Friday 2 April 2021

மு.க. ஸ்டாலின் என்னும் நிர்வாகி - தாமரை வில்கின்சன்

 மு.க. ஸ்டாலின் என்னும் நிர்வாகி - தாமரை வில்கின்சன்



தினான்கு வயதில் திமுகவிற்காகத் தேர்தல் பிரச்சாரம், கோபாலபுரம் இளைஞர் திமுக என்று ஆரம்பித்துத் தொடர்ந்து திமுக இளைஞரணி அமைப்பாளராகவும், செயலாளராகவும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், பொருளாளராகவும், செயல் தலைவராகவும், இன்று வெற்றிகரமான தலைவராகவும் உயர்ந்திருக்கிறார் திரு மு க ஸ்டாலின்! திமுக என்ற பேரியக்கத்தை வழிநடத்தக்கூடிய ஆளுமை மிக்கத் தலைவராகத் திரு ஸ்டாலின் தமிழக அரசியல்களத்தில் சிறிதும் தொய்வில்லாமல் நடைபோடுகிறார். கூடிய விரைவில் தமிழக முதல்வராகப் பதவியேற்கப் போகிறவர் திரு ஸ்டாலின் அவர்களே என்று பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளும் , அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வெளிப்படுத்தும் அன்பும் நம்பிக்கையும் கட்டியம் கூறுகின்றன.

தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகர மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது நிர்வாகத்திறனை ஸ்டாலின் உரக்கவும், உறுதியாகவும் நிரூபித்து விட்டார். திரு மு க ஸ்டாலினின் நிர்வாகத்திறனைச் சற்று விரிவாகத் திரும்பிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

மேயர் ஸ்டாலின் (1996-2001)



சென்னையின் மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென்னையின் பொற்காலம் என்று கூறலாம். 

1. தொலைநோக்கோடு பத்துப் பாலங்களைச் சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களில் கட்டி சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் பெரிதும் சமாளிக்க வழிகோலினார். பெரம்பூர் பாலம் தவிர மற்ற பாலங்கள் குறித்த நேரத்தில், திட்டமிடப்பட்ட தொகையைவிடக் குறைந்த செலவில் கட்டி முடிக்கப்பட்டன.

2. கல்வி, சுகாதாரம், நிதி, நகரக்கட்டமைப்பு, வரிவிதிப்பு, பொதுக்கணக்கு நிலைக்குழுக்கள் அமைத்தார். 

3. மாநில அரசோடு சேர்ந்து மாநகராட்சி செயல்பட ஏதுவாகச் சென்னை பெருநகரக் குடிநீர்/கழிவுநீரகற்று வாரியம், குடிசை மாற்று வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தீயணைப்புத் துறை ஆகிய துறைகளின் உயரதிகாரிகள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்குபெறும் இணைக்குழுக்கள் அமைத்தார்.

4. சென்னையின் குப்பைகளை விரைந்து அகற்ற பெரும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு, சென்னையின் உருவத்தையே மாற்றி அமைத்தார்.

5. துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ நலத்திட்டம் அறிமுகப்படுத்தினார்.

6. மழை நீர்க் கால்வாய் வசதிகளை மேம்படுத்தியதால் பெருமழை காலங்களில் நீர் தேங்கி நிற்பது பெருமளவு குறைந்தது.

7. சிங்காரச் சென்னை என்ற குறிக்கோளை நிறைவேற்றும் விதமாகப் பூங்காக்கள், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.  

8. மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை ஆரம்பித்ததோடு, கணிப்பொறி வசதியோடு அப் பள்ளிகளின் தரத்தை அனைவரும் வியக்கும்வண்ணம் உயர்த்துவதில் வெற்றிபெற்றார்.



உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின்



திரு ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் தமிழக மகளிர் மேம்பாட்டுக் கழகத்தையும் ஊரக வளர்ச்சித் துறையையும் இணைத்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் இணைந்த இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் நான்காயிரம் கோடி சூழல் நிதியைப் பெற்றுப் பயனடைந்தனர்.

உள்ளாட்சிகளுக்கான நிதியொதுக்கீடு உயர்த்தப்பட்டு மாநில அரசின் வரிவருவாயிலிருந்து முப்பொத்தியொரு சதவிகித நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் இருபது லட்சம் ரூபாய் வளர்ச்சி நிதியொதுக்கீடு, கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைத்தல் , மின் மயானங்கள் அமைக்கும் திட்டம் , முடியாமலிருந்த பதினைந்து கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளை முடித்தல், 5 ஆண்டுகளில் 95 சமத்துவப் புறங்களைக் கட்டி முடித்தல், சுமார் பதினைந்தாயிரம் அரசுப்பள்ளிகளில் மறுகட்டுமானம் , சென்னை,மதுரை, கோவை நகரங்களில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியது, உள்ளாட்சித்துறையில் மீண்டும் பணி நியமனங்கள் செய்தது என்று ஸ்டாலினின் நிர்வாகத் திறனால் தமிழக உள்ளாட்சிக் கட்டமைப்பு மிகச் சிறந்த நிலையை எட்டியது.

