Friday 2 July 2021

வரலாற்றை மாற்ற இருக்கும் 2021 வெற்றி! - மதி. மாத்தையா

 வரலாற்றை மாற்ற இருக்கும் 2021 வெற்றி! - மதி. மாத்தையா


தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டசபைக்கானத் தேர்தல் நடந்து முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. 


இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்த நாள் பிப்ரவரி 26. தேர்தலுக்கு 39 நாட்களே இருந்தன. தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதற்கும் தேர்தல் நாளுக்கும் வெறும் 23 நாட்களே இருந்தன.

தேர்தல் எந்த தேதியில் அறிவிக்கப்பட்டாலும் அதற்கான முன் தயாரிப்போடு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகவே இருந்தது என்று சொல்லலாம். வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகான ஒவ்வொரு மணிநேரத்தையும் golden hour ஆக கருதி உழைத்தனர். மக்களும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் தெளிவாகவே இருந்தனர்.


சிறுசிறு சலசலப்புகளை தாண்டி மிக அமைதியான முறையில் ஏப்ரல் 6 அன்று 73% வாக்குப்பதிவுடன் தேர்தல் நடந்து முடிந்தது. Exit poll கருது கணிப்புகள் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடிக்கும் என்று கட்டியம் கூறின. மே 2 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக 133 இடங்களையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களிலும் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்கட்சியாக ஆட்சியை பிடித்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மாபெரும் வெற்றியை பெற்று தமிழநாட்டின் முதலமைச்சராகி இருக்கிறார்.


ஒட்டுமொத்தமாக இந்த தேர்தல் வெற்றி, ஆட்சி மாற்றம் என்பது கட்சி என்பதை தாண்டி தமிழநாட்டிற்கும் தமிழர்களுக்கும் மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் நலனை கொஞ்சமும் மதிக்காமல் ஒன்றிய அரசின் ஒரு அங்கமாகவே செயல்பட்ட அடிமை அதிமுக அரசு தூக்கியெறிப்பட்டிருக்கிறது.


10 மாவட்டங்களில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளையும் கைப்பற்றி இருக்கிறது. 


சமூக நலன் சார்ந்து மக்களுக்காக களத்தில் நின்ற பெரும்பாலான வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 


குறிப்பாக, குன்னத்தில் போட்டியிட்ட திரு.சிவசங்கர் மீது 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது  பெரும்பான்மை சாதிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததாக அதிமுக மற்றும் பாமகவால் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2006-2011 காலகட்டத்தில் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும் 2011-2016 காலகட்டத்தில் குன்னம் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆற்றிய பணிகளுக்காகவும் 2016-2021 காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதியாக இல்லாதபோதும் மக்கள் பிரச்சனைகளை முன்னின்று சரி செய்ததற்காகவும் இந்த பொய் பிரச்சாரங்களை தாண்டி மக்கள் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். சாதி அடிப்படையிலான பொய் பிரச்சாரங்களை எல்லாம் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மக்கள் நலனிற்காகவும் நிற்கும் எவரையும் தமிழ்மக்கள் கைவிட மாட்டார்கள் என்பதற்கு மிக முக்கிய உதாரணம் திரு. சிவசங்கர் அவர்களின் வெற்றி. 


நீட், புதிய கல்விக்கொள்கை, மருத்துவம் போன்ற முக்கியமான பிரச்சனைகளில் திராவிடத்தின் குரலாக பல மேடைகளில் ஒலித்த மருத்துவர் திரு.எழிலன் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். மேற்கண்ட நீட், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த மாஃபா பாண்டியராஜன் ஆவடி தொகுதியில் படுதோல்வியை சந்தித்திருக்கிறார்.


2016 தேர்தலில் உச்சநீதிமன்றத்தால் அநீதி இழைக்கப்பட்ட திரு.அப்பாவு ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.


2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் நட்சத்திர பிரச்சாரகர் இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் முன்னெடுத்த பிரச்சார யுக்திகள் களத்தில் பல மாற்றங்களை நிகழ்த்தியது.

