Saturday 31 July 2021

கொள்கை உறுதியாலே எனக்கும்‌ அவர்‌ தலைவர்‌! - பேராசிரியர் க.அன்பழகன்

 கொள்கை உறுதியாலே எனக்கும் அவர் தலைவர்! - பேராசிரியர் க.அன்பழகன்


ழகத்தின் தலைவராக உள்ள கலைஞர் அவர்களை வாழ்த்துகிற போது, தேர்தலிலே கழகம் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், நாலரைக் கோடி தமிழ் மக்களை வாழ்த்துவதாக நான் உணர்கிறேன்‌.

தமிழ் இனத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு உயர்ந்திருக்கிற கலைஞரை வாழ்த்துகிறபோது, உலகமெல்லாம் வாழ்கிற தமிழ் மக்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக உணருகிறேன். தமிழ்க் கலை - இலக்கியச் செல்வராக விளங்குகிற கலைஞரை வாழ்த்துகிறபோது, தமிழ்த்தாயை வாழ்த்துவதாக நான் உணருகிறேன்‌.


கலைஞரை வாழ்த்தும்போது, நம்மை நாமே வாழ்த்திக் கொள்கிறோம் என்ற உணர்வு நமக்குப் பிறக்கிறது. தமிழன் தமிழனை வாழ்த்துவது என்பது சில நேரத்திலே வியப்பான காரியம்‌.தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கிடையிலே ஒருவரை ஒருவர் போற்றுவது என்பதும், உடன்பட்டு நிற்பது என்பதும், ஒற்றுமையைக் காப்பது என்பதும் தமிழக வரலாற்றிலே பல நேரங்களில் சோதனைக்காளான ஒன்று.


காலங்காலமாகத் தமிழன் நிலை!


மூவேந்தர் ஆண்ட காலத்திலேயும் சரி, கம்பன் காவியம் இயற்றிய சோழர் காலத்திலேயும் சரி, பாரதியாரும் பாரதிதாசனும் வாழ்ந்த காலத்திலேயும் சரி, தந்த பெரியாரின் தலைமை தமிழகத்துக்குக் கிடைத்த காலத்திலேயும் சரி, பேரறிஞர் அண்ணா அவர்களின் பேரறிவாற்றல் தமிழ் மக்களிடையே ஒளிவிட்ட காலத்திலேயும் சரி, தமிழ் மக்களால் இனவுணர்வு கொண்டவர்களாக ஒன்று பட்டு நிற்க முடியவில்லை.


தமிழர்களைப் பற்றிப் பெருமையாகச் சொல்கிறபோது“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு; என்று நாமக்கல் கவிஞர் பாடினார். அந்தத் தமிழனுக்குள்ள தனியான குணம், மிகப் பெருந்தன்மை வாய்ந்த ஒரு குணம் உலகத்தாரெல்லாம் பாராட்டத்தக்க குணம், உலகத்தாரையெல்லாம் மதிக்கிற பண்பு கொண்டவன் தமிழன் என்பதாம். உலகத்தாரையெல்லாம் மதித்து, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று போற்றுபவன் தமிழன் ‌. எல்லோரும் ஒரு குலம், எல்லாரும் இந்நாட்டு மக்கள்" என்று பாடுவான் தமிழன். ஆனால், தான் யார் என்பதைத்தான் மறந்து

விடுவான்‌.


இன உணர்வு ஊட்டுவோம்!


எனவே, தன்னை மறந்து விடுகிற இனத்துக்கு, அவர்களுடைய இனத்தைப்பற்றி நினைவூட்டுகிற பொறுப்பை, கடமையைக் கலைஞர் அவர்களும் எங்களைப் போன்றர்களும் எங்கள் உயிருள்ளவரை நிறைவேற்றிக் கொண்டிருப்போம்‌.


அதற்கிடையிலே வெற்றி வரலாம் விருந்து சாப்பிடுவதைப் போல! தோல்வி வரலாம்! அதுவும் கஞ்சி சாப்பிடுவதைப் போலத் தானே தவிர, இலட்சியத்தைக் கைவிட வேண்டியது இல்லை. வெற்றி தோல்வி என்பது வாக்கு எண்ணிக்கைகளினாலே கிடைப்பதுதானே தவிர, வெற்றிகளும் மாறா வெற்றிகள் அல்ல, தோல்விகளும் நிலைத்துவிட்ட தோல்விகள் அல்ல. அரசியல் வரலாற்றையும், விளைவுகளையும் உணர்ந்தவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா அவர்கள் இடத்திலேயோ தந்தை பெரியாரிடத்திலேயோ பழகியவர்களுக்கும் இந்த உண்மை தெரியும். பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்வில் வெற்றியும் இருந்தது; அதற்காகப் பெருமிதப்பட்டு விடவில்லை. தோல்வியும் இருந்தது; அதனால் துவண்டு போனதுமில்லை.

