Saturday 31 July 2021

இனமான பேராசிரியர் - நரசிம்மன் நரேஷ்

 இனமான பேராசிரியர் - நரசிம்மன் நரேஷ்



"மு..அன்பழகன் ஆகிய நான்"  என எழுத தொடங்கி , பேராசிரியர் அவர்கள், தன் வரலாற்றை அவரே கூறுவது போல எழுதிட விருப்பம். ஆனால் 'நான்' என்ற அகந்தை இல்லா மனிதர் , 'நாம்' என, இனத்தின் விடுதலைக்காக காலமெல்லாம் பேசியவர் என்பதால் தவிர்க்கின்றேன். 


அதென்ன மு..அன்பழகன்? தளபதி அவர்களுக்கு முத்துவேலர் தாத்தா என்பது போல இராமையா என்ற இயற்பெயர் கொண்ட பேராசிரியர் அவர்களின் தாத்தாவும் முத்துவேலர் தான். முத்துவேலர் கல்யாணசுந்தரம் அன்பழகன் என்பதைத் தான் மு..அன்பழகன் என குறிப்பிட்டேன். 


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனச் சமீபத்தில் வாசிக்கும் போதெல்லாம் மு..அன்பழகன் என்பதையும் நினைத்துக் கொள்வேன். காலமெல்லாம் கலைஞருடன் இணைந்தே பார்த்த பேராசிரியரைத் தளபதி ஸ்டாலின் அவர்களுடன் இணைத்துப் பார்க்க விரும்பினேன். 


தலைவர் கலைஞர் தன்னை, "மானமுள்ள சுயமரியாதைக்காரன்" என பறைசாற்றிக் கொள்வதைப் போல , பேராசிரியர் அவர்கள், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது " முதலில் நான் மனிதன், இரண்டாவது அன்பழகன், மூன்றாவது  சுயமரியாதைக்காரன் ( பெரியாரியவாதி) . நான்காவது அண்ணாவின் தம்பி, அய்ந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வு நான் சாகிற வரையில் வரும். இயற்கையில் வரும் சாக்காடு என் வரலாற்றை முடிக்கலாமே தவிர இடையில் புகுவதற்கு எவனுக்கும் இடம் கிடையாது" என்பார். 


பேராசிரியர் எனக் குறிப்பிட்டாலும் "இனமானப் பேராசிரியர்" என்று அனைவராலும் குறிப்பிடப்படுவது சிறப்பு அம்சம். விரிவுரையாளர் எப்படி பேராசிரியர் ஆனார்?


தமிழ்நாட்டில் எந்தத் திராவிட இயக்கத் தலைவர்களும்  'இனமான' என்று போற்றப்படாமால் பேராசிரியரை மட்டும் அவ்வாறு குறிப்பிடப்படக் காரணம் என்ன? அவர்தம் சிறப்பு என்ன என்பதைக் காணலாம். 


இங்கே சட்டமன்ற விவாதம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் பேராசிரியரைப் பார்த்து , " கட்சியில் சீனியர் நீங்கள் இருக்க, கருணாநிதி தன் மகன் ஸ்டாலினை வாரிசு " என்கின்றாரே எனக் கேட்டார். பதில் அளித்த பேராசிரியர் அவர்கள் ," என்னைவிட ஒரு வயது குறைந்த கலைஞருக்கு நான் எப்படி வாரிசாக முடியும்? கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் ஸ்டாலின் தான் வாரிசு" எனக் கண்ணியமான முறையில் பதில் அளித்தார். 


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பேராசிரியர் என்பது பொதுப்பெயர் அல்ல. அது தனிப்பெயராக விளங்கியது. பெரியவா பலர் இருக்க 'பெரியார்' என்றால் தந்தை பெரியாரை மட்டுமே குறிக்கும். பல்வேறு துறைகளில் அறிஞர் பெருமக்கள் இருந்தாலும், பொது இடத்தில் 'அறிஞர்' என்றால் அது அறிஞர் அண்ணாவைத் தான் குறிக்கும். தமிழ்நாட்டில் எத்தனையோ வகையான கலைஞர்கள் இருந்தாலும் 'கலைஞர்' என்றால் அது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களையே குறிக்கும் சொல்லாக விளங்கிவருகிறது. அப்படித் தான் 'பேராசிரியர்' என்றால் அது பேராசிரியர் க.அன்பழகன் அவர்களை மட்டுமே குறிப்பிடும் சொல்லாக இருக்கிறது. 


