Saturday 31 July 2021

வளரும் கிளர்ச்சி - பேராசிரியர் க. அன்பழகன்

 வளரும் கிளர்ச்சி - பேராசிரியர் க. அன்பழகன்


“அகத்தியருக்குப் பின், அயோத்தி இராமன் வந்தான். காட்டிலே தாடகையைப் படுகொலை செய்தான், சூர்ப்ப நகையை மானக்குறைவு செய்தான், வாலியை வஞ்சகத்தால் மாய்த்தான் தென் இலங்கைக்கு எரி மூட்டினான், அரக்கர் குலத்தை இரக்கமின்றி அழித்தான், வீபீஷணர் களையும் அனுமார்களையும் (சுக்கிரீவர்களையும் தோற்று வித்து, தெற்கையே வடக்கிறகு வணங்கச் செய்தான். இதிகாசத்தின் குறிப்பின்படி, இராமன் வந்தான். புராணக்கதைகளினாலும், கற்பனைகளினாலுமோ, இராமனொடு கிருஷ்ணன் வந்தான், அவதாரங்கள் வந்தன, விநாயகர் வந்தார், அவற்றோடு தொடர்புடையன பலவும் இங்குக் குடியேறின. தமிழர்களின் வாழ்வில், வடவர் தம் செல்வாக்கைப் பெருக்கத்தக்க கற்பனைகள் பலவும் உண்மையைப் போனறே இடம் பெறலாயின. எவ்வாறோ பழங்கதைகளெல்லாம், உண்மைக்குப் பொருந்தினும் பொருந்தாவிடினும், வடவரே ஆற்றல் மிக்கோராகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவ்வெண்ணம் தமிழ்மக்களின் கருத்திலே உறைந்து நாளடைவில் நம்பிக் கையாகவே நிலைக்கலாயிற்று.”


