Friday 2 July 2021

தேர்தல் முடிவுகள் 2021 (கருத்துகள், படிப்பினைகள், அனுபவங்கள்) - இரவி செல்வராஜ்

தேர்தல் முடிவுகள் 2021 (கருத்துகள், படிப்பினைகள், அனுபவங்கள்) - இரவி செல்வராஜ்.


2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் நாள் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் 26 நாட்கள் கழித்து மே 2-ஆம் நாள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டபடி மதச்சார்பற்ற தி.மு.க.கூட்டணி மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்றுப் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சியமைத்தது. தி.மு.க.தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். எதிரணியான அ.தி.மு.க.கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுக் கடந்த பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.எதிர்க்கட்சி ஆனது. மாற்றப்பட்ட அ.தி.மு.க. சட்ட துணை விதிகளின் படி துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் எதிர்க்கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


பா.ஜ.க.வும் ஒன்றிய அரசுத் துறைகளும்


கடந்த ஏழு ஆண்டுகளாக (2014 முதல்) இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி, துவக்கம் முதலே தன் பாசிச எண்ணங்களைச் செயல்படுத்தி வருகின்றது. பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ள மிகப்பெரிய பலம் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசுத் துறைகள் தானே தவிர மக்கள் செல்வாக்கோ, கட்சித் தலைவர்களோ அல்ல. இந்த 2021 தேர்தலிலும் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துப் பிரதமர், உள்துறை அமைச்சர், பிற அமைச்சர்கள், பிற மாநில பா.ஜ.க.முதல்வர்கள் என அனைவரும் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்தார்கள். மேற்கு வங்கத்தில் எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டுமென்ற வெறியில் கொரோனா காலத்தில் 294 தொகுதிக்கும் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக 9 கட்டமாகத் தேர்தலை நடத்தியது ஒன்றிய அரசியலமைப்பின் படி தன்னாட்சி அமைப்பாக நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் ஆணையம்.


பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சியும் படுதோல்வியும் இறுதியில் மே 2 ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் அஸ்ஸாம் தவிரப் பிற மாநிலங்களில் பா.ஜ.க. படுதோல்வியை அடைந்தது. இதன் மூலம் பா.ஜ.க.வின் மீது மக்களுக்கிருக்கும் வெறுப்பு வெளிப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான மக்கள் விரோத சட்டங்களையும், தாங்கள் வெற்றிபெற முடியாத மாநிலங்களின் எதிர் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் மற்றும் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளைத் தங்கள் முழுநேர பணியாக வைத்திருந்ததும், மாநில மக்களுக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய பொதுத்துறை நிறுவனங்களையும், சேவை நிறுவனங்களையும், அடிப்படை உரிமைகளையும் பெருநிறுவனங்களுக்கு விற்பதையே முழுநேரத் தொழிலாகச் செய்து வந்தது என அனைத்தும் சேர்ந்து, இந்தத் தேர்தலில் எதிரொலித்துப் பா.ஜ.க. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் படுதோல்வியை அடைந்தது.


தேர்தல் முடிவுகள் தரும் நம்பிக்கை


இந்த 2021 தேர்தல் முடிவுகள் தரும் நம்பிக்கை மிகப்பெரியது. இது பாசிசத்துக்கெதிரான போரின் முதல் நிலை மட்டுமே. வெற்றி பெற்ற தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களும் இப்பொழுது பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றிபெற அனுமதிக்காத அளவில் அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும். தாங்கள் வெற்றிபெற மேற்கொண்ட வழிகளைப் பிற மாநிலங்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். 


பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் எப்படி அழிந்து போய் அம்மாநிலங்களில் பா.ஜ.க. என்ற பாசிச கட்சி வளர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளைச் செய்து வருகின்றது என்பதை விளக்கி எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. என்ற கட்சியைத் தனிமைப்படுத்த உதவ வேண்டும். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத முதல்வர்களின் கூட்டமைப்பை உருவாக்கி அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. என்னும் பாசிச கட்சி மீண்டும் தலைதூக்காத அளவுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்து மிகப்பெரிய வெற்றியை அடைய இப்பொழுதிலிருந்தே திட்டங்கள் தீட்ட வேண்டும்.