சூட்டப்பட்ட பெயரான 'இராமையா' மறைந்து அன்பழகன் எனப் பெயர் சூட்டிக் கொண்டாலும், சுட்டுப்பெயராக பேராசிரியர் என்பது அவருடன் ஒட்டிக் கொண்டு பயணித்தது என்பது மறுக்க இயலாத பெருமை. அவருடைய  குடும்பத்திலேயே மூன்று பேராசிரியர்கள். யாராவது வீட்டுக்கு வந்து பேராசிரியர் இருக்கின்றாரா எனக் கேட்டால் " நானும் பேராசிரியர் தான் என சொல்லாமல் மு..அன்பழகன்  அவர்களைத் தேடி வந்திருப்பதை உணர்ந்து பேசுவது தான் வழக்கம். ஏன்?  மாற்றுக் கட்சியினர் கூட பேராசிரியர் வருகின்றாராமே எனக் கேட்குமளவுக்கு அப்பெயர் பொருந்தி வந்தது. 


பேராசிரியர் எனத் தொடர்ந்து எழுதுவதால் இன்னொரு விவாத நிகழ்வு நினைவுக்கு வருகின்றது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா அம்மையார் ," நீங்கள் விரிவுரையாளர் தானே, உங்களை ஏன் பேராசிரியர் என அழைக்கின்றார்களே? எனக் கேட்ட போது சட்டென்று எழுந்த பேராசிரியர் அவர்கள் " ஆம், எனக்கு என் பழைய தொழில் நன்றாக நினைவில் இருக்கின்றது என்றாராம்". மறுமுனையில் ஜெயலலிதா அவர்களை நீங்கள் திருமண வீடுகளில் நடனமாடியவர் தானே எனக் கேட்காமலேயே ஜெயலலிதா அவர்களுக்கு புரிந்து முகம் இருண்டு போனதாக அறிகின்றேன். 


உண்மையில் பேராசிரியர் என்பது இணையத்தில் விவாதத்திற்கு உரிய விடயமாகவே இருந்து வருகின்றது. ஆனால் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதற்குப் பதில் அளித்திருக்கின்றார்கள். 


அதனைக் கூறியவர்கள் பெயர்ப் பட்டியலை படிக்கும் போது வியப்பாக இருந்தது. ஒரு சிலர்  துணைவேந்தர்கள், சில முனைவர்கள், சில கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள். முத்தாய்ப்பாக அறிஞர் அண்ணா அவர்கள் பேராசிரியர்களின் பேராசிரியர் நம் அன்பழகன் என குறிப்பிட்டுள்ளார். 


1944- ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்கள் அன்பழகனாரை அழைத்து, பச்சையப்பன் கல்லூரியில் "பேராசிரியர் பணி காலியாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அறக்கட்டளை உறுப்பினர் குமார ராஜாவைப் பார்" என பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்பினார். அங்கே சென்ற போது குமார ராஜா " பயிற்றுநர் (டியுட்டர்) பணி தான் காலியாக உள்ளது, அடுத்த ஆண்டில் விரிவுரையாளர் ( லெக்ட்சுரர்) பணி காலியாகும் போது மாற்றிக் கொள்ளலாம் என்றார். அதற்கு பதில் அளித்த மு..அன்பழகன் அவர்கள் இவ்வாண்டு இயக்கப்பணி ஆற்றுகின்றேன் அடுத்த ஆண்டு விரிவுரையாளர் பணி காலியாகும் போது தெரிவியுங்கள், வந்து சேர்ந்து விடுகின்றேன் எனக் கிளம்பி வந்துவிட்டார் 


விரிவுரையாளர் என்பவர் யார்? 

பாடபுத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் நடத்துபவரே  விரிவுரையாளர் எனப்படுபவர். கல்விப்பணி அத்தகையது இல்லை. எந்த துறையில் பாடம் நடத்தினாலும் அந்த நூலின் கருத்து மாணவர்கள் உள்ளத்தில் பதிந்து அவர்களின் எண்ணங்கள் வளருமளவிற்கு சிந்திக்கும் ஆற்றலை பெறும் வகையில் பயிற்றுவித்தார். 