***


“அன்றொரு நாள் தென் குமரி முதல் வட இமயம் வரை பரவிக்கிடந்த தமிழ் மொழி, விந்தியம் வரையில் கூட நிலைக்க முடியாதபடி வடவர் நுழைவு தமிழைத் தேய்த்தது. பிற்காலத்தில், மேலும் தேய்ந்து வேங்கடத்தோடு ஒடுங்கும்படி, தமிழ் மொழியிலிருந்தே புதுமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை பிறக்கும்படி வடமொழி தமிழையே பிளந்தது. காலப்போக்கு, நெடுந்தொலைவு. மக்கள் தொடர்பின்மை ஆகியவற்றால் ஒரு மொழி-பல மொழி கிளைக்க இடந்தர நேரும் எனினும் அவை தாய் மொழியினின்றும் அதிகம் விலகிச் செல்வதில்லை. ஆனால் தமிழினின்றும் பிறந்த மொழிகளோ வடமொழித் தொடர்பால் அதிகம் விலக நேர்ந்தன. அவை தமிழொடு கொண்டுள்ள மூலத்தொடர்பு விளங்கினும், வடமொழியின் சார்பாகவே வளர்க்கப்பட்டதால், தமிழொடு மாறுபடும் நிலை பெற்றுள்ளன. எனினும் அம்மொழி பேசும் மக்களின் பண்பாடுகள் இன்றும் மாறிவிடவில்லை. அப்பண்பாட்டு உணர்ச்சி, திராவிடமொழி, கலை நாகரிக அறிவுடையார் பலரும் அம்மொழிகளின் பழைய வடிவையே காக்க விழைகின்றனர். மேலும் மேலும் வடமொழி ஆதிக்கம் வளருவதையும் தடுக்க முயற்சிக்கின்றனர். பழைய கன்னடம், தொல் மலையாளம், முன்னாள் தெலுங்கு ஆகியவற்றைக் கைக்கொண்டு வளர்க்கவும் முயற்சிகள் உள்ளன. இவ்வாறு, அகத்தியர் காலம் முதலாகவே வடவர் மொழியும் கொள்கைகளும், தமிழர் கலையும் வாழ்வும் அழியக்காரணமாகி வந்துள்ளதையும் அதைத் தடுக்கும் தற்காப்பு முயற்சிகள் பல தொல்காப்பியர் காலம் முதலாகத் தோன்றியுள்ளதையும் நாம் காண்கிறோம். எனினும் அம் முயற்சிகள் முழு அளவு வெற்றி பெறக்கூடவில்லை. இடைக்காலத்தில், தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமைகூட ஆரியத்தோடு அதற்குள்ள தொடர்பாலேயே அறுதியிடப்படும் அளவுக்கு இழி தகவு விளைந்தது. ஆனால், இயற்கை நியதியால் ஆரியம் இறந்த மொழியாயிற்று. தமிழின் அடிப்படைகளை நேராகத் தாக்கித் தகர்க்க அதனால் இயலவில்லை. தம்மொழி வழக்கின்றி இறப்பினுங்கூட ஆரியர் அதைக் கருவியாகக் கொண்டே, தமிழை அடிமைப்படுத்த, தனித்து இயங்காது முடக்கத் திட்டமிட்டனர். அதற்கு ஒரு படியே மணிப்பிரவாள நடை. மணிப்பிரவாள நடையோ, தமிழர் செவிக்கு வெறுப்பை விளைவிப்பதாயிற்று. நற்றமிழின் இன்னோசையாம் இசையினை நுகர்ந்த மக்கள், ஏனோ வேற்றுமொழிக் கலப்பால் காது குடையும் வெற்றோசையைக் கேட்க விரும்புவர்? எனவே அந்நடை செல்வாக்குப் பெற வில்லை. மேலும், மதமாறுபாட்டாலும் ஏற்கப்படாது போயிற்று. எப்படியோ தமிழ் நாடு அதன் பிடியில் சிக்குற வில்லை . ஆரியரோ, தமிழ் சொற்களுக்குப் பதிலாக வட மொழிச் சொற்களைப் புகுத்துவதிலும், தமிழ் நெடுங் கணக்கில் வட வெழுத்துக்களுக்கு இடந்தேடுவதிலும், நற்றமிழ்ச் சொற்கள் பலவற்றையும் வட சொற்கள் என திரித்து வழங்குவதிலும் ஈடுபட்டுத் தமிழ்மொழி என்ற எண்ணம் ஏற்படாதபடிச் செய்வதற்கு விடாது முயற்சிப்பாராயினர். இன்றும் அத்திருப்பணி ஓய்ந்தபாடில்லை. வடவர் கொள்கையாலும், தர்மத்தாலும் புகுந்த மூட நம்பிக்கைகளும், சாதி சமயச்சடங்குகளும் தமிழகத்தையே 'செல்லென' அரித்தன. இராமபாணமாகத் துளைத்தன. அவைகளும் ஆதிநாள் முதலாகவே, மறுக்கப்பட்டு வந்துள்ளன. அரக்கர்கள் வேள்வியை-யாகத்தைத் தடுத்தனர்; சுராபானம், சோமரசம் பருக மறுத்தனர், என்று புராண இதிகாசங்களே உரைக்கின்றன. சங்க இலக்கியங்களில் ஆரியருக்கே உரிய சில பழக்க வழக்கங்கள் தனித்தே சுட்டப்படுகின்றன. தமிழர் வாழ்க்கை அறமாகிய திருக்குறளில், பிறப்பினாலாகிய சாதியும், வேள்வியும் சூதும், கள்ளும் பிற இழிவழக்குகளும் மறுக்கப்படுகின்றன. திருமூலர் திருமந்திரம்-ஆரியர் தம் மாயவாதக் கருத்துக்களை வீழ்த்துகின்றது. சித்தர் பாட்டுக்கள் ஆரியச் சடங்கு முறைகளை, புரோகித உயர்வை வெறுத்து மொழிகின்றன. பிற்காலத்தில் உரையாசிரியர்களாகச் சிறந்தவர்களில் ஆரிய தர்மத்தையும் ஒப்பிட்டுச் சிறப்பிக்கும் நோக்குடைய பரிமேலழகருங்கூட, ஒவ்வோர் இடத்துத் தமிழர் நெறி ஆரிய தர்மத்தோடு, மாறுபட்டு உயர்ந்து நிற்பதை உரைக்கத் தவறவில்லை. பக்திப் பாடல்களுங் கூட ஒவ்வோரிடங்களில், புரோகிதரது இயல்பை இழித்துக் கூறவும் ஆரியரைத் தனித்துச் சுட்டவும் செய்கின்றன. "தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய்' என்ற அப்பர் வாக்கு அந்த வேற்றுமைக்கே சான்றாம் . எனினும் ஆரியத்தின் தீமையைத் தொகுத்துச் சுட்டிக்காட்டி அதை வேரோடு ஒழிக்கும் முயற்சி சென்ற நூற்றாண்டு வரை நடைபெறவில்லை என்றே கூறலாம். வரலாறு வரையப்படாமல், வரலாற்றறிவு வளர்க்கப்படாமல் இருந்த நாட்டில், மக்கள் உண்மையை எப்படி உணர்ந் திருக்க முடியும்? ஆரியர் புகுத்திய சாதிப் பாகுபாட்டின்படி, அம்மதத்தின் வேர்களான புரோகிதர்களே நூலறிவு பெறவேண்டியவர்கள், படிப்பதற்குத் தகுதியுடையவர்கள். மற்ற வகுப்பார் படிப்பதே பாபம், தவறு, அதிலும் தமது சூழ்ச்சிகளை உள்ளடக்கிய வேத சாஸ்திரங்களைப் படிப்பதே தண்டனைக் குரியது என்ற கருத்தைப் புகுத்தியிருந்த போது, தமிழ் மக்கள் தம் நிலையைப் புரிந்து கொள்வது எப்படி இயல்வதாகும்?”


