Friday 2 July 2021

“ஸ்டாலின் பஸ்”சும் அந்நிய செலவானியும் - சில்வர் ப்ளேஸ்

 “ஸ்டாலின் பஸ்”சும் அந்நிய செலவானியும் -  சில்வர் ப்ளேஸ்


திராவிட பொருளாதாரம் என்றால் என்ன ? இது எப்படி பொதுவுடமையில் இருந்து வேறுபடுகிறது என்பதை திரு.உமாமகேஸ்வரன் எளிதாக விளக்குகிறார்

பணக்காரர்களே இருக்கக்கூடாது என்று சொன்னால் கம்மியுனிசம்..
ஏழைகளே இருக்கக்கூடாது என்று சொன்னால் திராவிடம்


இதையே சற்று விரிவாக கூறவேண்டுமென்றால், திரு மாறன் அவர்களின் வார்த்தைகளில்

முதலாளித்துவ ஜனநாயக வரையறைக்குள், சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வெகுமக்களை உள்ளடக்கி அவர்களை மீட்டெடுக்கும் சோசலிசத் தத்துவத்தின் பெயர்தான் திராவிடப் பொருளாதாரம்.
அந்த முறையைச் செயல்படுத்தி வெகு மக்களை உய்ய வைத்த பெரும் பொருளாதார மேதை எங்கள் கலைஞர்.


மேலும் விளக்கமாக பார்போமா
ஒரு பேக்கரி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் (பேக்கரி டீலிங் நினைவிற்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல) அங்கு ஒரு முதலாளியும் 4 பேர்களும் வேலை செய்கிறார்கள். அங்கு மாதத்திற்கு சுமார் 5 லட்சத்திற்கு வியாபாரம் ஆகிறது. இதில் வாடகை மற்றும் பொருட்களுக்கு 4 லட்சம் ஆகிறது என்றால், மீதி லாபம் 1 லட்சம்

இதில் முதலாளித்துவம் என்பது என்னவென்றால்

- முதலாளி 80 ஆயிரம் எடுத்துக்கொண்டு நான்கு பேர்களுக்கும் சம்பளம் 5000 அளிப்பது

- ஒரு வேளை அடுத்த மாதம் 6 லட்சம் வியாபாரம் என்றால், அதில் 4.8 லட்சம் பொருட்களுக்கு செலவு என்றால்

- இப்பொழுது முதலாளிக்கு 1 லட்சம் கிடைக்கும்

- ஆனால் வேலை செய்பவர்களுக்கு அதே 5000 தான்


பொதுவுடமை, இதை கேள்வி கேட்கிறது
பொதுவுடமை என்ன சொல்கிறது என்றால்


- 1 லட்சம் லாபம் என்றால் அதை 80000+5000+5000+5000 என்று பகிரக்கூடாது

- அதை 20000+20000+20000+20000+20000 என்று பகிர வேண்டும்

- 1.2 லட்சம் லாபம் என்றால் அதை 100000+5000+5000+5000 என்று பகிரக்கூடாது

- அதை 24000+24000+24000+24000+24000 என்று பகிர வேண்டும்


அதாவது ஒரு பேக்கரிக்கு வந்து
அங்கு வேலை செய்யும் தொழிலாளிக்கு கூடுதல் பணம் பெற்று தருவது பொதுவுடமை

ஆனால்
திராவிட பொருளாதாரம் என்பது
லாபத்தை பங்கு பிரிப்பது மட்டும் அல்ல
இங்கு வாடிக்கையாளர் முதன்மையாகிறார்


இப்பொழுது நமது பேக்கரிக்கு மீண்டும் வருவோம்
மார்க்ஸ் இங்கு வருகிறார்
வந்து முதலாளியிடம் கேட்கிறார்

- மார்க்ஸ் : மாதம் விற்பனை எவ்வளவு

- பேக்கரி முதலாளி : 5 லட்சம்

- மார்க்ஸ் : எவ்வளவு லாபம் ?

- பேக்கரி முதலாளி : 10000

- மார்க்ஸ் : எப்படி பிரிக்கிறாய்

- பேக்கரி முதலாளி : 80000+5000+5000+5000

- மார்க்ஸ் : இப்படி எல்லாம் பிரிக்கக்கூடாது. அதை 20000+20000+20000+20000+20000 என்று பகிர வேண்டும்

- பேக்கரி முதலாளி : சரி ஐயா


இது தான் மார்க்ஸ் செய்த மாற்றம்


இதே பேக்கரிக்கு கலைஞர் வருகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்
வந்து முதலாளியிடம் கேட்கிறார்

