Saturday 31 July 2021

திரைக்கதை உரையாடல் திலகமே! - விருதை சசி (இரா. சசிகலா)

 பெரியார் -அண்ணா - விருதை சசி


சிந்தையிற் தெளிந்த செயலாலே சாதிசூழ்

விந்தையில் வேற்றுமை தானொழித்து – செந்தமிழால்

மந்தை மொழியகற்றி உறவோடுல காளுஞ்சூரிய

சந்திர அறிவுச் சுடர்கள்.



திரைக்கதை உரையாடல் திலகமே! - விருதை சசி (இரா. சசிகலா)



திருக்குவளை மண்ணில் அயனித்த

திரைக்கதை உரையாடல் திலகமே!

அஞ்சா நெஞ்சுரப் பண்புடைய

அஞ்சுகம் அம்மையாரின் அருட்செல்வனே!

இருபது அகவையுடைய இளந்தாரியாய்

இருளகற்ற ஏடேந்திய இந்திரியனே!

திராவிடச் சித்தாந்தக் கருத்துகளை

திரையினில் ஏற்றிய கலைக்களஞ்சியமே!


சிறைவசத்தில் பிறரில் ஆதுலஞ்சூழாது

நிறைமதி உரையளித்த ஆதவனே!

இரவலில்லா உலகமைய உண்மை

அரசியலை கற்பித்த புதுமைப்பித்தனே!

கந்தமென கொள்ளையடிக்கும் கயவர்களை

கந்தழியோடு கர்ஜித்த கனலியே!

கல்யாணி கற்பிக்கோர் அரணமைத்து

கல்லாமைக்கு பகுத்தறிவூட்டிய பராசக்தியே!


              கட்டியம் பேசித்திரியும் மடமையை

                        ஒட்பயுரையில் சுட்டெரித்த சூரியனே!

              மண்ணோக்கி நடக்கும் மாதரினி

                         கண்பார்த்து இயம்பிட உரைசெய்தோனே!

              ஆளலில் மருதநாட்டு இளவரசியை

                           வாளேந்தும் பெண்மையாய் வடித்தவனே!

             நேசிக்கும் உணர்வில் எந்நாளும்

                            ஆசு சூழ்ந்திடாத பாசப்பறவையே!

                         

             பழுவேற்றி பார்க்கின்ற பணத்தந்திரங்கள்

வழுவின்றி போகச்செய்த வண்டிக்காரனே!

             அமுதுமொழி இலக்கியத்தால் உலகுய்ய

              அமரொன்றை சொல்லிலேற்றிய அபிமன்யுவே!

              நயனம் நவில்கின்ற நாயகனின்

              கயமை சாடுகின்ற பூம்புகாரே!

             நீயென்ற நானென்ற சுயமழித்து

             நாமென்ற அதிரம் வாழியவே!

             


- விருதை சசி (இரா.சசிகலா)

கௌரவ விரிவுரையாளர்

அரசு மகளிர் கலைக்கல்லூரி

சிவகங்கை

வாழ்க திராவிடம் - பேராசிரியர் க. அன்பழகன்

 வாழ்க திராவிடம் - பேராசிரியர் க. அன்பழகன்



'தமிழ்நாடு தமிழருக்கே' என்று கூறினால் ஆளப் போகிறவர் தமிழர் என்று தானே அர்த்தம் என்று எளிதாகக் கூறுவர் பலர், நமக்கும் தெரியும் தமிழ்நாடு பிரிந்து விட்டால், தமிழ்நாட்டில் தெலுங்கரோ, மலையாளியோ, மந்திரியாகக்கூட வரமாட்டார்கள், என்ற பொதுவுண்மை. ஆனால் தமிழ்நாட்டை ஆளவேண்டிய, ஆளும் உரிமை கொண்ட தமிழர் யார்? என்று கேட்டாலோ, ‘தமிழ்மொழி பேசும் யாவருமேதான்' என்ற பதில் வருகின்றது இன்று “தமிழ்நாடு தமிழருக்கே” என்று ஒலிக்கிறவர்களிடமிருந்து. அப்படியானால் இன்று தமிழகத்தில் வாழ்ந்து தமிழ் மொழியைப் பேசும் அனைவரும் தமிழர்கள்தானா? தமிழ்ப் பண்பாடு உடையவர்கள் தானா? என்று எண்ணிப் பார்க்கட்டும். தமிழ்ப் பண்பாட்டோடு வாழாவிடினும், தமிழ்ப் பண்பாட்டை அழிக்காமலும் தமிழ்மொழிக்கும், கலைக்கும், நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்காமலுமாவது இருந்திருப்பின் ‘தமிழர்கள்' என்று புதிதாகவேனும் ஒப்புக்கொள்வதிலே ஒன்றும் பேரிழப்பு இல்லை என்று கருதலாம். அதற்கேனும் இடமுண்டா? இன்று தமிழகத்தில் வாழும் பார்ப்பனர் பேசுகின்ற நகைத்தற்கிடமான தமிழ்ப் பேச்சுமுறை ஒரு புறமிருக்க, தமிழ் பேசுவதால் மட்டும் எவ்வாறு தமிழராகிவிடுவார்? ஜி.யு.போப், பெஸ்கி போன்ற மேல் நாட்டவர்கள், தமிழ் பேசியும் எழுதியும் வந்ததால் மட்டுமன்றித் தமிழ் மாணவராகவே தமிழ்ப்பற்று மிக்குத் திகழ்ந்திருப்பினும், 'தமிழர்கள்' என்று கருதிவிடமுடியுமா? மறைந்த வலங்கைமான் சீனிவாச சாத்திரி, சத்தியமூர்த்தி போன்றவர்கள் பெற்றிருந்த ஆங்கில பேச்சு வன்மையினாலேயோ அன்றித் தம் தாய்மொழியினும் அதிகமாக ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றிருந்தமையினாலேயோ, 'ஆங்கிலேயர்' என்று கூற முடியுமா? அன்றி, வேறு ஆசையால் ஒப்பினாலும், ஆங்கில நாட்டார்தான் ஏற்பார்களா? மற்றும் தமது தாய்மொழி சமஸ்கிருதமென்றும், அந்த வழக்கிறந்த வடமொழி, வளஞ்சிறந்த தமிழினும் உயர்ந்ததென்றும், ஆரிய வேதமே ஆண்டவனுக்கு உகந்ததென்றும், தமிழ் நூல்கள் தாழ்ந்தனவென்றும் எழுதியும் பேசியும் வந்ததோடன்றி, இன்றும் கூறிவருபவரும் கூறத் துணிவில்லாவிடினும் கருதுபவருமான பார்ப்பனர்கள் தமிழ்மொழியைப் பிழைப்புக்காகப் பேசுவதினாலோ எழுதுவதினாலோ எப்படித் தமிழ் அவர்களது தாய்மொழியாகும்? அன்றி அவர்கள்தான் எப்படித் தமிழராவார்கள்?