சமுதாயத்தின் வருங்காலத்தை அமைத்துத் தருகின்ற சீரிய பணியைத்  தொழிலாகக் கருதாமல் சமுதாய தொண்டாகக் கருதிப் பணி ஆற்றியதாலும் மாறாக பாடபுத்தகத்திற்கு அப்பால் அன்றைய அரசியல் நிகழ்வுகள், அண்டை நாட்டுச் செய்திகள் என மாணவர்களுக்குத்  தெரியப்படுத்தி அதன் வழி அவர்களின் சிந்தனைக்கும் ஏற்றமிகு வாழ்வுக்கும் வழிவகுத்தார். இதனால் தான் அவரை  விரிவுரையாளர் எனச் சுருக்கிவிட முடியாது என அவருடன் பணியாற்றிய பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 


அவருக்கு அளிக்கப்பட்ட பணியின் பெயர் வேண்டுமானால் விரிவுரையாளராக இருக்கலாம்! ஆனால் ஒருநாளும் அவர் விரிவுரையாளராகப்  பணியாற்றவில்லை. பேராசிரியர் என்பவர் பாடபுத்தகத்தை நடத்தாமல் சுயமாகத் தனித்தன்மையுடன் அறுதியிட்டுப் புதிய செய்திகளை அளிப்பவர்கள் ஆவர். 


கல்லூரியில் எட்டாத , எட்டக்கூடாது என திட்டமிடப்பட்ட பல நல்ல நடப்புகளை அன்றாட நிகழ்வுகளை , அரசியல் மற்றும் சமுதாய பிரச்சனைகளைக் கொண்டு வந்து மாணவர்களின் சிந்தனையைத்  தூண்டி விடும் பணியை செய்தவர், 


"அரசியலில் அவர் 'பேராசிரியர் 'என மாநிலம் முழுதும் அழைக்கப்பட்டாலும் எங்களுக்குப் பாடம் நடத்திய பேராசியர் அவர் என்ற பெருமை எங்களுக்கு மட்டுமே உண்டு , அதனை விட்டுக் கொடுக்க மாட்டோம் " என உரிமை கொண்டாடும் பேராசிரியர்கள் பட்டாளமே உண்டு. அவர்களில் சிலர் முனைவர்களாகவும் , சிலர் புலவர்களாகவும் , கல்லூரியின் முதல்வராகவும், துணைவேந்தர்களாகவும் பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அவர் பேராசிரியர் தான் விரிவுரையாளர் அல்லர் என்பதற்கு இன்னொரு நிகழ்வைச் சுட்டிக்காட்டினால் தெளிவு பெறாதவர்கள் தெளிவு பெறுவர் என நினைக்கின்றேன். 


1955 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது அங்கு அரசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த க..திருநாவுக்கரசு அவர்களைச் சந்தித்தார். பேராசிரியர் திருநாவுக்கரசு நம் நாயகரின் மாணவர். மதியழகன் அவர்கள் பேராசிரியர் திருநாவுக்கரசை அறிமுகம் செய்யும் போது இவர் பச்சைய்யப்பன் கல்லூரியில் அன்பழகனின் மாணவர் என அறிமுகம் செய்தார். 


உடனே அண்ணா அவர்கள், "அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையே அவர் கலக்கு கலக்கென்று கலக்கினார். இவருக்கு அவர் பேராசிரியராக இருந்தார். இதிலிருந்து என்ன தெரிகின்றது? நம் அன்பழகன் பேராசிரியர்களுக்கே பேராசிரியர் விளங்கும் தகுதி பெற்றுவிட்டார்" எனப் பெருமிதத்துடன் கூறினாராம். 


