Friday 2 July 2021

அரசியல் மாற்றமும் தீர்வுகளும் - இரவி செல்வராஜ்

 அரசியல் மாற்றமும் தீர்வுகளும் - இரவி செல்வராஜ்


“நான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் என்ன” என்பதைப் பற்றிக் கூறுவதற்கு முன், ஏன் அந்த அரசியல் மாற்றம் தேவை என்பதற்கான முன் விளக்கம் அவசியமாகும். அதன்படி..

இந்துத்துவம் என்னும் பாசிச எண்ணம்

2014-ஆம் ஆண்டு முதல் இந்திய ஒன்றிய அரசைப் பாரதிய ஜனதா கட்சி ஆளத்துவங்கிய பின்னர், முழுநாடும் மெல்ல மெல்ல பாசிசத்தின் கைகளுக்குச் செல்லத் துவங்கியது. நூறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். என்ற இந்துத்துவம் என்னும் பாசிச எண்ணத்தையே தன் கொள்கையாக வைத்திருக்கும் அடிப்படை மதவாத அமைப்பின் அரசியல் பிரிவாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளும், செயல்பாடுகளும் முற்றிலும் ஆர்.எஸ்.எஸ். என்ற அந்தப் பாசிச அமைப்பின் ஆணைகளை நிறைவேற்றுவதற்கானதாகவே அமைந்துள்ளது.

ஒரு நூற்றாண்டுத் திட்டம்

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியா எனும் நாடு உருவாவதற்கு முன்னிருந்த அனைத்து மன்னர்களையும் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொண்டும், சில பெருநிலங்களைத் தங்கள் சுய ஆளுகைக்குக் கீழும் வைத்திருந்த பிராமணியம், ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் சற்று அடங்கியிருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் வெளியேற்றம் அவர்களுக்குப் பெரும் சாதகமானது. ஆனால் சுதந்திரத்துக்கு முன் உருவான தென்னிந்தியாவில் உருவான சமூகநீதி இயக்கமும், மகாராஷ்டிரத்தில் உருவான அம்பேத்கர் என்ற பேரியக்கமும் அவர்களது எண்ணங்களுக்குப் பெரும் தடையாயிருந்தது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து திட்டங்களை இயற்றிக் கொண்டேயிருந்தனர். இப்பொழுது அவர்கள் அடைந்திருக்கும் ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரம் என்பது நூறாண்டுகளாக அவர்களது திட்டமாக இருந்திருக்கின்றது. இவர்களது எண்ணம் என்பது எப்பொழுதும், இந்திய ஒன்றியத்திலுள்ள பெரும்பான்மை மக்களை வறுமையிலும், கல்வியறிவற்றும், நிலமற்றும், சாதி-மதப் பேதத்துடன் முட்டாள்களாகவே வைத்துக் கொள்வதும், அவர்களில் பெரும்பாலானவர்களைப் பல்வேறு காலங்களில், வெவ்வேறு காரணங்களை உருவாக்கி கூட்டுக்கொலை செய்வது மட்டுமே. அதற்காக இவர்கள் எதையும் செய்வார்கள். இவர்களுக்கு எதிராகச் சாதி-மதமாக உடைந்து கிடக்கும் மக்கள் மற்றும் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் போராடினால் மட்டுமே இவர்களை அல்லது இவர்களது பாசிச எண்ணம் கொண்ட அதிகாரத்தைத் தகர்த்து முழு ஒன்றியத்தையுமே காக்க முடியும்.