- கலைஞர் : மாதம் விற்பனை எவ்வளவு

- பேக்கரி முதலாளி : 5 லட்சம்

- கலைஞர் : என்ன விற்கிறீர்கள்

- பேக்கரி முதலாளி : ப்ளாக் பாரஸ்ட் கேக்

- கலைஞர் : ஒரு கேக் எவ்வளவு

- பேக்கரி முதலாளி : 45 ரூபாய்

- கலைஞர் : இதை எப்படி அனைவரும் வாங்க முடியும். ஒரு பன் எவ்வளவு

- பேக்கரி முதலாளி : 5 ரூபாய்

- கலைஞர் : நீங்கள் இனி அதிகபட்சம் 50000 மட்டுமே கேக் விற்க முடியும். 4.5 லட்சத்திற்கு பன் தான் விற்க வேண்டும்

- பேக்கரி முதலாளி : சரி ஐயா


இது தான்
பொதுவுடமைக்கும், கலைஞரின் திராவிட பொருளாதாரத்திற்கும் வித்தியாசம்
பொதுவுடமையால் அந்த பேக்கரியில் வேலை செய்பவர்களால் கேக் சாப்பிட முடியாது
ஆனால்
கலைஞரின் திராவிட பொருளாதாரத்தால் அங்கு வேலை செய்பவர்களால் அவர்கள் செய்யும் பன்னை விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியும்
பணக்காரர்களே இருக்கக்கூடாது என்று சொன்னால் கம்மியுனிசம்..
ஏழைகளே இருக்கக்கூடாது என்று சொன்னால் திராவிடம்

ஒரு வேளை
பேக்கரி முதலாளி மறுக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்
அப்பொழுது என்ன நடக்கும்


ï மார்க்ஸ் : இப்படி எல்லாம் பிரிக்கக்கூடாது. அதை 20000+20000+20000+20000+20000 என்று பகிர வேண்டும்

ï பேக்கரி முதலாளி : முடியாது சார்

ï மார்க்ஸ் : இந்த பேக்கரியை அரசே நடத்தும்

ï அரசு நடத்தும். அங்கு வேலை செய்பவர்களுக்கு எல்லாம் 20000 தரும். ஆனால் அதை வைத்து யாராலும் 45 ரூபாய் கேக் வாங்க முடியாது. நாளடைவில் அந்த பேக்கரி இழுத்து மூடப்படும்


இது தான் ரஷ்யாவில் 1990களில் நடந்தது
வெனிசூலாவில் இன்று நடக்கிறது
இது தான் பொதுவுடமை தோல்வியடையும் இடம்
பொதுவுடமை தோற்கும் இடங்களில் கூட கலைஞரின் திராவிட பொருளாதாரம் வெற்றி பெருகிறது


ï கலைஞர் : நீங்கள் இனி அதிகபட்சம் 50000 மட்டுமே கேக் விற்க முடியும். 4.5 லட்சத்திற்கு பன் தான் விற்க வேண்டும்

ï பேக்கரி முதலாளி : முடியாது ஐயா

ï கலைஞர் : அரசு இனி பேக்கரி நடத்தும்,. இங்கு பன் மட்டும் விற்கப்படும்
எனவே அனைவருக்கும் பன் கிடைக்கும். யாரும் பட்டினியால் சாக மாட்டார்கள். பேக்கரி முதலாளி கேக் சாப்பிடுவார், அவர் செய்யும் கேக்கை சாப்பிடுவார். தொழிலாளி அரசு பேக்கரியுன் பன்னை சாப்பிடுவார்

ï நாளாவட்டத்தில், பேக்கரியில் கேக் வீனாகும். எனவே தனியார் பேக்கரி முதலாளி, கேக் அளவை குறைத்து விட்டு தேங்காய் பன் செய்வார்

ï எனவே 45 ரூபாய் ப்ளாக் பாரஸ்டும் கிடைக்கும், 15 ரூபாய் தேங்காய் பன்னும் கிடைக்கும் 5 ரூபாய் பன்னும் கிடைக்கும்

ï யாருக்கு என்ன வேண்டுமோ, அதை வாங்கிக்கொள்ளலாம்


இது தான் கலைஞரின் பொருளாதாரம்
பணக்காரர்களே இருக்கக்கூடாது என்று சொன்னால் கம்மியுனிசம்..
ஏழைகளே இருக்கக்கூடாது என்று சொன்னால் திராவிடம்

இதைத்தான் திமுக கல்வியில் செய்தது, மருத்துவத்தில் செய்தது, பேரூந்தில் செய்தது, உணவு விநியோகத்தில் செய்தது, மின்சாரத்தில் செய்தது. அனைத்து துறைகளிலும் செய்தது. நாம் ஒரு உதாரணத்தை இங்கு பார்ப்போம்