இப்படிப்பட்ட உணர்வுபடைத்த தலைவர்கள் வழிவந்த நமக்கு அந்த மரபைப் போற்றுகிற உணர்வும், உறுதியும் இருக்குமானால், உங்களிடத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புவேன்; வெற்றிப்பெற்றவரை வாழ்த்துகிறோம் மரபுக்காக. தோல்வி பெற்றதனால் நமது கடமைப் பாதையிலிருந்து விலகித் திசை மாறி விட மாட்டோம். வெற்றி பெற்றவர்கள் இதனை    உணர்ந்துக்கொள்ள வேண்டும்.


இன்றையதினம் ஆட்சிக்கு வந்திருக்கிற புரட்சி நடிகர் எம்‌.ஜி.ஆர்: அவர்களும் அவருடைய கட்சியினரும் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற பெரும் பொறுப்பினை உணரவேண்டிய காலகட்டம் இது. தமிழ் நாட்டு மக்களுக்கு அவர் அளித்துள்ள வாக்குறுதிகளை நான் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால், வாக்குறுதிகளை அளித்த அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்பு இருக்கிறதே, அது நாலரைக்கோடி மக்களின் வாழ்வுக்கு உறுதி அளிக்க வேண்டிய பெரிய பொறுப்பு என்பதை மறந்து விடக் கூடாது. தமிழ் நாட்டு மக்களுக்காக, வறுமையிலே வாடுகிற மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, உழைத்து உருக்குலைந்தவர்களுக்காக, பெரிய ஆசைகளை உள்ளத்திலே கொண்டு எம்‌.ஜி.ஆருக்குப் பேராதரவு தந்த மக்களுக்காக, ஆற்ற வேண்டிய கடமையில் தவறலாகாது. மாறாக மக்கள் நிலைமை மோசமடைந்தால், மக்களுக்குக் கேடு விளைவிக்கப் பட்டால், இழைக்கப்படுகிற கேடுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால், அறப்போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோமேயன்றி, வேறு எதற்காகவும் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதியை நான் தெரிவிக்க விரும்புகிறேன்‌.


தி.மு..வினர் 48பேர் என்ற எண்ணிக்கை இந்தத் தேர்தலுடைய முடிவுதான்; அடுத்த தேர்தலுடைய முடிவு அன்று. யார் ஆளுகிறார் என்பது கூட அன்று முக்கியம்; எப்படி ஆள்கிறார் என்பதுதான் முக்கியம். யாருக்காக. ஆளப்போகிறார் என்பது அதைவிட முக்கியம்;


எதை நினைத்து எதைச் செய்கிறார் என்பது மிகவும் முக்கியமானது. உங்களுடைய உள்ளத்திலே இருப்பதைப் புரிந்துகொள்கிற ஆற்றல் எங்களுக்கு உண்டு.

எனவே, உங்களுடைய ஆட்சியின் நோக்கம் நல்லதாக இருக்குமானால், நாங்கள் அரசியலுக்காகவோ, மக்கள் ஆரவாரம் செய்ய வேண்டுமென்பதற்காகவோ போராட்டத்தில் ஈடுபடமாட்டோம்‌.


ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு - பிற்படுத்தப் பட்டோருக்கு, அவர்களுக்குரிய இட ஒதுக்கீட்டைப் பெற வருமான வரம்பு போன்ற அநீதி இழைக்கப்படுமானால், புரிந்தோ புரியாமலோ செய்யப்பட்ட அநீதிகள் மீண்டும் செய்யப்படுமானால், யாரையோ வஞ்சம் தீர்ப்பதற்காக என்று எண்ணிக்கொண்டு காரியம் நடக்குமானால், தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்கால நல்வாழ்வினை விரும்பி எண்ணிப் பார்க்க முடியாத சிலரை - இந்தச் சமுதாயத்தின் வரலாற்றிலே சந்தேகத்திற்குரிய சந்தர்ப்பவாதிகளாகிவிட்ட சிலரை, நீங்கள் உயர்ந்த இடத்துக்கு உயர்த்திக்கொண்டே போனால், நாட்டு மக்களிடத்திலே ஆட்சியை எதிர்க்கும் மாறுபட்ட உணர்வு ஏற்படத்தான் செய்யும். 


