Saturday 31 July 2021

வாழ்க திராவிடம் - பேராசிரியர் க. அன்பழகன்

 வாழ்க திராவிடம் - பேராசிரியர் க. அன்பழகன்



'தமிழ்நாடு தமிழருக்கே' என்று கூறினால் ஆளப் போகிறவர் தமிழர் என்று தானே அர்த்தம் என்று எளிதாகக் கூறுவர் பலர், நமக்கும் தெரியும் தமிழ்நாடு பிரிந்து விட்டால், தமிழ்நாட்டில் தெலுங்கரோ, மலையாளியோ, மந்திரியாகக்கூட வரமாட்டார்கள், என்ற பொதுவுண்மை. ஆனால் தமிழ்நாட்டை ஆளவேண்டிய, ஆளும் உரிமை கொண்ட தமிழர் யார்? என்று கேட்டாலோ, ‘தமிழ்மொழி பேசும் யாவருமேதான்' என்ற பதில் வருகின்றது இன்று “தமிழ்நாடு தமிழருக்கே” என்று ஒலிக்கிறவர்களிடமிருந்து. அப்படியானால் இன்று தமிழகத்தில் வாழ்ந்து தமிழ் மொழியைப் பேசும் அனைவரும் தமிழர்கள்தானா? தமிழ்ப் பண்பாடு உடையவர்கள் தானா? என்று எண்ணிப் பார்க்கட்டும். தமிழ்ப் பண்பாட்டோடு வாழாவிடினும், தமிழ்ப் பண்பாட்டை அழிக்காமலும் தமிழ்மொழிக்கும், கலைக்கும், நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்காமலுமாவது இருந்திருப்பின் ‘தமிழர்கள்' என்று புதிதாகவேனும் ஒப்புக்கொள்வதிலே ஒன்றும் பேரிழப்பு இல்லை என்று கருதலாம். அதற்கேனும் இடமுண்டா? இன்று தமிழகத்தில் வாழும் பார்ப்பனர் பேசுகின்ற நகைத்தற்கிடமான தமிழ்ப் பேச்சுமுறை ஒரு புறமிருக்க, தமிழ் பேசுவதால் மட்டும் எவ்வாறு தமிழராகிவிடுவார்? ஜி.யு.போப், பெஸ்கி போன்ற மேல் நாட்டவர்கள், தமிழ் பேசியும் எழுதியும் வந்ததால் மட்டுமன்றித் தமிழ் மாணவராகவே தமிழ்ப்பற்று மிக்குத் திகழ்ந்திருப்பினும், 'தமிழர்கள்' என்று கருதிவிடமுடியுமா? மறைந்த வலங்கைமான் சீனிவாச சாத்திரி, சத்தியமூர்த்தி போன்றவர்கள் பெற்றிருந்த ஆங்கில பேச்சு வன்மையினாலேயோ அன்றித் தம் தாய்மொழியினும் அதிகமாக ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றிருந்தமையினாலேயோ, 'ஆங்கிலேயர்' என்று கூற முடியுமா? அன்றி, வேறு ஆசையால் ஒப்பினாலும், ஆங்கில நாட்டார்தான் ஏற்பார்களா? மற்றும் தமது தாய்மொழி சமஸ்கிருதமென்றும், அந்த வழக்கிறந்த வடமொழி, வளஞ்சிறந்த தமிழினும் உயர்ந்ததென்றும், ஆரிய வேதமே ஆண்டவனுக்கு உகந்ததென்றும், தமிழ் நூல்கள் தாழ்ந்தனவென்றும் எழுதியும் பேசியும் வந்ததோடன்றி, இன்றும் கூறிவருபவரும் கூறத் துணிவில்லாவிடினும் கருதுபவருமான பார்ப்பனர்கள் தமிழ்மொழியைப் பிழைப்புக்காகப் பேசுவதினாலோ எழுதுவதினாலோ எப்படித் தமிழ் அவர்களது தாய்மொழியாகும்? அன்றி அவர்கள்தான் எப்படித் தமிழராவார்கள்?


