Friday 2 July 2021

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 11 - தந்தை பெரியாரின் அணுகுமுறை - கவிஞர் ம.வீ.கனிமொழி

அன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி 11 - தந்தை பெரியாரின் அணுகுமுறை - கவிஞர் ம.வீ.கனிமொழி


பெரியாரைப் பற்றிச் சொல்கின்றபோது , அவர் கடவுள் மறுப்பாளர் என்றுதான் பெரும்பாலும் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.


தந்தை பெரியார் அவர்களைப் போல் அனைத்து புராண இதிகாசங்களையும் ஒவ்வொரு மத நூல்களையும் படித்து அதில் இருக்கக்கூடிய முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு மக்களிடம் எடுத்துக்கூறித் தெளிவடைய வைத்தவர் யாருமில்லை.


மத நல்லிணக்கம் குறித்து அவருடைய அணுகுமுறை என்பது பல நேரங்களில் நமக்கு வியப்பைத் தந்திருக்கிறது. குறிப்பாக மத நல்லிணக்கத்திற்காகப் பேசுகின்றவர்கள் இன்றைய காலகட்டத்தில் தந்தை பெரியாரின் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


பெரியார் இறைமறுப்பாளர் தான் ஆனால் ஒரு மத நூலில் இருக்கும் செய்தியை மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிப் பயன்படுத்திய நுணக்கத்தை அறிந்துகொள்ள ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டுவது பொருந்தும்.


ஒரு சமயம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் முஸ்லிம்களுக்கு இடையே சண்டை வந்து இருகட்சியினராகப் பிரிந்தார்கள். இந்தச் சண்டையானது தொழுகை நடத்தும் மசூதியை மூடும்படியாகச் செய்து விட்டது. இந்த நிலைகளைக் கண்ட முஸ்லிம் பிரமுகர் ஒருவர் சமரசம் செய்து வைக்கத் தந்தை பெரியார் அவர்களையும் அவருடைய நண்பர்களான திருச்சி சையத் முத்துஷா சாயபு அவர்களையும், இராஜகிரி அப்துல் சாயபு அவர்களையும் அழைத்து இருந்தார்.


மூவரும் ஒரு தேதி குறிப்பிட்டு ஈரோட்டிலிருந்து எடப்பாடிக்குப் புறப்பட்டார்கள். சங்ககிரி நிலையத்தில் இறங்கி எடப்பாடிக்கு 9 மைல் போகவேண்டும். அன்று இன்று போலப் பேருந்து வசதி இல்லை. குதிரை வண்டியில் தான் போக வேண்டும். இவர்கள் குதிரை வண்டியில் இரண்டு மூன்று மைல் போனவுடனே திடீர் மழை வந்துவிட்டது. அதிகமான மழையும் இருட்டும் ஏற்படவே வழியில் ஒரு கிராமத்தின் கோடியில் வண்டியை அவிழ்த்து விட்டு விட்டுப் பக்கத்திலிருந்த ஓர் ஓலை குடிசையில் திண்ணையில் தங்கினார்கள். அந்த வீட்டுக்கார அம்மாள் இவர்களை முஸ்லிம்கள் என்று கருதி திண்ணையில் உட்காராதீர்கள் போய்விடுங்கள் என்று கூறிவிட்டார்.


சரி என்று மூவரும் சக்கா வண்டியிலேயே மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டனர். அந்த வீட்டுக்காரிக்குச் சமைத்துச் சாப்பிடுவதற்கு ஒரு குடிசையும் இரவில் தூங்குவதற்கு எதிரே வேறு குடிசையும் இருந்தது. சாப்பிட்டவுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு எதிரே உள்ள குடிசைக்குச் சென்று தங்கிவிட்டார்.


இருட்டும் மழையும் பலமாக இருந்ததினால் அவர்கள் திரும்பவும் வண்டியை விட்டு இறங்கி குடிசை அருகே சென்றார்கள் துணி எல்லாம் நனைந்து விட்டது.


