Friday 2 July 2021

எது மாற்று? - சா. மெர்லின் ஃபிரிடா

 எது மாற்று? - சா. மெர்லின் ஃபிரிடா

நம் நாட்டை வெள்ளையர்கள் கையிலிருந்து சுதந்திர போராளிகள் மீட்டு கொடுத்தார்கள். ஆனால், வெள்ளைய ஆதிக்கத்திலிருந்து மீண்டு இவர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்பதே உண்மை. இங்கு உள்ள ஆரியக் கூட்டம் தாங்களே அனைத்தையும் கட்டி ஆளவேண்டும், எல்லாரும் எங்களுக்குக் கீழ் தான் என்ற மனோபாவம் கொண்டவர்கள். பிற்படுத்தப்பட்ட / ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கொடுக்கப்படவில்லை. வம்சாவழியாய் செய்து வந்த தொழிலை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று வகைப்படுத்தி அடிமைப்படுத்திவிட்டனர். அடிப்படைத் தேவையான கல்வி மறுக்கப்பட்டதால் ஏற்றத்தாழ்வு இருந்துகொண்டே இருந்தது. 


இந்த மோசமான சூழலை மாற்றவும், சமநிலையை நிலைநாட்டவும், ஆரியக் கூட்டத்தை விரட்டி அடிக்கவும், கல்வி எல்லாருக்கும் கிடைக்கவும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தொலைநோக்கோடு போராடிப் பெற்றுத்தர உருவாக்கப்பட்டதுதான் நீதிக்கட்சி. இன்னும் ஆழமாக மக்களிடம் சமத்துவத்தை எடுத்துச் சென்றது திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியார் அவர்கள். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தால் மாத்திரமே சமநிலையைச் சட்டப்படி கொண்டுவர முடியும் என்பதை உணர்ந்து, அதிகாரத்தைப் பிடித்த அறிஞர் அண்ணா. திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் சமநிலை ஏற்படவும் சுயமரியாதையாய் வாழவும் வழிவகுத்தார். அண்ணாவைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் தமிழகத்தை நவீன மயமாக மாற்றி அணைத்து சமூகத்துக்கும் அவர்களின் உரிமைகள் கிடைக்கும்படி செய்தார். தற்போது நம்முடைய அடிப்படை உரிமைகளைப் பறிக்க வரும் கூட்டத்திடமிருந்து நமது உரிமைகள் பாதுகாக்கப்படவும், சனாதன சக்தியை நுழைய விடாமலும் தடுப்புச் சுவராக இயங்கிக் கொண்டிருப்பவர் தளபதி.


இவ்வாறு நம்முடைய உரிமைகளுக்காக என்றும் போராடும் இயக்கம் இருக்கும்போது மாற்றத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இங்கு மாற்று அரசியல் தேவை என்பதைப் பலரும் பேசும் படியாக மாற்றிவிட்டார்கள். கழக ஆட்சி வரவே கூடாது என்ற முனைப்போடும், கழகத்தை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடும், மக்களைத் திசைதிருப்பப் பரவலாக பேசப்பட்டதே இந்த மாற்று!!! 


மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள் எதிர்க்க வேண்டிய ஆளும் கட்சியை விட்டுவிட்டுக் கிட்டத்தட்ட 10 வருடமாக ஆட்சியில் இல்லாத திமுக மீது வீண் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட கட்சிகள் நாட்டை சீரழித்து விட்டார்கள், அவர்கள் குடும்ப அரசியலில்  ஈடுபடுகிறார்கள், அப்படிப்பட்ட அரசு தேவை இல்லை என்று வாய்க்கு வந்தபடி கூறிக்கொண்டு குறிப்பாக இந்த இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளை அவர்கள் பக்கமாக திருப்பப் பல வேலைகளைப் பார்த்தார்கள். மாற்றம் என்று சொல்லிக்கொள்வோர் நமது கருத்துக்கு எதிர்த்து நிற்கிற பாசிசக் கூட்டத்தை  நியாயப்படி எதிர்க்கவேண்டும். ஆனால் இவர்களோ அவர்களால் களம் இறக்கப் பட்டவர்கள் தானே! அப்புறம் எப்படி எதிர்ப்பார்கள்? இந்த மாற்றுகள் எல்லாம் திமுகவை மட்டும் எதிர்த்து, திமுகவின் வாக்குகளை மட்டும் சிதறடிக்க வடிவமைத்து பதிவிறக்கம் செய்யப்பட்டு டெல்லி மூலம் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டவையே.


