Friday 2 July 2021

நான் விரும்பும் தேர்தலுக்கு பிறகான திமுக - பிரபு கந்தசாமி

 நான் விரும்பும் தேர்தலுக்கு பிறகான திமுக - பிரபு கந்தசாமி



தமிழகத்தின் ஆகப்பெரும் தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் அடுத்த ஐந்து ஆடுகளுக்கு நம்மை ஆளப்போகிறவர் தெரிந்து விடும். உள்மனதில் திமுக தான் அடுத்த அரசாங்கத்தை அமைக்க போகிறது என்ற நம்பிக்கை இருந்தாலும், யார் வென்றாலும் நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டு தான் இருக்க போகிறது. இந்த 2021 தேர்தலின் ஒரு சிறப்பு என்னவென்றால், தவறோ சரியோ பெரும்பாலான மக்கள் அரசியல் பேசினார்கள், கழகங்கள் கொடுத்த வாக்குறுதிகளை பற்றி பேசினார்கள், முன்னர் இருந்த ஆட்சிகளில் இருந்த குறைகளை பற்றி அலசினார்கள், மற்ற கட்சி தலைவர்களின் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்தார்கள், எந்த ஆட்சி வந்தால் தமிழர் நலன் காக்கப்படும் என்பதை குடும்பத்தோடு ஆலோசனை செய்தார்கள், முகநூலில்,ட்விட்டரில் பேசினார்கள், சண்டையும் போட்டார்கள். இது நாம் நல்ல வழியில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதற்கான சாட்சி. நல்லதோ, கெட்டதோ மொத்தத்தில் அரசியல் பேசினார்கள். 


நம் எல்லோர் மனதிலும் ஒரு ஆசை இருக்கும், நாம் ஆதரிக்கும் கட்சி இப்படி தான் இருக்க வேண்டுமென்று. முன்பொரு பதிவில் சொன்ன மாதிரி, நான் ஆதரித்து முகநூலிலும், ட்விட்டரிலும் களமாடிய திமுக ஒன்றும் ஆக சிறந்த கட்சி கிடையாது. திமுகவிலும் தவறுகள் நடக்கின்றன, ஆனால் அதை சுட்டி காட்டியவுடன், அதை திருத்திக்கொள்ள சிறிதேனும் அவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் அல்லவா, அது தான் ஆக்கபூர்வமான அரசியல். தலைவர் ஸ்டாலினும் தன்னுடைய உறுதிமொழிகளில், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், முக்கியமாக "யாராக இருந்தாலும்" தண்டிக்கப்படுவார்கள் என்று அழுத்தி சொல்லி இருக்கிறார். தவறுகள் தண்டிக்கப்படும் என்றே நான் நம்புகிறேன். இதையும் மீறி இப்படி லாம் செய்தால்/இருந்தால் நல்லா இருக்கும் என்று நாம் நினைப்போம் அல்லவா, அப்படியான ஒரு தொகுப்பு தான் இது.


திமுக என்றால் எனக்கு உடனே நியாபகம் வருவது, இயக்க அரசியல். ஒரு இயக்கமாய் அவர்கள் ஆரம்ப களங்களில் நடத்திய போராட்டங்கள், பகுதிக்குப்பகுதி நடத்திய தெருமுனை கூட்டங்கள், திராவிடம் என்றால் என்ன என்றும், நாம் எதற்காக போராடுகிறோம் என்றும் ஒரு தெளிவான பார்வை கொண்ட வலுவான அடித்தளம் கொண்ட ஒரு கட்சி. 


ஆரம்பித்து 75 வருடங்களை தொடப் போகும், வைர விழா கொண்டாட போகும் ஒரு கழகம், கட்சி அதன் வலுவான அடித்தளத்தில், சிறப்பான இயக்க அரசியலில் சிறிது பலவீனப்பட்டு உள்ளதாகவே நான் கருதுகிறேன். 90 களின் இறுதிகளில் நான் சிறுவனாக இருக்கும் போது, நன்றாக நியாபகம் இருக்கிறது. அப்பா திமுக வில் ஒரு பொறுப்பில் இருந்ததோடு, மாதம் ஒருமுறை திமுக மற்றும் திராவிடம் சார்ந்த கூட்டங்களுக்கு சென்று , திமுக வை எப்படி பலப்படுத்த வேண்டும், திராவிடம் கொள்கைகளை எவ்வாறு பரப்ப வேண்டுமென்று பேசிவிட்டு வருவார். இப்போதும் திமுகவில் அப்படி நடந்து கொண்டு இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறுவேன். இயக்க அரசியல், தேர்தல் அரசியலாக மாறி, தேர்தல் நடக்கும்போது மட்டுமே விழித்துக்கொள்கிறது. திராவிடம் சார்ந்த கூட்டங்கள் நடக்கிறது, ஆனால் மேல்மட்ட அளவில். நகரத்தில் எங்கோ ஒரு மூலையில், கிராமத்தின் ஒரு பகுதியில் இருக்கும் இளைஞர்களை சென்றடைய வேண்டுமென்றால் மீண்டும் அந்த இயக்க அரசியலலை வலுவாக தூக்கிப்பிடித்தாக வேண்டும்.


