Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி! - முரளி ஜம்புலிங்கம்

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி! - முரளி ஜம்புலிங்கம் 


மிழக அரசியல் என்பது இப்போது இரண்டே காரணிகளின் அடிப்படையில் மட்டுமே இயங்குகிறது. ஒன்று திமுக மலரவேண்டும் மற்றது தாமரை மலர வேண்டும் என்பது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால் ஒன்று நீங்கள் திமுகவை ஆதரிக்கவேண்டும் அல்லது பிஜேபி கூட்டணியை ஆதரிக்கவேண்டும். நான் பிஜேபியை ஆதரிக்கவில்லை அதேபோல் திமுகவையும் ஆதரிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தற்போதைய அரசியல் சூழலில் எடுக்கவே முடியாது. 


நான் உண்மையை ஒப்புக்கொள்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட எனக்கு திமுக மீதும் கலைஞர் மீதும் பெரிய அபிமானம் இருந்ததில்லை. ஊழல், பதவி ஆசை, குடும்ப அரசியல் என்கிற பிம்பம்தான் எனக்கு அவர்கள் மீது இருந்தது. பெரியாரின் சித்தாந்தத்திற்கு எதிரான கொள்கையைத்தான் திமுக பின்பற்றுகிறதோ என்று சந்தேகித்தேன். கடந்த சட்டமன்ற தேர்தலில்கூட மக்கள் நலக் கூட்டணியைத்தான் ஆதரித்தேன். 


பிறகு ஒரு சமயத்தில் பிஜேபியின் மத்திய மற்றும் மாநில அரசியலை உற்று கவனிக்க ஆரம்பித்தேன். பிஜேபியின் மத அரசியல், சமூகநீதி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, ஜாதியப்  பெருமிதம் போன்றவற்றில் அவர்களின் ஒரே எதிரியாக கலைஞர் மட்டுமே இருந்தார். நான் வெறுக்கிற சங்கிகளின் ஒரே விரோதியாக கலைஞர் மட்டுமே தனித்து நின்றார். நம்மை யாரோ அவர்களின் கைப்பாவையாக வைத்து விளையாடுகிறார்களோ என்று சந்தேகம் எழுந்தது. அங்கிருந்து கலைஞரை பின்தொடர ஆரம்பித்தேன். இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் பிஜேபியை ஆதரிக்கும்போது  தமிழகம் தொடர்ந்து எதிர்க்க ஒரே காரணம் பெரியார், அண்ணாவை பின்பற்றி கலைஞர் இம்மண்ணில் புரிந்த திராவிட அரசியல் தான் என்று. கலைஞரை எதிர்க்கும் தமிழக மக்கள் கூட பிஜேபி இந்நாட்டிற்கு ஆபத்தானவர்கள் என்ற குறைந்த பட்ச அறிவைக் கொண்டிருப்பதற்கு அவர்களே அறியாமல் கலைஞர்தான் காரணம் என்பதை புரிந்துகொண்டேன். கடந்த 50 ஆண்டுகளில் நாம் மற்ற மாநிலங்களை விட பல விஷயங்களில் முன்னேறி இருப்பதற்கு கலைஞர்தான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்துகொண்டேன். அங்கிருந்தே திமுக சார்பு நிலையை எடுக்க ஆரம்பித்தேன். 

இப்போது உங்களுக்கு இன்னொரு கேள்வி எழலாம். திமுக தவறு செய்ததே இல்லையா? அதை பற்றி பேசவே கூடாதா?


இதில் உங்களுக்கும் எனக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.அதைப்பற்றி நாம் தாராளமாகப் பேசலாம். ஆனால் எங்கே எப்போது என்பதுதான் இங்கு பிரச்சனையே. 


இருபது மாணவர்கள் இருக்கும் வகுப்பில் பெரும்பாலானவர்கள் பெயில். சில மாணவர்கள் 35 அல்லது 40 மதிப்பெண் எடுத்து just பாஸ். ஒரு மாணவன் மட்டும் 75 மதிப்பெண் எடுத்திருக்கிறான். இத்தனைக்கும் எல்லா மாணவர்களும் ஒரே குடும்பப்  பின்னணியைக்  கொண்டவர்கள். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் அவன் தான் முதல் மார்க். இந்நிலையில் பெயில் ஆன ஒரு மாணவனுக்கு தான் முதல் ரேங்க் கொடுக்க வேண்டும் என்று பெரும் கூட்டம் போராடிக்  கொண்டிருக்கையில் அவர்களை எதிர்ப்பது தான் அறம். அதை விடுத்து  75 மதிப்பெண் எடுத்த மாணவன் ஏன் 25 மதிப்பெண்கள் எடுக்கவில்லை என்று இப்போது வாதம் செய்து கொண்டிருப்பது அறமற்ற செயலே. 


நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொண்டு நீங்கள் இந்த அறமற்ற செயலை தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள். யாரை எதிர்க்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் நாம் யாரை ஆதரிக்கிறோம் என்பதுதான். 75 மதிப்பெண்கள் எடுத்த ஒரு மாணவனை 100% மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவிப்பது என்பது வேறு. பெயில் ஆன மாணவர்களுடன் அவனை ஒப்பிட்டு இவனை மட்டம் தட்டுவது வேறு. நீங்கள் இதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறீர்கள். 