1965 இல் பேராசிரியர் யார்? என அண்ணா அவர்கள் குறிப்பிட்ட வரிகளை மேற்கொள் காட்டாமல் "பேராசிரியர்" என்ற சுட்டுப்பெயருக்கு நியாயம் கற்பிக்க இயலாது. அண்ணாவின் அன்புப் பிடியில் முதலில் சிக்கிய தம்பி அன்பழகன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 


படிக்கின்ற வயதில் அரசியல் வேண்டாம் , "பேராசிரியராக போ" என கட்டளை இட்டவரும் அண்ணா, "நீ பேச வேண்டிய இடம் இதுவல்ல என்னோடு பேரவைக்கு வா " என கைப்பிடித்து அழைத்து சென்றவரும் அண்ணா என யாருக்கும் கிடைக்காத பேறு -பெருமை நம் இனமான பேராசிரியருக்கு உண்டு. 


இது தெரியாமல் தான் ஜெயலலிதா அம்மையார் நீங்கள் விரிவுரையாளர் தானே என கேள்வி எழுப்பி தன் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டார். 


மானமிகு, தன்மானம் , சுயமரியாதைக்காரர் என பலரும் போற்றப்பட, பேராசிரியருக்கு மட்டும் இனமான என்ற சுட்டுப்பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என தேடுவோம். 


அய்யா அறிவுக்கரசு அவர்களிடம் பேராசிரியர் பற்றி பேசும் போது குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. 


" அய்யய்யோஅவர் கொஞச நஞ்ச வேலையா பார்த்தார்? இந்த செதம்பரத்துல அவர் படிச்ச போது செய்த மாற்றம் தான் அடுத்தடுத்து கல்லூரிகளில்  தமிழ்துறையை மீட்டெடுத்தது எனலாம், இப்ப தான் அவர் அன்பொழுக சத்தமின்றி பேசுறார். அப்பல்லாம் மைக்கே இல்லாமல் முழங்குவார். தமிழுக்கு இழுக்கு என்றால் தலையே போனாலும் சரின்னு அவர் வேலையை பார்த்துட்டு தான் விடுவார் என்றார். 


அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த போது பேராசிரியருடன் சக கல்லூரி மாணவர்களாக பயணித்தவர்கள் தான் நாவலர், இரா.செழியன், மா.நன்னன் ஆகியோர். இதில் சிறப்பு என்னவென்றொல் நாவலர் ஹானர்ஸ் படிப்பின் மூன்றாம் ஆண்டில் தான் பேச துவங்கினாராம், இரா.செழியன் அதிகம் பேசமாட்டார்,  மா.நன்னன் முதிர்ச்சியின்மையால் தவறாகிவிடுமோ என அமைதியாக இருப்பாராம். இதை சொன்னவரும் மா.நன்னன் அவர்கள் தான். அண்ணாமலை பல்கலைகழகத்தில் தேசிய உணர்வு மாணவர்கள் அதிகம். கடவுளின் பக்தியின் பெயரால் அதிகம் கூடிவிடுவர். 

ஆனாலும் பேராசிரியர் அவர்களிடம் விவாதிக்க தயங்கியதே இல்லையாம் . பட்டிமன்றம் என்றாலே பேராசிரியர் முதல் ஆளாக நிற்பாராம். அவருக்கு துணையாக நாவலர், குறிப்பெடுத்து கொடுக்க இரா.செழியனும், மா.நன்னன் அவர்களுமாம். 


மா.நன்னன் இவ்வாறாக  கூறுகின்றார்," அண்ணாமலை பல்கலை கழகத்தில் தன்னந்தனியொருவராக நின்று கருத்துப் போராடுவது பேராசிரியருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாயிற்று. உறங்குவதற்கு வீட்டுக்கு போகும் நேரத்தை தவிர ஏதேனும் ஒரு இடத்தில் முழங்கிக் கொண்டு இருப்பாரம். ஒருநாள் இரவு ஒரு திசையில் இருந்து ஒலி மிகுந்து வந்தது. என்ன சத்தம் என்று அங்கு சென்று பார்த்தால் பேராசிரியர் அங்கு தேசிய உணர்வு மாணவர்களிடம் தனி ஒருவராக  கருத்துப் போர்  செய்துக் கொண்டிருந்தார். தண்டபானி தேசிகர் தமிழில் பாடமுற்பட்டதால். அவரை பாடவிடாமல் தடுத்த அதே காலகட்டத்தில் பார்ப்பன மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் என பிரிந்து நின்றது.  அப்போது மாணவர் மன்றத்தில் செயலாளராக இருந்த பேராசிரியர் உள்ளிட்ட திராவிட இயக்க மாணவர்களின் முயற்சியால் தமிழிசைக் கல்லூரி துவங்கியது. பார்ப்பனர்களுக்கென்று தனி உணவுப் பிரிவு மாற்றப்பட்டு பொதுப்பிரிவாக்கப்பட்டது. அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரை பல்கலைகழகத்திற்கு வரவழைத்து உரையாற்ற வைத்த பெருமை பேராசிரியருக்கு உடையது. இதனை எல்லாம் வாசித்த போது தமிழ்த்தாத்தா உ.வே.சா என்பதை விட தமிழ்காத்த பேராசிரியர் ஒருபடி மேல உயர்ந்து நிற்கிறார். 


