Friday 2 July 2021

கற்பிக்க வேண்டிய அரசியல் மாற்றம் - சே.விக்னேஷ் பொறியாளர் (முதல் தலைமுறை பட்டதாரி)

 கற்பிக்க வேண்டிய அரசியல் மாற்றம் - சே.விக்னேஷ் பொறியாளர் (முதல் தலைமுறை பட்டதாரி)திராவிட வாசிப்பு மின்னிதழ் குழுவிற்கு வணக்கம்.

எனக்கு அரசியல் குறித்த ஆர்வமும், எனக்குள் ஒரு தெளிவும் கிடைத்தது திராவிடம் 2.0 கருத்தரங்குகளில் பங்கேற்ற பிறகு தான் என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்..

பெயரளவிற்கான திராவிடக் கட்சி என்றில்லாமல் திராவிட இயக்க கொள்கைகளில் உறுதியாகவும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கட்சியாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதுற்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து அதைச் செயல்படுத்திய கட்சியாகவும், சிறுபான்மை மதத்தினரின் பெரும் நம்பிக்கையாகவும் இருந்து வரும் கட்சியாகவும், அனைத்திற்கும் மேலாகக் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு எதிர்க் கட்சி எப்படிச் செயல்பட வேண்டும் என மற்ற கட்சிகளுக்கு ஒரு உதாரணமாக இருந்து வரும் கட்சியாகவும், மேலும் இன்றைய தேவையாகவும் இருக்கின்ற ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே...


அமையவிருக்கும் கழக ஆட்சியில் நான் உள்பட, என்னைப் போன்ற முதல் தலைமுறை அரசியல் பேசும் கழக ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் பின்வருமாறு.


1) கடந்த 6 (அ) 7 ஆண்டுகளில், சமூக வலை தலங்களில் சாதி பெருமை பேசுவதும், அவர்களுக்குக் கீழ் உள்ள சாதிகள் எனச் சொல்லப்படுகின்ற சாதியைச் சார்ந்த மக்களையும், சிறுபான்மையாகக் கருதப்படும் மதத்தினரையும் பற்றி இழிவாகப் பேசுவதும் அதிகமாக ஆகியிருக்கின்றது. இதனை முற்றிலும் ஒழிக்கக் கழகத்தின் ஆட்சி பெரிதும் உழைக்க வேண்டியிருக்கும். இதன் தாக்கம் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரை, சுயமாகச் சிந்திக்க விடாமல், படித்துத் தன் குடும்பத்தையும் தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்வியலையும் மேம்படுத்த விடாமல், சாதிய ஏற்ற தாழ்வுகளை அதிகம் பேசி 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிட இயக்கங்கள் விதைத்திட்ட சமூக நீதியை மறக்கடித்து இளம் தலைமுறையினரைப் பின்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என்ற பாதிப்பை உணர்ந்து எந்தவித சமரசமுமின்றி இந்த விஷயத்தில் கழகம் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்


2) திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திய பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களையும், அதனால் ஏற்பட்ட சமூக வளர்ச்சியும், தனி மனித வாழ்வியல் மேம்பாட்டையும் இன்றைய தலைமுறையினருக்குத் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும் கட்டாயத் தேவையும் இருக்கின்றது என்பதைக் கழகம் உணர்ந்து அதற்கான வழிவகைகளை அமையவிருக்கும் கழக ஆட்சியில் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.


3) திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்திய சமூக மாற்றம், தமிழக உள்கட்டமைப்பு வளர்ச்சி, தனிமனித வாழ்வியல் மேம்பாடு போன்றவற்றை மறக்கடித்துப் பொது மக்கள் மத்தியில் கழகத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை மற்ற கட்சிகள் ஏற்படுத்தியிருக்கிறது. இதனை ஆரம்பக் கட்டத்திலே வேரறுக்கக் கழகம் தவறவிட்டுவிட்டது. அமையவிருக்கும் கழக ஆட்சியில், இனியும் இதுபோன்று நடக்காமலிருக்கக் கழகம் நடவடிக்கை வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.


4) கழக உடன்பிறப்புகளைப் பொறுத்தவரை, இதுவரை கழக ஆட்சியில் செயல்பட்டதைவிட இன்னும் வேகமாகவும், இன்னும் ஆக்கப்பூர்வமாகவும், மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு முன் உதாரணமாகச் செயல்பட்டு, இத்தனை ஆண்டுக் காலம் திமுகக் காரன் என்றால் இப்படித்தான் எனப் பதிந்த தவறான பிம்பம் மீண்டும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நம் திராவிடம் 2.0 உடன்பிறப்புகள் போல் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.


5) தனி மனித வாழ்வியல் மேம்பாட்டிற்கு நானும் என் குடும்பமுமே மிகப்பெரிய உதாரணம். எங்கள் வீட்டில் முதல் சமையல் எரிவாயு அடுப்பு தலைவர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டது. முதல் தொலைக்காட்சிப் பெட்டி தலைவர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டது. என் வீட்டில் முதல் தலைமுறை பட்டதாரி நான், எனக்கும் உடன் வந்த தந்தைக்கும் கவுன்சிலிங்கிற்குச் சென்னைக்குச் செல்ல 50% பயணச்சீட்டு சலுகையும், திருச்சியில் முதன்மையான ஒரு பொறியியல் கல்லூரியில் அரசு சலுகை கட்டணத்தில் பொறியியல் படிப்பு முடித்து, தற்போது தலைவர் கலைஞர் ஆட்சியில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவான எண்ணற்ற மேலை நாட்டு நிறுவனங்களில் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.. இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி. இல்லாதவனுக்குத் தான் இலவசத்தின் அருமையும் தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்படுத்த விரும்பிய சமூக மாற்றமும் புரியும்.


பெருமையுடன் சொல்வோம். திராவிடத்தால் தான் எழுந்தோம் என 🖤


- சே.விக்னேஷ்

பொறியாளர் (முதல் தலைமுறை பட்டதாரி)


No comments:

Post a Comment