Saturday 31 July 2021

அன்பழகனார் என்றே உச்சரிக்கட்டும்! - கனிமொழி ம.வீ

 அன்பழகனார் என்றே உச்சரிக்கட்டும்! - கனிமொழி ம.வீ 


திருவாரூர் தந்திட்ட கலைஞரின்
மனசாட்சியே;
 
திராவிடர் புதுவாழ்வு தரணியில்
பெற்றிட புதுவாழ்வு ஏடு
நடத்திய புன்னகை வேந்தனே;

 
துரோகிகள் சூழ்ந்து கழகத்தைச்
சூறையாட நினைத்தபோதும் சூரனாய்
சுழன்றடித்த கலைஞரின்
கைகோர்த்து அரணமைத்தாய் ;

உதயசூரியனின் வெப்பத்தை
அடைகாத்த தாய்க்கோழியின்
குஞ்சுகளில் நீயும் ஒன்றன்றோ ?
அதனால்தான் பின்னாளில் பருந்துகள்
வட்டமிட்ட போதெல்லாம்
விரட்டிய தாய்க்  கோழி நீயானாய்!!

 
நட்பின் இலக்கணம் வரைந்த
வள்ளுவர் கூட மீண்டு(ம்) வரின்
 
கலைஞரோடு நீ கொண்ட நட்பைக் கண்டு
நட்பின் இலக்கணம் அன்பழகனார்!!
 
என்றே  குறள் எழுதி வைப்பார்;

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்
பார்த்து, சிரித்து, பழகி, நட்பு கொண்டனர்
கலைஞரும் பேராசிரியருமாய் என்றே
வரலாறும் செதுக்கி வைக்கும் ;

முதுமையிலும் கலைஞர் தேடியது
உன் கரம்;
 
அவரின் இறுதிப் பயணத்தில்
 
நிலைத்த உன் கண்கள் பேசியது
 
நீங்கள் சேமித்த நட்பின்
ஆழத்தை முத்துக்களாய்;

 
சனாதனத்தை வெட்டும் சூட்சமத்தைத்
 
தந்தையிடமிருந்து கற்ற தளபதிகளில்
நீயும் ஒருவரன்றோ?அதனால்தான்
வேத விற்பன்னர்கள் உன் வாசலை  
மிதிக்கக் கூட அரண்டனர் ;

உன் பேச்சின்
ஆழமும் அழுத்தமும்
ஆழிப் பேரலையாய்
அச்சுறுத்தி ஓட்டியது
அகத்திய ஜீயர்களை;

வாழ்வெனில் திராவிடர்க்கே
என முழங்கிய உன் குரலொலி
உறங்க விடுவதில்லை
அக்கிரகார முதலைகளை இன்றும் !!

தமிழ் கடல் அலை ஓசை
பரவும் தமிழர்  மாட்சி என்றாய்;
உன் புகழ் இசை என்றும் அலைகடல் போல்
நிலைத்திருக்கட்டும்;
தமிழ் ஏந்தி மன்றத்தில் ஓடிவரும்
தென்றலும் அன்பழகனார் என்றே
உச்சரிக்கட்டும் !!

வாழ்க  பேராசிரியர் அன்பழகனார்!!



No comments:

Post a Comment