பேக்கரியில் ப்ளாக் பாரஸ்ட் கேக் செய்தால் அதை பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடலாம்
ஆனால்
பேக்கரியில் பன் செய்தால் அனைவரும் சாப்பிடலாம்

மருத்துவக்கல்லூரியில் நுழைவு தேர்வு மூலம் மாணவர்களை சேர்த்தால் அங்கு 1 லட்சம் செலவழித்து நுழைவு தேர்விற்கு செல்பவர்கள் மட்டுமே சேர முடியும்
மருத்துவக்கல்லூரியில் +2 மதிப்பெண் மூலம் மாணவர்களை சேர்த்தால் தகுதி திறமை இருக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு படிக்கலாம்
இது தான் திராவிட பொருளாதாரம்
இது தான் கலைஞரின் பொருளாதாரம்
கலைஞர் மார்க்ஸை மிஞ்சிய ஒரு பொருளாதார நிபுணர்


07.05.2021 அன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்றவுடன் தமிழக அரசின் நகர பேரூந்துகளில் (அதாவது நகரங்களுக்குள் செல்லும்,  நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் , கிராமங்களுக்கு இடையில் செல்லும் பேரூந்துகளில்) பெண்களுக்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த சட்டம் அரசு பேரூந்துகளுக்கு மட்டும் தான். தனியாரை அவர் நிர்பந்திக்கவில்லை. இரு நாட்கள் கழித்து ஒரு தனியார் நிறுவனம் ஆண்கள் பயன கட்டணம் ரூபாய் 10, மகளிர் பயன கட்டணம் ரூபாய் 2 மட்டும் என்ற  கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டது

Bus Ticket Cost Reduced


இது தான் கலைஞரின் திராவிட பொருளாதாரத்தின் வெற்றி. தனியார் நிறுவனத்தின் கட்டணத்தை குறைக்க சட்டம் இயற்றாமலேயே அதை சாதிப்பது தான் திராவிட பொருளாதாரம். நாம் மேலே பேக்கரி விஷயத்தில் கூறியது இங்கு நடைமுறைக்கு வருகிறது பாருங்கள்

ï கலைஞர் : அரசு இனி பேக்கரி நடத்தும்,. இங்கு பன் மட்டும் விற்கப்படும்
எனவே அனைவருக்கும் பன் கிடைக்கும். யாரும் பட்டினியால் சாக மாட்டார்கள். பேக்கரி முதலாளி கேக் சாப்பிடுவார், அவர் செய்யும் கேக்கை சாப்பிடுவார். தொழிலாளி அரசு பேக்கரியுன் பன்னை சாப்பிடுவார்

ï நாளாவட்டத்தில், பேக்கரியில் கேக் வீனாகும். எனவே தனியார் பேக்கரி முதலாளி, கேக் அளவை குறைத்து விட்டு தேங்காய் பன் செய்வார்

இது எப்படி நடந்தது ? ஒரு குடும்பத்தினர் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்றால்

இதற்கு முன்னர் கணவனுக்கு பேரூந்து கட்டணம் 10+10 = 20 ரூபாய். மனைவிக்கு பேரூந்து கட்டணம் 10+10=20 ரூபாய். மொத்தம் 40 ரூபாய்.

ஆனால் இன்று முதல் தனியார் பேருந்தில் சென்றால் 40 ரூபாய், அரசு பேரூந்தில் சென்றால் 20 ரூபாய் மட்டுமே. எனவே இந்த 20 ரூபாயை மிச்சப்படுத்த அவர்கள் அரசு பேரூந்தில் ஏறுவார்கள். தனியார் பேருந்து விலையை குறைப்பதன் மூலம் தனியார் பேரூந்தை பயன்படுத்தினால் கூட அவர்களின் செலவு 24 ரூபாய் தான். 20ஆ 40ஆ என்றால் 20 ரூபாயை விரும்பும் மக்கள் 20ஆ, 24ஆ என்றால் முதலில் வரும் பேரூந்தில் ஏறிவிடுவார்கள்.   எனவே மக்களுக்கு அனைத்து விதங்களிலும் இது லாபம்.



மக்களுக்கு லாபம், ஆனால் தனியார் பேருந்து முதலாளிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு நஷ்டம் என்று நீங்கள் கேட்கிறீர்களா ? கண்டிப்பாக இல்லை. அவர்களுக்கு லாபம் தான் ? எப்படி ?

