Saturday 31 July 2021

25-03-2018 ல் ஈரோடு மண்டல மாநாட்டில் பேராசிரியரின் பேச்சு

 25-03-2018 ல் ஈரோடு மண்டல மாநாட்டில் பேராசிரியரின் பேச்சு


ஈரோட்டில் நடக்கும் இந்த மண்டல மாநாடு, அரசியலில் நடக்க கூடாது ஆரிய ஆதிக்கம் மீண்டும் தலையெடுத்து மீண்டும் மேலே வருவதற்கு முயற்சிக்கின்ற காலக்கட்டத்திலே இது நடக்கிறது. மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தும் விதமாக, மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கும் நிலையில், இந்த மாநாடு திராவிட இயக்கத்தின் தோற்றுவாயாக ஈரோட்டில் நடப்பது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறது. கழகத்தலைவரும், எனது நண்பருமான கலைஞரும், நானும் இணைந்து கலந்துக்கொண்ட பல மாநாடுகள் குறித்து இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். 1945 ல் ஈரோட்டில் நடந்த மாநாட்டில், நான் எம்.ஏ படித்து முடித்த அடுத்த வாரத்தில் கலந்துக்கொண்டேன். ஈரோட்டில் நடந்த அந்த மாநாடு மிகப்பெரிய மாற்றமாக, எல்லா மக்களுக்கு இடையேயும் எழுச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.   அவ்வளவு சிறப்பாக அந்த மாநாடு நடந்தது. 1945ல் நடந்த அந்த மாநாட்டில் ஏறத்தாழ 200 பேர் தான் கூடியிருந்தார்கள்.


அந்த 200 பேரும் ஒரு பள்ளிக்கூடத்தின் ஹாலிலே கூடி அந்த கூட்டம் நடந்தது. இன்றைக்கு பார்த்தால், அந்த பள்ளிக்கூட கட்டிடம் ஏறத்தாழ 10 மடங்கு பெரிதாக கட்டினாலும், 100 மடங்கு விரிவடைந்தாலும், இங்கு கூடியிருக்கிற கூட்டத்திற்கு இடம் காணாது.   


கலைஞர் உடல்நிலை காரணமாக கட்டாய ஓய்வில் இருக்கும் காலகட்டத்தில், கழகத்தின் செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். எனவே, கலைஞர் போலவே சிந்தித்து, அவரை போலவே செயல்பட்டு, அவரை போலவே இந்த இயக்கத்தில் உள்ள அனைத்து தோழர்களையும் அன்பு பாராட்டி வரவேற்கக்கூடிய தகுதி நம் இளந்தலைவர் ஸ்டாலினுக்கு உண்டு. 


திராவிட இயக்கத்தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவும், கலைஞரும், என்னை போன்றவர்களும் கொள்கைகளுக்காக போராடினோம். திராவிடம் உரிமைபெற்று வெல்லவேண்டும் என்று பாடுபட்டோம். அந்தப்போராட்டம் வெற்றியடைந்துவிட்டது என்ற சூழலில், இன்று மீண்டும் ஆரியம் தலைதூக்கும் நிலை வந்துள்ளது.


ஆரியம், அதனுடைய கலாச்சாரம், அதனுடைய பண்பாடு, அதனுடைய உத்வேகம் எல்லாம் இன்றைய தினம் மேல்நிலைக்கு வரும் அளவுக்கு சமுதாயத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது. ஆகவே, இப்படிப்பட்ட, இந்த மாறுபட்ட நிலை காரணமாக, அவர்களுக்கு  ஒரு நிலைத்த வளர்ச்சி ஏற்பட வழியில்லை என்ற காரணத்தால், இனி வருங்காலங்களில் திராவிட கொள்கைகளை முன்னெடுத்து செல்லவும், அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து செல்லவும், தளபதியாய் தம்பி ஸ்டாலின் இருப்பது பொருத்தமாகவும், என்னைப்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த போராட்டத்தில், அவருக்கு உறுதுணையாக கழக தோழர்களும், உடன்பிறப்புகளும் இளைஞர்களும், ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் இணைந்து போராடவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டிற்கு எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம். 

(25-03-2018 ல் ஈரோடு மண்டல மாநாட்டில் பேராசிரியரின் பேச்சு)

No comments:

Post a Comment