இது ஒரு டிஜிட்டல் யுகம். உண்மைகளை விட வேகமாக பொய்கள் பரவும் ஒரு அசுர வளர்ச்சி கொண்ட யுகம். அதுவும் திமுக என்றால் சொல்லவே வேண்டாம். கழகங்களை தமிழகத்தில் இருந்து அழித்துவிட துடிக்கும் பாசிச சக்திகள் பொய் செய்திகள், பரப்புரைகள் என்று வேகமாக இயங்கி கொண்டு இருக்கின்றன. அதை முறியடிக்க வேண்டுமென்றால், திராவிடம் பற்றிய தெளிவான புரிதலை, அதன் கொள்கைகளை, கழகங்களால் தமிழகம் அடைந்த பலன்களை, பெற்ற உயரங்களை உரக்க கூற வேண்டும். இதற்கான கூட்டங்கள் பகுதி தோறும் நடக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்களை சென்றடைய வேண்டும். 


திமுக வின் மீதான அவதூறுகளுக்கு பதிலளிக்க பல பதில்கள் அரசு கோப்புகளாகவும், நீதிமன்ற உத்தரவுகளாகவும், இணைய செய்திகளாகவும் கொட்டி கிடக்கின்றன. எப்போதும் தலைவர் ஸ்டாலினோ, ஆ. ராசாவோ, திருச்சி சிவாவோ ஏனைய பிற தலைவர்களோ உக்கார்ந்து மறுப்போ, விளக்கமோ கொடுத்துக்கொண்டு இருக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு, மக்கள் பணியாற்ற ஆயிரம் வேலைகள் இருக்கும். இரண்டாம், மூன்றாம் கட்ட பேச்சாளர்களை கழகங்கள் உறுதியாக உருவாக்க வேண்டும். அவர்களை பகுதி தோறும் அனுப்பி, தெருமுனை கூட்டம், திண்ணை கூட்டங்கள் நடத்த வழிவகை செய்ய வேண்டும். 


இளைஞர் அணி, மாணவரணி, தொ.மு.ச அணிகளை இன்னும் பலப்படுத்த வேண்டும். திமுக நடத்திய பொய்ப்பெட்டி நிகழ்ச்சியை நகரங்கள் தோறும் விரிவுப்படுத்தவேண்டும்.  இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்து, அவர்களை பேச/செயலாற்ற அழைக்க வேண்டும். இளைஞர் பாசறைகளின் பணிகளை அதிகப்படுத்தவேண்டும். 


பெண்கள் அரசியல் பேசுவதை வரவேற்க வேண்டும். பெண்கள் பலர் பேச்சளர்களாய் உருவாகுவதை ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் அவர்களை முதன்மைப்படுத்தப்பட வேண்டும் 


டிஜிட்டல் யுகத்தில் சாதி அழிந்துவிடுமா என்று பார்த்தால், இன்னும் வேகமாக வாட்சப், முகநூல் என்று ஒருங்கிணைந்து வேகமாக வலுப்பெற்று வருகிறது. சாதியின் படிநிலைகளை ஒழிக்க இன்னும் வேகமாக பணியாற்ற திமுக தன் உடன்பிறப்புகளை தயார்படுத்த வேண்டும். சாதிக்கெதிராக நிகழும் எந்தவொரு நிகழ்வுக்கும் முதல் ஆதரவு திமுகவிடம் இருந்து வர வேண்டும், அடுக்குமுறைகள்/அட்டூழியங்கள் எங்கு நிகழ்ந்தாலும் முதல் குரல் திமுகவின் குரலாக இருக்க வேண்டும். அடுக்குமுறைகள்/அட்டூழியங்கள் நிகழ்த்தியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைகள் கிடைக்கும் வரை போராட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பக்கம் நிற்க வேண்டும். 


தகவல் தொழில்நுட்ப அணி சாராமல் வலைத்தளங்களில் இயங்கும் பிற திமுக தொண்டர்களின் குரல்கள், கோரிக்கைகள் தலைமையால் கேட்கப்பட வேண்டும். அவர்களை கொண்ட மாபெரும் சந்திப்பு ஒன்றும் நடத்தப்பட வேண்டும். 


ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் கேள்விகள் வரும் இடம் சமூக நீதியும், இடஒதுக்கீடும். இந்த இரண்டு குறித்த புரிதல்கள் எல்லோரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். சமூக நீதிக்காக, இடஒதுக்கீடுக்காக திமுக செய்தவற்றை, போராடியவற்றை தெளிவாக ஒவ்வொரு தொண்டரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த இரண்டும் தெரியாதவர், புரியாதவர் கேள்வி கேட்கும் போது, தெளிவான பதில்கள் அனைவரிடம் சென்றடையும் என்பதை திமுக உறுதிப்படுத்த வேண்டும்


மொத்தத்தில், அண்ணா காலத்திய, கலைஞர் காலத்திய பொறுப்புகள் கொண்ட ஒரு இயக்கமாகவும், ஸ்டாலின் காலத்திய வேகம் கொண்ட ஒரு இயக்கமாகவும் திமுக வளர வேண்டும். பாசிச சக்திகள், பிரித்தாளும் சக்திகள், இளைஞர்களின் மூளைகளை மழுங்க செய்து அவர்களை பைத்தியமாக்கும் சக்திகளிடம் இருந்தும், தமிழகத்தை காப்பாற்றி வலுவான கட்டமைப்பை மறுபடியும் உருவாக்க வேண்டும். 


கலைஞரின் உடன்பிறப்பு,

-பிரபு கந்தசாமி


No comments:

Post a Comment