உயர்-சாதியினர் என்ற கற்பனை அதிகாரம்

அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உயர்சாதியினர் என்று தங்களைத் தாங்களே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அழைத்துக் கொள்ளும், குறிப்பிட்ட தங்கள் பிரிவினருக்கு மட்டுமே எல்லாத் துறைகளிலும் முன்னுரிமை அளிப்பதேயாகும், அவர்கள் உயர்சாதியினர் என்ற கருத்தை மெய்ப்பிக்க, குறிப்பிட்ட பெரும்பான்மை மற்றும் தனித்தன்மை வாய்ந்த தனித்தனி பழக்க-வழக்கங்களையும், தொழில்களையும் கொண்டிருந்தவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக உருவாக்கி, ஒவ்வொரு தனித்தனி மக்கள் திரளையும், நான்கு வர்ணத்தவர் என்பதாகப் பிரித்து, அது போதாமல் அந்த நான்கு வர்ணத்திலுள்ளவர்களை மேலும் பற்பல சாதிப் பிரிவுகளாகப் பிரித்து, அதில் சில பிரிவுகள் தவிர்த்துப் பெரும்பான்மைப் பிரிவினருக்குச் சாதிப் பெருமிதத்தை உருவாக்கி.. இப்படித்தான் உலகில் வேறெங்கும் இல்லாத சாதிப்பிரிவுகளை இங்கு உருவாக்கினார்கள். ஆனால் எந்தச் சாதி-மத மோதல்களிலும், கலவரங்களிலும் அந்த உயர்சாதியினர் என்பவர் இருக்கவே மாட்டார்கள். எல்லாக் கலவரங்களையும் அனைத்து ஊடகங்கள் மூலமும் பின்னிருந்து மட்டுமே இயக்குவார்கள். கலவரங்களில் ஈடுபட மாட்டார்கள்.. அடிபட மாட்டார்கள், கொல்லப்பட மாட்டார்கள்.ஆனால் அனைத்துப் பிரச்சினைகள் மற்றும் கலவரங்களுக்கான தூண்டுதலாக மட்டுமே இருப்பார்கள்..அவர்களது தீய எண்ணம் புரியாத இந்தச் சாதி-மதப்பெருமிதமடையும் முட்டாள்கள் அடித்துக் கொண்டு சாவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள்..

இந்திய ஒன்றியமும்-திராவிடமும்

அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரமடைந்து நால்வர்ணம் கோலோச்சி கொண்டிருந்த நிலையில் நாடு ஒப்படைக்கப்பட்டது. அனைவரும் சுதந்திர நாள் கொண்டாட்டத்திலிருந்த பொழுது, பெரியார் என்ற தமிழ்நாட்டு மனிதர் ஒருவர் மட்டுமே இது முழுச் சுதந்திரமல்ல..இது ஒரு கறுப்பு நாள் என்றார். அந்த வார்த்தைக்காக, சில பிரிவுகளையும் சந்தித்தார். நாடு சுதந்திரமடைந்தது. அப்பொழுது இருந்த அத்தனை அரசியல் கட்சிகளின் பெரும்பான்மைப் பொறுப்புக்களிலும், அந்த உயர்சாதியினரே இருந்தனர். தேர்தல்கள் நடந்தன. ஆட்சிகள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த நால்வர்ணத்தின் அடிப்படையில், சாதி-மதப் பிரிவுகளும் தொடர்ந்தன. ஆங்காங்கு கலவரங்கள் உண்டாக்கப்பட்டு, சாதி-மதத்தின் இருப்புத் தக்கவைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது.

இடஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உருவான சமூகநீதிக் கட்சி மற்றும் அதன் தொடர்ச்சியான பெரியாரின் திராவிட இயக்கம் அதன் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை இந்திய அரசியலமைப்பை முழுதும் அறிந்திருந்ததால், இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தகுந்த இடங்களை நிரப்பி, அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. தமிழ்நாட்டின் கல்விநிலை உயர்ந்தது, தொழில்வளம் பெருகியது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், பொதுத்துறை நிறுவனங்கள் அதிகரிக்கப்பட்டு அனைத்து மக்களுக்குமான தேவைகள் சிறப்பாகப் பூர்த்திச் செய்யப்பட்டது.சுயாட்சி மீதான தாக்குதல்

1960-களுக்குப் பிறகான “மத்திய அரசு” எனப்படும், ஒன்றிய அரசால், மாநில சுயாட்சி மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது. மாநிலங்கள் என்ற ஒன்றியங்களின் தொகுப்பே ஒன்றிய அரசு. பாராளுமன்றத்தைத் தவிர, அதற்கென்று ஒரு நிலமோ, ஆதாரமோ இல்லை. பாராளுமன்றத்தின் உறுப்பினர்களே ஒன்றியத்தின் மாநிலங்களின் பிரதிநிதிகளாகவே உள்ளனர். ஆனால் பெரும்பான்மை இருப்பதாலேயே ஒன்றிய அரசு என்பது எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பாசிச எண்ணத்தைத் தன்னியல்பாகவே பெற்றுள்ளது. மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரியத் தனித்தன்மைகளை ஒற்றை மொழி ஹிந்தி என்ற மொழியாதிக்கத்தின் மூலம் தகர்க்க ஒன்றிய அரசு திட்டமிட்டது. சில வடமாநிலங்களில் அது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு, சில மாநில மொழிகள் அழிந்து அவை, ஹிந்தி மாநிலங்களாயின. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம் 1967-ல் தி.மு.க.சார்பில் முதல்வரான அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கை. அக்கொள்கையை உடைத்துத் தமிழ்நாட்டில் ஹிந்தி தன் ஆதிக்கத்தைச் செலுத்த முடியவில்லை. அதனால் கடந்த நான்காண்டுகளாக அ.தி.மு.க. என்னும் அடிமை ஆட்சியைக் கையில் வைத்துக் கொண்டு ஒன்றிய பாசிச பா.ஜ.க.அரசு நடத்தும் மொழித்தாக்குதல் எண்ணற்றது.