நமது மாநிலத்தில் இந்த மாற்று என்று சொல்லிக்கொண்டவர்கள் முன்னெடுத்து வைத்து வந்த ரூபம் எல்லாம் வித்தியாசமானவை. தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டதோடு  'தமிழ் தேசியவாதிகள்' என்று அவர்களுக்கு அவர்களே பட்டம் கொடுத்துக்கொண்ட ஒரு கூட்டமும், நாங்கள் வலதும் கிடையாது...! இடதும் கிடையாது...! மையமாக நின்று நடுநிலையாக ஆட்சி செய்வோம் என்று ஒரு கூட்டமும், ஊழலை ஒழிப்போம்! ஊழலை ஒழிப்போம்! என்று தனியாக ஒரு கூட்டமும், ஆன்மிக அரசியலைக் கடைப்பிடிப்போம் என்று ஒரு கூட்டமும்  மொத்தமாக திமுக என்ற ஒரே கட்சியின் வாக்கைச் சிதறடிக்க வேண்டும் என்று எல்லாரும் தனித் தனியே நின்று ஒற்றுமையாக செய்த கேலிக்கூத்துகள் ஏராளம். ஆன்மிக அரசியலை முன்னெடுத்தவர் கள நிலவரத்தை உணர்ந்ததாலும், தன்னுடைய தனிப்பட்ட காரணங்களாலும் முடிவை மாட்டிக்கொண்டார் என்பதில் மகிழ்ச்சி. ஆக மொத்தம் இவர்கள் எல்லாருமே சேர்ந்து ஊழலை ஒழிப்போம் என்று வெற்று பேச்சுக்களில் மட்டும் கூறிக்கொண்டார்களே தவிர, யாரும் பாசிசத்தை ஒழிப்போம் என்று ஒரு துளியும் கூடச் சொல்லவில்லை. நம்முடைய எதிரி பாசிசம் என்று நன்கு தெரிந்தும் அதை ஓர் ஒப்புக்குக் கூட எதிர்க்கவில்லை. ஏனென்றால் இவர்கள் அவர்களுக்கென்று இறக்குமதி செய்யப்பட்டவர்கள்.


சரி மாற்று மாற்று மாற்று என்று கூறிக்கொண்ட இவர்களெல்லாம், 


1) நீட் என்னும் அநீதியை எதிர்த்து குரல் எழுப்பினார்களா?  

2) தூத்துக்குடி அப்பாவி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு  நடத்தியதை  எதிர்த்து கேள்வி கேட்டார்களா? 

3) விவசாயி விரோதச் சட்டத்தை  எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக  நின்றார்களா? 

4) அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரச் சூழ்ச்சிகளைச் செய்ய முற்பட்ட பொது எதிர்த்து கேள்வி கேட்க முன்வந்தார்களா? 

5) பொதுத்துறை நிறுவன பணிகளில் வட மாநிலத்தவரை பணிக்கு அமர்த்த முயற்சி செய்த அரசை எதிர்த்து கேள்வி கேட்டு தமிழக இளைஞர்களின் வேலைக்குப் பாதுகாப்பாக இருந்தார்களா? 

6) சாத்தான்குளம் தந்தை, மகனை விசாரணை மூலம் கொன்ற அரசைக் கேள்வி கேட்க முன் வந்தார்களா? 


இப்படி மக்களுக்கெதிரான எந்தவித அநீதிகளையும் இவர்கள் எதிர்க்க முன்வரவில்லை. ஆனால் இவர்களுக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்க வேண்டுமென்று எந்த அடிப்படையில் பேசினார்கள் என்று அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. இதெல்லாம் விட்டுவிடுவோம்...! கடந்த வருடம் கொரோனா என்ற கொடிய நோய் மனித குலத்தையே உருக்குலைத்துப் போட்டது. ஊரடங்கு காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்க்கும்போதாவது வந்து உதவிக் கரம் நீட்டினார்களா? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதில், 'இல்லை' என்ற அந்த ஒற்றை வார்த்தையே!