*** 


ஆங்கிலேயர் ஆட்சித் தொடர்பாலேயே, விஞ்ஞான வளர்ச்சியின் பயன் கிடைத்தது இந்தியாவிற்கு. அதனால் மதவெறியில் மூழ்கிக் கிடந்த பொதுமக்களுங்கூட ஓரளவு தெளிவு பெற வாய்ப்புக்கள் ஏற்பட்டன. இங்கு வந்து சேர்ந்த பாதிரிமார்களின் தொண்டு தமிழ்மொழியின் பெருமையை உலகுணரச் செய்யக் காரணமாயிற்று. அதனால் தமிழரின் மதிப்பும் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியது. மேல் நாட்டார் கண்டு பிடித்த அச்சுப்பொறியின் துணையால், பழந்தமிழ் ஏடுகள் பல வெளிவரலாயின. சென்ற நூற்றாண்டில், பாதிரிமார்களாலும், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலராலும் தமிழ் உரை நடை நூல்கள் இயற்றப்படலாயின. அவை பொது மக்களின் தமிழ் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்தன. தமிழ் நூல்கள் சிலவும், திருக்குறள் அறமும் ஆங்கிலம் முதலிய மேல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. அதனால் தமிழின் புகழ் ஓங்கிற்று. டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தமிழ் மொழியை, மொழி நூல் முறைப்படி ஆராய்ந்து, திராவிடக்குழு மொழிகளின் தனிச்சிறப்புக்களையெல்லாம் தமது ஒப்பிலக்கணத்தால் நிலைநாட்டினார். தமிழ் மொழி மதிப்பு தலை நிமிர்ந்த து. மேல் நாட்டார் பலர், இந்தியத் துணைக்கண்டத்தின் முன்னாள் வரலாற்றை ஆராய முற்பட்டனர். பெரும்பாலும் அவர்களது கருத்து வடநாட்டிலேயே பதியலாயிற்று. வடமொழிக்கு அவர்களிடம் ஏற்பட்ட செல்வாக்கு, வடமொழி தடையின்றி வளர இடமாக இருந்த வடநாட்டுக்குப் பெருமையளித்தது. இந்திய மொழிகளில், வட மொழியை மட்டுமே கற்றிருந்தமை, வரலாறு எழுதத் தொடங்கியவர்களையெல்லாம், வடநாட்டிற்கே முக்கியத்துவம் அளிக்கச் செய்துவிட்டது. வரலாற்று ஏடுகளில் தென்னாடு மாற்றாந்தாய்ப் பிள்ளையாகவே கை விடப் பட்டது. முற்காலத்தில் கடல் கொண்டழிந்த தென்னாடு, பிற்காலத்தில் ஆரிய ஆதிக்க வெள்ளத்தில் அமிழ்ந்த தென்னாடு, தற்காலத்தில் வரலாற்று வெள்ளத்தாலும் மறைக்கப்பட்டது. ஆயிரம் பக்கங்கொண்ட இந்திய வரலாற்று ஏட்டில் ஒரு பத்து இருபது பக்கங்களே தென்னாட்டைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும், அதுவும் சிறப்பிப்பதாக அமையாது. இந்நிலையைக் கண்ணுற்ற, ஸ்மித் என்ற வரலாற்று நூல் ஆசிரியரே முதன் முதலாக, இந்தியத் துணைக் கண்டத்தின் உண்மையான பழைய வரலாற்றை அறிய வேண்டுமானால், வரலாற்று ஆசிரியர்களின் ஆராய்ச்சி, கங்கைக்கரையில் தொடங்கப்படுவதற்குப் பதில் காவிரிக் கரையில் தொடங்கப்படவேண்டும்" என்ற கருத்தை வெளியிடலானார். ஆரியர் வருகைக்கு முன்பாகவே வாழ்ந்த திராவிடரின் வரலாறு முக்கியத்துவம் அளிக்கப் படவேண்டும் என்ற கருத்து அதுமுதல் வலியுற லாயிற்று. திராவிடர் பற்றிய உண்மைகள் பல வெளிவரலாயின. அரசாங்கத்தின் புதைபொருள் இலாக்கா, சிற்பக்கலை