தமிழ் நாட்டில் தங்கி வாழும் பார்ப்பனர்கள், வரலாற்றுப்படி கருதப்படும் வகையில், தமிழ்நாட்டில் நுழைந்த ஆரியரே என்று கொண்டாலும், அன்றி ஆரியமதக் கொள்கைகளையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு “பிராமணர்களான” பழந்தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே என்று கொண்டாலும், அன்றி ஆரியப் பிராமணரும் தமிழ்ப் பார்ப்பாரும் அக்காலத்திலேயே கலப்புற்றே இன்றைய பிராமணர் தோன்றினர் என்று கொண்டாலும், பிராமணர்கள் ஆரிய இனத்தைச் சேராத - திராவிட இரத்தக் கலப்புற்ற - ஒரு கூட்டத்தாரென்று கொண்டாலும், இன்றைய நிலையில் - தமிழகத்தில் வாழ்வு நடத்தும் பிராமணர்களே ஆரியத்தின் கலை, மொழி, நாகரிகங்களின் பிரதிநிதிகளாகவும், பிராமணரல்லாத பிற மக்களே உண்மைத் தமிழர்களாகவும், திராவிடத் தன்மையுடையவர்களாகவும் வாழ்வதையும், ஆரியப் பார்ப்பனர் தமிழ்ப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள இந்நாள்வரை மறுப்பது மட்டுமன்றி, இயன்ற வரையில் வடமொழியையும் ஆரிய நாகரிகத்தையும், வர்ணாசிரம தருமத்தையும், பிராமண ஆதிக்கத்தையும், அதை நிலைநாட்டும் மநுநீதியையும் ஏற்கனவே புகுத்தி வந்திருப்பதோடு, அவைகளைப் பாதுகாக்க சூழ்ச்சி செய்வதும், தமிழகத் தொடர்பு ஏற்பட்ட அந்தக் காலத்திலிருந்தே, தமிழ்ப்பண்பாட்டைத் திரிக்கவும் கெடுக்கவும் முயன்றிருப்பதும், மேலும் பல வகைகளில் சூழ்ச்சிசெய்து வெற்றி பெற்றிருப்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மைகளாகும். இவ்வுண்மைகளை அறியாதோ, அன்றி மறந்தோ, இல்லையெனில் மறைத்தோ, பார்ப்பனர்களும் தமிழரென்றால் - நஞ்சைத் தேனென்றும், கள்ளைப் பாலென்றும் கூறுவதாகவன்றோ அமையும்.


அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும், தெலுங்கு, கன்னடம், மலையாளமாகிய மொழிகளைத் தாய்மொழியாகப் பெற்றவர்களும், ஆரியப் பார்ப்பனரைப் போலத்தானே என்று கேட்க தோன்றலாம். அவர்கள் ஆரியர்களைப் போல, தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் வேறானவர்களே அன்றி முற்றும் புறம்பானவர்களாக மாட்டார்கள். 'மனோன்மணீயம்' என்ற இலக்கியத்தை அளித்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள், 'கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும், உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பலவாயிடினும்' என்று பாடியிருக்கின்றபடி, ‘தமிழினின்றும் தோன்றி, கிளைத்து வளர்ந்த தெலுங்கு மலையாளம் முதலிய மொழிகளைப் பேசுபவர்கள் எப்படி ஆரியப் பார்ப்பனரைப்போல் முற்றும் முரண்பட்ட வர்களாக முடியும்? ஆரியம் அவர்களுடைய நாட்டிலே நுழைந்து அங்கே வழங்கிய சிறிதே வேறுபட்ட, வழக்கால் பிளவுபட்ட பழந்தமிழைத் திரித்து, வடமொழிக் கலப்பு நிறைந்த, புதுமொழியாகத் சிதைத்த காரணத்தாலன்றோ தமிழ்மொழியினின்றும் விலகி நிற்கும் வேற்று மொழியைப் பேசுபவர்களானார்கள் அம்மக்கள். மற்றும்-தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகப் பெற்றவர்களாயினும்-தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கரும், மலையாளியும், கன்னடியரும் - தமிழையும் தங்களுடைய தாய்மொழியை ஒப்பவே போற்றுவதையும் - சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் குடியேறியிருப்பினும் அவர்களுள்ளும் பலர், தமிழ் மொழியையே தமது தாய்மொழியாக உணர்ந்து போற்றி வளர்ப்பதையும் தமிழ் நாட்டையே தமது தாய்நாடாகக் கருதி நடப்பதையும் நாம் கண்டு வருகிறோம்.


