Saturday 31 July 2021

பேராசிரியர் குறித்து அறிஞர் அண்ணா

பேராசிரியர் குறித்து அறிஞர் அண்ணா


ன்று காலை ஆறு மணிக்கு அன்பழகன் சிறையிலிருந்து விடுதலை ஆனார். அவருடன் குழுவினரும் விடுதலை பெறுகின்றனர். இத்தனை நாட்களும் மெத்தவும் எனக்கு உதவியாக இருந்து வந்த அன்பழகன் விடைபெற்றுச் சென்றபோது இருவருமே ஒரு கணம் கவலைக்கொண்டோம்; பிறகோ இரண்டு வாரத்திற்குள் நானும் விடுதலை பெறப்போகும் நினைவைத் தருவித்துக்கொண்டோம். அன்பழகன் குடும்பமே கழகத்துச் சிதம்பரத்தில் ஆண்டு பலவற்றுக்கு முன்பிருந்தே அணிகலனாய்த் திகழ்ந்து வருவது, அவருடைய தந்தையார் என்னை வரவழைத்துச் சிதம்பரத்தில் கூட்டம் நடத்தும் அந்த நாட்களில், ஒல்லியான இந்த உருவம் அன்பழகன் - ஓடி, ஆடி வேலை செய்யக்கண்டேன். 


ஆண்டு பல சென்ற பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்பழகன் பயிலக் கண்டேன். அப்போதே ஆர்வம், அஞ்சாநெஞ்சம், உள்ளொன்று புறமொன்று கொள்ளாப் பண்பு - எல்லாம் அவரிடம் உண்டு. கழகத் தொண்டு அப்போதே அவருக்குக்  கற்கண்டு.    இருப்பைக் கரைத்து இன்ப வாழ்வு நடத்தும் குடும்பம் அல்ல; எளிய வாழ்க்கை என்றாலும் எவரிடமும் இச்சகம் பேசிடவோ நச்சரித்து வாழ்ந்திடவோ முனைந்தது இல்லை.


எல்லாப்பிள்ளைகளும் கற்றறிவாளர் ஆனார். மூவர் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டனர்: அன்பழகன் பச்சையப்பன் கல்லூரியில் - அறிவழகன், வண்ணை தியாகராயர் கல்லூரியில் - திருமாறன் விருதுநகர் கல்லூரியில்.


என் உற்ற நண்பர் 


கல்லூரியில் அன்பழகன் கழகக் கொள்கைகளைக் கலந்து தமிழ்த்தேன் குழைத்து மாணவருக்குத் தந்து வந்தார். அதனால் கிடைத்த தோழர் பலர் நமக்கு! "என் முழு நேரமும் கழகத்துக்கு  ஆக்கிடுவேன்" என்று அவர் என்னிடம் கூறிய போதெல்லாம் "தமிழ்ப்பேராசிரியர் என்னும் நிலை இழத்தல் கூடாது" என்று கூறித் தடுத்து வந்தேன்.


பிறகு அவர் கல்லூரிப் பணியை விட்டு வெளியே வர இசைவளித்தேன். இன்று அவர் தமிழ்நாடு சட்ட மேலவையில் உறுப்பினர்; எனக்கு உற்ற நண்பர்.


நான் ஓய்வு விரும்பும் போது சென்னையில் எனக்கு இல்லம் - இவர் இல்லம்.


அன்பழகன் பேச்சில் கனிவு இருக்கும் - குழைவு இருக்காது; தெளிவு இருக்கும்- நெளிவு எழாது. 


எத்தனையோ தோழர்கள், 'இந்தச் செய்தியை எடுத்து எப்படிக் கூறுவது? என்று தயங்கியோ குழம்பியோ இருப்பது உண்டு. ஆனால், இருவர் என்னிடம் தங்கள் மனத்தில் பட்டத்தை எந்த  மெருகும் ஏற்றாமல் எடுத்துரைப்பர். அவர்களில் அன்பழகன் ஒருவர்; மற்றொருவர் காஞ்சி கலியாணசுந்தரம்.

  

சிறையிலே சிந்தைக்கு மகிழ்வும் தெளிவும் உண்டாகும் விதமாக எத்தனையோ பேசினோம் இருவரும். குறளின் பொருளதனைச் சுவை மிஞ்சக் கூறிவந்தார் அன்பழகன். அந்தத் திருக்குறள் ஏடு உரை விளக்கம் முடித்திட இயலவில்லை. "வெளியே சென்று தொடர்ந்து எழுதி அதனை முடித்துத் தருவேன்"- என்றுரைத்து சென்றார்.


(இந்தி எதிர்ப்பு அறப்போரை ஒட்டி, சென்னை - மத்தியச் சிறைச்சாலையில் இருந்த போது 2-6-1964 பேரறிஞர் அண்ணா எழுதிய சிறைக்குறிப்புகள். 'காஞ்சி'  கிழமை இதழ். 4-4-1965)


திருக்குறள் தெளிவுரையாளர் 


அன்பழகன், முன்னாள் இரவு திருக்குறள் ஆராய்ச்சி நடத்தியதில் சில குறள்கள் பற்றி எடுத்துரைத்தார்.


பலர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள் என்றாலும் நுண்ணறிவுடன் மேலும் பல உரைகள் எழுதுவதற்கான வாய்ப்பும் தேவையும் இருக்கின்றன என்பது அன்பழகன் பேசும் போது தெரிகிறது.


பொதுவான 'உரை' யில் ஒருவர் எழுதுவதற்கும் மற்றவர் எழுதுவதற்கும் அதிகமான அளவு மாறுபாடு இல்லை - இருக்க முடியாது; என்றாலும் சில இடங்களில் சிறப்புரையும் புதுமை உரையும் பெற வழி இருக்கிறது. 