கல்வியை நாசமாக்குதல்

முதலில் ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ன் பாசிசக் கருத்தியல் கொண்டவர்களைத் துணைவேந்தர்களாக நியமித்து, பல்கலைக்கழகங்களின் பெயர் மற்றும் தரத்தினை ஒன்றுமில்லாமல் ஆக்குவது, மாணாக்கர்களின் கல்வி நிலையைக் குழப்பத்துக்குள்ளாக்குவது, இடஒதுக்கீட்டு அடிப்படைகளைப் பின்பற்றாமல் தங்கள் போக்கில் இடங்களை நிரப்புவது, பல்கலைக்கழக நிதி ஆதாரங்களைக் கொள்ளை அடிப்பது எனத் தமிழ்நாட்டின் உயர்கல்வியை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பள்ளிக்கல்வியிலும், துவக்கக் கல்வி மற்றும் நடுநிலைக்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு அரசுத்தேர்வு என்ற சுமையை ஏற்றி கல்வி கற்கும் பெரும்பான்மை மாணாக்கர்களின் கல்வியை அழிக்கும் வேலையைத் துவங்கியுள்ளார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களை அழித்தல்

ஒன்றிய அரசின் அனைத்து மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க ஒன்றிய அரசு, மாநிலங்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்ட (மக்களின் வரிப்பணத்தில்) பொதுத்துறை நிறுவனங்களைத் தங்கள் தேர்தல் வெற்றிக்காகப் பொருளுதவி செய்தார்கள் என்ற காரணத்துக்காகப் பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் ஒரு மோசமான மக்கள் விரோத செயலை மோடி பிரதமராக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வருகின்றது. ஏற்கனவே பெருநிறுவனங்களுக்குப் பல்லாயிரம் கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்து வங்கிகளின் பொருளாதாரச் சுழற்சியை நாசம் செய்து விட்டு, இப்பொழுது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் பெருநிறுவனங்களுக்கு விற்கும் மோசடி செயலைச் செய்து வருகின்றது.

புதிய வேளாண் சட்டம் என்னும் மோசடி

இது போதாதென்று இந்திய ஒன்றியத்திலிருக்கும் கோடிக்கணக்கான விவசாய நிலங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்க புதிய வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளை அழிக்கும் வேலையையும் துவங்கியிருக்கிறார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் நான்கு மாதங்களாக டெல்லியில் பனியிலும், வெயிலிலும் போராடி வருகிறார்கள். இதுவரை இந்தப் போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். அதாவது ஒட்டுமொத்த மக்களின் தினசரித் தேவையான உணவையும், அது விளையும் நிலங்களையும் தனியாருக்கு சட்டப்படி விற்று விட்டால் பட்டினிச் சாவுகளை உருவாக்கி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்து விட்டு, நாட்டின் அனைத்து வளங்களையும் ஒரு 10% மக்கள் மட்டுமே ஆண்டு அனுபவிக்கலாம் என்ற இவர்களது கொடிய எண்ணம் மெல்ல மெல்ல வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு நாட்டையே நிர்மூலமாக்கும் தீய எண்ணம் இவர்களது பேரழிவில் மட்டுமே நாட்டிற்கான சுதந்திரம் இருக்கின்றது.