ஆராய்ச்சி நிலையம் முதலியவற்றின் பணியினாலும், திராவிட நாகரிகத்தின் தொன்மையும், தென்னாட்டுச் சிற்பக்கலையின் தனித்தன்மையும் வளர்ச்சியும் விளக்கமுறலாயின. திராவிட மக்களின் முகத்தோற்றத்தில், வடிவமைப்பில், குஞ்சியழகில், வாழ்க்கை முறையில், ஒழுக்கப் பற்றில், மொழிவழியில் இலக்கிய நெறியில் உள்ள சிறப்பியல்புகளெல்லாம் ஆராய்ச்சி ஒளியால் தெளிவு பெறத் தொடங்கின. அவை ஆரியத் தொடர்பாலும், கலப்பாலும், ஆதிக்கத்தாலும், புதையுண்ட பொருளாக, தடையுண்ட நீராக, மறைபட்ட ஒளியாக, முடங்கிக் கிடப்பதையும் காண நேர்ந்தது. உண்மையை உரைப்பதில் ஆர்வமுடையோர் அதை வெளியிட்டனர். வேறு நோக்கினர், வேறு முறையாகவே நடந்து கொண்டனர். என்றாலும் திராவிடத்தின் வரலாறு முற்றும் உருப்பெறாவிடினும் உண்மைகள் பல வெளிப்பட்டதால், தமிழர் மேலும், மேலும் தம்மை உணரலாயினர். வரலாற்று ஏடு ஒளி வீசியபோதே, ஆரியர் அந்நியர் என்பதும், அவர் தம் தொடர்பால், வரவால் தமிழர் வாழ்வு தாழ்ந்தது என்பதும் வலுப்பெறலாயின. ஆரியர் வருகைக்கு முன் தமிழர் பெற்றிருந்த வளமான வாழ்க்கையும், வெற்றி நிலையும், அறிவாட்சியும் மக்களுக்குப் புலப் படத் தொடங்கின. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மூவேந்தர் என்று சிறப்பிக்கப்பட்ட சேர, சோழ, பாண்டியர்கள், வில், புலி, கயல் பொறித்த கொடிகளை உயர்த்தி, தமிழகத்தை எவருக்கும் தலைவணங்காமல் ஆண்டுவந்தனர். அந்தப் பேரரசர்களில் பலர், ஆரியர் அகந்தையை அடக்கியவரும், இமயத்தின் பிடரியில் தங்கொடி பொறித்தவரும், கங்கைக்கரையினில் வெற்றி முரசு முழங்கியவரும், கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தவரும், கலிங்கத்தைக் கைக் கொண்டவரும், கடாரத்திலும் காழகத்திலும் வெற்றிக் கொடி நாட்டியவரும், ஈழத்தை வென்ற வரும் எனப் பரணி பாடும் பல திறப்பட்ட புகழுக்கும் உரியவர்களாகத் திகழ்ந்தனர். இவற்றை அறியத் தொடங்கிய தமிழர்களின் தன்னம்பிக்கையும் உரிமை உணர்வும் சிறிது சிறிதாக வளரத் தொடங்கியது. எந்நாளும், எவ்வகையிலும் வேறு எந்த இனத்தவரினும் தாழ்வுறாத தமிழர் -திராவிட இனத்தவர், இன்று பலவகையினும் தாழ்ந்துள்ள நிலையை எண்ணலாயினர், ஏக்கமுங்கொண்டனர். இந்நிலைக்குக் காரணமான ஆரிய மத மூடநம்பிக்கைகளே முதன் முதல் வெளிப்படையாகக் கண்டிக்கப்படலாயின. சென்ற நூற்றாண்டினிறுதியில் வாழ்ந்த வடலூர் வள்ளலார், இராமலிங்க அடிகளே, பக்தித் துறையில் நின்றபடியே ஆரிய (அ)தர்மத்தை முதன் முதல் கண்டிக்கலானார். அவரது திருவருட்பாவில், “நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவாரிலை.........”​​                                                                                                                                          


