Saturday 31 July 2021

ஒரு நீண்ட புயலின், கடைசி மாமழை சொல்லும் செய்தி ! - விவேக் கணநாதன்

 ஒரு நீண்ட புயலின், கடைசி மாமழை சொல்லும் செய்தி ! - விவேக் கணநாதன்



இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது டெல்லி படுகளமானது. டெல்லி கலவரம் பற்றி ராஜிவ் காந்தியிடம் கேட்டபோது சொன்னார்:


'ஒரு பெரிய ஆலமரம் விழும்போது, சில அதிர்வுகள் எழுவது சகஜம் தான்' என்று. நிற்க.


ஒரு அழகிய சித்திரத்தைக் கண்முன் கொண்டு வாருங்கள். மிகப்பெரும் மலையின் அடிவாரத்தில்  தனிச்சோலையாக விருட்சம் கொண்டிருக்கும் ஒரு ஆலமரம். இதுதான் நமக்கான காட்சி. 


திராவிட இயக்கத் தலைவர்களில் அண்ணாவும், கலைஞரும் ஆலமரங்கள். 


ஆலமரங்கள் கனிகொள்ளும்: இலை காணும்: விழுதுவிடும்: ஆல் பெருகும்: விருட்சமாகும்: விரும்பியவர் எவரும் அம்மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுக்கலாம்; கதை பேசலாம்; குடிசை கட்டிக்கொள்ளலாம்; தங்கி வாழலாம். எதையும் தாங்கும், எல்லாருக்குமான மாமரங்கள் அவை.


மலைகளின் முன்னால் ஆலமரம் மிகச்சிறியது என்பது பௌதிக உண்மை. ஆனால், ஒரு ஆயிரம் பேருக்காவது நிழல் தந்து உதவும் ஆகிருதி ஆலமரங்களுக்குத்தான் உண்டு. ஆலமரத்தின் நிழலுக்குக் கீழே அமர்ந்து கதைபேசுவர்கள், 'இந்த மலை என்னத்துக்கு இருக்கு; ஒன்னத்துக்கும் உதவாம; அதை உடைச்சு வித்துரலாம்' என மிகச்சாதாரணமாக பேசிவிடுவார்கள்.


ஒரே நொடியில் ஒரு மாமலை, ஒரு ஆலமரத்தைவிட குள்ளமாகி, குறுகிப்போய்விடும்.


பெரியார், பேராசிரியர் போன்ற தத்துவ ஆளுமைகள், ஆலமரங்களுக்கு பின்னால் இருக்கும் மாமலைகள். உடைத்துச் சொல்வதானால், அண்ணா - கலைஞர் போன்ற மக்கள் நாயக மரங்களுக்குப் பின்னால் இருக்கும், தத்துவ மலைகள்.


ஆலமரத்தின் கீழ் ஆள் இருக்கும்வரை, மலைகள் உதாசினப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அண்ணாவும், கலைஞரும் இந்த உதாசினம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில்தான் மிகக்கவனமாய் இருந்தார்கள்.


ஏனெனில், ஆலமரத்திற்கு கீழே ஆள் இருக்கும் வரைதான் ஆலமரத்துக்கு மவுசு. அதைவிட ஆபத்து, ஆலமரத்தைவிட அதிக குளிரும் இதமும் தரும் 'Fully air-conditioned Dormitories' எப்போது வேண்டுமானாலும் கட்டப்படாலாம்; அந்த செயற்கை குளுமைக்கு அடிமையான பிறகு, 'இந்த ஆலமரம் என்னத்துக்கு இருக்கு; ஒன்னத்துக்கும் உதாவம; அதை உடைச்சு வித்துரலாம்' என பழைய ஆலமரவாசியே பேசுவான் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.


ஆனால், மலைகளுக்கு அந்தக்கவலை இல்லை. எவர் வந்தாலும் போனாலும், இருந்தாலும் இல்லாவிட்டாலும், மலைகள் மலைகள் தாம். திராணி உள்ளவன் மலையேறிக் கொள்ளலாம்.


இங்கே பெரியாரையும், பேராசிரியரையும் ஒன்றாக ஒப்பிடுவதும், அண்ணாவையும் கலைஞரையும் ஒப்பிடுவது ஏதோ வழக்கமான மேடை உபாசயனம் போன்ற கவர்ச்சிவாதம் அல்ல. அப்படிச் செய்வதற்கு வலிமையான தத்துவக் காரணம் இருக்கிறது.


தன்னுடைய அறிவை, செயல்பாட்டை, வெகுஜனப்படுத்திக் கொண்டு, தன் ஆளுமையை மக்கள் செல்வாக்காக மாற்றிக்கொண்டு, மக்கள் தலைமையாக உருவெடுப்பது எளிதல்ல. சத்துக்களிலிருந்து உயிரணுக்களாக மாறிய செல்கள், உயிரும் உடலும் கொண்ட ஜீவராசிகளை பிரசவிக்கும் செயல் அது. எல்லா விந்தணுக்களும் ஜீவனாவதில்லை; லட்சக்கணக்கான விந்தணுக்களின் ஓட்டத்தில் ஒரேயொரு அணுவே வெல்கிறது.