எனோ தானோ என்றோ - எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ - வலிந்து பொருளையும் கருத்தையும் திணித்தோ - உரை எழுதக்கூடாது. 


சிறையில் அன்பழனைச் சுற்றி ஒரே வள்ளுவர் மயம்!


ஆமாம்! பரிமேலழகரின் வள்ளுவர்- பாரதியாரின் வள்ளுவர் - மணக்குடவர் வள்ளுவர் - மு.வரதராசனாரின் வள்ளுவர் - சி. இலக்குவனாரின் வள்ளுவர் - புலவர் குழந்தையின் வள்ளுவர் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் வள்ளுவர் - கி.வா சகந்நாதனின் வள்ளுவர் - இப்படிப் பலப்பல.


திருக்குறள் ஆராய்ச்சி நூல் ஒன்று அன்பழகன் திறம்பட ஆக்கிக்கொண்டிருக்கிறார்.


அன்பழகனுடன் குறளாராய்ச்சி குறித்து உரையாடும் சுவைமிகு வாய்ப்பு, சிறையில் உடன் இருப்பதால் எனக்குக் கிடைத்திருக்கிறது. 


("காஞ்சி" வார இதழ்: 1-11-1964, 25-10-1964)


மணிக்கணக்கில் ஓவியம் தீட்டுகிறார் 


ஓவியம் வரைவதிலே ஒரு தனி மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது.


நான் வரைந்த 'தோற்றுப்போன இராணுவத் தலைவன்' படத்தை அன்பழகன் பார்த்துவிட்டு - 


"நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள் - 'இதை எழுதியது ஏழு வயதுச் சிறுவன்' என்று குறிப்பெழுதினால்!" என்று நகைச்சுவை ததும்பக் கூறினார்.


ஆனால், இன்று அன்பழகனே ஓவியம் வரையத் தொடங்கி விட்டார். திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால் அவர் தீட்டத் தொடங்கிய முதல் ஓவியமும் திருவள்ளுவரே தான்!


ஆகவே, இப்போது மூவர் சிறையில் ஓவியம் தீட்டும் பொழுது போக்கில் ஈடுபட்டிருக்கிறோம் - நான் (அண்ணா), கே.பி. சுந்தரம், அன்பழகன். 


இன்று அன்பழகன், ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியரின் படம் வரைந்தார்.


அந்தப் பெருங்கவிஞருடைய 400-வது நினைவு நாள் கட்டுரைகள், படங்கள், இதழ்களில் நிரம்ப வெளியிடப்பட்டுள்ள நேரம். எனவே இந்த ஓவியம் மிகப்பொருத்தமான நேரத்தில் அமைந்தது; தரமும் நல்லபடி அமைந்துவிட்டது.


அன்பழகன் மேற்பார்வையில் அந்த ஓவியத்துக்குச் சுந்தரம் ('தையற்கலை' - நூலாசிரியர்) வண்ணம் தீட்டனார். புதிய பொலிவு பெற்றிருக்கிறது ஓவியம். 


ஆங்கில மொழியை எதிர்த்து வந்த தவற்றுக்குக் கழுவாய் தேடிக்கொள்வது போல, இப்போது நம்முடைய இதழ்கள் அடிக்கடி ஆங்கில மொழியின் அருமை பெருமை களையும், உலகத்த தொடர்புக்கு அம்மொழி மிகமிகத் தேவை என்பதையும் வலியுறுத்தி எழுதிக்கொண்டு வருகின்றன. 


அந்தப் புதிய திருப்பம் காரணமாகவோ என்னவோ, ஆங்கிலப் பெருங்கவிஞரின் நினைவுநாள் குறித்து, இதழ்கள் நிரம்ப அக்கறை காட்டி பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.


("காஞ்சி" வார இதழ்: டிசம்பர் 20, 1964)  


ஒப்பற்ற பலன் தரும் ஓவியம் - நாடகம் 


அன்பழகன் என்னைப் போலப் படம் போடத் தொடங்கி விட்டார். மணிக்கணக்கில் அதிலே ஈடுபட்டு விடுகிறார். 


ஓவியங்கள் எப்படி இருந்த போதிலும் எங்கள் மூவருடைய உடல் - பல வண்ணக் கலவையாகி  விடுகிறது!


காட்டுக் காட்சி ஒன்று வரையும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறேன். ஓரளவு தயாராகி இருக்கிறது. அடர்ந்த காடு; மலைகள்; ஒருபுறம் வேங்கை; மற்றோர் புறம் யானை. 


எப்போதுமே எனக்கு ஓவியம் என்றால் மிகுந்த விருப்பம். 


நம் தோழர்களில் பலருக்கு வீண் செலவு என்று தோன்றினாலும் கூட, ஒவ்வொரு மாநாட்டிலும் ஓவியக்  காட்சி நடத்தச் சொல்லி வற்புறுத்துவதும் இந்த விருப்பம் காரணமாகத்தான்.


நடுத்தர நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் ஓவியக் காட்சி மூலம் நல்லறிவு பரப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று எனக்கு நீண்டகால ஆவல்.


ஓவியக் காட்சி, நாடகம் எனும் இந்த இரண்டும் ஒப்பற்ற பலன் அளிக்கத்தக்க முறைகள் என்பதில் அனேகமாக ஒருவருக்கும் சந்தேகம் எழாது  என்று கருதுகிறேன்.


("காஞ்சி" வார இதழ்: டிசம்பர் 27, 1964)


No comments:

Post a Comment