  - எனவும், "மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது வருணுச் சிரமமெனு மயக்கமுஞ் சாய்ந்தது” -எனவும், "குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்து வீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து நிற்கின்றார் ....... -எனவும், "சதுமறை ஆகம சாத்திர மெல்லாஞ் சந்தைப் படிப்பு நஞ் சொந்தப் படிப்போ'' -எனவும், "தெய்வங்கள் பலபல சிந்தை செய் வாருஞ் சேர்கதி பலபல செப்புகின் றரும் பொய்வந்த கலை பல புகன்றிடு வாரும் பொய்ச் சம யாதியை மெச்சுகின்றாரும்'' - எனவும், வரும் இடங்களையும், மற்றும் பல பாக்களில் வரும் அத்தகு கருத்துக்களையும் காணபவர்கள் அவரது ஆரியக் கண்டனத்தை உணர்வர். அதுவே - சமயச் சீர்திருத்தமாகக் சமரச சன்மார்க்கமாகப் பொது நெறியாக உருக்கொள்ளலாயிற்று. அடுத்து, இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் திகழ்ந்த அறிவு நூல் பேராசிரியர், சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றித் தந்த நாடக இலக்கியமாகிய "மனோன்மணீயத்தின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தாகப் பாடப்பெற்ற தமிழ் வாழ்த்தே , வடமொழியினும் தமிழே எவ்விதத்தினும் உயர்ந்தது, என்ற கருத்தை முதன் முதல் மக்களிடம் பரப்பிய தாகும். அப் பாடலே கீழ் வருவதாகும்: 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே! " பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாள முந்துளுவும் உன்னுதரத்(து) உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! ஆம், இப்பாடலே, தமிழின் பெருமையையும், வடமொழி பாடை ஏறினமையையும், எவரிடமும் மார் தட்டிக் கூறும் உறுதியைத் தமிழ் மக்களுக்கு அளித்தது எனலாம். மேலும், அதே காலத்தில் வெளிவந்த, யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் அவர்கள் இயற்றிய திராவிடப் பிரகாசிகை' என்ற இலக்கிய வரலாற்று நூலும் "Dravidic Studies" (திராவிட ஆராய்ச்சிகள்) என்ற வெளியீடும், Ancient Dravidians, (பண்டைத் திராவிடர்), Pre-Aryan Tamil Culture (ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரிகம்) முதலான பல வரலாற்று ஏடுகளும், பரிதிமாற் கலைஞன் இயற்றிய தமிழ்மொழி வரலாறு முதலிய மொழி ஆராய்ச்சி ஏடுகளும் - நாளடைவில், தமிழர் உணர்ச்சியிலேயே - தாம் திராவிடர் என்ற எண்ணத்தை வளர்த்து வந்தன. ஆரிய மொழி, கலை, நாகரிகம் எதற்கும் இனியும் இங்கு இடந்தருதல் கூடாது என்ற எண்ணமும் அத துடன் வலிவு பெற்று வரலாயிற்று.


வளரும் கிளர்ச்சி by பேராசிரியர் . அன்பழகன் K. Anbalagan


முழுப்புத்தகத்தை  வாசிக்க: https://amzn.in/cDFAmwG

No comments:

Post a Comment