தமிழ் நாட்டில் தங்கி வாழும் பார்ப்பனர்கள், வரலாற்றுப்படி கருதப்படும் வகையில், தமிழ்நாட்டில் நுழைந்த ஆரியரே என்று கொண்டாலும், அன்றி ஆரியமதக் கொள்கைகளையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு “பிராமணர்களான” பழந்தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே என்று கொண்டாலும், அன்றி ஆரியப் பிராமணரும் தமிழ்ப் பார்ப்பாரும் அக்காலத்திலேயே கலப்புற்றே இன்றைய பிராமணர் தோன்றினர் என்று கொண்டாலும், பிராமணர்கள் ஆரிய இனத்தைச் சேராத - திராவிட இரத்தக் கலப்புற்ற - ஒரு கூட்டத்தாரென்று கொண்டாலும், இன்றைய நிலையில் - தமிழகத்தில் வாழ்வு நடத்தும் பிராமணர்களே ஆரியத்தின் கலை, மொழி, நாகரிகங்களின் பிரதிநிதிகளாகவும், பிராமணரல்லாத பிற மக்களே உண்மைத் தமிழர்களாகவும், திராவிடத் தன்மையுடையவர்களாகவும் வாழ்வதையும், ஆரியப் பார்ப்பனர் தமிழ்ப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள இந்நாள்வரை மறுப்பது மட்டுமன்றி, இயன்ற வரையில் வடமொழியையும் ஆரிய நாகரிகத்தையும், வர்ணாசிரம தருமத்தையும், பிராமண ஆதிக்கத்தையும், அதை நிலைநாட்டும் மநுநீதியையும் ஏற்கனவே புகுத்தி வந்திருப்பதோடு, அவைகளைப் பாதுகாக்க சூழ்ச்சி செய்வதும், தமிழகத் தொடர்பு ஏற்பட்ட அந்தக் காலத்திலிருந்தே, தமிழ்ப்பண்பாட்டைத் திரிக்கவும் கெடுக்கவும் முயன்றிருப்பதும், மேலும் பல வகைகளில் சூழ்ச்சிசெய்து வெற்றி பெற்றிருப்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மைகளாகும். இவ்வுண்மைகளை அறியாதோ, அன்றி மறந்தோ, இல்லையெனில் மறைத்தோ, பார்ப்பனர்களும் தமிழரென்றால் - நஞ்சைத் தேனென்றும், கள்ளைப் பாலென்றும் கூறுவதாகவன்றோ அமையும்.


அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும், தெலுங்கு, கன்னடம், மலையாளமாகிய மொழிகளைத் தாய்மொழியாகப் பெற்றவர்களும், ஆரியப் பார்ப்பனரைப் போலத்தானே என்று கேட்க தோன்றலாம். அவர்கள் ஆரியர்களைப் போல, தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் வேறானவர்களே அன்றி முற்றும் புறம்பானவர்களாக மாட்டார்கள். 'மனோன்மணீயம்' என்ற இலக்கியத்தை அளித்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள், 'கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும், உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பலவாயிடினும்' என்று பாடியிருக்கின்றபடி, ‘தமிழினின்றும் தோன்றி, கிளைத்து வளர்ந்த தெலுங்கு மலையாளம் முதலிய மொழிகளைப் பேசுபவர்கள் எப்படி ஆரியப் பார்ப்பனரைப்போல் முற்றும் முரண்பட்ட வர்களாக முடியும்? ஆரியம் அவர்களுடைய நாட்டிலே நுழைந்து அங்கே வழங்கிய சிறிதே வேறுபட்ட, வழக்கால் பிளவுபட்ட பழந்தமிழைத் திரித்து, வடமொழிக் கலப்பு நிறைந்த, புதுமொழியாகத் சிதைத்த காரணத்தாலன்றோ தமிழ்மொழியினின்றும் விலகி நிற்கும் வேற்று மொழியைப் பேசுபவர்களானார்கள் அம்மக்கள். மற்றும்-தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகப் பெற்றவர்களாயினும்-தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கரும், மலையாளியும், கன்னடியரும் - தமிழையும் தங்களுடைய தாய்மொழியை ஒப்பவே போற்றுவதையும் - சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் குடியேறியிருப்பினும் அவர்களுள்ளும் பலர், தமிழ் மொழியையே தமது தாய்மொழியாக உணர்ந்து போற்றி வளர்ப்பதையும் தமிழ் நாட்டையே தமது தாய்நாடாகக் கருதி நடப்பதையும் நாம் கண்டு வருகிறோம்.