அரசியலமைப்பின் படி


அது ஒன்றிய அரசோ, மாநில அரசோ, ஒரு அரசாங்கம் என்பது எப்படி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எது நன்மையோ அதனைச் செய்ய முடியும் என்பது அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அறிந்த ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். ஒரு சட்டமோ, திட்டமோ தீட்டப்பட்டால் அதனால் மக்களுக்கு (பெருநிறுவனங்களுக்கல்ல) என்ன நன்மை, என்ன தீமை என்பதை மாநில அரசு மற்றும் மக்கள் கருத்தைக் கேட்டபின்பு செயல்படுத்த வேண்டும். ஆனால் கடந்த ஏழாண்டு பாசிச பா.ஜ.க. ஆட்சியில் அப்படி எதுவும் நிகழவில்லை. 


அவர்களே முடிவு செய்து (நாடாளுமன்ற பெரும்பான்மை இருக்கிறது என்ற ஆணவத்தில்) ஏராளமான மக்கள் விரோத சட்டங்களையும் (எ.கா.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம், புதிய கல்விக் கொள்கை, புதிய வேளாண் சட்டங்கள், உதய் மின்திட்டம், ஒரே நாடு ஒரே ரேஷன், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குக் கைமாற்றுதல், விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், குடியுரிமை திருத்த சட்டம், உணவுப் பாதுகாப்பு திருத்த சட்டம்), மக்களுக்குச் சம உரிமைகளுக்கு எதிரான இட ஒதுக்கீட்டுத் திருத்தங்களையும் சட்டங்களையும் கொண்டு வருவது என முழுமையாக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார்கள். மேற்கண்ட சட்டங்களால் 2016-லிருந்து (பண மதிப்பிழப்புக்குப் பின்) தனி மனிதப் பொருளாதாரமும், பொதுத்துறை நிறுவனங்களின் மற்றும் சிறு குறு தொழில்களின் பொருளாதாரமும் என இந்தியப் பொருளாதாரமே (சில குறிப்பிட்ட பெரு நிறுவனங்கள் தவிர்த்து) கடுமையாக வீழ்ச்சி அடைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது.


அரசியலமைப்பு சட்டத்தின் படி மக்கள் விரோத சட்டங்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றினாலும் மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தால் அச்சட்டங்களைத் தானாகவே செல்லாததாக ஆகிவிடும் அல்லது உச்ச நீதிமன்றம் அச்சட்டங்களை நீக்கலாம். ஆனால் இவர்கள் கொண்டு வந்த பெரும்பான்மை சட்டங்கள் மக்களுக்கு எதிரானவையே. 


அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மக்களின் எதிர்ப்பை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தி அதனைக் குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதி மன்றத்திற்கும் கொண்டு செல்லும் தன்னாட்சி அமைப்பு அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டு மக்கள் விரோத சட்டங்களின் பாதகங்கள் என்னென்ன, அவை நீண்ட காலத்திற்கு எப்படி மக்களைப் பாதிக்கும் என்று விளக்கும் அரசியலமைப்புச் சட்டம் அறிந்த வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொரு வாரமும் மாநில அரசுக்கு அறிக்கை வழங்க ஒரு சட்ட ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்.


அவ்வாணையம் மாநிலம், மற்றும் ஒன்றியத்தில் உருவாக்கப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்களில் மக்களுக்கான சாதகங்கள் மற்றும் பாதகங்களைப் பட்டியலிட்டு மாநில அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் தனித் தனியாக இந்தச் சட்ட ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன்படி தெளிவான அறிக்கைகள் மூலமே சட்டப்படி நடவடிக்கை எடுத்து மக்கள் விரோத சட்டங்களை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நீக்க முடியும்.


-இரவி செல்வராஜ்.


No comments:

Post a Comment