மேலும், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கரோ, கன்னடியரோ மலையாளியோ, பல துறைகளிலும் தமிழரைப் போலவே ஒப்புடையராய் வாழ்க்கை நடத்துகின்றனரேயன்றி, ஆரியர்களைப் போல் தமிழரை எத்துறையிலும் அடிமைப்படுத்தி வாழவிடவில்லை. அதுமட்டுமன்றி அவர்களும் அதே ஆரியரிடத்தில் பல துறைகளிலும் அடிமைப்பட்டுள்ளனர். எங்கோ கிடந்துவந்த வடமொழி கடவுள் மொழியானதைப்போல், மந்திர மொழியானதைப்போல், தெலுங்கோ மலையாளமோ ஆக்கப்படவில்லை. தமிழ்மொழி பயின்ற தெலுங்கரும், பிறரும் ஆரியர்கள் தமிழிலே வட மொழிச் சொற்களையும் - கருத்துக்களையும் நுழைத்து, மணிப்பிரவாள நடையையும் புராணத்தையும் வளர்த்தது போல், தமது மொழியைப் புகுத்தவும் முயலவில்லை. அப்படியே தேனும் ஒன்றிரண்டு தெலுங்கு மலையாளச் சொற்கள் தமிழிலே காணப்பட்டால், அவை வடமொழியிலும் காணப்படுவனவாகவே இருக்கும் என்பது ஒரு புறமிருக்க, அதைப் புகுத்தியவர் யாரென்று ஆராய்ந்தால் அவரும் தெலுங்கு நாட்டின் ஆரியராகவோ மலையாளப் பார்ப்பனராகவோதான் இருப்பர் என்பதும் அறியத்தக்கதாகும். தமிழ்நாட்டில் - தெலுங்கிசை தவழ்கிறதே - காரணமென்ன? தெலுங்கரின் சூழ்ச்சியல்லவோ? என்று சிலர் எண்ணக் கூடும். அதுவும் உண்மையல்ல. ஏனெனில், தமிழகத்தில் தெலுங்கிசையைப் புகுத்தியவர்களும், அதையே ஆதரித்து நிற்பவர்களும் ஆரியப் பார்ப்பனர்களே. தியாகப் பிரம்மமும், தீட்சிதரும், சாஸ்திரியும் தெலுங்குக் கீர்த்தனங்களே எழுதியதும், முத்துத் தாண்டவரும், அருணாசலக் கவிராயரும், வேதநாயகம் பிள்ளையும் தமிழ்ப் பாடல்களே இயற்றியதும், அரியக்குடியும் செம்மங்குடியும் தெலுங்கிசையையே போற்றி ஒலிப்பதும், தேசிகரும், பாகவதரும் தமிழிசையைப் போற்றி இசைப்பதும் எதைக் காட்டுகின்றன? தமிழ் இசையின் தனிச்சிறப்பை, கரகரவென ஒலிக்கும் வடமொழியால் வெல்லவோ, வீழ்த்தவோ வழியில்லை என்பதைக் கண்டுகொண்ட ஆரியர், ஆரியத்திடம் அடிமைப்பட்ட தெலுங்கு மொழியினைக் கருவியாக்கி, அதன் ஓசையின் இனிமையைத் தங்களுக்குத் துணையாக்கி, தமிழ்நாட்டில் தமிழிசைக்கு இருந்த இயற்கையான இடத்தைக் கைப்பற்றினார்கள் என்ற கருத்து வலிவு பெறுகின்றது. ஏனெனில் தமிழ் நாட்டில் பரவியது தெலுங்கு இசையாயினும் - உண்மைத் தெலுங்கர் எவரும் அதனால் வயிறு பிழைக்கவில்லை . அதனால் வாழ்வு பெற்றவர்கள் ஆரியப் பிராமணர்களே. தமிழ் நாட்டில் அதற்கு முன்பெல்லாம் தமிழர்களிடத்தில் இருந்த இசையரங்கு நிலைமாறி தெலுங்கிசைக்கும் ஆரியரிடத்தில் சென்று விட்டது. எனவே, தமிழ்மொழியிடமிருந்து ஆரியக் கூட்டுறவால் பிரிக்கப்பட்டு, ஆரிய ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுவிட்ட, தெலுங்கு மொழியையே, தமிழ்ப்பற்று வளரவும், தன்னுணர்வு நிலைக்கவும் காரணமாகவிருந்த தமிழ் இசையை வீழ்த்துவதற்கு ஒரு கருவியாக ஆரியம் பயன்படுத்திக் கொண்டது என்பதும், இதனால் பயனடைந்தோர் தெலுங்கர் அல்ல என்பதும் கண்கூடு. மற்றும் திராவிட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட எவராலும் தமிழர் வாழ்வு கெட்டதற்கு ஆதாரமில்லை. ஆனால் ஆரியர்கள் நுழைந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் தமிழருக்கு இழைத்த கொடுமைகளுக்கும் தமிழரைச் சுரண்டிய வகைகளுக்கும் ஆதாரங்கள் பலப்பலவாம்.


வாழ்க திராவிடம் - பேராசிரியர் க. அன்பழகன்

முழுப்புத்தகத்தை வாசிக்க: https://amz.run/4lvD


வளரும் கிளர்ச்சி - பேராசிரியர் க. அன்பழகன்

 வளரும் கிளர்ச்சி - பேராசிரியர் க. அன்பழகன்


“அகத்தியருக்குப் பின், அயோத்தி இராமன் வந்தான். காட்டிலே தாடகையைப் படுகொலை செய்தான், சூர்ப்ப நகையை மானக்குறைவு செய்தான், வாலியை வஞ்சகத்தால் மாய்த்தான் தென் இலங்கைக்கு எரி மூட்டினான், அரக்கர் குலத்தை இரக்கமின்றி அழித்தான், வீபீஷணர் களையும் அனுமார்களையும் (சுக்கிரீவர்களையும் தோற்று வித்து, தெற்கையே வடக்கிறகு வணங்கச் செய்தான். இதிகாசத்தின் குறிப்பின்படி, இராமன் வந்தான். புராணக்கதைகளினாலும், கற்பனைகளினாலுமோ, இராமனொடு கிருஷ்ணன் வந்தான், அவதாரங்கள் வந்தன, விநாயகர் வந்தார், அவற்றோடு தொடர்புடையன பலவும் இங்குக் குடியேறின. தமிழர்களின் வாழ்வில், வடவர் தம் செல்வாக்கைப் பெருக்கத்தக்க கற்பனைகள் பலவும் உண்மையைப் போனறே இடம் பெறலாயின. எவ்வாறோ பழங்கதைகளெல்லாம், உண்மைக்குப் பொருந்தினும் பொருந்தாவிடினும், வடவரே ஆற்றல் மிக்கோராகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவ்வெண்ணம் தமிழ்மக்களின் கருத்திலே உறைந்து நாளடைவில் நம்பிக் கையாகவே நிலைக்கலாயிற்று.”