கட்சி வாரியாக சட்டமன்ற பிரதிநிதித்துவத்தை பார்த்தோமானால், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அது பெற்றிருக்கும் 18 தொகுதிகள் என்ற எண்ணிக்கை என்பது அந்த கட்சிக்கே புதுத்தெம்பை கொடுத்திருக்கிறது.


மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் தலா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. விசிக போட்டியிட்ட 2 பொதுத்தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பது மிக முக்கியான ஒன்று.


அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் இம்முறை திமுக கூட்டணி குறிப்பிடத்தகுந்த அளவிற்கான வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இந்த தேர்தலில் பிரதிபலிக்கவில்லை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமே. திராவிடம் சார்ந்த களப்பணிகளையும் கருத்தரங்கங்களையும் பெருமளவில்  மேற்கு மாவட்ட மக்களிடையே கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு மிகுதியாகி இருக்கிறது.


நடுநிலை வாக்குகளை பிரிப்பதற்காக பாஜகவால் உருவாக்கப்பட்ட கட்சி என்று வர்ணிக்கப்பட்ட நடிகர் கமலஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. கோவை தெற்கு தொகுதியில் கமலே தோல்வியடைந்திருக்கிறார். அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 233 தொகுதிகளில் கட்டுத்தொகை இழந்திருக்கிறது. நடுநிலையாளர்களால் ஊதி பெரிதாக்கப்பட்ட TTV தினகரன் என்னும் பிம்பம் மக்களால் உடைக்கப்பட்டிருக்கிறது.


தனிக்கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் மூன்று:

1. மேற்கு மண்டலத்தில் கட்சி ரீதியாகவும் கள ரீதியாகவும் அதிக அளவுக்கு உழைக்க வேண்டியிருக்கிறது, மக்களை சென்றடைய வேண்டியிருக்கிறது.

2. பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் மண்ணில் மதவாத கட்சி ஒன்று பிரதிநிதித்துவம் பெறுவது எதிர்கால தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.

3. நாதக பெற்றிருக்கும் 7% வாக்குகள். திராவிடத்தின் தேவையை அதன் மூலம் கிடைத்திருக்கும், கிடைக்க இருக்கும் நன்மைகளை உணர்ந்து திமுகவிற்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கும் அதே வேளையில் நாதக 7% வாக்குகளை அளித்திருக்கிறார்கள். எல்லாத் தேர்தல்களிலும் வழக்கமாக உருவாகும் மூன்றாவது அணி இம்முறை வலுவில்லாமல் இருந்ததால் இந்த வாக்கு சதவீதம் கிடைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.


இத்தனை ஆண்டுகளாக "சொல்வதை செய்வோம்" என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிய, சொல்லாத பல மக்கள் நலத்திட்டங்களை செய்த திமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் உடன்பிறப்புகள் இனி கட்சி செய்ததை சொல்லவேண்டும், ஆவணப்படுத்த வேண்டும். Information is wealth. வரும் ஐந்தாண்டு கால ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது அதுவே.

தங்களுடைய தற்போதைய தேவைகளையும் பிரச்சனைகளையும் இந்த கட்சி சரி செய்யும் என்பதை தாண்டி தம் தலைமுறை நல்வாழ்வு வாழ்வதற்காக மக்கள் திமுகவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதை முற்றிலும் உணர்ந்த மிகசிறந்த ஆளுமைகளோடு அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது.

கேரளத்தில் கம்யூனிஸ்டுகளும் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசும் மீண்டும் ஆட்சி அமைந்திருக்கின்றன. மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகள் ஆட்சியமைப்பது இன்றைய இந்திய சூழலில் மிக முக்கியமான ஒன்று.


அமைந்திருக்கும் திராவிட முன்னேற்ற கழக அரசிற்கும் அமைச்சரவைக்கும் வாழ்த்துகள்!


-மதி. மாத்தையா

இயந்திர வடிவமைப்பு பொறியாளர்

No comments:

Post a Comment