நான் இதைச் சொல்வதற்குக் காரணம், கலைஞரோடு கழகத்தில் உள்ளவர்கள் மிகச் சாமானியர்கள். அந்த மக்களுடைய உள்ளத்திலே நாங்கள் பெற்றிருக்கிற இடம் எங்கள் தகுதிக்கு மேம்பட்ட இடம். இந்த இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்பணிப்போம். இந்த உறுதியிலே என்னைவிட மிஞ்சியவர் கலைஞர். அதனாலே தான் எனக்கும் அவர் தலைவர். அந்த உறுதி ஒன்று அவரிடம் இல்லாவிட்டால் நான் கூட அவருக்குத் தலைவர்.     அறிஞர் அண்ணா சொன்னது போல, அவரது உழைப்பால், அவர் கொண்ட உறுதியினால், அவர் செய்த தியாகத்தால் பல இரவுகள் தூக்கமில்லாமல் பேசி, எழுதிப் பாடுபட்டு உழைத்த காரணத்தால், அப்படிப்பட்ட கடும் உழைப்பு, சிந்தனை மிகுதி அவரது தலையையே வழுக்கையாக்கி விட்டது. வேறு சிலருக்கு வழுக்கை வந்திருக்கலாம். அதற்கு காரணம் எனக்கு தெரியாது. என்னுடைய பேராசிரியர் டாக்டர். சிதம்பரநாதன் அவர்களைப்பற்றி நான் ஒருமுறை பேசுகிற போது, தமிழுக்கு உழைத்து உழைத்து தங்களுக்குத் தலை வழுக்கையானது தான் மிச்சம் என்று சொன்னேன். அந்த நினைவு எனக்கு வருகிறது. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து நிறைவேற்ற வல்லவர் என நாடு நம்பியிருக்கிற தலைவர் கலைஞர் ஒருவரே!


திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை நோக்கம் இந்தச் சமுதாயம் வாழவேண்டும். சமுதாயம் திருந்தி மறுமலர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான். அதற்குத் துணை நிற்பவர்களெல்லாம் நமக்கு நண்பர்கள். அதிலே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதற்காக நாங்கள் வருத்தப்பட மாட்டோம். 


தாழ்த்தப்பட்ட   சமுதாயம் - பிற்படுத்தப்பட்ட சமுதாயம் சார்ந்த மக்களை வாழ வைப்பதற்கான உணர்வை ஊட்டிய தந்தை பெரியார் பல்லாண்டுகளுக்கு முன்பே கலைஞரைப் பற்றிச் சொன்னது இது;

"ஆட்சியிலே இருக்கிறபோது, நிறைவேற்றிக் காட்டக் கூடியவற்றை, வேறு எவர்க்கும் தோன்றாக்  கருத்துகளைச் சிந்தித்து வெளியிட்டு நிறைவேற்றிக் காட்டக் கூடிய வல்லமைமிக்கவர் கலைஞர்."' அப்படிப்பட்டவர் பல்லாண்டு வாழ்வதிலேதான் தமிழ்ச் சமுதாயத்தின் வருங்கால வாழ்வு இருக்கிறது.


அவரை வாழ்த்தும்போது, சோழ மண்டலத்தைச் சேர்ந்த நான் காவிரிஆற்று மணலினும் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவது

இயற்கை. பொதிகை மலையினும் பல்லாண்டுக் காலம் நிலைபெற்று வாழ்க என வாழ்த்துவதும் இயற்கை. தமிழ் அறிந்தவன், உணர்ந்தவன்

என்ற முறையில் தமிழைப்போல் என்றும் நீ வாழ்க என்று வாழ்த்துவதும் இயற்கை. ஆனால், இவையெல்லாவற்றையும் விட,

தமிழினம் வாழ வேண்டும் எனில், கலைஞர் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும் என விழைந்து வாழ்த்துவதிலே நான் பேருவகை

கொள்கிறேன்‌.


- பேராசிரியர் க. அன்பழகன்

(முரசொலி - 05. 08. 1980)

No comments:

Post a Comment