***


“அன்றொரு நாள் தென் குமரி முதல் வட இமயம் வரை பரவிக்கிடந்த தமிழ் மொழி, விந்தியம் வரையில் கூட நிலைக்க முடியாதபடி வடவர் நுழைவு தமிழைத் தேய்த்தது. பிற்காலத்தில், மேலும் தேய்ந்து வேங்கடத்தோடு ஒடுங்கும்படி, தமிழ் மொழியிலிருந்தே புதுமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை பிறக்கும்படி வடமொழி தமிழையே பிளந்தது. காலப்போக்கு, நெடுந்தொலைவு. மக்கள் தொடர்பின்மை ஆகியவற்றால் ஒரு மொழி-பல மொழி கிளைக்க இடந்தர நேரும் எனினும் அவை தாய் மொழியினின்றும் அதிகம் விலகிச் செல்வதில்லை. ஆனால் தமிழினின்றும் பிறந்த மொழிகளோ வடமொழித் தொடர்பால் அதிகம் விலக நேர்ந்தன. அவை தமிழொடு கொண்டுள்ள மூலத்தொடர்பு விளங்கினும், வடமொழியின் சார்பாகவே வளர்க்கப்பட்டதால், தமிழொடு மாறுபடும் நிலை பெற்றுள்ளன. எனினும் அம்மொழி பேசும் மக்களின் பண்பாடுகள் இன்றும் மாறிவிடவில்லை. அப்பண்பாட்டு உணர்ச்சி, திராவிடமொழி, கலை நாகரிக அறிவுடையார் பலரும் அம்மொழிகளின் பழைய வடிவையே காக்க விழைகின்றனர். மேலும் மேலும் வடமொழி ஆதிக்கம் வளருவதையும் தடுக்க முயற்சிக்கின்றனர். பழைய கன்னடம், தொல் மலையாளம், முன்னாள் தெலுங்கு ஆகியவற்றைக் கைக்கொண்டு வளர்க்கவும் முயற்சிகள் உள்ளன. இவ்வாறு, அகத்தியர் காலம் முதலாகவே வடவர் மொழியும் கொள்கைகளும், தமிழர் கலையும் வாழ்வும் அழியக்காரணமாகி வந்துள்ளதையும் அதைத் தடுக்கும் தற்காப்பு முயற்சிகள் பல தொல்காப்பியர் காலம் முதலாகத் தோன்றியுள்ளதையும் நாம் காண்கிறோம். எனினும் அம் முயற்சிகள் முழு அளவு வெற்றி பெறக்கூடவில்லை. இடைக்காலத்தில், தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமைகூட ஆரியத்தோடு அதற்குள்ள தொடர்பாலேயே அறுதியிடப்படும் அளவுக்கு இழி தகவு விளைந்தது. ஆனால், இயற்கை நியதியால் ஆரியம் இறந்த மொழியாயிற்று. தமிழின் அடிப்படைகளை நேராகத் தாக்கித் தகர்க்க அதனால் இயலவில்லை. தம்மொழி வழக்கின்றி இறப்பினுங்கூட ஆரியர் அதைக் கருவியாகக் கொண்டே, தமிழை அடிமைப்படுத்த, தனித்து இயங்காது முடக்கத் திட்டமிட்டனர். அதற்கு ஒரு படியே மணிப்பிரவாள நடை. மணிப்பிரவாள நடையோ, தமிழர் செவிக்கு வெறுப்பை விளைவிப்பதாயிற்று. நற்றமிழின் இன்னோசையாம் இசையினை நுகர்ந்த மக்கள், ஏனோ வேற்றுமொழிக் கலப்பால் காது குடையும் வெற்றோசையைக் கேட்க விரும்புவர்? எனவே அந்நடை செல்வாக்குப் பெற வில்லை. மேலும், மதமாறுபாட்டாலும் ஏற்கப்படாது போயிற்று. எப்படியோ தமிழ் நாடு அதன் பிடியில் சிக்குற வில்லை . ஆரியரோ, தமிழ் சொற்களுக்குப் பதிலாக வட மொழிச் சொற்களைப் புகுத்துவதிலும், தமிழ் நெடுங் கணக்கில் வட வெழுத்துக்களுக்கு இடந்தேடுவதிலும், நற்றமிழ்ச் சொற்கள் பலவற்றையும் வட சொற்கள் என திரித்து வழங்குவதிலும் ஈடுபட்டுத் தமிழ்மொழி என்ற எண்ணம் ஏற்படாதபடிச் செய்வதற்கு விடாது முயற்சிப்பாராயினர். இன்றும் அத்திருப்பணி ஓய்ந்தபாடில்லை. வடவர் கொள்கையாலும், தர்மத்தாலும் புகுந்த மூட நம்பிக்கைகளும், சாதி சமயச்சடங்குகளும் தமிழகத்தையே 'செல்லென' அரித்தன. இராமபாணமாகத் துளைத்தன. அவைகளும் ஆதிநாள் முதலாகவே, மறுக்கப்பட்டு வந்துள்ளன. அரக்கர்கள் வேள்வியை-யாகத்தைத் தடுத்தனர்; சுராபானம், சோமரசம் பருக மறுத்தனர், என்று புராண இதிகாசங்களே உரைக்கின்றன. சங்க இலக்கியங்களில் ஆரியருக்கே உரிய சில பழக்க வழக்கங்கள் தனித்தே சுட்டப்படுகின்றன. தமிழர் வாழ்க்கை அறமாகிய திருக்குறளில், பிறப்பினாலாகிய சாதியும், வேள்வியும் சூதும், கள்ளும் பிற இழிவழக்குகளும் மறுக்கப்படுகின்றன. திருமூலர் திருமந்திரம்-ஆரியர் தம் மாயவாதக் கருத்துக்களை வீழ்த்துகின்றது. சித்தர் பாட்டுக்கள் ஆரியச் சடங்கு முறைகளை, புரோகித உயர்வை வெறுத்து மொழிகின்றன. பிற்காலத்தில் உரையாசிரியர்களாகச் சிறந்தவர்களில் ஆரிய தர்மத்தையும் ஒப்பிட்டுச் சிறப்பிக்கும் நோக்குடைய பரிமேலழகருங்கூட, ஒவ்வோர் இடத்துத் தமிழர் நெறி ஆரிய தர்மத்தோடு, மாறுபட்டு உயர்ந்து நிற்பதை உரைக்கத் தவறவில்லை. பக்திப் பாடல்களுங் கூட ஒவ்வோரிடங்களில், புரோகிதரது இயல்பை இழித்துக் கூறவும் ஆரியரைத் தனித்துச் சுட்டவும் செய்கின்றன. "தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய்' என்ற அப்பர் வாக்கு அந்த வேற்றுமைக்கே சான்றாம் . எனினும் ஆரியத்தின் தீமையைத் தொகுத்துச் சுட்டிக்காட்டி அதை வேரோடு ஒழிக்கும் முயற்சி சென்ற நூற்றாண்டு வரை நடைபெறவில்லை என்றே கூறலாம். வரலாறு வரையப்படாமல், வரலாற்றறிவு வளர்க்கப்படாமல் இருந்த நாட்டில், மக்கள் உண்மையை எப்படி உணர்ந் திருக்க முடியும்? ஆரியர் புகுத்திய சாதிப் பாகுபாட்டின்படி, அம்மதத்தின் வேர்களான புரோகிதர்களே நூலறிவு பெறவேண்டியவர்கள், படிப்பதற்குத் தகுதியுடையவர்கள். மற்ற வகுப்பார் படிப்பதே பாபம், தவறு, அதிலும் தமது சூழ்ச்சிகளை உள்ளடக்கிய வேத சாஸ்திரங்களைப் படிப்பதே தண்டனைக் குரியது என்ற கருத்தைப் புகுத்தியிருந்த போது, தமிழ் மக்கள் தம் நிலையைப் புரிந்து கொள்வது எப்படி இயல்வதாகும்?”


