Saturday, 31 July 2021

தமிழர் திருமணமும் இனமானமும் - பேராசிரியர் க. அன்பழகன் (புத்தக அறிமுகம்) - வியன் பிரதீப்

 தமிழர் திருமணமும் இனமானமும் - பேராசிரியர் க. அன்பழகன்  (புத்தக அறிமுகம்) - வியன் பிரதீப்


இனமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் எழுதி பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் தமிழர் திருமணமும் இனமானமும். தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களுள் இதுவும் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. வீட்டில் வைத்து இருக்க வேண்டியது மட்டுமில்லாமல் படித்துச் சக தமிழர்களுக்கும் இதிலுள்ள கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டியதும் நமது கடைமையாகும்.


இந்த நூலுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் அணிந்துரை தோரணவாயிலாக இருக்கிறது. என்னதான் நாம் இந்தப் புத்தகத்தைப் பற்றி அறிமுகம் கொடுத்தாலும் அது அவரின் தெளிவான அணிந்துரைக்கு ஈடாகாது எனினும் முடிந்த வரை சுருக்கமான அறிமுகத்தைத் தர முயல்கிறேன்.


முப்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தங்களிடையே பேசும் மொழியாக வளர்ந்து , இருபதாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாட்டுப்பா செய்யும் நாவினராய் இலக்கியம் வடித்து, பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே எழுத்து வடிவும் முறையும் கண்டு, ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இயல்,இசை,நாடகம் என்னும் முத்தமிழ் வகைகண்டு வளர்த்து,மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வரையப்பட்ட ஐந்திர இலக்கணமாம் தொல்காப்பியத்தையும் பெற்று, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னே பிறந்த இணையற்ற வாழ்வியல் விளக்கும் அறநூலாம் திருக்குறளையும் கொண்டு , அக்காலத்தை ஒட்டிப் பிறந்த சங்கத் தமிழ்த்தொகை நூல்களாம் எட்டுத் தொகையும் பத்துப் பட்டும் கண்டு தொடர்ந்து செந்தமிழ் வளர்க்கும் முத்தமிழ்க் காப்பியமாம் சிலம்பினையும், புத்தம் பரப்பும் மணிமேகலையும் பெற்று;அடுத்துத் திருமூலர் திருமந்திரத்தையும், மணிவாசகர் திருவாசகத்தையும், மூவர் தேவாரத்தையும், ஆழ்வார்கள் பாசுரத்தையும், திருத்தக்கதேவரையும், கம்பரையும், சேக்கிழாரையும், கச்சியப்பரையும், செயங்கொண்டாரையும், வில்லிபுத்தூராரையும், அருணகிரியாரையும், தாயுமானவரையும், வடலூர் வள்ளலாரையும், பாரதியாரையும், பாரதிதாசனாரையும் காலத்தின் கருவூலங்களாகப் பெற்றுள்ள பெருமைக்குரிய தமிழ் இனத்தாரின் வாழ்வில்தான், திருமணங்கூடத் தமிழில் நடைபெறவில்லை. 


நம்மை வாழ்விக்கும் தமிழுக்கு அந்தத் தகுதிகூட இல்லையென்று , தமிழரே நடைமுறையில் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றால்,அதை என்னவென்று கூறலாகும்?இப்படிப்பட்ட இழிவான நிலை உலகில் எந்த இனத்திற்கேனும் ஏற்பட்டுள்ளதா?ஏற்படவுங் கூடுமோ? என்று பேராசிரியர் இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே எழுப்பும் கேள்வி, நம்மைச் சிந்திக்க மட்டுமல்ல தொடர்ந்து இந்தப் புத்தகத்தைப் படிக்கவும் தூண்டுகிறது. இதனையே கலைஞரும் மேற்கோள் காட்டியுள்ளார்.


தமிழர் திருமணங்களில் வைதிக முறையைக் கைவிட்டுப் புரோகிதரையும், வடமொழியையும் விலக்கிச் சீர்திருத்த முறையை ஏற்று நடத்துவதன் நோக்கத்தையும் பயனையும் விளக்குவதும்,அப்படிச் செய்வதற்குத் தயங்குவோரின் ஐயங்களையும் அச்சங்களையும் நீக்குவதும் இந்த நூலின் நோக்கம் எனப் பேராசிரியர் சொல்கிறார் அதனைச் செய்தும் காட்டியிருக்கிறார். இந்த நூலைப் படிப்பவர் எவரும் அவரது குடும்பத்தில் திருமண முறையை மீளாய்வு செய்வார் என்பதில் தயக்கமில்லை. காரணம் இந்தப் புத்தகத்தின் எங்கேயும் பேராசிரியர் எதனையும் வலிந்து திணிக்கவில்லை தெளிவை மட்டுமே கொடுத்துச் செல்கிறார்.


சுமார் 40 வெவ்வேறு தலைப்புகளில் தமிழர் வாழ்வியல் முறை, பண்பாடு, பழக்க வழக்கம், திருமண முறை ,புராண கட்டுக் கதைகள் அதற்கான பகுத்தறிவு தெளிவுரை , அறிஞர்களின் மேற்கோள்கள், உண்மையான நிகழ்வுகள் மூலம் வேத முறை, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு முறை, ஆண்-பெண் சமத்துவம், முற்போக்குக் கொள்கை முறை போன்றவற்றைத் திறம்படச் சொல்லியிருக்கிறார்.


எடுத்துக்காட்டாக இந்நூலின் ஒரு இடத்தில் , உலக வாழ்வில் விளையும் இன்பமும், துன்பமும், மகிழ்ச்சியும், துயரமும், நன்மையும், தீமையும், திருமண நிகழ்ச்சி நடத்தப்படும் முறையைப் பொருத்தவை ஆகாது. உலகோர்க்கு வாழ்க்கை விளைவுகள் பொது, நல்வாய்ப்பும், தீய விபத்தும் பொது , அதனைத் தவிர்த்தலா இயற்கை விளைவு என்பர். இதனைத் தெளிவதற்கே பெரிய தத்துவச் சிந்தனைகள் எல்லாம் பிறந்தன. இதனை மனம் தெளிவடையுமாறு விளக்க இயலாமையினாலேயே 'தலைவிதி' எண்ணமும் , கருமம் என்னும் நம்பிக்கையும் வளர்ந்தன என்கிறார் பேராசிரியர். இப்படி இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் காலம் கருதி இதோடு முடித்துக் கொள்கிறேன்.


முன்பெல்லாம் திருமணம் இப்படித்தான் நடக்கவேண்டும் இல்லையென்றால் மணமக்களுக்கு ஆகாது, குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் சொல்வார்கள், ஆனால் இந்தக் கொரோனா காலம் அனைத்தையும் திருப்பிப் போட்டுவிட்டது. திருமணமுறை மிக மிக எளிதாகிப் போனது, காலம் காலமாகச் சொல்லிவைத்திருந்த மூட நம்பிக்கை கண்முன்னே அழிந்து கொண்டிருக்கிறது.


இன்றைய தலைமுறையும் வேத முறையை விடுத்துப் பரவலாகத் தமிழர்ப் பாரம்பரிய முறைப்படி சீர்திருத்த திருமணம் செய்து வருகிறார்கள். மற்றவர்களும் அதனைத் தொடர இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும். பேராசிரியர் அவர்கள் திராவிடத்தின் கருவூலம், அவர் கொடுத்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழரின் அறிவுச் சொத்து. அனைவரும் இதனைத் தவறாமல் படித்துத் தெளிவு பெறுவோம்.


என்றும் அன்பும், நன்றியும்

வியன் பிரதீப்.


No comments:

Post a Comment