மேலும், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கரோ, கன்னடியரோ மலையாளியோ, பல துறைகளிலும் தமிழரைப் போலவே ஒப்புடையராய் வாழ்க்கை நடத்துகின்றனரேயன்றி, ஆரியர்களைப் போல் தமிழரை எத்துறையிலும் அடிமைப்படுத்தி வாழவிடவில்லை. அதுமட்டுமன்றி அவர்களும் அதே ஆரியரிடத்தில் பல துறைகளிலும் அடிமைப்பட்டுள்ளனர். எங்கோ கிடந்துவந்த வடமொழி கடவுள் மொழியானதைப்போல், மந்திர மொழியானதைப்போல், தெலுங்கோ மலையாளமோ ஆக்கப்படவில்லை. தமிழ்மொழி பயின்ற தெலுங்கரும், பிறரும் ஆரியர்கள் தமிழிலே வட மொழிச் சொற்களையும் - கருத்துக்களையும் நுழைத்து, மணிப்பிரவாள நடையையும் புராணத்தையும் வளர்த்தது போல், தமது மொழியைப் புகுத்தவும் முயலவில்லை. அப்படியே தேனும் ஒன்றிரண்டு தெலுங்கு மலையாளச் சொற்கள் தமிழிலே காணப்பட்டால், அவை வடமொழியிலும் காணப்படுவனவாகவே இருக்கும் என்பது ஒரு புறமிருக்க, அதைப் புகுத்தியவர் யாரென்று ஆராய்ந்தால் அவரும் தெலுங்கு நாட்டின் ஆரியராகவோ மலையாளப் பார்ப்பனராகவோதான் இருப்பர் என்பதும் அறியத்தக்கதாகும். தமிழ்நாட்டில் - தெலுங்கிசை தவழ்கிறதே - காரணமென்ன? தெலுங்கரின் சூழ்ச்சியல்லவோ? என்று சிலர் எண்ணக் கூடும். அதுவும் உண்மையல்ல. ஏனெனில், தமிழகத்தில் தெலுங்கிசையைப் புகுத்தியவர்களும், அதையே ஆதரித்து நிற்பவர்களும் ஆரியப் பார்ப்பனர்களே. தியாகப் பிரம்மமும், தீட்சிதரும், சாஸ்திரியும் தெலுங்குக் கீர்த்தனங்களே எழுதியதும், முத்துத் தாண்டவரும், அருணாசலக் கவிராயரும், வேதநாயகம் பிள்ளையும் தமிழ்ப் பாடல்களே இயற்றியதும், அரியக்குடியும் செம்மங்குடியும் தெலுங்கிசையையே போற்றி ஒலிப்பதும், தேசிகரும், பாகவதரும் தமிழிசையைப் போற்றி இசைப்பதும் எதைக் காட்டுகின்றன? தமிழ் இசையின் தனிச்சிறப்பை, கரகரவென ஒலிக்கும் வடமொழியால் வெல்லவோ, வீழ்த்தவோ வழியில்லை என்பதைக் கண்டுகொண்ட ஆரியர், ஆரியத்திடம் அடிமைப்பட்ட தெலுங்கு மொழியினைக் கருவியாக்கி, அதன் ஓசையின் இனிமையைத் தங்களுக்குத் துணையாக்கி, தமிழ்நாட்டில் தமிழிசைக்கு இருந்த இயற்கையான இடத்தைக் கைப்பற்றினார்கள் என்ற கருத்து வலிவு பெறுகின்றது. ஏனெனில் தமிழ் நாட்டில் பரவியது தெலுங்கு இசையாயினும் - உண்மைத் தெலுங்கர் எவரும் அதனால் வயிறு பிழைக்கவில்லை . அதனால் வாழ்வு பெற்றவர்கள் ஆரியப் பிராமணர்களே. தமிழ் நாட்டில் அதற்கு முன்பெல்லாம் தமிழர்களிடத்தில் இருந்த இசையரங்கு நிலைமாறி தெலுங்கிசைக்கும் ஆரியரிடத்தில் சென்று விட்டது. எனவே, தமிழ்மொழியிடமிருந்து ஆரியக் கூட்டுறவால் பிரிக்கப்பட்டு, ஆரிய ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுவிட்ட, தெலுங்கு மொழியையே, தமிழ்ப்பற்று வளரவும், தன்னுணர்வு நிலைக்கவும் காரணமாகவிருந்த தமிழ் இசையை வீழ்த்துவதற்கு ஒரு கருவியாக ஆரியம் பயன்படுத்திக் கொண்டது என்பதும், இதனால் பயனடைந்தோர் தெலுங்கர் அல்ல என்பதும் கண்கூடு. மற்றும் திராவிட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட எவராலும் தமிழர் வாழ்வு கெட்டதற்கு ஆதாரமில்லை. ஆனால் ஆரியர்கள் நுழைந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் தமிழருக்கு இழைத்த கொடுமைகளுக்கும் தமிழரைச் சுரண்டிய வகைகளுக்கும் ஆதாரங்கள் பலப்பலவாம்.


வாழ்க திராவிடம் - பேராசிரியர் க. அன்பழகன்

முழுப்புத்தகத்தை வாசிக்க: https://amz.run/4lvD


No comments:

Post a Comment