*** 


ஆங்கிலேயர் ஆட்சித் தொடர்பாலேயே, விஞ்ஞான வளர்ச்சியின் பயன் கிடைத்தது இந்தியாவிற்கு. அதனால் மதவெறியில் மூழ்கிக் கிடந்த பொதுமக்களுங்கூட ஓரளவு தெளிவு பெற வாய்ப்புக்கள் ஏற்பட்டன. இங்கு வந்து சேர்ந்த பாதிரிமார்களின் தொண்டு தமிழ்மொழியின் பெருமையை உலகுணரச் செய்யக் காரணமாயிற்று. அதனால் தமிழரின் மதிப்பும் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியது. மேல் நாட்டார் கண்டு பிடித்த அச்சுப்பொறியின் துணையால், பழந்தமிழ் ஏடுகள் பல வெளிவரலாயின. சென்ற நூற்றாண்டில், பாதிரிமார்களாலும், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலராலும் தமிழ் உரை நடை நூல்கள் இயற்றப்படலாயின. அவை பொது மக்களின் தமிழ் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்தன. தமிழ் நூல்கள் சிலவும், திருக்குறள் அறமும் ஆங்கிலம் முதலிய மேல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. அதனால் தமிழின் புகழ் ஓங்கிற்று. டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தமிழ் மொழியை, மொழி நூல் முறைப்படி ஆராய்ந்து, திராவிடக்குழு மொழிகளின் தனிச்சிறப்புக்களையெல்லாம் தமது ஒப்பிலக்கணத்தால் நிலைநாட்டினார். தமிழ் மொழி மதிப்பு தலை நிமிர்ந்த து. மேல் நாட்டார் பலர், இந்தியத் துணைக்கண்டத்தின் முன்னாள் வரலாற்றை ஆராய முற்பட்டனர். பெரும்பாலும் அவர்களது கருத்து வடநாட்டிலேயே பதியலாயிற்று. வடமொழிக்கு அவர்களிடம் ஏற்பட்ட செல்வாக்கு, வடமொழி தடையின்றி வளர இடமாக இருந்த வடநாட்டுக்குப் பெருமையளித்தது. இந்திய மொழிகளில், வட மொழியை மட்டுமே கற்றிருந்தமை, வரலாறு எழுதத் தொடங்கியவர்களையெல்லாம், வடநாட்டிற்கே முக்கியத்துவம் அளிக்கச் செய்துவிட்டது. வரலாற்று ஏடுகளில் தென்னாடு மாற்றாந்தாய்ப் பிள்ளையாகவே கை விடப் பட்டது. முற்காலத்தில் கடல் கொண்டழிந்த தென்னாடு, பிற்காலத்தில் ஆரிய ஆதிக்க வெள்ளத்தில் அமிழ்ந்த தென்னாடு, தற்காலத்தில் வரலாற்று வெள்ளத்தாலும் மறைக்கப்பட்டது. ஆயிரம் பக்கங்கொண்ட இந்திய வரலாற்று ஏட்டில் ஒரு பத்து இருபது பக்கங்களே தென்னாட்டைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும், அதுவும் சிறப்பிப்பதாக அமையாது. இந்நிலையைக் கண்ணுற்ற, ஸ்மித் என்ற வரலாற்று நூல் ஆசிரியரே முதன் முதலாக, இந்தியத் துணைக் கண்டத்தின் உண்மையான பழைய வரலாற்றை அறிய வேண்டுமானால், வரலாற்று ஆசிரியர்களின் ஆராய்ச்சி, கங்கைக்கரையில் தொடங்கப்படுவதற்குப் பதில் காவிரிக் கரையில் தொடங்கப்படவேண்டும்" என்ற கருத்தை வெளியிடலானார். ஆரியர் வருகைக்கு முன்பாகவே வாழ்ந்த திராவிடரின் வரலாறு முக்கியத்துவம் அளிக்கப் படவேண்டும் என்ற கருத்து அதுமுதல் வலியுற லாயிற்று. திராவிடர் பற்றிய உண்மைகள் பல வெளிவரலாயின. அரசாங்கத்தின் புதைபொருள் இலாக்கா, சிற்பக்கலை