உட்காரவும் இடம் இல்லாதபடி சாரலில் நனைந்து விட்டது வீட்டுக்குள் சென்று உட்காரலாம் என்றாலோ வீடு பூட்டியிருந்தது. பெரியார் அவர்கள் தம்மிடம் இருந்த சாவிகளை எல்லாம் கொண்டு போட்டுத் திறக்க முயன்றார்கள். ஒரு சாவி பூட்டை திறந்தது.


மூவரும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள். தீக்குச்சியைக் கிழித்துப் பார்த்ததில் அருகில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு இருந்தது. அதைக் கொளுத்தி வைத்துக்கொண்டு படுக்கப் பார்த்தார்கள்.


அன்றைய தினம் முஸ்லிம்களுக்கு நோன்பு. பெரியார் அவர்களுடன் வந்திருந்த முஸ்லிம்கள் இருவரும் கடினமான நோன்பை அனுசரிக்கக் கூடியவர்கள். பசியோ அதிகம். நோன்பும் இருக்க வேண்டியிருந்தது.


இந்த நிலையில் அந்த வீட்டில் ஏதாவது இருக்குமா என்று பார்த்தார்கள். ஒரு சட்டியில் கொஞ்சம் சோறு தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டு இருந்தது. அதில் சிறிது உப்பைப் போட்டுக் கரைத்து மூவரும் ஆளுக்கு இரண்டு டம்ளர் குடித்துப் படுத்துக்கொண்டார்கள். அதற்குள் மழையும் விட்டுவிட்டது. மெல்ல வெளியில் வந்து கதவையும் முன்போலச் சாத்திப் பூட்டி விட்டு எடப்பாடிக்குப் புறப்பட்டு விட்டார்கள்.


மறுநாள் காலை எடப்பாடியில் முஸ்லிம்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சிக்காரர்களும் சமாதானமாக மீண்டும் மசூதியைத் திறந்து வாழ வேண்டிய அவசியங்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். கட்சிக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை.


அப்போது பெரியார் சொன்ன வாக்கியங்கள்தான் ஒரே மதத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை ஒன்றுபடுத்தியது.


பெரியார் அவர்களுடன் வந்த முஸ்லிம் பிரமுகரில் ஒருவர் குரானிலிருந்து சில வாக்கியங்களை எடுத்துச் சொல்லி விளக்க முற்பட்டார்கள்.


ஆண்டவன் யாருக்குச் சன்மானம் முதலில் அளிக்க முற்படுவார் என்றால் எவன் ஒருவன் தமது தவற்றை உணர்ந்து எதிரியிடம் சென்று முதலில் மன்னிப்பு கேட்கிறானோ அவனுக்குத்தான் அளிப்பார். என்று எடுத்துச் சொன்னார்.



இதனைக் கேட்டதும் இருகட்சித் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு எழுந்து ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து வணங்கி சமாதானமாகப் போனார்கள்.


வந்த காரியம் சுமூகமாக வெற்றியான பிறகு இவர்கள் தாங்கள் சங்கரியிலிருந்து எடப்பாடி வந்து சேர்ந்த கதையை எல்லாம் கூறக் கூடியிருந்த அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.


பெரியாரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான அணுகுமுறை இது தான்.


பெரியார் தனிப்பட்ட முறையில் மதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்தான் என்றாலும், மதத்தினர் இடையே வரக்கூடிய சண்டைகளைக் கலைவதற்கு அந்த மத நூலிலிருந்தே தந்தை பெரியார் எடுத்துக் கையாண்ட சொற்களை எண்ணி வியப்படையாமல் இருக்க முடியாது.


இன்றைக்கும் பல இடங்களில் நாம் கடுமையான விவாதங்களில் ஈடுபடுகிறோம். அப்போதெல்லாம் தந்தை பெரியாரின் இந்த அணுகுமுறையை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படும்போது பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.


ஆதாரம் :பெரியாரின் இளமைக் கால நிகழ்வுகள் குறித்துப் புலவர் இமயவரம்பன் எழுதியது (தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் நாள் 1962).


- கனிமொழி.MV





No comments:

Post a Comment