இருக்க முடியும்.


அறம் சார் அரசு


இன்று ஆட்சியில் இருப்பவரின் நம்பகத்தன்மை என்பது எவ்வளவு கேவலமானது என்பதை கடந்த கால நிகழ்வுகள் சொல்லும். தங்களின் சுய லாபத்திற்காக தங்களை உருவாக்கிய தலைவரின் மரணத்தை வைத்து அரசியல் செய்ததும், இன்று வரை அதில் உள்ள மர்மம் (என்று அவர்களாலேயே சொல்லப்பட்ட ) குறித்து எந்த தெளிவான முடிவையோ விளக்கத்தையோ கொடுக்காமல் இருப்பதும் - இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள், எதன் பொருட்டும் நம்பத்தகாதவர்கள் என்பதையே இன்னும் ஒரு முறை உறுதி செய்கிறது. தான் சொல்லும் சொல்லிலும், செயலிலும் எந்த ஒரு உண்மைத்தன்மையும் இல்லாத இவர்களை நம்பி நம்பியா நம் எதிர்காலம் அமைய வேண்டும்.


"ஈட்டலும் இயற்றலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு"


என்ற குரலுக்கேற்ப ஒரு அரசை எப்படி நடத்த வேண்டும் என்பது திராவிட முன்னேற்ற கழகத்தால் தான் முடியும்.


"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்."


முறை செய்து காப்பாற்ற மு க ஸ்டாலின் என்ற தலைவனால் மட்டுமே முடியும். 


– அப்பாஸ்

No comments:

Post a Comment