ஆராய்ச்சி நிலையம் முதலியவற்றின் பணியினாலும், திராவிட நாகரிகத்தின் தொன்மையும், தென்னாட்டுச் சிற்பக்கலையின் தனித்தன்மையும் வளர்ச்சியும் விளக்கமுறலாயின. திராவிட மக்களின் முகத்தோற்றத்தில், வடிவமைப்பில், குஞ்சியழகில், வாழ்க்கை முறையில், ஒழுக்கப் பற்றில், மொழிவழியில் இலக்கிய நெறியில் உள்ள சிறப்பியல்புகளெல்லாம் ஆராய்ச்சி ஒளியால் தெளிவு பெறத் தொடங்கின. அவை ஆரியத் தொடர்பாலும், கலப்பாலும், ஆதிக்கத்தாலும், புதையுண்ட பொருளாக, தடையுண்ட நீராக, மறைபட்ட ஒளியாக, முடங்கிக் கிடப்பதையும் காண நேர்ந்தது. உண்மையை உரைப்பதில் ஆர்வமுடையோர் அதை வெளியிட்டனர். வேறு நோக்கினர், வேறு முறையாகவே நடந்து கொண்டனர். என்றாலும் திராவிடத்தின் வரலாறு முற்றும் உருப்பெறாவிடினும் உண்மைகள் பல வெளிப்பட்டதால், தமிழர் மேலும், மேலும் தம்மை உணரலாயினர். வரலாற்று ஏடு ஒளி வீசியபோதே, ஆரியர் அந்நியர் என்பதும், அவர் தம் தொடர்பால், வரவால் தமிழர் வாழ்வு தாழ்ந்தது என்பதும் வலுப்பெறலாயின. ஆரியர் வருகைக்கு முன் தமிழர் பெற்றிருந்த வளமான வாழ்க்கையும், வெற்றி நிலையும், அறிவாட்சியும் மக்களுக்குப் புலப் படத் தொடங்கின. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மூவேந்தர் என்று சிறப்பிக்கப்பட்ட சேர, சோழ, பாண்டியர்கள், வில், புலி, கயல் பொறித்த கொடிகளை உயர்த்தி, தமிழகத்தை எவருக்கும் தலைவணங்காமல் ஆண்டுவந்தனர். அந்தப் பேரரசர்களில் பலர், ஆரியர் அகந்தையை அடக்கியவரும், இமயத்தின் பிடரியில் தங்கொடி பொறித்தவரும், கங்கைக்கரையினில் வெற்றி முரசு முழங்கியவரும், கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தவரும், கலிங்கத்தைக் கைக் கொண்டவரும், கடாரத்திலும் காழகத்திலும் வெற்றிக் கொடி நாட்டியவரும், ஈழத்தை வென்ற வரும் எனப் பரணி பாடும் பல திறப்பட்ட புகழுக்கும் உரியவர்களாகத் திகழ்ந்தனர். இவற்றை அறியத் தொடங்கிய தமிழர்களின் தன்னம்பிக்கையும் உரிமை உணர்வும் சிறிது சிறிதாக வளரத் தொடங்கியது. எந்நாளும், எவ்வகையிலும் வேறு எந்த இனத்தவரினும் தாழ்வுறாத தமிழர் -திராவிட இனத்தவர், இன்று பலவகையினும் தாழ்ந்துள்ள நிலையை எண்ணலாயினர், ஏக்கமுங்கொண்டனர். இந்நிலைக்குக் காரணமான ஆரிய மத மூடநம்பிக்கைகளே முதன் முதல் வெளிப்படையாகக் கண்டிக்கப்படலாயின. சென்ற நூற்றாண்டினிறுதியில் வாழ்ந்த வடலூர் வள்ளலார், இராமலிங்க அடிகளே, பக்தித் துறையில் நின்றபடியே ஆரிய (அ)தர்மத்தை முதன் முதல் கண்டிக்கலானார். அவரது திருவருட்பாவில், “நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவாரிலை.........”​​                                                                                                                                          