இதில் இன்னுமொரு பெரிய அபத்தம், இதுவரை வகுப்பிற்கு வராத மாணவர்களான கமல் சீமான் போன்றவர்களை ஆதரிப்பது தான். இன்னுமொரு கேள்வி உங்களுக்கு எழலாம். ஏற்கனவே இருப்பவர்கள் மட்டும் தான் ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வர வேண்டுமா? புதிதாக யாரும் வரக் கூடாதா என்று... நிச்சயம் வரலாம். ஆனால் அதற்கு முன் அவர்களின் கொள்கை என்ன? நிலைப்பாடு என்ன என்பதைத்  தெளிவாக அறிவிக்கட்டும். ஊழலை ஒழிப்பேன் என்று ஒருவர் கூறினால் அவரை விட பெரிய அயோக்கியன் யாரும் இல்லை. இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனை ஜாதி, மத, பாலின வேற்றுமைகள் தான். அதை பற்றி பேசாமல் ஊழலை மட்டும் ஒருவர் பேசினால் அவர்களைச் சந்தேகப்படுங்கள். இவ்வளவு வளர்ந்த கட்சியான திமுகவே ஆரம்பத்தில் மிகக்  குறைந்த இடத்தில் போட்டியிட்டு படிப்படியாக தங்களை உயர்த்திக்கொண்டது. இப்போது வந்த இவர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம் ஆட்சியைப்  பிடிப்பது அல்ல. நாம் எல்லோரும் ஒருமித்து எதிர்க்கும் பிஜேபியை மறைமுகமாக ஆதரிப்பதுதான். உங்களுக்கு தெரியாமலேயே நீங்களும் அவ்வலையில் சிக்கிக்கொண்டு நீங்கள் எதிர்ப்பவர்களை ஆதரிக்கிறீர்கள் என்பதை விளங்கிக்  கொள்ளுங்கள். 


இன்னொரு கோணத்திலும் இதைப்  பார்க்க வேண்டி இருக்கிறது. நா.த.க 2016 சட்டமன்றத்  தேர்தலில் நிறுத்திய 234 உறுப்பினர்களில் 30க்கும் குறைவான உறுப்பினர்களே தற்போதய தேர்தலில் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளனர். எதன் அடிப்படையில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு  இப்போது வாய்ப்பளிக்கப்படவில்லை? கள நிலவரம் அறிந்த பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்காமல் புதிதாக வந்தவர்களுக்கு எதற்காக வாய்ப்பளித்தனர்? ஏற்கனவே நின்று செலவுகள் செய்து தோற்ற அவர்களின் நிலை என்ன? யோசித்துப்  பார்த்தால் நமக்கு ஒன்று தெளிவாக விளங்கும். அவர்களின் கட்சித்  தலைமைக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை. அவர்களின் ஒரே இலக்கு திமுகவிற்கு செல்ல வேண்டிய வாக்குகளைச்  சிதறடிப்பது ஒன்று மட்டும் தான். தற்போதய மாநில மற்றும் மத்திய அரசைக்  கேள்வி கேட்பதோ  அல்லது அவர்களை ஆட்சிக்கு  வராமல் செய்வதோ அவர்களின் நோக்கம் அல்ல. அவர்களின் ஒரே நோக்கம் திமுக திரும்ப வரக்கூடாது என்பது மட்டும் தான். இந்தக்  கேவலமான நோக்கத்திற்காக அவர்கள் எந்த கீழ்த்தரமான செயல்களை செய்வதற்கும்  தயங்குவதில்லை. 


நான் திமுகவை ஆதரிக்கிறேன். திமுக வரக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்ட எல்லா கட்சிகளையும் எதிர்க்கிறேன்.


நண்பர்களும் இது போன்ற நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறேன். அதை விடுத்து நான் ஒரு  நடுநிலையாளன் என்று சொல்லிக்கொண்டு, நீங்கள் உங்களை அறியாமல் பாசிச/ மத/ ஜாதிய அடிப்படைவாத சக்திகளை ஆதரிக்கிறீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.


இது முழுக்க பிஜேபி கூட்டணியை எதிர்பவர்களுக்கான பதிவு.  இவ்வளவு பொருளாதார சீர்கேடுகளுக்குப்  பின்னாலும் மதம் அல்லது ஜாதி என்ற அடிப்படையில் மட்டும்  பிஜேபி கூட்டணியை ஆதரிப்பவர்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?


இதையெல்லாம் மீறி அது ஒழுங்கா, இது ஒழுங்கா, அது தப்பில்லையா, இது தப்பில்லையா என்பவர்களுக்கு என் ஒரே பதில்.. ஆமாம் எங்க அப்பன் கிட்ட ஒன்னு ரெண்டு குறை இருக்கதான் செய்யுது. இருந்துட்டு போகட்டும். ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் எனக்காக வந்து நிற்பவன் என் அப்பன் தான். திமுக நமக்கு அப்படித்தான். இந்த ஒற்றை காரணத்திற்காகவாது திமுக நிச்சயம் மலர வேண்டும். 


- முரளி ஜம்புலிங்கம் 


No comments:

Post a Comment