ஆனாலும் இவர்களையும் நம்பி ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களால் நமக்கு என்ன பயன் என்பதை யோசிக்காமல், திமுக மீது வீணாக சித்தரிக்கப்பட்ட அவதூறுகளை உண்மை என்ன என்பதைச் சரிவர அறியாததால் தான். வேறு சில இளைஞர்கள் யார் ஆட்சி செய்தால் நமக்கென்ன? என்று பொறுப்பற்ற தன்மையைக் கடைப்பிடித்தார்கள். இது சனநாயக நாடு! மக்களுக்கு உரிமை இருக்கிறது. நம்மை யார் ஆள வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம். ஒரு சில கூட்டம் தவறான அரசியல் புரிதலோடு இருப்பதால் சில சமயம் மொத்தமாக ஆட்சி மோசானவர்கள் கையில் சிக்கி எல்லாரும் சேர்ந்து பாடு படவேண்டிய சூழல் நேர்கிறது.


இந்தியாவில் உள்ள வேறெந்த மாநிலத்தையும் எடுத்துக்கொண்டால் அங்கு இந்த மாற்று கட்சிகளெல்லாம் எழும்ப முடியவில்லை. நமது அண்டை மாநிலமாகிய கேரளாவை எடுத்துக் கொள்வோம். அங்கு இடது மற்றும் வலது சாரி கட்சிகள் மட்டும் தான். அவர்கள் தங்களுக்கு யார் வேண்டும் என்பதை உரிமையோடும், தெளிவோடும் தேர்வு செய்கிறார்கள். நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை. 


முதலாவது நடுநிலை என்ற ஒன்று கிடையாது. நாங்கள் நடுநிலையாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அரசியல் செய்யும் யாருமே பாசிசத்தை எதிர்க்கவில்லை. அந்த நடுநிலை ஆதரவாளராக நீங்கள் இருந்தால், பாசிசத்தை மென்மையாக கடைப்பிடித்து சனநாயகத்தை எதிர்த்து நிற்கிறீர்கள், பொதுசனத்தை எதிர்கிறீர்கள் என்பதை இனிமேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும். சனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கித் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. ஆனாலும் அதில் சமநிலை, சமத்துவம், சமூகநீதி போன்றவற்றை உறுதியாக கடைப்பிடித்துச் செயல்படுகிறார்களா என்பதை நாம் புரிந்து யோசித்து வாய்ப்பளிக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் வாய்ப்பளிப்பது குரங்கு கையில் பூமாலை கொடுத்ததாக மாறி விடும். ஏற்கனவே நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் மத்திய அரசு செய்யும் இந்தக் குரங்குத்தனத்தை. நாம் அவர்களைத் தேர்வு செய்யவில்லை. வடக்கர்கள் செய்ததால் நாமும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம். ஒரு பொறுப்புள்ள குடிமகனுக்கு அரசியல் புரிதல் என்பது மிக முக்கியம். தவறாக தேர்ந்தெடுத்துவிட்டு, பின்பு வருந்துவதால் ஓர் உபயோகமும் இல்லை.


தமிழ் நாட்டில் மாற்று கட்சிக்கான தேவை இன்னும் தோன்றவில்லை என்பதே உண்மை. சனாதனத்தை அன்றிலிருந்து இன்று வரை வேரறுத்துக் கொண்டிருப்பது திராவிடமே. திராவிட கட்சிகள் மீது பூசப்பட்ட அவதூறுகளாகிய சர்காரியா, ராஜீவ் காந்தி கொலையை திமுக மீது சித்தரித்தது, 2ஜி ஊழல் என்று சம்பந்தம் இல்லாமல் ஊதித் தள்ளியது போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுக்களே இந்த மாதிரி மாற்று கட்சிகள் தோன்ற வழிவகுத்தது. இந்த அவதூறுகளைச் சித்தரித்துவிட்டு மக்களிடம் பரப்பிப் பிழைப்பு பார்த்தது பிழைப்புவாதிகளும், சனாதன ஆதரவாளர்களும் தான். ஆனால் கழகத்தின் மீது வைக்கப்பட்ட வீண் பழியை எல்லாம் பொய் என்று சட்டப்பூர்வமாக நிரூபித்துவிட்டது. காலம்தான்  இன்னும் இந்த அவதூறுகளை  வைத்து உருட்டிக்கொண்டு இருக்கிறவர்களை உணர வைக்க  வேண்டும் . 


மனதில் ஒன்றை மட்டும் தெளிவாக எழுதிவைத்துக் கொள்ளுங்கள். சனாதனத்துக்கு என்றும் மாற்று திராவிடம் தான். இங்கு மாற்றாக செயல்படுவதும் திராவிடமே. அதனால், இடது பக்கம் நின்று வலதை முறியடிப்பதே சரியானதாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment