Saturday 31 July 2021

பேராசிரியரின் "தமிழர் திருமணமும் இனமானமும்" புத்தகத்தின் அணிந்துரை - கலைஞர் மு.கருணாநிதி

 பேராசிரியரின் "தமிழர் திருமணமும் இனமானமும்" புத்தகத்தின் அணிந்துரை - கலைஞர் மு.கருணாநிதி  


1946-ஆம் அண்டு என்று எனக்கு நினைவு -தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் சுயமரியாதை இயக்க நண்பரும் என் நெருங்கிய நண்பருமான ராஜு என்பவருக்குத் திருமணம், என் தலைமையில் நடைபெறுமென அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டது. அதே நாளில் தஞ்சாவூரில் கலைவாணர் என்‌.எஸ். கிருஷ்ணன் தலைமையில் என் மைத்துனர் இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராம் அவர்களின் மணவிழா. அந்த நிகழ்ச்சிக்குக் கூட நான் செல்லாமல் என் வீட்டில் உள்ளவர்களை அனுப்பிவைத்துவிட்டுப் பாபநாசத்துக்கு நண்பர்களுடன் புறப்பட்டுவிட்டேன். அப்போதெல்லாம் கருப்புச் சட்டை அணிவது வழக்கம், திராவிடர்க் கழகத்தின் திட்டப்படி!


நாங்கள் நாலைந்துபேர் பாபநாசம் திருமணப்பந்தல் முகப்பில் கருஞ்சட்டையுடன் நுழைந்தவுடன் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. “டேய்! கருப்புச்சட்டை பசங்க யாரும் உள்ளே நுழையக் கூடாது. அய்யரை வச்சுத்தான் கல்யாணம் நடத்துறோம். நீங்க. போங்க வெளியே!” என்று கதர்ச்சட்டை அணிந்த சில முரட்டு ஆசாமிகள் எங்களை விரட்டியடித்தனர். மணமகன் எங்கே என்று பார்த்தோம். கிடைக்கவில்லை. பந்தலிலிருந்து கிளம்பி, அந்த ஊர்க் குளக்கரைப் படித்துறையில் வந்து அமர்ந்து கொண்டோம், ஏமாற்றத்துடன். பிறகு என் நண்பன் தென்னனை, கருஞ்சட்டையைக் கழற்றச் சொல்லி, “நீ போய் திருமண வீட்டில் என்ன நடக்கிறது?”என்று பார்த்துவா என்றேன். அவ்வாறே சென்ற தென்னன் திரும்பி வந்து, அய்யரை வைத்துத் திருமணம் நடைபெறுகிறதென்றும், மாப்பிள்ளை ராஜு மணவறையில் அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறார் என்றும் சொல்லவே, ஒரு அரை மணி நேரம் கழித்து மணமகன் ராஜுவே எங்களைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். அழுது புலம்பிய அவரை நாங்கள் சமாதானப் படுத்தினோம். காலைச் சிற்றுண்டி, அருந்த அழைத்தார். “நான் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி விட்டேன். இனிமேல் பெண் வீட்டார் என்சொற்படிதான் கேட்கவேண்டும்‌.

காலை உணவருந்தியவுடன் மணவிழாப்  பந்தலிலேயே நீங்கள் எங்களை வாழ்த்தி பேச வேண்டும்'' என உருக்கமாக கேட்டுக்கொண்டார். எங்களுக்கு வயிற்றுப்பசி ஒருபுறம் - பேசவேண்டும் என்ற பசி மற்றொருபுறம், ஒப்புக்கொண்டு கிளம்பினோம்‌.


ராஜு, பந்தலில் பேசுவதற்கு மேடைபோடுகிற வேலைகளைக் கவனிக்கச்சென்றார். எங்களை பந்தியில் உட்கார வைத்துவிட்டுத்தான் சென்றார். ஆனால், பரிமாறுவதற்கு அதே முரட்டுக் கதராடைக்காரர்கள் தான் வந்தனர். அவர்கள் எங்கள் பக்கத்து இலைவரையில் இட்லி வைப்பார்கள். எங்களிடம் வரும்போது ஒரு முறைப்பு முறைத்துவிட்டுப் போய் விடுவார்கள். நாங்களும் சாப்பிட்டு முடித்தது போல் பாவனை செய்துவிட்டு, பேச்சுப் பசியையாவது தீர்த்துக் கொள்வோம் என்று பந்தலில் அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தோம். மணமக்களை வாழ்த்திப் பேசுவது என்ற பெயரால், மிக நீண்ட நேரம் நான் ஆற்றிய உரை, சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? ஏன் என்பதற்கான விளக்கங்களை விரிவாக வழங்குவதாக அமைந்தது.


முகப்புக்குள்ளேயே வராதே என எங்களை விரட்டிய முரட்டுக் கதராடைக்காரர்களே முகமலர்ந்து என்னை அணுகி, முதலில் நடந்துவிட்ட தவறுகளுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர். இதுபோன்ற அனுபவம்  சுயமரியாதைத் திருமணங்களைத் தொடக்க காலத்தில் நடத்திக்கொண்டவர்களுக்கும், நடத்தி வைத்தவர்களுக்கும் ஏராளமாக இருந்ததுண்டு,  எதிர்நீச்சல் போடும் ஆற்றலைத் தந்தை பெரியார் அவர்களிடத்திலே கற்றுக்கொண்டு எஃ கு உள்ளத்துடன் இடையூறுகளைக் 

கடந்து வந்ததால் தான், இன்றைக்கு  ‌ஆயிரக்கணக்கான திருமணங்கள் தமிழ் மொழி உணர்வுடன், தமிழ் இன உணர்வுடனும், தமிழர்களின் இல்லங்களில் நடைபெறும் காட்சியைக் காணமுடிகிறது. 


எனினும் இன்னமும் திராவிட இயக்கத்துடன் தொடர்புடையோர்   அல்லது இயக்கத்தில் இருப்போர் சிலருடைய வீடுகளில் ஏதோவொரு தவிர்க்க முடியாத காரணத்தால் பழைய புரோகித முறைத் திருமணங்கள் நடைபெறுவதைக் காணும்போது “சிந்திக்கத் தெரிந்தும் சிந்திக்காதவன் அறிவிலி” என்று இந்த நூலில் நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் முத்தாய்ப்பாக குறிப்பிட்டிருப்பது எத்துணை பொருத்தமானது என எண்ணிடவே தோன்றுகிறது.


மணவிழா முடிந்து ஆரம்பமாகும் இல்வாழ்க்கை எப்படித் திகழ்ந்திடல் வேண்டும் என்பதற்கு வழிமுறைகள் பலவற்றை இந்நூலில் பரக்கக் காணமுடிகிறது. “ஒரு காலத்தில் மாறுபாடு எழினும் அதைக் காட்டிக் கொள்ளாது சிறிது காலம் கடத்தியோ, ஓரிருநாள் கழிந்தோ - அது குறித்துத் தான் எண்ணிப் பார்த்த பின், உரையாட முற்பட்டால் உடன்பாடு காண்பது எளிது. மாறுபாட்டைத் தடிக்க வைத்துக்கொள்வது - ஓத்துப் போகும் வாய்ப்பைக் குறைத்து, உடன்படக் கூடியவற்றிலுங் ‌கூட வேற்றுமையான நோக்கம் கொள்ள வழிவகுக்கும்”.


குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும். இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தமது இதயக் கருவூலத்திலிருந்து ஒன்பான் மணிகளின் குவியலையே பொழிவதுபோன்று ஆதாரங்களையும், மேற்கோள்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் இலக்கியச் சான்றுகளையும் கொண்டு வந்து காட்டி, மணவிழாவுக்கு மட்டுமன்றி, மானத்தோடு வாழ்வதற்கும், இந்த இனம் உலகில் ஏறுநடை போடுவதற்கும் என்றைக்கும் பயன்படக்கூடிய இந்த எழுத்துப் பேழையைத் தந்துள்ளார். இது எழிற்பேழை! எண்ணப் பேழை! இனமானப்பேழை! எழுச்சிப்பேழை! இளைஞர், பெரியோர் அனைவரின் கையிலும் இருந்திடவேண்டிய கருத்துப்பேழை! கொள்கைப் பேழை!


அன்புள்ள,

மு. கருணாநிதி

No comments:

Post a Comment