கணவன் மனைவி இருவரும் பேரூந்தில் செல்வதற்கு ஆகும் பணத்தில் பெட்ரோல் போட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று விடலாம் என்று இவ்வளவு நாளும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கூட இனி “ஒரு டிக்கெட்தானே” என்று பேரூந்திற்கு மாறுவார்கள். எனவே பேரூந்தில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே தனியார் பேரூந்து நிறுவனங்கள் நிறைய வாடிக்கையாளர்களை பெறுவார்கள். அவர்களுக்கும் லாபமே


மக்களுக்கு லாபம், பேரூந்து நிறுவனங்களுக்கு லாபம், அரசிற்கு நஷ்டமா என்று கேட்கிறீர்களா ? இல்லை, இதனால் அரசிற்கும் லாபம் தான். எப்படி ?

1. பெண்கள் கல்வி கற்பது அதிகரிக்கும். பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரிக்கும். எனவே உள்நாட்டு ஒட்டுமொத்த‌உற்பத்தி (GDP) அதிகரிக்கும். இதனால் அரசிற்கு வருமானம் அதிகரிக்கும். இதனால் அரசிற்கு லாபமே

2. இரு சக்கரவாகனம், நான்கு சக்கரவாகன பயன்பாடு குறைந்து அனைவரும் பொது போக்குவரத்தை (Public Transport) பயன்படுத்துவதை அதிகரித்தால் நாட்டில் செலவாகும் பெட்ரோ, டீசலின் அளவு குறையும். இதனால் கச்சா எண்ணை வாங்குவது குறையும். இதனால் அரசிற்கு அந்நிய செலவானி மிச்சமாமும். அந்நிய செலவானி கையிருப்பு அதிகரிக்கும். ரூபாயின் மதிப்பு கூடும். இதனால் அரசிற்கு லாபமே

3. இரு சக்கர வாகன பயன்பாடு குறைவதன் மூலம் கழுத்து எலும்பு தேய்வது, இடுப்பு எலும்பு தேய்வது போன்ற பிரச்சனைகள் குறையும். இதனால் இந்த சிகிச்சைக்கு செலவிடப்படும் பணம் (மருந்து, ஸ்கேன், அறுவை சிகிச்சை) குறையும். இதனால் அரசிற்கு லாபமே 

4. இரு சக்கர வாகன பயன்பாடு குறைவதன் சாலை விபத்துக்கள் குறையும். உயிரிழப்புகள், கைகால் பிரச்சனைகள் குறையும் இதனால் இந்த சிகிச்சைக்கு செலவிடப்படும் பணம் (மருந்து, ஸ்கேன், அறுவை சிகிச்சை) குறையும். விபத்தினால் தனிநபர் எடுக்கும் விடுப்புகள் (Sickness absenteeism ) குறையும்.  நோயினால் ஏற்படும் இழப்பு (DALYs = Disability Adjusted Life Years) குறையும். மனித வளம் அதிகரிக்கும்.  உள்நாட்டு ஒட்டுமொத்த‌உற்பத்தி (GDP) அதிகரிக்கும். இதனால் அரசிற்கு வருமானம் அதிகரிக்கும். இதனால் அரசிற்கு லாபமே


எனவே இந்த அறிவிப்பானது வெறும் இலவசம் அல்ல. இது பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு வலிமை அளித்தல், பெண்கள் தன்மேம்பாடு பெறுதல், குடும்ப பொருளாதரம் உயர்தல், நோய் குறைதல், விபத்து குறைதல், உள்நாட்டு ஒட்டுமொத்த‌உற்பத்தி அதிகரிப்பு, அரசின் வருமானம் அதிகரிப்பு, அரசின் அந்நிய செலவானி அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு என்று அனைத்து விதங்களிலும் நாட்டை முன்னேற்றும் ஒரு அறிவிப்பு

முதலாளித்துவ ஜனநாயக வரையறைக்குள், சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வெகுமக்களை உள்ளடக்கி அவர்களை மீட்டெடுக்கும் சோசலிசத் தத்துவத்தின் பெயர்தான் திராவிடப் பொருளாதாரம். அந்த முறையைச் செயல்படுத்தி வெகு மக்களை உய்ய வைத்த பெரும் பொருளாதார மேதை எங்கள் கலைஞர். இதனால் தான் நாங்கள் கலைஞரை மார்க்ஸை மிஞ்சிய பொதுவுடமை பொருளாதார சித்தாந்தவாதி என்கிறோம்

திராவிட பொருளாதாரம் குறித்து அண்ணன் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களின் அறிமுக உரையை https://www.youtube.com/watch?v=LU41GCcHD90 என்ற இணைப்பிலும் இது குறித்து விரிவாக ஏகப்பட்ட தரவுகளுடன் தம்பி சூரியமூர்த்தி பேசிய உரையை https://www.youtube.com/watch?v=ac9pM-0KbeE என்ற இணைப்பிலும் காணலாம்


- சில்வர் ப்ளேஸ்

writersilverblaze@gmail.com

https://www.facebook.com/writer.silver.blaze

No comments:

Post a Comment