நீதிக்கட்சி நூற்றாண்டு விழா என்று நினைக்கின்றேன். அதில் உரையாற்றிய பேராசிரியர் " தமிழ் என்ன உங்கப்பன் வீட்டுச் சொத்தா? பஞ்ச கச்சமும், பட்டு அங்கவஸ்திரமும் போட்டால் தான் தமிழ் கற்க முடியுமா? நீங்கள் சமஸ்கிருதத்தைக்  கலந்ததைத் தவிர வேறென்ன செய்தீர்கள்" என்ற தொனியில் கடிந்து பேசியிருப்பார். 

மாணவர் மாநாட்டில் தமிழா கேள் என்ற தலைப்பில் அன்றைய இராமையா நம் பேராசிரியர் ஆற்றிய உரை மாணவர்களிடையே புத்துணரச்சி பெற்றது. அந்த உரையை திராவிடநாடு இதழில்  அண்ணா அவர்கள் "அருந்தமிழரின் ஆற்றல் அழிக்கப்பட்ட துக்ககரமான வரலாற்றை, இலக்கியமும் இலக்கணமும் உனக்கு இடர்பாடு உண்டாக்கிய வகையை இளந்தமிழர் எழுச்சியின் உருவம் தோழர் அன்பழகன் உரிமைப் போரில் ஊக்கம் காட்டிய உரையை கேள் தமிழா கேள்"  என வெளியிட்டார். 


திராவிடம் சாதித்தது 

என்னவென்று கேட்கின்றார்கள்? 

உனக்கு தமிழாசிரியர் யார்? உங்க தந்தையாருக்குத் தமிழாசிரியர் யார்? உங்கப் பாட்டனார் பள்ளிக்கு போயிருந்தால் அவருக்குத் தமிழாசிரியர் யார் என்ற கேள்வியை முன் வைத்துப்  பதிலை பெறுவீர்களேயானால் அந்த பதில் திராவிடத்தின் சாதனையாக இருக்கும்


இதனைக் கேட்ட போது நானும் விரல் விட்டு யோசிக்கத் தொடங்கினேன். 

80-கள் வரை, நான் படித்த பள்ளியில் தமிழாசிரியர்கள் கணபதி, கோபாலகிருஷ்ணன், சாம்பார் எனப்படும் நடராஜன் என அவா சமூகமாகவே இருந்தது. நான் பத்தாம் வகுப்பு பி பிரிவு. எனக்கு நடராசன் எனும் திராவிடர் தமிழ் வகுப்பு நடத்தினாலும் பத்தாம் வகுப்பு அ பிரிவின் ஆசிரியர் சாம்பார் எனப்படும் நடராஜன் அய்யங்கார். 


அடுத்து என் தம்பி 90-களில் படித்த போது, அண்ணாமலை, அர்ச்சுனன், கருணாகரன் எனப்படும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தமிழ் ஆசிரியர்களாக பணியாற்றுவது திராவிடத்தின் வெற்றியாக உணர்ந்தேன் .


தமிழுக்குக் கேடு செய்கின்றவன், தமிழ் எனும் உணர்வை அழிக்க விரும்புகின்றவன், தமிழ் என்கிற இயற்கையான உணர்வோடு ஒத்து வருகிற எழுச்சிக்குக் கேடு செய்கின்றவன் யாராக இருந்தாலும் , அவன் அறியாமல் செய்தாலும் அதனை எதிர்க்கின்ற ஆற்றல் நம் மக்களுக்கெல்லாம் தாமாக வர வேண்டும்.  