விமானப் போக்குவரத்தும் துறைமுகங்களும்

அடுத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களையும் தனியாருக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இவ்வாறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தனியார் கட்டுப்பாட்டுக்குச் சென்றால் நாட்டின் கட்டுப்பாடு தனியாருக்குச் சென்று விட்டதென்றே அர்த்தமாகும். பாசிச ஆட்சியாளர்கள் துறைமுகங்கள் மற்றும் விமானங்கள் மூலம் இந்திய ஒன்றியத்திலிருந்து எந்த வளத்தையும் மற்றும் எந்த மனிதரையும் கடத்திக் காணாமல் ஆக்கலாம். மேலும், எந்தச் சட்டவிரோதப் பொருட்களையும், நபர்களையும் இந்திய ஒன்றியத்துக்குள் கொண்டு வரலாம். இது உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அபாயமாகும். ஏற்கனவே ஒரு மோட்டார் தொழிலதிபர் (இவர் சில கோயில்களில் அறங்காவலர் குழுத் தலைவர் வேறு) தங்கள் ஏற்றுமதி கண்டெய்னர்கள் மூலம் நூற்றுக்கணக்கான கோயில் சிலைகளைக் கடத்தியிருக்கிறார் என்று வழக்கு உள்ளது. விமானப் போக்குவரத்தும், துறைமுகப் போக்குவரத்தும் அரசின் கையில் இருக்கும் பொழுதே இவ்வளவு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் இவர்கள், அவை தனியாருக்குச் சென்று விட்டால், நாட்டின் மக்களை முழுதும் ஒழித்துக்கட்டிக் குறிப்பிட்ட உயர்சாதியினர் மற்றும் அவர்களுக்குக் கட்டுப்பட்டிருக்கும் நபர்கள் மட்டுமே நாட்டில் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவார்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.


சர்வாதிகார ஆட்சி நோக்கி

இதன் மூலம் ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி இந்திய ஒன்றியத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்க அல்லது வழக்குத் தொடுக்க இருக்கும் நீதி அமைப்புகள் அனைத்தையும் தங்கள் ஏவலாட்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். சில மேல்முறையீட்டு அமைப்புக்களைக் கலைத்திருக்கிறார்கள். இது தொடர்ந்தால் இந்திய ஒன்றியம் மிகப்பெரிய புரட்சி செய்து தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதற்கு முன் உள்ள இறுதி வாய்ப்பாகவே சமீபத்தில் நடந்து முடிந்த மற்றும் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கும் இத்தேர்தல் இருக்கின்றது.

நான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம்

இத்தலைப்புக்கு வருவதற்கே நான்கு பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறதெனில், ஒரு மக்களாட்சி எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு நீண்ட போராட்டம் நிறைந்த ஆண்டுகளைக் கடக்க வேண்டியிருக்கும்.

மதச்சார்பற்ற கூட்டமைப்பு

இத்தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், அதற்கடுத்த முதல் நகர்வாகப் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறைசார் நிபுணர்கள், சட்ட நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் மதச்சார்பற்ற கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்று கூடி மாநில சுயாட்சி அதிகாரங்களைத் தீர்மானங்களாகத் தொகுத்து அனைவரும் தத்தமது மாநில சட்டமன்றத்தில் அத்தீர்மானங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றி பெரும்பான்மை மக்களின் எண்ணமாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அதற்கான ஒப்புதலையும் உடனடியாகப் பெற்று அவற்றை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் சட்டமாக்க வேண்டும். இந்த மக்கள் ஆதரவு சட்டங்களை எதிர்ப்பவர்களை நாடு முழுவதும் அம்பலப்படுத்தி அவர்களின் ஆதிக்க அரசியலைப் பலவீனப்படுத்த வேண்டும்.

மாநில சுயாட்சித் தீர்மானங்கள்

தீர்மானங்களில் இதுவரை பா.ஜ.க நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான சட்டங்களை அரசியலமைப்பின் அடிப்படையில் எதிர்த்துத் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநிலங்களின் சுய உரிமையான கல்வி, மின்சாரம், விவசாயம், துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, வணிக வரி, மாநிலக் கூட்டுறவு வங்கிகள், மருத்துவம், பொதுவிநியோகத்திட்டம் ஆகியவை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டு அவை அரசு பொதுத்துறை நிறுவனங்களாகவே தொடர வேண்டும். ஏற்கனவே மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளின் பாதுகாப்பை உறுதி செய்து தேவையான ஆணையங்கள் அமைத்து அத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்பை அதிகரித்து அவற்றின் அடிப்படைக் கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மாநிலப் பொருளாதாரக் கட்டமைப்பு