  - எனவும், "மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது வருணுச் சிரமமெனு மயக்கமுஞ் சாய்ந்தது” -எனவும், "குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்து வீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து நிற்கின்றார் ....... -எனவும், "சதுமறை ஆகம சாத்திர மெல்லாஞ் சந்தைப் படிப்பு நஞ் சொந்தப் படிப்போ'' -எனவும், "தெய்வங்கள் பலபல சிந்தை செய் வாருஞ் சேர்கதி பலபல செப்புகின் றரும் பொய்வந்த கலை பல புகன்றிடு வாரும் பொய்ச் சம யாதியை மெச்சுகின்றாரும்'' - எனவும், வரும் இடங்களையும், மற்றும் பல பாக்களில் வரும் அத்தகு கருத்துக்களையும் காணபவர்கள் அவரது ஆரியக் கண்டனத்தை உணர்வர். அதுவே - சமயச் சீர்திருத்தமாகக் சமரச சன்மார்க்கமாகப் பொது நெறியாக உருக்கொள்ளலாயிற்று. அடுத்து, இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் திகழ்ந்த அறிவு நூல் பேராசிரியர், சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றித் தந்த நாடக இலக்கியமாகிய "மனோன்மணீயத்தின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தாகப் பாடப்பெற்ற தமிழ் வாழ்த்தே , வடமொழியினும் தமிழே எவ்விதத்தினும் உயர்ந்தது, என்ற கருத்தை முதன் முதல் மக்களிடம் பரப்பிய தாகும். அப் பாடலே கீழ் வருவதாகும்: 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே! " பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாள முந்துளுவும் உன்னுதரத்(து) உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! ஆம், இப்பாடலே, தமிழின் பெருமையையும், வடமொழி பாடை ஏறினமையையும், எவரிடமும் மார் தட்டிக் கூறும் உறுதியைத் தமிழ் மக்களுக்கு அளித்தது எனலாம். மேலும், அதே காலத்தில் வெளிவந்த, யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் அவர்கள் இயற்றிய திராவிடப் பிரகாசிகை' என்ற இலக்கிய வரலாற்று நூலும் "Dravidic Studies" (திராவிட ஆராய்ச்சிகள்) என்ற வெளியீடும், Ancient Dravidians, (பண்டைத் திராவிடர்), Pre-Aryan Tamil Culture (ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரிகம்) முதலான பல வரலாற்று ஏடுகளும், பரிதிமாற் கலைஞன் இயற்றிய தமிழ்மொழி வரலாறு முதலிய மொழி ஆராய்ச்சி ஏடுகளும் - நாளடைவில், தமிழர் உணர்ச்சியிலேயே - தாம் திராவிடர் என்ற எண்ணத்தை வளர்த்து வந்தன. ஆரிய மொழி, கலை, நாகரிகம் எதற்கும் இனியும் இங்கு இடந்தருதல் கூடாது என்ற எண்ணமும் அத துடன் வலிவு பெற்று வரலாயிற்று.


வளரும் கிளர்ச்சி by பேராசிரியர் . அன்பழகன் K. Anbalagan


முழுப்புத்தகத்தை  வாசிக்க: https://amzn.in/cDFAmwG

மாநில சுயாட்சி - பேராசிரியர் க.அன்பழகன்

 மாநில சுயாட்சி - பேராசிரியர் க.அன்பழகன்

“மாநில சுயாட்சி! என்னும் குரல் கேட்ட அளவில், அதன் உயர் நோக்கத்தையும், உண்மையான பயனையும் உணராமலும், உணர்ந்தும் உண்மையை ஏற்கும் நியாய உணர்வு இன்றி, அரசியல் கட்சி நோக்கத்திற்காகத் திரித்தும், மாற்றியும்‌,மறைத்தும், மறுத்தும் மக்களைக் குழப்புவார் பலராக உள்ள நிலையில், அரசியல் வரலாற்று அடிப்படையில் உண்மையை விளங்க வைத்து உய்த்துணரச் செய்வது இன்றியமையாததொரு கடமையாகும். 


“மாநில சுயாட்சி உலக நாடுகள் சிலவற்றின் அரசியல் 

அமைப்பில் இடம் பெற்று வெற்றியுடன் செயல்பட்டு வருவதுடன்  இந்தியாவின் அரசியல் அமைப்பு உருவான கட்டத்திலும் அதற்கு முன்னரும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கொள்கைகள் கொண்ட தகுதி மிக்க தலைவர்கள், அரசியல் சட்ட அறிஞர்கள் முதலான பலராலும் ஏற்றுறைக்கப்பட்ட கொள்கையேயாகும். தமிழகத்தின் - தன்னிகரற்ற வழிகாட்டியும், நமது ஒப்பற்ற தலைவருமான பேரறிஞர் அண்ணா அவர்கள், நாட்டுப் பிரிவினைக் கொள்கையை முற்றும் கைவிட்ட பின்னர் கழகத்தின் அரசியல் குறிக்கோளாக நாட்டுக்கு வழங்கியுள்ள கொள்கையே 'மாநில சுயாட்சி'. இது மக்கள் ஆட்சியின் - தேவைகளின் இயல்பான விளைவுதான் என்றாலும், இது கழகத்தின் கண்டுபிடிப்போ, திணிப்போ அல்ல; அரசியல் சந்தர்ப்பவாதமும் ஆகாது.


மக்களுடைய உரிமை அடிப்படையில், விடுதலை பெற்ற ஒரு நாடு, மக்களுடைய உரிமையுள்ள நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் துணையாக நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்புகளை - மக்களுடைய இசைவோடும் ஒத்துழைப்போடும் அணுக்கத் தொடர்போடும் நிறைவேற்றுவதற்காகவே ஆட்சிமுறை என்னும் ஓர் அமைப்பை, வடிவத்தை அரசியல் சட்டத்தின் மூலம் உருவாக்குகின்றது. ஒரு நாட்டு மக்களுடைய மரபுகள், வரலாற்றுப் பின்னணி, சமுதாய அமைப்புத் தன்மைகள், மொழி, கலை, பண்பாட்டு வழிப்பிரிவுகள், இயற்கையமைப்பு, மக்களின் இசைவான உடன்பாட்டின் அளவு, வளரும் தேவைகளை நிறைவேற்றுவதற்குள்ள வாய்ப்பு இவைகட்கேற்ற வகையில் ஆட்சி அமைப்புகள் என்னும் சக்கரங்கள் இயங்குமாறு அமைய வேண்டும்.      


மக்களின் உரிமை வேட்கை நிறைவேறும் வகையில், அவர்களே பங்குக்கொண்டு, கருத்தறிவித்து, உடன்பாடு கண்டு, ஒத்துழைத்து, உருவான பயன் காணும் வகையிலும் - அதற்கு ஆட்சிமுறை அமைப்பு இடமளிக்கவில்லை என்று குறைகாண இடமில்லாத வகையிலும் நிகழ்வதே சிறந்த மக்களாட்சியாகும். ஆட்சி அமைப்பின் தலையான உரிமைகளைக் கொண்ட மன்றத்தோடும், தலைமை ஆட்சிப் பொறுப்பினரோடும் ஒரு நாட்டு மக்கள் எல்லோரும் நெருக்கம் உடையவர்களாய் அமையும்     வாயில்களை பொறுத்தே இணக்கமான மக்களாட்சி தழைக்கும். 