ஆனால், தன்னளவில் தான் ஏற்றுக்கொண்ட தத்துவத்தில் திருப்திபெற்ற ஒரு அறிவாளி, தன் ஆளுமையை சமூகத்தில் நிறுவிக்கொள்வதற்கு, தன் ஆளுமை மக்கள் செல்வாக்குபெற்ற பேரியக்கமாக விரியும் களத்தை துண்டித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவகை சுயஅறுப்பு அது. தன் ஆளுமையை விரும்பும் திரட்சியான மக்கள் செல்வாக்காக தன் ஆளுமையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசரத்தை வளர்த்துக் கொள்ளாததன் மூலமே அவர்கள் பலதரப்பட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பேராளுமையாக தங்கள் ரசமாற்றம் செய்துகொள்கிறார்கள்.


நவீன ஜனநாயக இந்திய வரலாற்றில், இந்த ரசமாற்றத்தின் வரலாற்று சாட்சியம், மகத்தான உதாரணம் பேராசிரியர்.


தத்துவ பின்புலம் கொண்ட ஆளுமை என்கிற மதிப்பீட்டில் பெரியாரைவிட பேராசிரியர் வகித்த பாத்திரம் வித்யாசமானது; முக்கியமானது. 


திமுக தன்னுடைய தத்துவப் பின்னொட்டுகளிலிருந்தும், அறிவுச்செயல்பாட்டிலிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டு, 'Survival Political Party' ஆக உருமாறிக் கொள்வதற்கான தேவை 1960களின் இறுதியிலேயே உருவாகி, 1970களில் வலுவடைந்துவிட்டது. ஆனால், அதிமுக உருவாகி அந்த இடத்தை பிடித்துக் கொண்டது. ஆனாலும், ஒரு கட்சியாக தன்னை தக்கவைத்துக் கொள்ள 'இடைநிலை மக்களால் நடத்தப்படும் அடித்தள பண்பாடு' கொண்ட கட்சியாக திமுக தன்னை தகவமைத்துக் கொண்டது.


மிக அதிகமான பணத்தேவை, செழிப்பான வாழ்க்கைச் செயல்பாடுகளின் அவசியம் என திமுக தொண்டர்கள் உழன்று கொண்டிருந்தபோது கட்சி வறுமையிலும், நெருக்கடியிலும் சிக்கி அதிகாரத்தை இழந்திருந்தது. அவதூறுகளும், பழிகளும் துரத்தின.


கட்சியைக் காப்பாற்றவும், புதிய தொண்டர்களை உள்ளே கொண்டுவரவும் பிழைப்பினவாதத் தன்மை கட்சிக்கு தேவைப்பட்டது. ஆனால், உருமாறிக் கொண்டிருந்த புதிய அரசியல் பண்பாடுகளுக்கு ஏற்ப கட்சியை புனரமைக்கும்போது, அதன் வேர்கள் முற்றாக இற்றுப்போய்விடாமல் இருப்பது மிக முக்கியம்.


இரண்டு முக்கியமான ஆளுமைகளைக் கொண்டு கலைஞர் இதைச் செய்தார்.


தத்துவ அறிவும் - நடைமுறை எதார்த்தமும் கொண்ட முரசொலி மாறன் மூலம், உருமாறி வந்த புதிய பண்பாடுகளுக்கு ஏற்ப கட்சி தன்னை புனரமைத்துக் கொண்டது.


தத்துவ அறிவும் - விடாப்பிடித்தன்மையும் கொண்ட பேராசிரியர் மூலம் தன்னுடைய தத்துவ வேர்களை காத்துக் கொண்டது.


முரசொலி மாறன் உடனிருந்தவரை, கட்சியின் பாதை பற்றியோ, நெருடலான முடிவுகள் பற்றியோ கலைஞர் கவலைப்படவில்லை. காய் நகர்த்திக் கொண்டே இருந்தார். ஆனால், மாறன் மறைந்தபிறகு, கலைஞரின் மொத்த ஆட்டமும் தத்துவ சாரத்துக்குள் மட்டுமே நடந்தது. கலைஞருக்கும், பேராசிரியருக்கும் இடையிலான அன்னோன்யமான நட்பின் சகாப்தம் இந்த காலகட்டத்தில் உச்சம்பெற்றதாகவே நான் மதிப்பிடுகிறேன்.


அதனால் தான், 2ஜி வழக்கு உச்சத்தில் இருந்தபோது, 'முந்த்ரா ஊழலை தட்டிக் கழித்தவர்கள், ஆ.ராசவை நெருக்குகிறார்கள் என்றால், கிருஷ்ணமாச்சாரி பார்ப்பனர், ராசா சூத்திரன் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கிறது?' என இந்தியாவே அதிரும்படி கேட்டார். அவதூறுகளும், பொய்களும் விரட்டிக் கொண்டிருந்த நேரத்தில் 'திமுக கட்சி மாத்திரமல்ல; அது ஒரு சமுதாய இயக்கம்' என வரையறை சொன்னார். 


முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு, கலைஞர் கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டார். கட்சி புனரமைப்புகளுக்கு உள்ளாகமல் தேங்கியது. புதிய பண்பாட்டு மாற்றம் தரைதட்டி நின்றது. 2ஜி புயலும், ஊழல் சூறாவளிகளும் ஆலமரத்தின் இலைகளை தங்களால் இயன்ற அளவுக்கு மொட்டை அடித்தன. தனிமையில் இருந்த கலைஞருக்கு பேராசிரியர் மட்டுமே உடனிருந்தார்.


அந்த நாட்களில், வாயோதிகத்தின் தனிமையுடனும், சமுதாயத்தின் புதிய போக்குகளுடனும் கலைஞர் போராடிக் கொண்டிருந்தபோது,


'பேராசிரியரும் இல்லாமல் போயிருந்தால்?' என்று யோசிக்கவே அச்சமாக இருக்கிறது.


இங்கே கலைஞர் என்றால் கட்சி; கழகம்; திராவிட இயக்கம்.


நாவலர் தொடங்கி, ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் அண்ணாவோடு நின்றிருந்த வேறு யாரும் பேராசிரியர்  ஆற்றிய இந்த பங்களிப்பைச் செய்திருக்க முடியாது. ஏனெனில், அவர்களில் பலருக்கும் அண்ணாவாக மாறிவிட வேண்டும் என்கிற நப்பாசை இருந்தது. அந்த ஆசை ஒன்றும் குற்றமில்லை; எதார்த்த முரண்.


ஆனால், தனிமனிதர்களைவிட தத்துவம் பெரியது என்கிற கோட்பாட்டுக்கு தன்னையே ஈடுகொடுக்கத் தயாராக இருந்த ஒரே ஆளுமையாக பேராசிரியரை மட்டுமே நாம் காண்கிறோம்.


தமிழகத்தின் மிகப்பெரிய மக்கள் திரளை சினிமா வசியம் செய்தவர் ரஜினிகாந்த். அந்த ரஜினிகாந்த் பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, "எல்லா தரப்பிடமும் மதிப்பையும், மரியாதையையும் மட்டும் சம்பாதித்தவர் பேராசிரியர்" எனக்குறிப்பிட்டார்.


ஏனென்றால், ஒரு தனித்த பெருந்திரளை, தனக்கான ஆதரவுத் தளமாக, ரசிகபட்டாளமாக உருவாக்கிக் கொள்வதன் சமூகத்தின் இன்னொரு பெருந்தரப்பை இயல்பாகவே நாம் எதிரியாக்கிக் கொள்கிறோம். தன்னுடைய ஆதரவுத்தளத்திலிருந்து தொடர்ச்சியான மரியாதையும், அன்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும்போது, எதிரியிடமிருந்து வசையும், அவமரியாதையும் மலையெனக் குமியும்.


இன்றைக்கு ரஜினிகாந்தை அந்த அவமரியாதை குமியல் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் சூப்பர் ஸ்டார்  ஆச்சரியத்துடன் சொல்கிறார், "எல்லோரிடமும் மரியாதையை சம்பாதித்தவர் பேராசிரியர்" என்று.


பேராசிரியரின் பெருமை எல்லாம் அவர் கலைஞருக்குத் துணையாக இருந்தார்; ஆசைகளை அடக்கிக் கொண்டார் என்பதல்ல. மாறாக தன்னைவிட தத்துவம் பெரிது என்பதில்தீர்க்கமாக இருந்தார் என்பதே.


ஒரு பகுத்தறிவு ஜனநாயக இயக்கத்துக்குள், Egoவும் - Self Respect Esteem-மும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கத்துக்குள் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு அசாத்தியமான மனப்பக்குவமும், தன்னை அடக்கிக் கொள்ளும் ஆற்றலும், கொள்கைத் தெளிவும், சமுதாய நலன் மீதான அக்கறையும் தேவை.


இன்றைக்கு கலைஞரும் இல்லை; மாறனும் இல்லை; பேராசிரியரும் இல்லை.


ஆனால் இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; லட்சக்கணக்கான இளைஞர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


தனிப்பட்ட வாழ்க்கையில் சாதித்து காட்டியாக வேண்டிய நிர்பந்தம்; சமுதாயத்துக்கு நலன் செய்யதில் வெகு ஆர்வம்; காரும் பங்களாவும் அமைந்த சொகுசான வாழ்க்கை; இனத்தை மிரட்டும் தத்துவ பகை எல்லாவற்றுக்கும் இடையில் உழலும் இந்த தலைமுறைக்கு, அரசியலில் நுழையும்போது யார் முன்னுதாராணமாக இருக்க முடியும்?


அண்ணாவைவிட, கலைஞரைவிட, பெரியாரைவிட, பேராசிரியரே ஆகச்சிறந்த உதாரணம்.


ஏனெனில், முதலிடம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைவிட சிறந்த தத்துவம் என்ன இருக்கிறது உலகில்?


- விவேக் கணநாதன்


08.03.2020

No comments:

Post a Comment