பேராசிரியரிடம்  சமக்கிருத எதிர்ப்புணர்வு மேலோங்கி இருந்தது. தமிழ்நாட்டில் இந்துக் கோவில்களில் சமஸ்கிருத வழிபாட்டையும், திருமண நிகழ்வில் வடமொழி மந்திரம் சொல்லி திருமணம் செய்வதையும் கடுமையாக எதிர்த்தார். கடவுளுக்கு தமிழ் தெரியாதா? குறைந்தபட்சம்  பேச இயலாதோர் செய்யும் சாடை மொழிக் கூட புரியாதது எப்படி கடவுளாக இருக்க முடியும்? எல்லாம் அறிந்தவன் இறைவன் என்பதின் பொருள் என்ன? தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியபிரபந்தம், அருட்பா ஆகியவற்றை விடவா சமஸ்கிருதத்தில் பாடல் உள்ளது? என மேடைகள் தோறும் முழங்கயவர் நம் இனமானப் பேராசிரியர். 


சமஸ்கிருதத்தில் பூசை செய்ய வேண்டுமென்றால் தமிழனுக்கு பக்தி உணர்வு இருக்க கூடாதா? திருநாவுக்கரசர், வள்ளலார், நந்தனார், திருப்பாணாழ்வார் எல்லாம் ஆரியர்களா? 2000 ஆண்டுகளுக்கு  முன் முருகன் பழநியில் இருக்கின்றான் ஆனால் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான்  திருமலை நாயக்கர் ஆட்சியில் இராமப்ப அய்யர் தான் அங்கிருந்த சித்தர்களை வெளியேற்றி கொடுமுடி ஸ்மார்ந்த பிராமண குடும்பத்தினரை அழைத்து ஆரிய வழிபாட்டைக் கடைப்பிடிக்கக் கட்டளையிட்டார்.  


ஆரிய வருணம் ஒழியத் தன்னுணர்வு பெற்றிடுதல் வேண்டும் தன்னுணர்வு வளர தமிழ்க்கழனி திருத்தப்படல் வேண்டும். இலக்கியப் பூங்காவானாலும், இலக்கண விளைநிலமானாலும் ஆரியக்கள்ளி முளைத்து வளர்ந்திருப்பின் அதன் தீமையை உணர்ந்த திராவிடர் அதனை தீவைத்தேனும் ஒழித்திடத் தயங்கார். நம்முடைய உள்ளத்திலே தெளிவான கருத்தும், கொள்கை உறுதியும் இருந்தால் மட்டுமே உரிமையையும் மானத்தையும் காப்பாற்றி நிலைநாட்ட  முடியும்..


இவ்வாறாக வாக்குஅரசியல், தேர்தல் அரசியல் மேடையானாலும் மொழி இனம் , தன்மானம், இன விடுதலை என வாழ்நாள் முழுவதுமாக இனத்தின் விழிப்புநிலைக்கும் விடியலுக்கு வித்திட்டு  எழுதி, பேசி, சிறைசென்று  தொண்டாற்றிய காரணத்தால் தான் இனமான பேராசிரியர் எனச்  சான்றோர்களால்  போற்றப்ப்ட்டார். 


எத்தனை அழகர் அவர்? 


அன்பழகர் , அறிவழகர்

கழகத்தின் மாண்பழகர்!  

அண்ணாவால் விரும்பழகர், 

கலைஞரோடு நட்பழகர்! 

இன்பழகர், எழிலழகர், 

இயக்கவர லாற்றழகர்! 

இயற்றமிழ் சொற்பொழிவழகர், 

இதயங்கள் ஈர்ப்பழகர்! 

மின்னலெனும் நகையழகர், 

மடங்கலெனும் மிடுக்கழகர்! 

விழுமியதோர் பண்பழகர் 

தொண்டழகர், கவினழகர்! 

தன்மானம் பகுத்தறிவு 

தடம்பதித்த நெறியழகர்! 

தறுக்கண்மைச் சான்றோராய் 

சாற்றாழகர் வாழியவே!


- நரசிம்மன் நரேஷ்


No comments:

Post a Comment