மாநில அரசுகளுக்கான அடிப்படை மற்றும் பெரும் பொருளாதார மூலங்களான அரசுத் துறைகளில் நிலவும் ஊழல்களை ஒழித்து மாநிலப் பொருளாதாரக் கட்டமைப்பை ஒவ்வொரு மாநிலமும் மீளுருவாக்கம் செய்ய வேண்டும். அடுத்தப் பத்தாண்டுகளில் அனைவருக்குமான வளர்ச்சி என்பது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தகுந்த இடஒதுக்கீடுகள் அடிப்படையில் நிரப்பப்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும். இடஒதுக்கீட்டுக்கு எதிராகச் சட்டவிரோதமாக நிரப்பப்பட்டுள்ள அரசு பதவிகளில் உள்ளவர்கள் தயவு தாட்சண்யமின்றி நீக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் அல்லது அவர்களுக்குரிய ஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுதல் வேண்டும்.

பெருநிறுவனங்களுக்கான சட்டங்கள்

ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டத்துக்குரிய நாட்களாக வர உள்ளதால் மதச்சார்பற்ற மாநிலக் கூட்டமைப்பு என்பது அடுத்தப் பாராளுமன்றத் தேர்தலில் பாசிச சக்திகளை முழுவதும் துடைத்தெறியும் வகையில் தங்கள் கூட்டணியை அமைக்க வேண்டும். அதற்கு முன் ஒவ்வொரு மதச்சார்பற்ற கட்சியிலும் உள்ள மக்கள் விரோத பாசிச எண்ணம் கொண்ட தலைவர்களோ உறுப்பினர்களோ களையெடுக்கப்பட வேண்டும். அதற்கு முதலில் அவர்களுக்கு உதவி வரும் பெரு நிறுவனங்களுக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, அவர்களை அரசியல் அதிகாரத்திலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும். ஏனெனில் பெருநிறுவனங்களுக்கான நிலத்தையும், மின்சாரத்தையும் மற்றும் பிற வசதிகளையும் அனுமதிகளையும் வழங்குவது மாநில அரசுதானே தவிர வேறு யாருமல்ல. எந்த மாநிலத்தில் தொழில் செய்கிறார்களோ அந்த மாநிலத்தின் சட்ட திட்டங்களைப் பெருநிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தொழில் நிறுவனங்கள் கட்டுப்படுத்துவது நாட்டிற்கு நல்லதல்ல. அதற்கு எந்தத் தலைவர்களும் துணை போகக்கூடாது.

அரசு பொது நிறுவனங்கள்

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில அரசும் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத் தலைமை அலுவலகங்களுடன் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றக் கிளை அலுவலகங்களுடனும், பரவலாக அரசு நிறுவனங்களை உருவாக்க வேண்டும். தனியார் பெருநிறுவனங்கள் அரசிடம் தான் அனுமதி பெற்றுத் தொழில் நடத்துகிறார்கள். அதற்காக அரசின் துறைகளையே அவர்களிடம் ஒப்படைப்பது போன்ற முட்டாள்தனத்திலிருந்து விடுபட மாநில சுயாட்சி உரிமைகள் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் வேலை

ஒரு ஒன்றிய அரசின் வேலை, ஒன்றியத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களைச் சரியாக நிர்வகித்து, வரி செலுத்துபவர்களின் பணத்தைச் சரியாக மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கி நிர்வகித்து, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, அனைவரும் சம உரிமை மற்றும் சமத்துவத்துடன் வாழ்வதற்கான சேவை தானே தவிர, மக்களுக்கு வழங்கப்படும் பொதுத்துறை சேவைகளை இலாப-நஷ்டம் பார்க்கும் தொழிலாக நினைத்துக்கொண்டு “ஒரு அரசின் வேலை தொழில் செய்வதல்ல” என்பது போன்ற முட்டாள்தனமான கருத்தைக் கூறுவதோ, நாட்டின் வளங்கள் மற்றும் பொருளாதாரத்தைத் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதோ கிடையாது.

அமைச்சர்களும் துறைசார் நிபுணர் குழுவும்

ஒவ்வொரு மதச்சார்பற்ற மாநில அரசும், சரியான திட்டமிடும் நிபுணர் குழுவைக் கண்டறிந்து, அவர்களும் அனைத்துத் துறை அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தி, மாநிலத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கும் அரசுகளாகத் திகழவேண்டும் என்பதே அனைத்து மக்களின் எண்ணமாக இருக்கின்றது.


-இரவி செல்வராஜ்

(16.04.2021)

No comments:

Post a Comment