2008இல் மத்திய அரசின் நிர்மல் க்ராம் புரஸ்கார் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6310 கிராமங்களில் தமிழகத்தில் 1474 கிராமங்கள் விருதுகளை அள்ளிக் குவித்தன . மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது, 76% பெண்களும், 56% தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் இதனால் பயன்பெற்றனர்.


துணை முதல்வர் மு க ஸ்டாலின்




துணை முதல்வராகத் திரு ஸ்டாலின் 6,40,000 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்தார்..

அவர் துணை முதல்வராக இருக்கையில் எடிரிவிட்ரான் மருத்துவத் தொழில்நுட்ப பூங்கா, தரமணியில் டைடல் உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவின் இரண்டாவது பிரிவு, புகலூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ரூ.612 கோடி முதலீட்டிலான தொழிற்சாலை மேம்பாட்டுத் திட்டம், சான்மினா எஸ்.சி.ஐ. அமெரிக்க நிறுவனம், ரெனால்டு & நிசான் கார் தொழிற்சாலை, டாட்டா இரும்பு தொழிற்சாலை, எம்.பி.பி.எல். தொழிற்சாலை, இனர்ஜி ஆட்டோமொபைல் தொழிற்சாலையும், டிக்சான் தொழிற்சாலை எனத் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் குவிந்தன.

ராமநாதபுரம், வேலூர், ஓகனேக்கல்,மேலூர் கூட்டுக்குடிநீர் திட்டங்கள், நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது திரு ஸ்டாலினின் சாதனைகளாகும். ஸ்டாலினின் மக்கள் நலனை மையமாகக் கொண்ட நிர்வாகப் பணிகள் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியது.


எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்




ஒன்றிணைவோம் வா,மக்கள் கிராம சபை, தமிழகம் மீட்போம் என்று இந்தியாவில் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு மாநிலம் முழுவதும் பயணித்துக் கோடிக் கணக்கான மக்களைச் சந்தித்துள்ளார் திரு. ஸ்டாலின்.

தமிழகத்தின் எதிர் கட்சித் தலைவரா அல்லது முதல்வரா என்று வியக்கும் வண்ணம் தமிழக அரசை தன் அறிக்கைகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் வழிநடத்துகிறார்.

ஆட்சி அமைத்தவுடன மக்கள் இதுவரை அளித்த மனுக்கள் அனைத்தும் கவனிக்கப்பட்டு அவற்றின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.




தேர்தல் அறிக்கையைப் பலதரப்பட்ட மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுத் தயாரித்தது, நீட் தேர்வுக்கு எதிரான தொடர்ப் போராட்டம், புதிய கல்விக் கொள்கைக்குக் காட்டும் வீரியமான எதிர்ப்பு, இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வரும்போது திமுகவின் வழக்கறிஞர் அணியின் மூலம் உடனே நீதிமன்றத்தை அணுகியது, இன்றைய ஆளும் அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் வாழ்விழந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்து கொடுக்கத் தன்னால் இயன்றவரை முயற்சிப்பது, அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை உடனுக்குடன் அம்பலப்படுத்திச் சட்ட பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுப்பது, திமுக என்ற பலமான கட்டமைப்பைக் கொண்ட கட்சியின் தொண்டர் படையைப் பயன்படுத்திப் பொதுமக்களின் குறைகளை முடிந்தவரை நிவர்த்திச் செய்வது என்று திரு மு க ஸ்டாலின் திமுகவின் ஆட்சி மலர்ந்தால் தமிழகம் எத்தகைய பாதையில் முன்னேறும் என்பதைத் தன் செயல்கள் மூலம் ஏற்கனவே நமக்குப் படம் பிடித்துக் காட்டி விட்டார்.




 ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி?

கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் சந்தித்த பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து விட்டு, திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாடு மீண்டும் இந்தியாவின் முதன்மையான மாநிலமாக ஒளிர்வதற்கு மலர வேண்டும் திமுக ஆட்சி!!! வாக்களிப்போம் உதயசூரியனுக்கே!!!

-தாமரை வில்கின்சன்


No comments:

Post a Comment