அவ்வாறு அமையும் வழியற்ற ஒரு பெரிய துணைக்கண்டத்தில், பலகோடி மக்களுடைய வாழ்வுக்கான மக்களாட்சி முறையில், மக்களுடைய பெரும்பான்மையான தேவைகளும், வேட்கைகளும் விருப்பங்களும் எளிதாக நிறைவேறும் வண்ணம், ஆட்சி உரிமை கொண்ட பல அமைப்புகள் மக்களாட்சியின் நிறைவுக்குத் தேவையாகின்றன. அந்த அமைப்புகளே மாநிலங்களும், அவற்றிற்கான சட்டப் பேரவைகளும், அவற்றால் உருவாகும் அமைச்சரவையாகும். அவற்றிற்கு உட்பட்டு ஆங்காங்கே தேவைப்படும் வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றும் அமைப்பே உள்ளாட்சி மன்றங்களாகும்.

ஒரு கடிகாரத்தின் முட்களில் மணிமுள் முதன்மையுடையது எனினும், நிமிடமுள் பேரளவு இயங்கினால்தான் மணிமுள் சிற்றளவு இயங்குவது முறை. அதனை ஒப்ப- மக்களோடு நெருக்கம் உடையதாக இருக்கும் மாநில அரசு பேரளவு இயங்க இடந்தந்து, மத்திய அரசு அதற்கு இணக்கமாக, அளவுடன் இயங்கும் நிலையே - மக்களாட்சியின் சிறந்த நெறியாகும்.  


எவ்வாறோ, கூட்டாட்சி முறையைக் கொள்கையளவில் ஏற்றும், நடைமுறையில் ஒற்றை ஆட்சி முறையுடன் பெரிதும் உவமிக்கப்படும் வண்ணம் - இன்றைய இந்திய அரசின் நடைமுறை உருவாகி வந்துள்ளது கண்கூடு. எனவே தான் - தேய்ந்து வரும் மாநில ஆட்சி உரிமைகளை புதுப்பித்து, சுயாட்சியின் இலக்கணம் ஏற்கப்படவும் - நாளும் வளர்க்கப்பட்டு வரும் ஒற்றையாட்சி முறை தடுத்து நிறுத்தப்படவும், 'மாநில சுயாட்சி' ஒரு கோரிக்கையாக, தமிழகத்திலும்  - வெவ்வேறு அளவில் வேறு பல மாநிலத்திலும் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது.


'மாநில சுயாட்சி' என்பது -  தனியாட்சி அல்ல என்பதை உறுதிப்படுத்தவே - 'மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்னும் முழக்கம், தமிழக முதல்வரும் கழகத் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுப்பப்பட்டது. 'மாநிலம்' என்பதால் - மத்தியில் ஓர் அமைப்பை உண்டென்பதும், 'கூட்டாட்சி' என்பதால் 'சுயாட்சி' அதில் இயங்கும் ஓர் பகுதியே என்பதும் எவருக்கும் தெளிவாகும்.


இதனால் 'ஒற்றுமை' கெடும்  என்போர் - 'ஒற்றுமை'யின் பெயரால் 'ஒருமைத்தன்மையை'த் திணிப்பதன் கேடுகளை உணர வேண்டும். ‘Union’ -- ஒற்றுமை வேண்டும், அதுவும் மக்கள் ஆர்வத்தோடு வளரவேண்டும் என்பதற்கே 'கூட்டாட்சி'முறையாகும். 'Uniformity'' - ஒருமைத்தன்மையே, ஒற்றுமை என்பது - பல்வேறு பகுதி, மாநில மக்களின் தனிச் சிறப்புகளையும், ஒற்றுமை விழைவையும், பொது நோக்கையும் சிதைக்கவே வழிகோலும் என்பதையும் சிந்திப்போர் உணரலாகும்.  

பெற்ற சுதந்திரத்தைப் பேணி வளர்ப்போர் எவராயினும் உரிமையுடைய மக்கள் எல்லோருக்கும், தம்மைத்தாமே ஆண்டு கொள்வதில் உரிய பங்கு கிடைக்கச் செய்ய - 'மாநில ஆட்சி' பிறைமதி நிலையிலிருந்து முழுமதியாக வளர வேண்டும் என்பதை ஏற்றேயாக வேண்டும்.  


ஏற்போர், ஏற்காதார், கேட்டார், கேளார், மறுப்போர், மறைப்போர் ஆகிய எத்திறத்தாரும் 'மாநில சுயாட்சி' யின் இயற்கை நியாயத்தைத் தெளிய, மத்திய ஆட்சியின் செயற்கை ஆதிக்கத்தை உணர, நண்பர் மாறன் அவர்கள் தனது நுண்மாண் நுழைபுலத்திறனோடு, வரலாற்று ஏடுகளையும், அரசியல் சட்ட ஆய்வு நூல்களையும், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் ஆராய்ந்தும், ஆய்ந்தும், அறிய கருத்து விளக்கக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து, தொடர்பு காட்டி விளக்கியுரைத்து, ஐயம் நீங்கும் வண்ணம்  மாறுபாடுகளை எல்லாம் அலசிக்காட்டி ஒரு தீர்மானமான முடிவினை கற்போர் ஏற்குமாறு - படலம் படலமாக இந்த நூலை இயற்றியுள்ளார்கள்,


- பேராசிரியர் க. அன்பழகன் 

29-10.1974 

(முரசொலி மாறன் எழுதிய "மாநில சுயாட்சி" நூல் அணிந்துரையில் இருந்து..)